Monday 6 February 2017

மணல்வெளி மான்கள் 1.1&2.0

வையவன்
மணல்வெளி மான்கள் 1.1
‘தா...ஹை’ என்று மாடுகளைத் தட்டி விட்டதும் தாழ்வாகக் குழி போல் இறங்கிய நடைபாதையில் அவை நகர்ந்தன. கூடவே போய் ஒருவாகாக சிவுக்கென்று வடக்கயிற்றின் மீது உட்கார்ந்தான். அவற்றின் இழுவைப் பளு சற்றே குறைந்தது.
கிரிகிரிகிரியென்று ராட்டின சங்கீதம். இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல.
தொட்டியில் கொக்கரித்துக் கொண்டு தண்ணீர் பாய்ந்தது.
“பரவால்லே. எண்பது மார்க்!” என்றாள் நித்யா.
திரும்பி அவளைப் பார்த்தான். அவள் கண்களில் வேறு பார்வை. பொய்க் கூச்சமின்றி, மாசுபடாத சௌஜன்யத்தோடு, தன்னை வெளியிடும் அந்த வெளியீட்டிலேயே கிட்டும் பரவசத்தோடு...
...தொட்டி நீர் மாதிரி மனசு உள்ளே நிறைந்தது. மாடுகளை விட்டு விட்டு... அவன் மனசில் இச்சை ஓடிய ஓட்டத்தை இழுத்துப் பிடித்தான் - மூக்கணாங்கயிறு போட்டான். வேலை முக்கியமானது. உரம் ஊட்டுவது!
“ரெண்டு சாலோட நிறுத்திக்கோ. நான் மொதல்லே துணியை நனைச்சுக்கணும்!”
இரண்டாவது சாலுக்கு மாடுகளைக் கிணற்று மேட்டுக்க ஏற்றும் போது தான் கௌதம் திரும்பிப் பார்த்தான். நுணா மரத்துப் பம்பு ஷெட் தெரிந்தது. சிறு கூட்டம். ஆதி கையை ஆட்டி ஆட்டிப் பேசும் அங்க அசைவு. தகராறு யாருடன்?
சால் கிணற்றில் அமிழ்ந்து சாலுடன் இணைந்த தொண்டலக் கயிறு எவ்வி இழுத்தது. ஆதி கையை நீட்டி நீட்டிப் பேசக் கண்ட அதிர்ச்சியில் கௌதம் சால் நிரம்பியதைப் பொருட்படுத்தவில்லை. ஆதி அப்படிப் பேசுகிறவன் அல்ல! கன்னத்தில் அறைந்தால் கூட மென்று விழுங்கி வாங்கிக் கொள்பவன்.
கூட்டத்தைப் பிளந்து, இழுத்துப் பிடித்த இரண்டு புஜங்களை உதறிக் கொண்டு, நுணா மரத்துப் பம்பு ஷெட்டில் குடியிருக்கும் மாசிலா, ஓங்கி ஆதி மார்பில் ஒரு குத்து விட்டது இங்கிருந்து தெரிந்தது. கௌதம் கூர்ந்து கவனித்தான்.
ஆதி பதிலுக்கு மாசிலா மீது தாவி விட்டான். அதற்குள் நாலைந்து பேர் இழுத்து, அவனைத் தடுத்துக் கொண்டு நின்றனர்.
“மாட்டுக்காரே! நீ இப்படி ஒட்டினா நான் துணியை நனைச்ச மாதிரிதான்!” நித்யா அதட்டினாள். கவனம் திருப்பி, நிற்கும் மாடுகளை தட்டிக் கொடுத்தான். இரண்டாவது சால் நீர் தொட்டிக்குள் கொப்புளித்தது.
“நுணா மரத்துப் பம்பு ஷெட்டிலே அடிதடிபோல இருக்கு நித்யா!”
அவளும் திரும்பினாள். தூரத்தில் நுணா மரத்தடியில் கூட்டம் இரு பிளவாக ஆதியையும் மாசிலாவையும் பிரித்து நிறுத்திக் கொண்டிருந்தது.
“யாரு யாரை அடிச்சது?”
“மாசிலா ஆதியை அடிச்சுட்டான்.”
நித்யா பார்த்துக் கொண்டே நின்றாள். முகம் திரும்பாமல் சொன்னாள்.
“இது இத்தோட நிக்கப் போறதில்லே...”
அவள் குரலில் அருள் வாக்கு சொல்கிற மாதிரி ஒரு தூர திருஷ்டி ஒலி.
“என்ன சொல்றே?”
“ஆமா! நாலஞ்சு நாளுக்கு முன்னாடி கூட ஊர்ல ஆதியண்ணனுக்கும் மாசிலாவுக்கும் தகராறுன்னு பேச்சு அடிபட்டது.”
“தகராறா?”
“ஒனக்குத் தெரியாது! நீ எங்கே இருக்கே? ஊர் ஊரா பம்பு ஷெட் ரிப்பேருக்குப் போயிடறே...”
“என்ன விஷயம்?”
“ஆதியண்ணன் மாசிலாவுக்குத் தெரிஞ்சவன் யார்கிட்டேயோ துபாய்க்குப் போறதுக்காக ஆயிரம் ரூபாய் பணம் குடுத்திருக்காம். ஆறு மாசமாகப் போவுது. இதோ அதோன்னு இழுக்கிறானாம் அந்த ஆளு....”
ஆதிக்கு அப்படி ஓர் ஆசை உண்டு என்று கௌதம் அறிவான். இருபத்தெட்டு வயசாகியும் எதிலும் நிலை கொள்ள முடியவில்லை அவனால். மேஸ்திரி வேலை செய்தான். டீக்கடை வைத்தான். டைலராயிருந்தான். ஜவ்வாது மலையில் மூங்கில் கூப்பு காண்ட்ராக்டராக இருந்த முனீம்சாயபுக்கு உதவியாளாய்ப் போனான்.
இந்த நிலம் கூட குத்தகைப் பயிர்தான். நிலை கொள்வதற்கு, தன்னைக் கண்டுபிடிப்பதற்கு, அவன் செய்து வரும் இடைவிடாத பரிசோதனைகளில் இதுதான் சமீபமானது.
துபாய்! எத்தனை மனக்கோட்டைகளுக்கு அங்கே கதவு திறந்திருக்கிறது? தங்கம் தெருவிலே கொட்டிக் கிடக்கிறதென்று போகிறார்களோ!
“பா... பா... பா” என்று குரல் கேட்டுத் திரும்பினான்.
தலையில் கஞ்சிக் கலயத்தோடு ஆதியின் அம்மா மங்கலட்சுமி நின்றாள்.
அவன் பிறவி ஊமை.
மகன் எங்கே என்று கேட்கிறாள்.
என்ன சொல்வது?
“கஞ்சிக் கலயத்தை வச்சுட்டுப் போகச் சொல்லு. வேற விவரம் சொல்லாதே. அதுக்கு மனசு துடிச்சிடும். வாயும் பேச முடியாம பேபேன்னு கத்திக்கிட்டு கண்ணிலே மாலை மாலையாகத் தண்ணி விடும்” என்றாள் நித்யா.
2.0
“ஐயய்ய...இது வேணாம் தம்பி.”
சண்டையிலிருந்து திரும்பிய சக்தி தடுத்தாள்.
“ஏன்?”
“உனக்கு நாஷ்டா வாங்கியாரச் சொல்லியிருக்கேன்.”
“இருக்கட்டும். அதையும் ரெண்டு பேரும் சாப்பிடுவோம்.”
“இது கேப்பக் கூளு. நீயெல்லாம் சாப்பிடக் கூடாது.”
ஒரு மணி நேரத்துக்கு முன் சண்டை போட்ட ஆதியா இவன்? என்னமாய்க் கூசிக் குறுகுகிறான்? மனிதன் கூச்சப்படும்போதுதான் அவன் மேன்மை வெளிப்படுகிறது.
“நானும் கிராமத்தான் தான் ஆதி! நான் ஒண்ணும் மகாராஜா பிள்ளை இல்லே. சாதாரண ஹெட் கான்ஸ்டபிள் மகன்.”
“அதுக்கில்லே.”
“அம்மா போனப்புறம் அப்பாவுக்குப் பிடிக்குமேன்னு கூழ் கிண்டக் கத்துக்கிட்டேன்.”
“பட்டம் வாங்கியிருக்கியே தம்பீ! பம்பு செட்டு ரிப்பேர் பண்ண வச்சதே தப்பு. அப்புறம் வேற கூளைக் கொடுக்கணுமா?”
