Sunday, 7 September 2014

நட்சத்திரக்காதலிகள்-2

கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
               நட்சத்திரக்காதலிகள்-2 

காகம் கரைந்துக்கொண்டிருந்தது. கல்பனா, தண்ணீரும் கோலமாவுமாக வாசலுக்கு  வந்தாள்

கல்பனாவின் தாயார் அவளையே கூர்மையாகப்  பார்த்துக்கொண்டிருந்தாள். கல்பனாவின் செயல்களில் சிறு சிறுமாற்றம் ஏற்பட்டிருப்பது போல்  ஒரு சந்தேகம்அவளுக்குள்  .

அந்த திருவள்ளூர்த்  திருமணப்  பயணத்திற்கு பிறகு அவளது  உற்சாகம் இரட்டிப்பானதாகத் தோன்றியது. எப்பொதும் இதழ்களில் ஒரு மென் புன்னகை ஓடுவதும், அவ்வப்போது அந்த லேப்டாப் வயரை அணைத்தபடி சிந்திப்பதும், என்னவென்று கேட்டால் பதில் சொல்லாது மழுப்புவதுமான அவளின் போக்கு தாயாருக்கு மனக்கவலையை   ஏற்படுத்தியது.

அதிகாலையின் மேகக் கூடலும், நீல நிற எழுச்சியுமாக ரம்மியத்தை கூட்டியது காலைப் பொழுது. எதிர்வீட்டு தென்னை மரத்தில் காகம் தன் அலகை ஓலையில் தேய்த்துக்கொண்டிருந்தது. பத்து விரல்கள் விரித்து நடனமிடும் மாதை நினைவுப் படுத்தியது தென்னையின் விரிந்த கீற்றுகள்.

எதிர்வீட்டு மாடியில் ஒரு தகப்பன் குழந்தையை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

எதிர்வீட்டு பெண் தரையை வரக் வரக் என்று கட்டை தென்னந்தொடப்பத்தால் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

கல்பனாவிற்கு அந்த சப்தம்பிடிக்காது   அழகான கன்னிப்பெண்ணின் உடலை குச்சிகளால் கீறுவதை போன்றும் அவள் வலியால் தவிப்பதைப் போன்றதொரு மன பிம்பம் தோன்றிவிடும்

இதற்காகவென்றே அவள் அம்மாவையும் வாசல் தெளிக்கவோ  பெருக்கவோ விடுவதில்லை.

தரைமீது சாணத்தண்ணீர் தெளித்து பிறகு பூந்துடைப்பத்தால் பெருக்குவதை அநேகர் கேலி செய்வதையும் அவள் பொருட்படுத்துவதில்லை.

தன் உணர்வுகளைத்தானே  மதித்துக்கொள்வதில் அவளுக்கு  அலாதியான ஓர் இன்பம் !

கோலத்தின் கலர் பவுடரில்  ராஜீவ் நின்று சிரித்தான்.

அவன் சிவந்த உதடுகள் குவிந்து அழகு காண்பித்தது.

கல்பனாவின் கனவுக் காதலன் ராஜீவின் முகத்தைத் தரித்துக்கொண்டு சிரித்தான். ஒரு குழப்ப உணர்வு தோன்றியது அவளுள். முகமில்லாத வரி உருவுடன் நெருக்கம் குறைவது போன்றதொரு வலி, அந்த வலியை ராஜீவின் புன்னகை பூக்கும் இதழ்கள் இன்பமாய் மாற்றிக்கொண்டிருந்தன .

அவன் கரம் அழுந்தப் பதிந்த அன்றைய நாளின் நிகழ்வை எண்ணிக்கொண்டாள். சேலையையும் தாண்டி ,உடல் உணர்ந்த அந்த வெம்மை. உணர்வுகளை சிதறடிக்காமல் தனக்குள் மறைத்துக்கொண்ட அந்த நளினம். அவன் தடுமாறி இடம்பெயர்ந்த போது அந்த முகத்தில் தெரிந்த குறிப்புணர்த்தும்  ரேகைகளும், முக பாவனை தந்த அழகின் விகசிப்பும். லேசாய் அவனுள் ஏற்பட்ட அந்தத்தடுமாற்றம்

அந்த தடுமாற்றம் தனக்குள் படரச்செய்த  நாண ரேகைகளையும், கன்னம் படர்ந்த செம்மையும் நினைவலைகளைத் தீண்ட, மீண்டும் செம்மை படர்ந்தது அவள் கன்னத்தில்.

