Thursday, 4 September 2014

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகர்

கவிதாயினி ஜி.ஜே. தமிழ்ச்செல்வியின்  
அன்றாடம் ஒரு பார்வை 
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகர் 

அந்தச்  சாலையின் கருப்பு மேனியில் சிதறிக்கிடந்ததன  அரிசிப் பரல்கள். அதை திகைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த கருப்பு தேகத்துக்கும் பரட்டைத் தலைக்கும் சொந்தக்காரி.  அந்த அரிசியைச் சுமந்து வந்த பை சாலை ஓரம் தன் பயனின்மையை வெளிக்காட்டுவது போல கைப்பிடிகள் விரிந்து விழுந்திருந்தது . அதைச் சுமந்து வந்தவன் அந்தப் பை விரிந்து கிடப்பதைபோலவே கை விரித்து சாலையின் மற்றோர் ஓரத்தில் விழுந்து கிடந்தான்.  நன்றாகக்  குடித்துவிட்டு தரையிடம் சரண்புகுந்திருந்தான் அவன்.மாதக்கணக்கில் குளிக்காதவன் போல ஒரு பரிதாபத் தோற்றம் .அழுக்கேறிய உடை. எண்ணெய் காணாத தலை.

அவன் அருகே  யப்பா எய்ந்திரிப்பா" என்று அவனை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தது வற்றலும் தொற்றலுமாய் ஒரு பெண் குழந்தை.

வீட்டிற்கு அரிசி வாங்க வந்தவன் டாஸ்மாக் ராட்சசியின், மாயாஜாலத்தில்  மயங்கி, கையிலிருந்த சொற்பக்காசையும் அவளுக்குத்தாரை வார்த்திருந்தான் .

அந்த காட்சி என்னை வெகுவாக பாதித்தது
இன்று அவர்கள் வீட்டில் எப்படி அடுப்பு எரியும்? 
எப்படி அந்தச் சிறுமியின் பசித்தீ தணியும்?

டாஸ்மாக் கடையில் மது விற்பவன் அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு ஏளனப் புன்னகை புரிந்தபடி யாரிடமோ சொன்னான்.


'லெவல் தெரியாமே இவனுங்களை யார் குடிக்கச்சொன்னது? யார் இப்படி  விழுந்து கெடக்கச் சொன்னது?ட்ராப்பிக் நியூசென்ஸ் "


அந்த மற்றொருவன் அவனுக்குப் பதில் சொன்னான்.


"அரசாங்கம் ப்ரீயா அரிசி கொடுத்துடுது. அதை வாங்க வேண்டிய காசை நீ பிடுங்கிக் கொண்டு தண்ணி ஊத்திடறே! அங்கே சலுகை! இங்கே வசூல். மேட்டர் ஓவர். "


அவன் விற்பனையாளன்.

அதற்கு உரிமம் எடுத்தவன் வேறொருவன் 
அவனும் கண்ணாடித்திரையின் பின்னால் குடித்துக்கொண்டிருந்தான். உயர்ந்த ரகமாக இருக்கும் 
அவர்களை விற்க அனுமதித்தவர்களுக்கு வரிப்பணம் கரெக்டாகச் சேர்ந்து கொண்டிருக்கும் 
ஏழைகளின் வயிற்றரிசியும் திருடிக்கொள்ளும் அந்த டாஸ்மாக் முன்பு. . அவர்கள் பன்னியாண்டி சாதியைச் சேர்ந்தவர்கள். . பன்றி  மேய்ப்பது தான் அவர்களது தொழில்.இப்போது அவன் அருகே ஒரு பன்றி அவனை முகர்ந்து கொண்டிருந்தது. அவன் தன் எஜமான் தானா?
இதே இனத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை இரு தினங்களுக்கு முன்பு சந்தித்தேன். வெயிலில் கண்கள் சுருங்க எங்கள் வட்டார அலுவலகத்தின் முன்  நின்றிருந்தாள். என்ன என்று விசாரிக்க, பன்னியாண்டிஎன்று சாதி சான்றிதழ் வேண்டுமாம். பன்னி ஆண்டி எஸ்சி பிரிவு  அடையாளம் வேண்டுமாம். 

அவர்கள் அந்தப்பிரிவு தானா? உறுதி செய்ய முடியவில்லை 

இதில் மற்றொரு பிரச்சினை  கல் உடைக்கும் ஒட்டர்களும். பன்றி மேய்த்துக்கொண்டு எஸ்சி சான்றிதழ் கேட்பதால் அரசாங்கத்திற்கு தலைசுத்தல்.
ஒரு பக்கம் இலவசம், மறுபக்கம் உழைக்குற காசை பிடுங்க ஒரு வழி, மறு பக்கம் அனல் தெரிக்கும் மேடைப் பேச்சு! உள்ளம் மட்டுமே அறிந்த மற்றும் ஒரு பேச்சு. 
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நடிகன் ஒளிந்துக்கொண்டிருக்கிறான் போலும். தன் தேவையை பூர்த்தி செய்ய என்னவெல்லாம் பொய்மை மேல் மெய் மூலாம் பூச வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment