Thursday, 25 September 2014

அவரைப்பற்றி இவர்

                                                         
                                                    அவரைப்பற்றி இவர் 
கலைமாமணி.டாக்டர் விக்கிரமன் அவர்களோடு கௌதம நீலாம்பரன் 

             கலைமாமணி விக்கிரமன் பற்றி  
                                    கௌதம நீலாம்பரன்


தமிழ் இதழியல் வரலாற்றில், கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு மிக்க இடம் உண்டு. கலமகள் ஆசிரியராக இருந்த கி.வா.ஜ. தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என்.சிவராமன், முரசொலி நாளேட்டின் ஆசிரியர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு மேலாக இதழாசிரியராக பணிபுரிந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் என்பர். அந்த வரிசையில் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேலாகத் திகழ்ந்த பெருமை விக்கிரமனுக்கு உண்டு.  தற்போது 18 ஆண்டுகளு்கு மேலாக, இலக்கியப்பீடம், என்கிற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். தமிழரசி மங்களம் என்னும் வார இதழ்களிலும் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். வேம்பு என்கிற இயற்பெயருடைய அவர், எல்லோருக்கும், எந்த நாளிலும் இனிப்பானவராகவே திகழ்ந்து வருவது, எழுத்துலக நண்பர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மையாக இருக்கிறது. நூற்றுக் கணக்கான இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து, எழுத்துலகில் தடம் பதிக்க வைத்த பெருமை இவருக்கு உண்டு.
சமயம், தமிழகத்தின் முக்கால் நூற்றாண்டுச் சரித்திரமாகவும் புலப்படுகிறது எனக்கு.
இந்நூலில் விக்கிரமன் அமுதசுரபி இதழின் காரணமாக எத்தகு பெருமக்களையெல்லாம் சந்தித்தார் என்பதை வாசிக்கும் போது நமக்குச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. இன்று தமிழ் இலக்கிய உலகம், யார் யாரையெல்லாம் தமிழ் மேதைகளாக, தமிழறிஞர்களாகப் போற்றிக் கொண்டாடித் தலை வணங்குகிறதோ அத்துணைப் பெரு மக்களையும் நேரில் கண்டு, உரையாடி மகிழ்ந்து, அவர்களி்ன் நல்லாசிகளைப் பெற்று, அவர்கள் எழுதிய நல்லிலக்கியப் படைப்புகளையும் பெற்று, அமுதசுரபி இதழ்களில் - தீபாவளி மலர்களில் வெளியிட்டுப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்பெருமகன்.