"ஏய் கல்பனா!"

அம்மா அதட்டினாள்

"ஏய் பிசாசு…!" என்ற அடுத்த குரலே கல்பனாவின் நினைவை கலைத்தது.

"என்னம்மா?" என்றாள்.

"என்ன இப்படி இளிச்சுட்டு போஸ் குடுக்குற?, எதிர்வீட்டுக்காரன் வேற உன்னையே பார்த்துட்டு நிக்குறான். நீயும் உன் டிரஸ்சும்.. அய்யோ கடவுளே!" என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

"எங்க காலத்துல அந்த சீட்டித் துணி தாவணியைத் தவிர நான் வேற எதையும் உடுத்தினதில்ல. எங்கப்பாரு அந்த பக்கம் வந்தாருன்னா காத தூரம் ஓடியிருப்போம்!. இப்ப என்னன்னா காதலிச்சுத்தான் கல்யாணம்ன்னு ஒத்தகால்ல நிக்குறவ, நீ திருவள்ளூர் போய் வந்ததுல இருந்து ஒண்ணும் சரியாயில்லயே, எவனையாச்சும் பாத்தியா?" என்றாள் குரலைத் தணித்து.

"அய்யோ அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?", என்று பக்கெட்டையும் துடைப்பத்தையும் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்  கல்பனா.

நீர்த்திவலைகள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊசி முனைப்  பந்துகளாய் வந்து விழ, நீரில் நனைந்த தலைமுடியை ஒதுக்கியபடி ஷவரை நிறுத்தினாள்.

அம்மா சொன்னது நினைவில் வந்து உறுத்தியது. "எதிர்வீட்டுக்காரனுக்கு போஸ்குடுக்குற, ராஜீவும் அப்படித்தான் எண்ணியிருப்பானோ அன்று?

அன்று அமர்ந்திருந்ததோ தன்னை மறந்த மோன நிலை, தவம் போன்று எண்ணம் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஒலித்த லயம், அது ஒரு ஒழுங்கு. விதிகளுக்குட்பட்ட நாதம்.

அந்த இரவு உடையின் மேல் டாப்பையும், பேண்ட்டையும் பார்த்தாள், உண்மை தான் அது உடலின் வரி வடிவை அப்பட்டமாக மிகைப் படுத்தி காட்டியது. என்னை நினைத்திருப்பான். அந்த எதிர்வீட்டுக்காரன்?. இத்தனைக்கும் அண்ணா என்று தான் அழைக்கிறாள் அவனை.

உறவு ரீதியான வார்த்தைகளில் உயிர்த்திருக்கும் உணர்வுகளை மதிப்பவள் கல்பனா. அண்ணா என்று அழைக்கப்படுபவனுக்கும், அண்ணா என்ற உறவில் வந்தவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அவளைப் பொறுத்த வரை.

ஆனால் இந்த சமூகத்தின் பார்வை வேறாக இருந்தது. அண்ணா என்று அழைத்த போது 'அண்ணா என்றால் அன்னைக்கே, மாமா என்றாள் மறுநாள்!' என்று சிநேகிதி சொல்லிச் சிரித்தது, ஒரு அறுவ் றுப்பை உமிழ்ந்துசசென்றது.

மற்றவர்கள் எப்படி நினைத்தால் என்ன தன் நினைவில் சரியாய் இருப்பது மட்டுமே தனக்கு சாத்தியம். மற்றவர் சிந்தனையில், இப்படி சிந்தி, அப்படி சிந்தி என்று எந்த வழிகாட்டுதலையோ அல்லது  கட்டுப்பாட்டையோ விதிக்க முடியாது.

'ஹேய்!" என்றான் ராஜீவ் நினைவு வெளியில் நின்று

"அய்யோ நீயா? போ போ போ" என்று கைகளை துரிதமாய் ஆட்டினாள் கல்பனா

"எதிர்வீட்டுக்காரன் உன் அழகை ரசிக்கலாம், நான் ரசிக்கக் கூடாதா?"

"அச்சோ போடா ப்ளீஸ் போயேன், நான் குளிச்சு முடிக்கிற வரை இந்தப்பக்கம் வராதேயேன்!" என்று கொஞ்சினாள்.

அவன் கேட்பதாகத்  தெரியவில்லை. அதே தெளிந்த பார்வையில் நேராய் முகம் நோக்கி, அவளை சுவரில் சாய்த்து நெற்றியில் முத்தமிட்டான்.

