தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 2[சென்ற பதிவின் தொடர்ச்சி]
அரசன் பேசும்போது குறுக்கிடுவது அழகல்ல என்று அமைதியாக இருக்கும் முருகேசன், அவனுடைய ஆணைக்கு மரியாதை செலுத்த, தலையை மட்டும் அசைக்கிறான்.
“இலங்கை மன்னர் மகிந்தரும் ஐயாயிரம் சிங்கள வீரர்களைப் பொக்கிஷப் பாதுகாப்புக்காகத் தர ஒப்பம் அளித்திருக்கிறார். அவர்களுக்கும் நீயே தலைவனாக இருப்பாய். சோழர்களை உறுதியாக இத்தடவை தோற்கடித்து விடுவோம். நீயும் உனது கடமையை உணர்ந்து செயல்படுவாயாக! உன் கவனம் சிதறக்கூடாது, உன் மனைவி மக்களைப் பற்றிய கவலை இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களைப் பாண்டிய நாட்டின் பாதுகாப்பான இடமான நெல்லைக்கு அனுப்பி வைக்க என்று உனக்கு ஆணையிடுகிறோம். அவர்களின் பாதுகாப்புக்கு எமது உத்திரவாதத்தை உனக்கு யாமே அளிக்கிறோம்!” என்று மேலும் விளக்குகிறான் விக்கிரமன்.
“ஆணை அரசே!” என்று பெருமிதத்துடன் பதிலளிக்கிறான் முருகேசன். கடைசியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டி நாட்டுக்காக வாளேந்தும் தருணம் வருகிறது என்பதை அறிந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் பளிச்சிடுகிறது.
“மிக்க மகிழ்கிறேன், முருகேசா!” என்ற விக்ரமன் மேலும் தொடர்கிறான்.
“உன் மாதிரி வீரர்கள்தான் பாண்டி நாட்டுக்குத் தேவை! நாம் வெற்றி பெருவோம்! சோழர்களைத் தஞ்சைக்கு விரட்டி, கிடுக்கிப்பிடி போட்டு மடக்குவோம்! நமது வெற்றி விழாவிலே கலந்து கொள்ள நீ மதுரைக்கு நமது பரம்பரைப் பொக்கிஷத்தோடு வரத்தான் போகிறாய்! அங்கு உன் மனைவி மக்களுடன் இணைந்து பாண்டி நாட்டுக்கு மேலும் பல வீர மக்களைப் பெற்றுத் தரத்தான் போகிறாய்! வெற்றிவீரனுடனும், காளையப்பனுடனும் நாளை பாண்டி நாட்டுக்குத் திரும்பும் என்னுடன் உன் மனைவியையும், குழந்தைகளையும் அனுப்பி வைப்பாயாக!” அவன் முதுகில் அன்புடன் தடவிக் கொடுக்கிறான்.
முருகேசனின் மெய் சிலிர்க்கிறது. நான்கு ஆண்டுகளாக வாளாவிருந்த பாண்டியப் படை சோழர்களின் மீது பாயப் போகிறது என்றதை அறிந்து மகிழ்கிறான். மீனக் கொடி மீண்டும் மதுரையில் பறக்கும் நாளைக் கண்ணுறப் போவதை எதிர்நோக்கி அவன் உள்ளம் பூரிக்கிறது.
“ஆணை, அரசே! என் உடலில் கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை பாண்டியப் பொக்கிஷம் பாதுகாக்கப்படும்! ஒவ்வொரு பாண்டிய மறவனும் ஒன்பது சோழவீரர்களுக்குச் சமம்! தினவெடுத்த எங்கள் தோள்களுக்கு, அவர்களது உயிரைக் குடிக்கும் போர் ஒரு பயிற்சியாக இருக்கும்! இது சொக்கநாதர் மீதும், அங்கயற்கண்ணி அம்மை மீதும் ஆணை!” வீரத்துடன் முழங்குகிறான்.
“இன்று இரவு நான் உன் வீட்டில் உணவு உண்டுவிட்டுத்தான் செல்லப் போகிறேன். என்னுடன் மொத்தம் இருபது பேர் வருவார்கள். இப்பொழுது காளையப்பன் உன்னுடன் வருவான். அழைத்துச் செல்.” என்று திரும்பி நடக்கிறான் விக்கிரம பாண்டியன்.
வீட்டிற்கு வந்த முருகேசன் முதல் வேலையாகத் தன் புஜத்தில் இருந்த தாயத்தை அவிழ்த்து சொக்கனின் கழுத்தில் மாலையாக அணிவிக்கிறான். வள்ளிக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. “என்ன அத்தான் இது. நம்ம பரம்பரைச் சொத்தை இப்படித் திடுமுனு சொக்கன் கழுத்திலே கட்டுறீங்களே!” என்ற பதைபதைப்புடன் வினவுகிறாள் வள்ளி.
“மகாராசா ரவைக்கு (இரவில்) நம்ம வூட்டுக்குச் சாப்பிட வரப்போறாரு, புள்ளே! வெட்டிக் கேள்வி கேக்காம இருவத்தஞ்சு பேருக்கு உடனே சாப்பாடு ஆக்கற வேலையப் பாரு!” என்று முருகேசனிடமிருந்து அதட்டலான பதில் வருகிறது. .
தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 3..தொடர்கிறது
அத்தியாயம் 3தஞ்சை அரண்மனை
ராட்சச, பங்குனி 10 - மார்ச் 24, 1016
கிட்டத்தட்ட முப்பத்தைந்திலிருந்து நாற்பது பேர்கள் அரச ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றனர். இராஜேந்திரனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜாதிராஜனுக்கு அருகில் இருக்கும் இருக்கைகளில் சிவாச்சாரியனும், அவனுக்கு அடுத்தபடியாக இறையிரவன் பல்லவராயரும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜேந்திரதேவனுக்கு அடுத்த மூன்று இருக்கைகளில் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரும், வடபுல, மற்றும் தென்புல அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறான். இன்னும் கடற்படைத் தலைவர்கள், தண்டநாயகர்கள், ஒற்றர் தலைவர்கள், துணை அமைச்சர்கள், நிதியாளர்கள், என்று பலப் பலபேர் குழுமியிருக்கிறார்கள். மண்டபத்தைத் தாண்டி உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் ஒலி கேட்காத தூரத்தில் வீரர்கள் சுற்றிலும் காவலுக்கு நிற்கிறார்கள். இராஜேந்திரன் அரியணை ஏறியபின் முதல்முதலாக சோழப் பேரரசின் முக்கியமான அரசு அதிகாரிகளைக் கூட்டி நடந்தும் கலந்துரையாடல் இது. சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகம் என்ற முறையில் சிவாச்சாரி எழுந்து நின்று கலந்துரையாடல் ஆரம்பமாவதை அறிவிக்கிறான்.
“கோப்பரகேசரியாரின் ஆணைக்கிணங்க அனுப்பப்பட்ட ஓலை மூலம் இங்கு வந்து குழுமியிருக்கும் சோணாட்டின் தூண்களான உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். கோப்பரகேசரியாரின் ஆணைப்படி இக்கலந்துரையாடல் துவங்குகிறது.”
சிவாச்சாரி தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறான். ஆலோசனை மண்டபமே அமைதியாகி விடுகிறது. அனைவரும் இராஜேந்திரனின் முகத்தையே உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். தனது மீசையை நீவிவிட்டுக் கொள்கிறான் இராஜேந்திரன். பிறகு மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும் தனது பார்வையைச் சில கணங்கள் நிலை நிறுத்துகிறான். அவன் இம்மாதிரி அனைவரையும் கண்டுகொள்ளப் பல நிமிடங்கள் ஆகின்றன. அவனது பார்வை தங்கள் மேல் விழுகிறது என்பதை அறிய ஆரம்பித்த உடனேயே அனைவரும் தங்கள் மன ஓட்டத்தைக்கூடக் கட்டுப்படுத்தி, தங்கள் பார்வையை அவன் மீது நிலை நிறுத்துகின்றனர்.
இராஜேந்திரனுடைய தனித்திறமையைக் கண்கூடாக அறிகிறான் சிவாச்சாரி. இராஜராஜரைவிட அவன் எந்தவிதத்தில் மாறுபடுகிறான் என்பதை அவன் அனைவரின்மீது செலுத்தும் கண்ணோட்டம் அவனுக்குத் தெரிவிக்கிறது. தான் பேசப் போகும் ஒவ்வொரு சொல்லிலும் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லாமலேயே தெரிவிக்கும் அவனது திறமை அவனது கோப்பரகேசரி என்ற பட்டத்தை நிரூபிக்கிறது. இராஜராஜருக்கு எந்தவிதத்திலும் அவன் சளைத்தவனாக இருக்கமாட்டான், சோழப் பேரரசை மிகவும் உன்னத நிலைக்கு அவன் கொண்டு வருவான் என்று அவன் உள்மனம் தெரிவிக்கிறது.
தொண்டையை இலேசாகச் செருமிக் கொள்கிறான் இராஜேந்திரன். உடனே மண்டபத்தில் இருக்கும் அனைவருமே மகுடியில் கட்டுண்ட நாகமாக மாறுகிறார்கள்.
“எமது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் சோழ நாட்டின் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். நமது பேரரசிற்குச் சிறந்த அடித்தளத்தை அரசகேசரியான எனது தந்தையார் அமைத்துக் கொடுத்து பெருவுடையாரின் அடி சேர்ந்தார்கள். மும்முடிச் சோழனாக, திரிபுவனச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியைத் தனது குடைக்கீழ் கொணர்ந்தார். அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும், அவரது கனவை நாம் தொடர்ந்து நனவாக்க வேண்டும். அவருடைய பணியைத் தொடர்வது - அவர் அமைத்த அடித்தளத்தின் மேல் பெரிய கட்டிடத்தை நிறுவுவதே ஆகும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடியே உங்களை அழைத்துள்ளேன்.”
தனது பேச்சை நிறுத்தி அனைவரையும் நோக்குகிறான் இராஜேந்திரன். இந்தத் தடவை ஒவ்வொருவராக நோக்காமல் பொதுவாக மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறான்.
“கரிகால் பெருவளத்தான் பூம்புகாரையும், உறையூறையும் தலைநகராகக் கொண்டு சோழர் புகழைப் பரப்பினர். அதுமட்டுமல்லாது, அடிக்கடி வெள்ளத்தில் முழுகடித்து வந்த காவிரியிடமிருந்து சோழநாட்டை மீட்க அதற்குக் கரையமைக்கத் தீர்மானித்தார். அத்தோடு நிற்காமல், பருவ காலத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அந்த நீரைத் தேக்கி, கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து செந்நெல் விளைவிக்கவும் முடிவெடுத்தார்.
“அதை நிறைவேற்ற, இலங்கையிலிருந்து பல்லாயிரக் கணக்கானோரை அடிமை செய்து கொணர்ந்து காவிரிக்குக் கரையமைத்தார். கொணர்ந்த அடிமைகளின் தலைமீது கல்லேற்றி ஆற்றின் குறுக்கே கல்லணையையும் நிறுவினார். காட்டாறாகக் கட்டற்றுத் திரிந்த காவிரியை அடக்கி, அவளது நீரைக் கட்டுப் படுத்தி, காடுகளைக் கழனியாக்கி, நம் நாட்டைச் செழிப்பாக்கி, பயிர் வளர்க்கும் பொன்னியாக மாற்றினார். அதனால் சோணாடு சோறுடைத்து என்ற பெருமொழியையும் நம்நாட்டுக்குக் கிடைக்கச் செய்தார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு திருநகர்களும் சோழர்களின் பெருமையை இவ்வுலகுக்குப் பறைசாற்றியிருக்கின்றன. இப்படிப்பட்ட மணியான திருநகர்கள் ஒன்றான பூம்புகாரை, கடலன்னை பொறாமையால் எடுத்து விழுங்கி விட்டாள். கலியின் தூதர்களான களப்பிரர்களால் தமிழகமே இருண்டது. சோழ நாட்டின் புகழும் மங்கியது.
