Saturday, 13 September 2014

நான் அ. மார்க்ஸ்

                                                                நான் 
அ. மார்க்ஸ்
நான் அ. மார்க்ஸ் (அக்டோபர் 4, 1949). இது என் இயற் பெயர். என் தந்தை அந்தோணிசாமி, கூலித் தொழிலாளியாக மலேசியா சென்று, அங்கே பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர். ராமதாஸ் என இயக்கத்தில் அறியப்பட்ட அவர் இறுதி வரை ஒரு எளிய கம்யூனிஸ்டாக இருந்து மறைந்தவர். அதனால் எனக்கு இந்தப் பெயர்.

நான் 37 ஆண்டுகள் அரசு கல்லூரிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவன். கடைசியாகப் பணியாற்றியது சென்னை மாநிலக் கல்லூரி. ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவன்.

நான் நான்காம் வகுப்புவரை பள்ளி சென்றதில்லை. பின் இறுதிவரை அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயின்றவன்.

நான் ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் ஒருவனாகப் பங்கு பெற்றவன். இலக்கிய, அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவன். சிறிய, பெரிய நூல்கள் எல்லாம் சேர்த்து சுமார் 50 நூல்கள் வெளிவந்துள்ளன. என் கருத்துக்கள் கடும் விவாதங்களுக்கு உரியதாய் இருந்து வந்துள்ளன; இருந்து வருகின்றன. இருந்தபோதிலும், “ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” எனக் கண்ணதாசன் சொல்வாரே அந்த அளவிற்குக் கம்பீரமாகச் சொல்ல இயலாவிட்டாலும், மனதிற்குப்பட்டதைப் பேசியும் எழுதியும் வருகிறேன்.

நான் இன்று ஒரு முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளன்.


இணையத் தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓர்  இணையத் தளத்தை இனிய தோழர் கோ.சுகுமாரன் எனக்கென தோழர் திரட்டி வெங்கடேஷின் உதவியுடன் உருவாக்கித் தந்துள்ளார்

அடிக்குறிப்பு 

இணையவெளி கம்யூனிஸ்ட் சார்புடைய ஏடல்ல. அதே சமயம்  கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஏடுமல்ல. உலகில் நல்லவை எங்கெல்லாம் நடக்கின்றனவோ அவற்றைப் பதிவு செய்து போற்றுவதைத் தன கடமையாகக் கருதுகிறது. நல்ல பல நூல்களை எழுதி நல்ல பணிகளை அ. மார்க்ஸ் செய்துவருகிறார். அதைப் போற்றும் வகையில் அவரது இணையதளத்திலிருந்து எடுத்து நன்றி கூறி இதை வெளியிடுகிறோம் 
வையவன் 
நிர்வாக ஆசிரியர் 

No comments:

Post a Comment