"ஏய் கல்பனா! பாத்ரூம்ல என்ன பண்ற, இந்த பொண்ணு பாத்ரும் போனாவே ஒரு மணி நேரம் ஆகுது.!"

சட்டென்று கனவைக  கலைத்துக் கொண்டு , வேக வேகமாய் நீரை ஊற்றி, தயாராகி வெளியே வந்த போது. பார்த்து "பத்திரமா போடி, இப்படியே கனவை கண்டுக்கிட்டு எவன் மேலயாச்சும் மோதி வைக்காத!"

"நல்ல வார்த்தையே வராதாம்மா உனக்கு?" என்று சலித்துக்கொண்டாள் கல்பனா

"நல்லதுக்குத்தானேடிம்மா சொல்றேன், எவன் மேலயாவது இடிச்சு காதல் வந்தா பரவாயில்ல கட்டி வச்சுடுவேன், பஸ்சு லாரின்னு கவனம் தப்பினா என்னடி ஆகுறது?. உன்னை வெளியில அனுப்பும் போதெல்லாம்  வயத்துல நெருப்பைக்கட்டிக்க வேண்டியதா இருக்கு!" அம்மாவின் கண்கள் கசிந்ததன .

என்னத திட்டினாலும் அம்மாவின் அன்பும் அதில் பிரதிபலிப்பதைக் கண்டு சிலிர்த்தாள் கல்பனா.
                                                               ......
ல்பனா மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் பணி முடித்திருக்கிறாள். தற்போது ஸ்கோப் டிரஸ்டின் மாற்றுத்திறனாளி களுக்கான பயிற்சி பள்ளியில் சிறப்பாசிரியராக பணியாற்றுகிறாள். தனியார் உத்தியோகம் என்பதால் ஊதியம் குறைவு தான். அப்பாவோ பொதுப்பணித்துறையில் உதவியாளர் பணி. பணத்திற்கு பஞ்சமில்லை என்ற மனநிறைவில் அவள் குடும்பமும் இன்ன வேலைக்கு போக வேண்டும், சமூக அந்தஸ்தில் உயர்வில் இருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தத்தையும் விதிக்கவில்லை.

சராசரி இல்லற வாழ்க்கை போதுமானதாக இருந்தது அவள் மனநிறைவிற்கு. எப்போதும் போல் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும், கணவன் வேலைக்குப் போக வீட்டில் குடும்பப் பொறுப்பை ஏற்பதுமான இலட்சிய வாழ்வு.

படிப்பை மட்டும் விட்டுவிட வேண்டாம் தொடர்ந்து படி என்பது மட்டுமே அப்பாவின் ஆலோசனையாக இருந்தது.

கல்பனாவிற்கும் படிப்பில் ஆர்வம் அதிகம். அவளுக்கு இலக்கியங்களில் தனி ஆர்வம் இருந்தது. சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள் அத்தனையும் அவளின் காலப் பொழுதுகளை திருடியிருந்தன. பாலகுமரன், சுபா, சிவசங்கரி, பட்டுக்கோட்டை பிரபாகர் , ரமணிச்சந்திரன் என்று ஒவ்வொரு கதாசிரியர்களையும் ரசிப்பவள்.

பாலகுமாரனை மட்டும் ஒருமுறையாவது நேரில் பார்த்துப்  பேசவேண்டும்  என்று ஆவல் 

கல்பனா அதிகம் எழுதினாள், அந்த ஒவ்வொரு எழுத்தும் அவளின் எழுத்தின் உயிர்பானவனுக்கு என்றே சிறப்பு மாலையாகக் கோர்க்கப்பட்டது. அவள் எழுத்துக்கள் பேஸ்புக் மற்றும் ப்ளாக்குகளில் பிரபலம்.

அவள் எழுதும் எழுத்துக்கள் யாரேனும் ஒருவரின் உள்ளத்தை தொட்டாகிலும் சமூக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற அடிமன எண்ணம் இருந்தது அவளுள்.

ஒரு பக்கம் பெண்ணுக்கே உரி்த்தான ஆண் துணைத் தேடல் இருந்தாலும் மறுப்பக்கம் சமூகத்தின் பால் அக்கறையும் கரிசனையும் கொண்டிருந்தாள். சமூகத்தை குற்றம் சாட்டுபவர்களை விடுத்து அன்பாய் நேசிப்பவர்கள் மட்டுமே தேவை .ஆழமான அன்பினால் மட்டுமே மாற்றங்களை உருவாக்க முடியும் என்று திண்ணமாக நம்பினாள்.