“விடிவு வராதா என்று ஏங்கிய சோழ அன்னையின் புலம்பலுக்கு அருமருந்தாக - நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரான விஜயாலய சோழர் முத்தரையர்களின் ஊரான தஞ்சையைத் தமதாக்கிக் கொண்டார். சோழர் புகழை மீண்டும் தழைக்கச் செய்த அவர் காலத்திலிருந்து தஞ்சை சோணாட்டின் தலைநகராகச் சிறந்து விளங்கி வருகிறது. பெருவுடையாருக்கு மிகப்பெரிய கற்றளி அமைத்து அதை மேலும் சிறப்பித்தார் எனது தந்தையார். இருப்பினும் சோணாட்டிற்கு தலைநகராக விளங்கிய புகாரோ, கோழியூரான உறையூரோ அல்ல தஞ்சை என்பது நாமறிந்ததே!”
இதுவரை இனிமையாக இருந்த இராஜேந்திரனின் பேச்சு தஞ்சையைப் பற்றித் திரும்பியதும், அனைவரின் முகங்களிலும் குளிர்ந்த நீரை விசிறியடிப்பதைப் போனற் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தஞ்சை முத்தரையர்களின் ஊர் என்பதும், சோழர்கள் தங்கள் அரசை விரிவு படுத்தியபோது அது அவர்கள் ஆட்சிக்குக் கீழ் வந்ததும், இராஜராஜர் தஞ்சையைச் சோழநாட்டின் தலைநகராக்கியதும் அனைவரும் அறிந்ததே! இருப்பினும் அனைவரும் மறந்து வரும் அதை இராஜேந்திரன் ஏன் நினைவு படுத்துகிறான்!
“சோழ நாட்டுக்கு மையமாகத் தஞ்சை இருந்தபோது அதைத் தலைநகராகச் செய்தது தந்தையாரின் மதியூகமே. இப்பொழுது சோழநாட்டின் எல்லை பறந்து விரிந்திருக்கிறது. இயற்கை அரணாகக் காவிரியும், கொள்ளிடமும் விளங்கியது போக, அவை உள்நாட்டு நீர்ப் போக்காக ஆகியதுதான் கண்கூடு. தொண்டை மண்டலமும், கொங்கு நாடும், கீழ்ச் சேரநாடும், பாண்டிய நாடும் சோழப் பேரரசின் நேர் ஆட்சிக்குக் கீழ் வந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிதான். எனவே, இந்தப் புது நிலங்களுக்கு நடுநாயகமாகவும், நமது வட எல்லைகளை விரைவில் அடையவும் ஏதுவாக இருக்கும் இடத்தில் சோழப் பேரரசின் புதிய தலைநகராக நிர்மாணிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.”
அந்த மண்டபத்தில் “ஆ!” என்ற பேரொலி எழுகிறது. இராஜராஜர் கோலோச்சிய தஞ்சையை விடுத்து இன்னொரு தலைநகரா!
“உங்கள் கருத்துகளைச் செவிமடுக்க ஆவலாக உள்ளோம். முதலில் நமது முத்தரையர் பரம்பரைச் செல்வர் தமது கருத்தைத் தெரிவிக்கட்டும்!”
மெல்ல எழுகிறார் வயதான முத்தரையர். இராஜராஜருடன் களம் பல கண்டவர் அவர். அவரைவிட வயதில் மூத்தவர். தங்கள் முன்னோர்களின் நகரமான தஞ்சை சோழர் வசம் சென்றாலும், சோழர்கள் தங்களைச் சிறந்த பதவிகளில் அமர்த்திச் சீரும் சிறப்புமாக நடத்தி வருவதும், தங்கள் குலப் பெண்களை மணவினை செய்து கொள்வதும் அவர்களை சோழர்களில் ஒருவராகவே ஆக்கி வந்திருக்கிறது. அப்படியிருக்கையில் இராஜேந்திரன் திடுமென்று தஞ்சை முத்தரையர்கள் ஊர் என்று குறிப்பிட்டது அவர் இதயத்தைக் கனக்கச் செய்கிறது.
“கோப்பரகேசரியாரே!” தான் தூக்கி வளர்த்து மதுராந்தகா என்று வாய் நிறைய அழைத்து வந்த இராஜேந்திரனை அரச மரியாதையுடன் அழைப்பதும் அவருக்கு என்னவோ போலத்தான் இருக்கிறது.
“தாங்கள் எங்கு வேண்டுமானாலும் சோழப் பேரரசின் புதுத் தலைநகரை நிர்மாணிக்கலாம். அதற்காக எக்காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்வேன், ஒன்றைத் தவிர. முத்தரையர்கள் என்றும் சோழர்களின் நண்பர்கள். தஞ்சை தங்களது ஊராகும். எனவே அது சோழர்களது ஊர் அல்ல என்று சொல்வது என் மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்திருக்கிறது!” அவரது குரல் தழுதழுக்கிறது. அப்படியே மெதுவாக இருக்கையில் அமர்ந்து கொள்கிறார் அவர்.
“முத்தரையர் பெருமானே! நான் சொன்னது தங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல. அப்படி அமைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். தங்கள் முன்னோர்கள் தஞ்சையை எங்களுக்குச் சீதனமாக அளித்திருக்கிறார்கள். அதற்காக என்றென்றும் சோணாடு தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. தந்தையார் கற்றளி அளித்துச் சிறப்பித்ததைப் போல யாரும் தஞ்சைக்கு திருச்சுற்று மாளிகை அளித்துச் சிறப்பளிக்க இருக்கிறோம். அதற்காக ஓலைநாயகத்தை திட்டம் தீட்டி நிறைவேற்றவும் பணிக்கிறோம். அது மட்டுமல்ல, தஞ்சைக் காவலராக இனிமேல் ஒரு முத்தரையர் குலக்கொழுந்தே இருந்து வருவார் என்று ஆணையும் பிறப்பிக்கிறோம்.” முத்தரையரின் மறுப்புக்கு சமாதானமளிக்கிறான் இராஜேந்திரன். ஒருவாறு சமாதானமடைகிறார் முத்தரையர்
.
.
முத்தரையரே விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது போலப் பட்டதும் வடபுல அமைச்சர் கையை உயர்த்துகிறார். அவர் பக்கம் திரும்பிய இராஜேந்திரன், “சொல்லுங்கள் அமைச்சரே! உங்களது எண்ணத்தையும் அவையாருக்கு அறிவியுங்கள்!” என்கிறான்.
“அரசே! புதிய தலைநகரை எங்கு அமைப்பதாகத் தங்கள் விருப்பம்?” என்று கேள்வியைத் தொடுக்கிறார்.
“அமைச்சரே எமது விருப்பம் இருக்கட்டும், தங்கள் விருப்பம் என்னவோ?”
“காஞ்சி...” என்று இழுக்கிறார்.
கடற்படைத் தண்டநாயகர் கை உயர்கிறது. அவரைப் பேசச் சொல்வது போலக் கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன்.
“அரசே! இப்பொழுது சோழப் பேரரசு ஒரு சிறந்த கடலோடும் அரசாகி வருகிறது. எனவே, கடற்கரையில் புதிய தலைநகரை அமைப்பதே சாலச் சிறந்ததாகும். திருமயிலை ஒரு சிறந்த இடம் என்று இந்தப் பேரவைக்குச் சொல்ல விரும்புகிறேன்.” என்கிறார் அவர்.
பலரும் பலவிதமான இடங்களை அறிவிக்கிறார்கள். இராஜேந்திரனின் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது. யாரும் அவன் மனதில் உள்ளதை அறிவிக்கவில்லை. இறையிரவன் பல்லவராயரும், சிவாச்சாரியனும் வாயைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்பிய இராஜேந்திரன், “பல்லவராயரும், ஓலைநாயகமும் அமைதியாக அமர்ந்திருப்பதின் காரணத்தை இந்த அவைக்குத் தெரிவிக்கலாமே!” என்று புன்னகைக்கிறான்.
“கோப்பரகேசரியாரே! என் மனதில் சோழ நாட்டுக்கு ஒரு புதிய தலைநகர் வேண்டும் என்று தோன்றவில்லை!” என்று பளிச்சென்று அறிவிக்கிறான் சிவாச்சாரி.
“காரணம் என்னவோ?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது
.
.
“தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றவேண்டும் என்று எனக்குப் படவில்லை. வேறொன்றுமில்லை. மற்றபடி கோப்பரகேசரியாரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் நான்!” இப்பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் மன்னன் விரும்புகிறான் என்று அறிநது அதற்குத் தகுந்தபடி - தங்களுக்குத் தோன்றிய ஒரு ஊரின் பெயரை அறிவித்தார்கள். முத்தரையர்கூட தஞ்சை சோழர்களின் சொந்த ஊர் அல்ல என்றுதான் வருந்தினாரே தவிர இராஜேந்திரன் விருப்பத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, இராஜேந்திரனின் மருமகனாக இருந்தும், அவனது விருப்பத்தை ஆதரிக்காமல் சிவாச்சாரி பேசியது அனைவருக்கும் மலைப்பாகத்தான் இருக்கிறது. இதனால் அவன் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப்படுமோ என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் பெரிதாக எழுந்து நிற்கிறது.
பெரிதாகச் சிரிக்கிறான் இராஜேந்திரன். “கடைசியில் தஞ்சைக்கு ஆதரவாக ஒரு குரல் எழும்பியிருக்கிறது! முத்தரையர் சார்பாக சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சையே இருக்கட்டும் என்று ஓலைநாயகம் அறிவிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோமாக!” என்றபடி இறையிரவரன் பல்லவராயரை நோக்கி, “நீர்தான் பாக்கி இருக்கிறீர். உமது கருத்தைச் சொல்வீராக!” என்று அவரை உற்று நோக்குகிறான்.
“அரசே! அனைவரும் ஒரு ஊரையோ, நகரையோ சோழப் பேரரசின் புதிய தலைநகராக அறிவிக்கும்படி குரல் கொடுத்தார்கள். காஞ்சி பல்லவர்களின் தலைநகரம் - என் சொந்த ஊராக இருந்தாலும்கூட. திருமயிலை சிவனாரின் திருத்தலம். கடலில் சீற்றம் அங்கு அதிகமாகவே உள்ளது. மல்லையின் கீழ்ப் பகுதியைக் கடல் கொண்டதும் நாமறிந்ததே. எனவே பெரிய நகரை மயிலையில் எழுப்புவது பூம்புகாரின் நிலைமை அதற்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொண்டே செய்வதற்கு இணையாகும். கடற்கரையில் துறைமுகங்களைக் கட்ட வேண்டும், தலைநகரை எழுப்பக்கூடாது என்பது எனது கருத்து. எதிரிகளின் கடற்படைத் தாக்குதலிருந்து தவிர்த்துக் கொள்ள அது உதவும்.
“எனவே, உள்நாட்டில் தலைநகர் இருப்பதே சாலச் சிறந்தது. அதுவும், புதிதாக, அடிமட்டத்திலிருந்து அதை எழுப்புவதே முறையாகும். பலவிதமான பாதுகாப்புகளுடனும், இக்காலம் மற்றுமல்லாது எதிர்காலத்திற்கும் சிறப்புடையதாகவும், சோழர் பெருமையை நிலைநிறுத்தும் புகழுடையதாகவும் அதை அமைக்கவேண்டும். ஆகவே அது எங்கு இருக்க வேண்டும் என்பதையும் தாங்களே அறிவிக்கவேண்டும் என்றே இந்தப் பேரவைக்கு நான் முன்மொழிகிறேன்!” என்று அமர்ந்துகொள்கிறார் பல்லவராயர். தனது மன்னனின் விருப்பம் என்ன என்று அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தவராயிற்றே!
“பல்லவராயரே! உம்முடைய, மற்றும் திருமந்திர ஓலைநாயகரின் பதில்களைக் கேட்டால் நீங்கள் இருவரும் எமக்கு அறிவிக்காமல் பதவி மாற்றம் செய்து கொண்டமாதிரி தோன்றுகிறது. அவர் தண்டநாயகர்கள் போலச் சுருக்கமாகத் தன் கருத்தைச் சொன்னார். நீர் ஓலைநாயகரைப் போல் நன்கு விளக்கம் செய்து உமது கருத்தை வலியுறுத்தினீர். உமது விளக்கம் எமக்கு மிகவும் சரியான ஒன்றாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்தையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டோம். அந்த இடத்தையும் அரசு கையாக்கம் செய்ய ஆணையும் அப்பொழுது பிறப்பித்தோம். அந்த இடம் கொள்ளிடத்திற்கு வடபாங்கில் அமைந்திருக்கிறது. அங்கே புதிய தலைநகரை உருவாக்குவோம்.
