Wednesday, 24 September 2014

இராணுவ சேவையும் சமூகமும்

            இராணுவ சேவையும் சமூகமும் 

மேஜர் ஜெனரல் ஜே. ஜே. .மணவாளன் வி.எஸ்.எம்.

நான் கர்னல் திரு.பா.கணேசன் அவர்களின் தலைமையின் கீழ் இராணுவத்தில் பணியாற்றியவன். அவரது சீரிய சேவை உணர்வு தன் கீழ் பணியாற்றும் அதிகாரியாயினும் எளிய சிப்பாய் ஆயினும் அவர் காட்டிய நிலை மாறாத மரியாதை , அணுகுமுறைஆகியனவற்றை நேரடியாகக் கண்டவன். அதனால்  பயன் பெற்றவன். ஒரு வகையில் அவர் எனது வழிகாட்டி. இராணுவப் பணி என்பது  மற்ற அரசாங்க உத்தியோகம் போல் தான் என்று மிக சாதாரணமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. இராணுவப் பணி என்பது சேவையே . அப்படி சேவை புரியத் தேர்வாகி, அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு படைப் பிரிவில் சேர்ந்த பிறகு உடலளவில் நோய் நொடிகளற்றும் பலசாலியாகவும் தன்னை வைத்துக் கொள்வது மிக முக்கியம். கூட@வ பணி சார்ந்த வேலைகளில் மேலும் மேலும் திறமையை வளர்த்துக் கொள்வதும் இராணுவத்தினர்களின் கடமையாகிறது. ஒரு அதிகாரியோ அல்லது படைப்பிரிவு தலைவனோ சொல்லித்தான் தனது உடல் நலத்தையோ அல்லது பணித்திறமையையோ வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
                                                            
                                                                    

தனிப்பட்ட ஒரு சிப்பாயோ அல்லது அதிகாரியோ தன்னளவில் தகுதிகளை வளர்த்துக் கொண்டு அந்த தகுதியும் திறமையும் படைப்பிரிவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கு உதவக் கூடியதாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி பணியில் ஒன்றி இருக்கும் இராணுவத்தினர்களுக்கு அந்தப் பணிக்கு அப்பாலும் வாழ்க்கை உள்ளது என்பதை அவர்களோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ மறந்துவிடக் கூடாது. அப்படி மறந்தால் இராணுவத்தினர்கள் மனித வாழ்வின் ஒரு பகுதியை இழந்து விடுவார்கள். இராணுவ வாழ்க்கை கரடுமுரடான வாழ்க்கை என்றாலும் அதில் அன்பு, பாசம், காதல் போன்றவற்றிற்கு இடமில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. மனித வாழ்வில் அன்பு, இரக்கம் போன்றவை அடிப்படைக் குணங்கள். அவை இல்லாத வாழ்க்கை மனித வாழ்க்கையாகாது. ஆனால், “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” என்பதற்கொப்ப மனிதர்களின் இந்த அடிப்படைக் குணங்கள் பொருளின் மீது உள்ள மோகத்தால் ஏற்படும் பொழுது அந்த அன்பு, பாசம் போன்றவை வெளி வேஷங்களாகி விடுகின்றன.

இராணுவத்தினர்கள் இதுபோன்ற அன்பு, பாசம் போன்றவற்றை எப்பொழுது உணர்கிறார்கள்? ஒவ்வொரு விடுமுறையில் போகும்போது உற்றமும் சுற்றமும் காட்டும் பரிவான உணர்வுகள் மூலம் மற்றும் அதன் தொடர்பாக ஏற்படும் கடிதத் தொடர்பு வழியாகத் தான். ஒரு மனிதனுக்கு உற்றமும் சுற்றமும் மட்டுமே அன்பு, பாசத்தோடு பழக வேண்டும் என்றில்லை. சமுதாயமும் ஒருவருக்கொருவர் பழகும் விதத்தில் இதை வெளிப்படுத்த வேண்டும். உதாரணமாக ஒரு கிராமத்திலிருந்து ஒருவன் இராணுவப் பணிக்குத் தேர்வானால் ஏதோ வேலை இல்லாமல் அலைந்து திரிந்து கடைசியில் இராணுவத்தில் சேர்ந்தான் என்று 

சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு நாட்டின் முதல்தரப் பாதுகாப்புப் பணியில்  நம் ஊர் இளைஞன் இருக்கிறான் என்ற பெருமையோடு அந்த ஊரார் அவனுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும். அதனால் அந்த இராணுவ வீரன் தனது உற்றம், சுற்றம் தவிர ஊர் மக்களுக்கும் கடமைப்பட்டவன் ஆகிறான்.