அதைச்  செயல்படுத்தத்  தன்னுடையவனின் துணை வேண்டும் என்றும், அவனும் சமுதாய நோக்குடையவனாகவும், பணத்தாசை இல்லாதவனாக பிறர்க்குப்  பகிர்ந்தளிக்கும் குணம் உடையவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்த வாழ்க்கையின் அனைத்து முழுமைகளையும் அனுபவித்துத்  தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கியிருந்தது .

செல்போன் ரீங்கியது. எதிர்புறத்தில் ஒருவன் சைக்கிளோடு வந்தான். இப்போது என்ன செய்ய, சட்டென்று ஒதுங்கி ஓரத்தில் நின்றபடி தொலைபேசியை ஆன் செய்தாள். சாலைவிதிகளைப் படித்திருக்கிறார்களா? என்று வினா எழும்பியது

இவளது இடப்புறத்தில், அவனுக்கு வலப்புறமாக நேர் எதிரில் வருபவனை மாங்கா மடையன் என்று திட்ட தோன்றிய வார்த்தையை விழுங்கி, புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

"அலோ!"

"அலோ கல்பனா இருக்காங்களா?"

"அவங்க அவசரமா ஆபிஸ் போய்ட்டு இருக்காங்க நீங்க யாருங்கன்னு சொல்லுங்க ?"என்றாள் கல்பனா.

"அப்ப நீங்க கல்பனா இல்லையா?" என்று வினவிய குரல் மிகப் பழக்கப்பட்டதாகத் தோன்றியது. அந்த ஆண் குரலின் ஆளுமை அவளை வசீகரித்தது.

ஒரு புன்னகை இழை ஓட "நான் கல்பனா தான் பேசுறேன் சொல்லுங்க ராஜீவ் !"என்றாள் கல்பனா.

சிறிது நேரம் குழம்பினாலும் சட்டென்று தன் குரலை அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தான்  ராஜீவ்

"எப்படிங்க அவ்ளோ கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க?"

'அதெல்லாம் அப்படித்தான்ங்க, ஆமா உங்களுக்கு எப்படிங்க என் நம்பர் கிடைச்சது?" என்றாள் கல்பனா

"ரோஜாவனம் கொடுத்தாங்க"

"என்னது ரோஜா வனமா?"

"ஆமாங்க!"

"என்னங்க குழப்புறீங்க?" 
பேசியபடி கொன்றை மரத்தைக் கடந்தாள். பிள்ளையார் இல்லாமல்  ஆடையில்லா பெண்மகளைப் போன்று வெட்கி நின்றது கொன்னை மரம்.

"ரோஜாவனம் ப்ளாக்ல போட்டு வச்சிருக்கீங்களே!" என்றான்.

"ம்! சரி சொல்லுங்க என்ன விஷயம்?" என்றாள்

உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கியதை மறைத்துக்கொண்டாள். ஒரு நாள் தான் பார்த்தேன். என் கனவுக் காதலனுக்கு உன் திருமுகத்தைக் கொடுத்துவிட்டேன் என்றால்  என்ன நினைப்பான்?

"டிரெய்ன்ல லேப்டாப் சார்ஜர் விட்டுட்டேங்க, என் லேப்டாப் உயிரில்லாம இருக்கு!" என்றான்.

"ஏங்க? லேப்டாப் வயர் வாங்க பணம் வேணுமா?" என்றாள் கிண்டலாக

"என்னங்க கிண்டலா, ப்ரண்டோடதாச்சேன்னு பத்திரமா எடுத்து வச்சிருக்கீங்களோன்னு நெனச்சேன்!"

"யாருங்க அந்த ப்ரண்ட்?"

"நான்தாங்க"

"நான் சொன்னேனா..நீங்க  ப்ரண்ட்டுன்னு?"

"பிறகு?" என்று வினாவால் தொக்கினான்.

"சொல்லுங்க!" என்றான்.

"ப்ரண்ட் தாங்க ராஜீவ்!" என்றாள். இதயத்தின் ஒரு ஓரத்தில் வலித்தது. காதலனை நண்பன் என்கிறாளே!

நட்பிற்கும் காதலுக்கும் ஒரு நூலிழை வித்தியாசம் தான். நட்பிற்கு காமம் இல்லை. நெருக்கமாய் இழையோடும் உடலின் உணர்வுகள் இல்லாமல் காதல் இல்லை.