“நீரும், திருமந்திர ஓலைநாயகமும் சேர்ந்து நகரை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவீர்களாக. இன்னும் மூன்று திங்களில் திட்டம் எம் முன் வர வேண்டும். அத்தலைநகருக்கு இப்பொழுது ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயரை நாம் அளிக்கிறோம். அது மட்டுமல்ல, பெருவுடையாருக்கு அங்கு மற்றுமொறு கற்றளியையும் அமைக்கவிருக்கிறோம் என்று இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது மரபுப் பெருமையை, சோழர்களின் சிறப்பை உலகுக்குப் பறை சாற்றும் வரையில் அது அமைந்திருக்கும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாம் எதிர் நோக்குகிறோம்.” உற்சாகமாகப் பேசிக் கொண்டே செல்கிறான் இராஜேந்திரன்.
அவையே அவன் பேச்சில் கட்டுண்டு போகிறது. அவன் பேசப் பேச சிவாச்சாரியனுக்கு அவனது தொலைநோக்கு நன்கு புரிகிறது. தனது தந்தையைவிடப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறான் இராஜேந்திரன் என்று அவனுக்குப் புலனாகுகிறது. மேலும், தனக்கென்று ஒரு தனிப் புகழையும், வரலாற்றில் தனி இடத்தையும் தேடத் துடிக்கிறான் என்றும் அவன் அறிந்து கொள்கிறான். இராஜராஜரிடம் இருந்த செல்வாக்கு தனக்கு இராஜேந்திரனிடம் இருக்குமா, அல்லது தனது உண்மையான பதிலால் அது குறைந்து போகுமா என்றும் அவனால் அப்பொழுது தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் குருநாதர் கருவூரார், “சிவனே, எப்பொழுதும் தாமரை இலைமீது இருக்கும் நீர்த் துளியைப் போல இருந்து பழகு. அரசர்களுடன் இருப்பது நெருப்புடன் பழகுவது போலத்தான். எதற்கும் உன்னைத் தயார் செய்து கொள். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்” என்று சொன்ன அறிவுரையை நினைவில் நிறுத்துகிறான்.
* * *
ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சி
நள, சித்திரை 14 - ஏப்ரல் 29, 1016
சுற்றுப் பிரகாரத்தில் நிலவுமொழியும் அவளது தந்தையும் நடந்து கொண்டிருக்கின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் சந்திக்கும்படி சிவாச்சாரியனிடமிருந்து சேதி வந்ததால் அவர்கள் திருமயிலையிலிருந்து இரண்டு நாழிகை முன்னர்தான் வந்து சேர்ந்திருந்தனர். சிவாச்சாரியனைச் சந்திப்பதற்குமுன் ஏகாம்பரநாதரைத் தரிசித்துவிட்டு, பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இருவர் மனதிலும் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் - நிலவுமொழிக்கு இன்று ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.
“எனக்குக் காலை வலிக்கிறதம்மா. களைப்பாகவும் இருக்கிறது. சிறிது நேரம் இந்த மண்டபத்தில் அமர்ந்து கொள்வோம் அமர்ந்து கொள்வோம்.” என்று தந்தை சொன்னதும், நிலவுமொழி அருகிலிருந்த மண்டபத்தை நோக்கி நடக்கிறாள். ஒரு காலைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி மண்டபத்தில் அமர்ந்து தூணில் சாய்ந்து கொள்கிறார் அவளது தந்தை. அவரருகில் அமருகிறாள் நிலவுமொழி. மயிலைக்கு வராமல் காஞ்சிக்குத் தங்களை சிவாச்சாரியார் வரவழைத்ததின் நோக்கம் என்ன என்று அவள் மனது அவளை அரித்துக் கொண்டே இருக்கிறது. அவள் தந்தை அதைப் பற்றிச் சிறிதும் கவலைப் பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. ஏன், என்ற கேள்வியே கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அவர்.