தமிழ் தென்றல் திரு.வி.க, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மூதறிஞர் இராஜாஜி, கி. ஆ.பெ. விசுவநாதன், டாக்டர் மு. வரதராசனார், உலகம் சுற்றிய தமிழர் ஏ.கே.செட்டியார் (மகாத்மா காந்திஜி பற்றி முதல் ஆவணப் படம் எடுத்தவர்) பேராசிரியர் கல்கி, பொதுவுடைமை இயக்க மாமேதை ப.ஜீவானந்தம், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தாத்தாவின் தனிப் பெரும் சீடரான கி.வா.ஜ., தமிழ் நாடக மேதை டி.கே. சண்முகம், டி.கே.பகவதி, பன்மொழிப் புலவர் அப்பா துரையார் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் மட்டுமல்லாது, தமிழ் நிலத்தின் புகழ் பூத்த அரசியல் தலைவர்கள் பலரோடும் விக்கிரமன் பழகியிருந்தார்.
எழுத்தாளர்களோடு விக்கிரமன் அவர்களுக்கு உள்ள தொடர்பு அமுதசுரபி இதழுக்காக மட்டுமின்றி, இவருடைய தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்பானதாகவும் திகழ்வதால், அவர்களின் பெயர்ப் பட்டியலை நான் இங்குத் தொகுத்தால் அதுவே பல பக்கங்களாக நீட்சி பெற்றுவிடும். இவருக்கு முன்பு பிரபலமாக இருந்தவர்கள், இவரால் பிரபலமாக்கப் பெற்றவர்கள் என்று வேறு, வகைப்படுத்தி எழுத நேரும் அத்தனை பேரையும் அமுதசுரபியில் அணைத்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சாண்டில்யனின் மலைவாசல், ஜீவபூமி போன்ற சரித்திரக் கதைகளை வெளியிட்டு, அவரைத் தமிழ் வாசக உலகில் மிக அழுத்தமான நேசிப்பிற்கு உள்ளாக்கியதோடு, குமுதம் வார இதழுக்கும் அறிமுகம் செய்து வைத்துப் புகழின் உச்ச நிலையைத் தொட வைத்த பெரும் பண்பாக ஒளிர்கிறது.  அதே போன்று ஜெயகாந்தனின் சிறுகதைகளை வெளியிட்ட சூழல், விந்தன் எழுதிய அன்பு அலறுகிறது தொடர்கதையை விந்தனே வேண்டிக்கொள்ள ஜெயகாந்தன் இறுதி அத்தியாயங்களை எழுதித் தந்த நிலை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. விந்தன் எழுதிய இக்கதையால் அகிலன் அவர்களின் அவர்களின் எதிர்ப்பையும் மனக் கசப்பையும் விக்கிரமன் எதிர்க்கொள்ள நேர்ந்த விவரங்கள் நமக்கு அவர் மீது பெரும் பரிவை ஏற்படுத்துகின்றன. கிட்டத்தட்ட சாதி மோதலுக்கு வித்திடுவது போன்ற அந்தப் பகைச் சூழலை மனிதர் தன்னந்தனியொருவராக நின்று - தர்மயுத்தம் நிகழ்த்திய நெஞ்சுரம் பாராட்டத்தக்கதாக  இருக்கிறது.

அமுத சுரபி இதழின் பொறுப்பை முழுவதுமாக ஏற்று நடத்த இதழ் நின்று போகாமல் வெளிவர விக்கிரமன் பட்ட பாடு சிறிய மாமனாரிடம் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கிச் சமாளித்த நிலை - பிறகு அக்கடனை அடைக்க முடியாமல் பட்ட சிரமங்கள் - மேலும் பல இடங்களில் கடன் வாங்கியும் மனைவிழயின் நகைகளை அடகு வைத்தும் இதழைக் கொண்டு வந்த போராட்டங்கள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. பிரசவத்துக்கு ஜம்ஷெட்பூர் சென்ற மனைவியைப் பல மாதங்கள் பிரிந்திருந்து காணச் சென்ற நிலையிலும், மனைவி முகம் கண்டோ - பிறந்த பிஞ்சு மழலையின் முகம் கண்டோ மகிழ்வதை விட, கல்கத்தா நகரில் ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய பாக்கித் தொகையை வசூலித்தால் தான் சென்னை வந்தவுடன் தொடர்ந்து இதழை வெளிக்கொண்டு வரவியலும் என விக்கிரமன் தவித்த தவிப்பு இருக்கிறதே அதை நினைத்துப் பார்க்கும் எவர் மனமும் கலங்கும்; கண்ணில் நீர் பெருகும்.

                                                     வையவன் 

1950-60களில் இருந்து எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் ஒருவரது படைப்பாவது அமுதசுரபியில் வெளிவராது இருந்திருக்க வாய்ப்பில்லை. அமுத சுரபி என்றும் அவர் காலத்தில் அமுதம் சுரந்தபடி இருந்ததை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்தபடி இருந்துள்ளது 

தமிழ் எழுத்தாளர்களை பல வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று மதிப்பும் மரியாதையும் பெற்றுத்தர முதல் மூல காரணியாக இருந்தவர் டாக்டர் விக்கிரமன் அவர்கள் 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் அமைத்து அது இன்று வரை தளராத 
வெற்றிநடை போட்டு வருவதற்கு அவரே அச்சாணி.