இவள் மேல் ஏற்பட்டது என்ன காமமா? காதலா ? நட்பா? இனக்கவர்ச்சியா? எத்தனை கேள்விகள் தொடர்ந்து எழுந்தாலும் பதில் இல்லை அவளிடம்.

"நான்  சொல்றேன். கொஞ்சம் குரியர் பண்ணிருங்களேன் என்றான் ராஜீவ்

"நான் ஆபிஸ் போய்ட்டு இருக்கேங்க என்கிட்ட பேனா கூட இல்ல"

"எதுக்குங்க பேனா செல்போன்ல மெசெஜ் போட்டுக்கங்களேன்."

"ம்ம்ம் இந்த கூட்டத்துல அதெல்லாம் ரிஸ்க்குங்க!" என்ற போது குழந்தை அவள் முந்தானையைப் பிடித்து இழுத்து சிரித்து பின் சுணங்கியது. தேனு என்று  ஒருத்தி திர்ச் சாரியில் இருந்து ஓடி வந்தாள். குழந்தை கருஞ்சாலையின் விளிம்பில் நிற்க, கிட்டத்தில் லாரி ஒன்று வரவே குழந்தையை தூக்கிக்கொண்டாள் கல்பனா.

போன் தரையில் விழுந்து, தேவி பராசக்தியின் இறந்த உடல் பாகங்கள் போன்று நாற்புறமும் சிதறின .

காற்றை இருபக்கமும் வீசி ஒரு லாரி விர்ரென்று கடந்து போக, நகரத்திற்குள் இது போன்ற கண்டெய்னர் லாரிகள் வராது இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினாள். பெரிய வாகனங்களுக்கு என்று வேறு பாதை அமைக்க வேண்டும். என்ன சிந்தனை இது இவள் என்ன முதல் அமைச்சரா? அல்லது குறைந்த பட்சம் அரசாங்கவாதியா அல்லது அரசு அதிகாரியா? இயல்பிற்கும் இருப்பிற்கும் மாறுபட்ட சிந்தனை இது.

குழந்தை உதடு பிதுங்கி அழுதான். "இந்தாம்மா எதுக்கு கொழந்தையை தூக்கின ?என்று கர்ண கடூ ரக் குரலில் அதட்டினாள் அந்த மாது

"குழந்தை அழுவறானே!".

உள்ளத்தில் கடுங்கோபம் மூண்டது

'குழந்தை அழுவதற்காகப்  பரிதவிப்பவள், குழந்தைக்கு அடிப்பட்டிருந்தால்  என்ன செய்திருப்பாள்?'

"லாரி வந்ததுக்காக தூக்கினேன், குழந்தையை அழவைக்க இல்ல!" என்று சிரித்தாள் கல்பனா

அந்த தடித்த பெண்ணுக்கு பின் வந்தவள் "ரொம்ப தேங்க்ஸ்ங்க" என்று குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

ஓ இவள் தான் அம்மாவா! அப்போது தான் கவனித்தாள் கல்பனா, அந்த பெண்ணும் தன்னைப் போலவே வெள்ளை நிறத்தில் அடர்பச்சைப் பொட்டுக்கள் தூவிய சுடிதாரை அணிந்திருந்தாள்.

குழந்தை தன்னைப் பற்றி முகம் பார்த்த பின் அழுததை எண்ணிக்கொண்டாள். இப்படித்தான் தானும் தன் காதலன் இவன் தான் என்று பற்றி பின் குணம் பார்த்துப்  விலக போகிறோமோ என்ற வேதனை மிகுந்தது உள்ளத்தில். வசீகரிக்கிற எல்லா உருவங்களும் தன்னுடையதல்ல என்றொரு இறுமாப்பு.

கீழே கிடந்த செல்போனை பொறுக்கி எடுத்து, அதற்கு உயிர்கொடுத்த போ து செல்போன் ராஜீவ் 20 முறை போன் செய்திருக்கிறான் என்றது.

'இவள் மீண்டும் ராஜீவிற்கு தொடர்பு கொள்ள, நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் 'என்றது  மறுமுனை.

ஆம் அவன் தன்னுடைய தொடர்பு வட்டத்தில் இல்லாதவன் என்பதே உண்மை. அவன் மனதில் வேறு எவளேனும் இருந்தால் . தனக்குள் வந்து போகும் கற்பனைகள் போல அவன் மனத்தில் கற்பனைகள் எத்தனையோ!

அவள் அலுவலகத்தை நோக்கி வேக நடை நடந்தாள்.[வளரும்} 






No comments:

Post a Comment