மேலும் அவனைப் பரிதவிக்க அனுமதியாமல் ஈய டிபன் தூக்கின் மூடியைத் திறந்தான். கும்மென்று மணம் தூக்கிற்று.
“சுடக் கூழா.”
“ஏன் உனக்குப் புடிக்காதா தம்பீ?”
“நானா சொன்னேன்? இங்கே ஒரே ஒரு டம்ளர்தானே இருக்கு? இன்னும் ஒரு டம்ளர் வேணுமே!”
“இரு... பம்பு ஷெட்டிலே வேற ஒரு கிளாஸ் வச்சிருக்கேன்.”
ஆதி எழுந்து போனான்.
யதேச்சையாகப் பார்வையைத் திருப்பிய போது சின்னதாகத் தேய்ந்து போன டிடர்ஜெண்ட் கட்டி தெரிந்தது. நித்யா விட்டு விட்டுப் போனது. ஆதி சண்டையிலிருந்து மீண்டு வருமுன்பே அவள் போய்விட்டாள்.
அவன் அவளுக்காகத் தண்ணீர் இறைத்ததையும், துணி துவைத்துக் கொண்டே அவர்கள் வம்பளந்ததையும் கூட்டம் பார்த்திருக்கிறது. கௌதம் நினைத்தான் ‘விட்டலாபுரத்தில் ஒருவன் பார்த்தாலே ஊரே பார்த்த மாதிரி. இது கூட்டம். கொஞ்சம் சிறகு வைத்துப் பறக்க விடுவார்கள். சிலருக்கு ஆதங்கம். பலருக்கு வயிற்றெரிச்சல்.’
“வெளியூரானுக்குத் தாண்டா நாம் ஊர்லே யோகம்!”
அன்றைக்கு பஸ் ஸ்டாப்பில் டீக்கடை வைத்திருக்கிற நாயருக்கும், தனக்கும் என்று பொதுவாக ஒருவன் வீசிவிட்டுப் போன சொல் நினைவு வந்தது.
அவன் திரும்பி, எத்தனையோ தாம்போகிப் பாலத்தையும் ஆற்று மணல் வெளியையும் கரையோரம் இமைத்து நிற்கும் தென்னை மர வரிசையையும், ஊருக்கு மகுடமிட்டு நிற்கும் அனந்த சயனப் பெருமாள் கோயிலையும் பார்த்தான்.
நெஞ்சில் ஏதோ கேவிற்று. ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரை ஏழு வருஷம். ஆற்றில் ஏழு வெள்ளங்கள். தாம்போகிக் கண்மாய்க்குள் ஆற்று வெள்ளம் பாயும் போது எதிர் நீச்சல்கள்.
பிறந்து வளர்ந்து இந்த ஊரின் அழகும் அருமையும் அறியாது மாண்டு போன ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தம் எனக்கில்லையா?
அம்மா கையைப் பிடித்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் சேர்த்தாள். ‘பையன் எப்படிப் படிக்கிறான் சார்?’ என்று மாதம் தவறாமல் வகுப்பு விடாமல் வந்து, ஆசிரியருக்குத் தாய்மைக் கரிசனத்தைக் கூச்சமின்றி வெளிப்படுத்தினாள். கடைசியில் அதோ அந்த ஈச்ச மரப் புதர் அருகே சாம்பலானாள். அப்புறம் அவன் பதக்கம் வாங்கியதைப் பத்திரிகைகள் படம் போட்டு வெளியிட்டன. விட்டலாபுரம் மேல் நிலைப் பள்ளியின் பெயரையும் சேர்த்து.
தான் வெளியூர், இங்கே தனக்குச் சொந்தமில்லை என்று பொறுமுகிறவர்களை நினைத்தான்.
இதற்கு மேல் ஒரு சொந்தமா? யார் வழங்குவது அதை? கிராம நிர்வாக அதிகாரியா? ஜனன மரண ரிஜிஸ்தரா?
நித்யா விட்டலாபுரத்தில் பிறந்தவள். அந்த ஊர் மண் காலில் ஒட்டிக்கொண்டு கூட அடுத்த ஊருக்குப் போய்விடக் கூடாதாம்[Contd]

No comments:

Post a Comment