தமிழ் எழுத்தாளர் நல நிதி என்று வரலாறு காணாத அமைப்பைத் தொடங்கி இன்றளவும் பல நலிந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி நல்கி வருகிறார்.

தினத்தந்தி ஆதித்தனார் நினைவுப்பரிசு, கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது தமிழ் பல்கலைக்கழகப் பரிசு என்று பற்பல பரிசுகளும் விருதுகளும் பெற்ற கலைமாமணி அவர்களுக்கு சாஹித்ய அகாடமி விருது என்றோ கிடைத்திருக்க வேண்டிய விருது . கோஷ்டிப் பூசல்களும் அரசியல் மாற்சர்யங்களும் தலை தூக்கி விளையாடும் சதுரங்க மேடையான சாஹித்ய அகாடமி இவரது ஒப்பற்ற இலக்கியத் தொண்டை எப்படி மதிப்பிடும் ? இவர் எந்த அரசியல் கட்சிக்கும் துணை போகவில்லையே!

உடல் நலமாக இருந்த காலகட்டங்களில் ஒவ்வோர் பாரதி நினைவு நாளிலும் எட்டயபுரம் பாரதி மண்டபத்தில் ஊர்வலம் சென்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி நமது தமிழ் இலக்கியப் பிதாமகன் மகாகவி நினைவை இவர் போற்றி வந்ததை 
எந்தத் தமிழரும் மறக்கமாட்டார் 
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address
idhayaoli.Blogspot.in


1 comment:

  1. புலமைக்காய்ச்சல் நிரம்பிய எழுத்தாளர்களின் மத்தியில் சக எழுத்தாளர்களை ஊக்குவித்ததோடு, அவர்களின் படைப்புகளையும் வெளிவரச் செய்வதற்கு எழுத்தாளர் விக்கிரமன் மேற்கொண்ட முயற்சிகளை கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். அமுதசுரபி இதழ்களில் வந்துள்ள கதைகள் மனதில் பசுமரத்தாணி போல் நின்றுவிடும் திறன் படைத்தவை. நான் சிறுகதைகளின் மேல் காதல் கொண்டதற்கு அமுதசுரபி இதழ் தான் காரணம். பொறுக்கி எடுத்தாற்போன்ற கதைகள் வாழ்க்கையை ஒரு புரட்டுபுரட்டிவிடக்கூடியவை.வாழ்க்கையை மதிப்புடையதாக்கக்கூடியவை. வாழ்க்கையின் பல பரிமாணங்களை எடுத்துரைத்து வாசகரை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துபவை. அதன் ஆசிரியராக விளங்கிய விக்ரமன் அவர்கள் தரத்தை சிறிதும் எந்நிலையிலும் தளர்த்தவில்லை என்பதையும் வறுமையிலும் அதன் மேன்மையை தளர்த்தாமல் இதழ் வெளிவர அவர் பட்ட பாடுகளை இக்கட்டுரை நெகிழ்ச்சியோடு குறிப்பி்ட்டுள்ளது.ஒரு வாசகியாக அமுதசுரபி கதைகளில் நெகிழ்ந்திருந்த நான் இதழ் வெளிவர திரு விக்கிரமன் பட்ட பாடுகளை அறிந்து மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தேன். பிறர் பாடுகளையும் அறிந்து எழுத்தாளர்களை ஊக்குவிக்க எழுத்தாளர் நல நிதி அமைப்பை தோற்றுவித்த இவரது மாண்பு போற்றுதலுக்குரியது. வையவன் சார் குறிப்பிடுவது போல் சாகித்ய அகாதமி விருது அரசியல் சதுரங்க விளையாட்டினால் சிலசமயம் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஆனால் அவரால் பயன்பட்ட இலக்கியஉலகமும் எழுத்தாளர் உலகமும் தம் இதய பீடவிருதை எப்போதோ அவருக்கு வழங்கிவிட்டார்களே?

    ReplyDelete