“உஸ்” என்று மூச்சைப் பெரிதாக விட்டுக்கொண்டே துணியால் விசிறிக் கொள்கிறார் அவர். சித்திரை பிறந்து பதினான்கு நாள்களே ஆகியிருந்தாலும் வெய்யில் உச்சியைப் பிளக்க ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுது அவளது தந்தைக்கு அடிக்கடி களைப்பு வருகிறது. ஐம்பது வயதுகூட ஆகவில்லை. ஆனாலும் மிகவும் தளர்ந்து போயிருக்கிறார். தனக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் ஏற்பட்ட தளர்வா, அல்லது அவரது குடும்பத்தார் அனைவருக்கும் வரும் இளமுதுமையா என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது குடும்பத்தில் யாருமே ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியதில்லை. அவளது தாய் இருபத்தைந்து வயதிலேயே இறந்து விட்டாளாம். அதிலிருந்து அவளது தந்தைதான் மறுமணம் செய்து கொள்ளாமல் அவளை வளர்த்து வருகிறார். அவளுக்கு முன்னால் பிறந்தவர்கள்கூட ஐந்து வயதைத் தாண்டுமுன்னரே இறைவனடி சேர்ந்து விட்டார்களாம். மூன்று வயது நிறையும் முன்னரே சென்றுவிட்ட தாயின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. ஆகவே, தன் தந்தையின் அவசரம் அவளுக்குப் புரிகிறது. அதை எண்ணிப் பார்த்தால் அவளுக்கு இதயம் கனக்கிறது.
“ஏகாம்பரநாதா, என் தந்தை நிறைய நாள் நோய் நொடியில்லாமல் வாழ அருள் செய் அப்பனே!” என்று மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள். வாயைத் திறந்து, “தந்தையே, சிவாச்சாரியார் நம்மை எங்கு சந்திப்பதாகச் சொன்னார்? எப்பொழுது சந்திப்பதாகச் சொன்னார்? இரண்டு நாழிகை கழிந்தால் கதிரவன் சாய்ந்து விடுவான். இரவை எங்கு கழிப்போம்? நமக்கோ காஞ்சியில் யாரையுமே தெரியாது. நீங்களோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் அமர்ந்திருக்கிறீர்களே?” என்று வினவுகிறாள்.
“அப்பாடி, என்ன வெய்யில், என்ன வெய்யில்?” என்று அலுத்துக் கொண்ட அவளது தந்தை, “நிலா, ஏனம்மா நீ உன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? சிவாச்சாரியருக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தின் திருமந்திர ஓலைநாயகமான அவர் நம்மை இரவில் தனியாகத் தவிக்க விட்டுவிடுவாரா? தகுந்த காரணம் இல்லாமலா நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்? அவருடன் பழையாறையில் இருந்திருக்கிறாயே! அவரைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள இயலவில்லையா? அவருக்கு முக்கியமான பணிகள் ஆயிரம் இருக்கும். அதில்தானே அவர் முதலில் கவனம் செலுத்துவார். நாம் அதற்குப் பின்னர்தானே? எனவே வருவதில் தாமதம் ஏற்பட்டால் அதைப் பெரிது படுத்தாமல் காத்திருப்பதுதான் நமக்கு நல்லது.” என்று பதில் சொல்கிறார். அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சலாக வருகிறது.
சிறிது நேரம் சென்று தன் மனதில் தோன்றுவதை சொல்லலாம் என்று திரும்பினால், அவளது தந்தை கண்களை மூடிக் கொண்டு தூணில் சாய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்த்தால் அவளுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவரது நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று தானும் எதிரில் இருக்கும் தூணில் சாய்ந்து கொள்கிறாள். களைப்பில் அவளது கண்களும் மூடிக் கொள்கின்றன.
ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.
“விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?” என்று கனிவான குரலில் வினவுகிறார். வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரோ இவர்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது நிலவுமொழிக்கு. சட்டென்று எழுந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்கிறாள் அவள்.
“மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கி விட்டோம். நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பி இருக்கலாமே!” மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.
“அதனாலென்ன அம்மா. நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!” என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார் அவர்.
இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண்விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காலில் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார். “ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி.” என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.
கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. “தெரியும். தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள் போல இருக்கிறது. உங்களை அழைத்துச் சென்று வசதியாகத் தங்க வைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள். நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே உண்டுவிட்டு, அருகிலிருக்கும் வீட்டிலேயே இரவு தங்கிக் கொள்ளுங்கள். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப் பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான்.” என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின் தொடர்கிறார்கள்.[வளரும்]
No comments:
Post a Comment