ஒரு குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் சேர்ந்து விட்டால் மற்ற குடும்ப வேலைகளைப் பெற்றோர், அண்ணன் தம்பிகள் ஏற்று நடத்துவது இயல்பு. கால வேகத்தில் ஒரு குடும்பத்தில் அல்லது தனிமனித வாழ்வில் நடப்பவை நடந்து கொண்டுதான் இருக்கும். குடும்பத்தில் ஒருவன் இராணுவத்தில் பணியாற்ற தேர்வாகிய சுமார் 10 வருடங்களில் அந்த குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் ஓரளவு முன்னேற்றம் காண்கின்றனர். வயதைப் பொறுத்து மூத்தவர்களுக்குத் திருமணம் நடக்கும். சில சமயம்   வயதில் இளையவர்களுக்கும் கூட திருமணம் நடத்த வேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட சமூக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது,  அந்த இராணுவ வீரன்  விடுமுறையில் ஊருக்கு வருகிறான் என்றால் குடும்ப உறுப்பினர்களின் வேலைகளும் ஊர் மக்களின் வேலைகளும் ஸ்தம்பித்து விடுமா என்ன? அவை தினசரி  நடந்து கொண்டுதான் இருக்கும். 

எல்லைப்புறங்களில் எதிரிகளுக்கும் இயற்கைக் கொடுமைகளுக்கும் ஈடுகொடுத்துப் போராடும் இராணுவத்தினர்கள் ஆண்டுக்கு இரண்டு மாதம் என்று விடுமுறையில் வருகிறார்கள். அந்த விடுமுறை நாட்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியாக புத்துணர்ச்சி ஊட்டுபவைகளாக, பெருமைப்படத்தக்கனவாக இருக்க வேண்டும். பொதுவாக அப்படி நடப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களும் ஊர்மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனையில் மூழ்கி வெளிவர முடியாமல் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது விடுமுறையில் வந்த இராணுவத்தினனை யார் கவனிக்கப் போகிறார்கள்? இங்குதான் நாம் சற்றே கவனம் செலுத்த வேண்டும். இராணுவப் பணியிலிருப்போர் எப்பொழுது வேண்டுமானாலும் விடுமுறையில் போகலாம் என்றிருந்தாலும்,  வழக்கமான இராணுவ ஒழுங்குமுறை விதிகளுக்கு  விடுமுறை போன்ற மிகச் சாதாரண நிகழ்ச்சிகளும் தப்புவதில்லை. ஒரு படைப்பிரிவில் சுமார் 1,000 பேர் பணியாற்றுகிறார்கள் என்றால்,  எல்லாரும் ஒரே சமயத்தில் விடுமுறை கேட்டால் கொடுத்துவிட முடியுமா? குறைந்தபட்சமாக சுமார் 70% படைப்பிரிவினர் எப்பொழுதும் படைத்தளத்தில் இருக்க வேண்டும். அதிகாரிகள் அதிகாரிகளல்லாதோர், தொழில் நுட்ப வல்லுனர்கள், போன்ற பல பிரிவுகளையும் சேர்ந்தவர்களில் இந்த விடுமுறை விகிதசாரம் காணப்பட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை விடுமுறையில் போகலாம் என்று கணக்கிடுவார்கள். ஆகையினால், ஒரு இராணுவ வீரன் எந்த மாதத்தில் விடுமுறையில் வருவான் என்பது அவனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கும். அதைப் பொறுத்து அவனைச் சார்ந்தவர்களும் ஊர்க்காரர்களும் அந்த இராணுவ வீரன் விடுமுறை நல்ல விதமாக செலவாக ஆவன செய்ய வேண்டும்.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இப்படிப்பட்ட சேவை மனப்பான்மை எல்லாருக்கும் வருவதில்லை. பொதுவாக மக்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒரு குடும்பத்திற்குள்ளேயே உறவினர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உதவ முன்வராத சமுதாயத்தில் இராணுவ வீரன்  அடுத்த வீட்டுக்காரர்களுக்கோ அல்லது ஊர்க் காரர்களுக்கோ எப்படி உதவப் போகிறார்கள்? இந்தப் போக்கினால் சமுதாயச் சீரமைப்பு சிதைந்து வருவது கண்கூடு. மனிதநேய ஆர்வலர்கள் ஒன்றுகூடி சமுதாய உணர்வுகள் அழிவதைத் தடுக்க ஆவன செய்ய வேண்டும். “இராணுவத்தினர்கள் நல்வாழ்வு அமைப்பு” என்ற ஒன்றை ஏற்படுத்தி, ஆசிரியர், மருத்துவர், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றோர்கள் அடங்கிய ஒரு குழு அதைச் செய்யலாம்.

“எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற நூல் இராணுவ அதிகாரியான கர்னல் பாவாடை கணேசனது ஆரம்பகால இராணுவ வாழ்க கை பற்றியது. பெற்றோர்களுடன் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று பெரிய குடும்பத்தில் ஒருவராகப் பிறந்து வளர்ந்த கணேசன் யாருமே எதிர்பாராமல், முன்னர் எக்காலத்திலும் அறிமுகமில்லாத விதத்தில் இராணுவ அதிகாரியானார். ஆரம்பகால இராணுவ வாழ்க்கையில் குடும்பத்துடனான பாசப்பிணைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விடுபடவும் தானே விரும்பி ஏற்றுக் கொண்ட இராணுவ வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொள்ளவும் வைத்த காலமது. அந்த முதற்பகுதி 30 கடிதங்களடங்கியது. இராணுவ அதிகாரியாகத் தேர்வானது முதல் 1971-ல் நடந்த இந்திய - பாகிஸ்தானிய போர் அதன் காரணமாக கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி “பங்களாதேஷ்” என்ற தனி நாடாகியது என்பதுடன் முடிகிறது.

இந்த இரண்டாம் பகுதி “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற பெயருடன் அவரது அடுத்த கால வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் பல மாற்றங்கள் நடந்து விட்டிருந்தன. ஒரே ஒரு தம்பியைத் தவிர மற்ற எல்லாருக்கும் திருமணமாகி இருந்தது. ஆகையினால், இந்த இரண்டாம் பகுதி “கடிதம்” போன்ற வடிவில் இல்லாமல் திரு.கணேசனது எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைத் தொகுப்பாக இருக்கும். அனுபவ முதிர்ச்சியும் காலத்தின் மாற்றங்களும் ஏற்படுத்தி இருக்கும் வித்தியாசமான மனநிலை கொண்டவராக இப்பகுதியில் அறிமுகமாகிறார் கர்னல் பாவாடை கணேசன்.

இன்றைய இளைஞர்கள் தங்களது மனவலிமையை உணராமல் இல்லாமை, இயலாமை என்று தங்களுக்குள்ளேயே ஒரு இழிநிலையை ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள். “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற தலைப்பிலான இந்த அனுபவக் கட்டுரைகள் திசைமாறி போகும் இளைஞர்களை சரியான பாதைக்குத் திருப்ப உதவும். வாழ்வின் முன்னேற்ற இலக்குகளை எளிதாக அடையாளம் காணவும் அவைகளை அடையவும் உதவும். குறிப்பாக இராணுவத்தினர்க்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் நலமுடன் நீடூழி வாழ்ந்து நாட்டிற்கும் அவர் பணியாற்றிய இராணுவத்திற்கும் மேலும் சிறப்பான தொண்டு புரிய இறைவனை @வண்டி வாழ்த்துகிறேன் 
Colonel.P.Ganesan VSM 
   “The Poles”
943 H-Block
 17th Main Road, 
Anna Nagar,
Chennai-600040
Tel:044-26163794 Mobile:9444063794

No comments:

Post a Comment