Thursday, 11 September 2014

காலத்திற்கே வெளிச்சம்.

கவிதாயினி ஜி,ஜே. தமிழ்ச்செல்வி 
  அன்றாடம் ஒரு பார்வை 


காலத்திற்கே வெளிச்சம்.
சாலையில் ஒரு பச்சிளங்குழந்தை. அதைச் சுமந்து நடந்தாள் அந்த இளந்தாய் உல்லன் துண்டினால் போர்த்தி அந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தாள். பின் புறம் ஒரு மோட்டார் சைக்கிள் . வேகாமாய் வந்த மோட்டார் சைக்கிள்காரன் அவள் மீது மோத அவள்  தடுமாறி கீழே சாயப்போனாள் . சட்டென்று சுதாரித்து வலது கை ஊன்றி அமர்ந்து கொண்டாள் அந்தக்  குழந்தையை தன் வயிற்றோடு சேர்த்தணைத்து அந்த குழந்தைக்கு எந்த தீங்கும் ஏற்படா வண்ணம் காத்தாள்.

சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது. 

ஒருவர் மாற்றி ஒருவர் "என்னம்மா? அடி படலியே! குழந்தைக்கு ஒண்ணும் ஆகலியே! இடுப்பிலே அடியா?" இப்படி விசரிக்கத்தொடங்கி விட்டனர் 
அத்தனை பேர் அவளின் நலம் விசாரித்த போதும், அவளின் கவனம் அந்த குழந்தையின் மீதே இருந்தது.

இந்த தாயுள்ளத்திற்கு தான் எத்தனை கரிசனை!.
என் மனம் அதை ஆழமாகப் பதிவு செய்துகொண்டது 

இப்படி கரிசனையுடன் போற்றி வளர்க்கும் இந்த தாய்மார்கள் பின் நாளில் பிள்ளைகளிடம் என்ன பாடு படுவார்களோ!. அதை நிரல் படுத்தினால் கண்கள் இரத்தக் கண்ணீரை ஊற்றெடுக்க வைக்கும்

ஒரு ஆசிரியையின் மகன் குடித்துவிட்டு சாலையிலேயே தன் தாயாரை அடிப்பான்
மற்றொரு   தாயின் மகனோ தேர்விற்கு போகும் அவளை வாழ்த்தாமல் அவளைத் திட்டித் தீர்ப்பான்.தான் தோற்ற தேர்வுகளை இவள் இடைவிடாமல் எழுதி வெற்றிகண்டு தன்னை அவமானப்படவைக்கிறாளே ! இந்த வெறுப்பு.

மற்றும் ஒரு தாயின் மகன் சாப்பாடு போடவே சலித்துக்கொள்வான் . இன்னும் ஒருவனோ அவள் சிறு சேமிப்பைச்  சூரையாடி  வேறு இவளுக்கோ வாரி இறைத்துப் பதற வைப்பான்.

 எத்தனை  தாய்மார்களுக்கு  போற்றிப் புகழும் தலைமகன்கள்உண்டு?

“இன்னும் சாகாம கிடக்குது” என்று சலித்துக்கொண்டே  ஒரு மகன் கூறுகிறார்.

"வயசாயிட்ட மூலையில கிடக்க வேண்டியது தான வாய மூடிக்கிட்டு இதுக்கும் இதுக்கும் நடந்துகினு, அத பண்ணு இதப்பண்ணுன்னு அதிகாரம் வேற!" என்று.

அவர் வார்த்தைகளைவிட, அவரின் முக பாவனையும், உச்சஸ்தாயியில் ஒலித்த அவரின் குரலுமே என்னைக்  காயப்படுத்தியது.

தாய்மையின் இளமையில் இந்த மழலைகள் தாயின் அரவணைப்பில் கொட்டும் அன்பு என்ன?

முதுமையில் அவர்களால் கொடுக்கப்படும் நிராகரிப்பின் விளைவாய் வரும்  வலிகளின் ஆழம் என்ன?

இந்த மாற்றத்தை சமூகமா  மனிதனுக்கு கற்றுக்கொடுத்தது ?

அல்லது தெய்வீகத்தை தேடி ஓடுவதாகச் சொல்லும் எத்தனையோ மனிதர்கள், யோகா என்கிறார்கள் தியானம் என்கிறார்கள். கோயில் குளம், மலை மேடு என்று ஏறி ஏறிக் கடக்கிறார்கள்.

தாய்களை ஒரு சுமை என்றும், இன்னும் சாகாது பிராணனை வாங்கும் பேய் என்றும் இழித்தும் பழித்தும் பேசும் இவர்களுக்கு தெய்வம் எங்கே எதிர்படப்போகிறது?

மனிதன் தன் பிறப்பின் வேரான மிருக குணத்தை மறைத்து நாடகமாடுகிறானா?

காலத்திற்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment