Sunday, 14 September 2014

தமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகள்


தமிழில் சில நுட்பம் சார்ந்த பதிவுகளை ஊக்கப்படுத்தும் வகையில்…



Rate This

தொடர்ந்த ஊக்குவிப்பை வழங்கி வரும் மதிப்பிற்குரிய சக பதிவர் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் கடைசி பெஞ்ச் வலைப்பதிவிற்கு versatile blogger என்கிற பதிவுலக விருது வழங்கியிருக்கிறார்.
அவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விருது தந்தவர் பதிவு முகவரியைக் கொடுக்கவேண்டும் என்பது ஒரு விதி – சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்தில் கட்-அவுட்டே வைக்கலாம். இருந்தாலும் மாநகராட்சி அனுமதி தராது என்கிற ஒரே காரணத்திற்காக கீழே மட்டும் முகவரியைக் கொடுத்திருக்கிறேன்!

http://ranjaninarayanan.wordpress.com

என்னைப் பற்றி 7 விசியங்கள் எழுதவேண்டும் என்பது அடுத்த விதி – இந்தப் பதிவைப் படிப்பவர்களின் நலன் கருதி இந்த விதியை நான் மீறுகிறேன் :-)
versatile-blogger
மேலே கொடுக்கப்பட்டுள்ள அவார்டு பிளாகர் படத்தைப் போட்டுக்கலாம் – அது எளிது.
இதே விருதை குறைந்த பட்சம் 5 பேருக்காவது திரும்பி வழங்கவேண்டும் என்று MLM கண்டிசனோடு தான் தந்திருக்கிறார். இது அடுத்த விதி.
பல்சுவை பதிவர்கள் என்று கணக்கெடுத்தால் நாலு டசன் தேறுமளவிற்குப் பதிவர்களைப் பின்தொடர்ந்து வருகிறேன். யாரைச் சொல்வது யாரை விடுவது? என்னதான் இருந்தாலும் இப்படிப்பட்ட இன்னலில் என்னை இவர் மாட்டிவிட்டு இருக்கக்கூடாது. சரி ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’ என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறேன்.
சமஸ்கிருதம் அழியப்போகிறது. மிக்க மகிழ்ச்சி எனக் கூத்தாடும் நம் மக்கள், தமிழும் அடுத்த தலைமுறையில் பேச்சுமொழியாக எஞ்சிவிட வாய்ப்பு உள்ளது என்பதையும் அறிவார்கள் என்று நினைக்கிறேன். அப்ப அதற்கடுத்த தலைமுறையில்? NRIகளில் தமிழ் இப்பவே பாதி செத்துவிட்டது. இப்படித் தமிழர்கள் தம் தமிழுக்குப் ‘பொறுப்போடு’ தமிழுக்குச் சேவை செய்து கொண்டிருக்கையில், சக பதிவர்கள் சிலர் மிகச்சிறப்பாக தங்கள் துறை பற்றியோ தங்கள் ஆர்வத்தைப் பற்றியோ தொடர்ந்து தமிழில் பதிவுகள் எழுதி வருகின்றனர். இவர்கள் தமிழை அடுத்த ஒரு படிக்கு முன்னகர்த்துகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இப்படிப்பட்ட பதிவர்கள் பெறுகி, How to setup a Hadoop cluster என்கிற கூகுள் தேடலில் தமிழ் வலைப்பதிவு வந்து நிற்கும் நாளை கனவு கான்கிறேன்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
இவர்கள் காலம் தாழ்த்தாமல் செய்கின்றனர். நுட்ப விபரங்கள் தமிழில் வந்தே ஆகவேண்டும். அதற்கான வலைப்பூக்கள் பூத்தே ஆகவேண்டும். ஆக. தமிழில் நுட்பத்தைப் பேசும் வலைப்பூக்களைக் கவுரவிக்க இந்தப் பதிவை எழுதுகிறேன். MLM கண்டிசன் படி வெர்சடைல் பிளாகர் விருதுகளை கீழ்கண்ட பிளாகர்களுக்கு வழங்குவதில் பெறுமை கொள்கிறேன். கீழ் உள்ள பதிவர்கள் அனைவரின் பதிவையும் முடிந்தவரை அனைத்துப் பதிவுகளையும் படித்துவிடுகிறேன். பெரும்பாலும் நான் பதிவுகளை, பயணம் செய்யும்போதோ, எங்காவது யாருக்காவது காத்திருக்கும்போதோ படிக்கிறேன். கையடக்கக் கருவிகளில் படிப்பதால் பதிலுரை எழுத கஷ்டப்படவேண்டி உள்ளது. சரிபார்ப்பு, கேப்ட்சா என்று எத்தணை தொல்லைகள்! பதிலுரைகள் எழுதாமல் போனதற்குப் பதிலீடாக இந்த விருதை இவர்களுக்கு வழங்குகிறேன்.
(The following blogs are *not* sorted in any order.  I’m fetching them from my feedly collection)

அறிவியல்புரம் – என்.ராமதுரை –http://www.ariviyal.in/

இயற்பியல் – குறிப்பாக வானவியல் பற்றிய எளிமையான பதிவுகளுக்கு இவர் கேரண்டி.

நெஞ்சின் அலைகள் – ஜெயபாரதன் –http://jayabarathan.wordpress.com/

Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License உடன் முக்கியமான வானவியல் கட்டுரைகளை ஆதாரப்பூர்வமாக விரிவாக எழுதுபவர்.

தோட்டம்  – சிவா – http://thooddam.blogspot.sg/

இவரது தோட்டக்கலை ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது.

மண், மரம், மழை, மனிதன். வின்செண்ட்http://maravalam.blogspot.sg/

திரும்பவும் ஒரு பசுமை நிபுணர். வெட்டிவேர் நிபுணர் என்று இவரைக் கூறலாம். இவரது தன்னார்வம் வியக்கத்தக்கது.

கணிதம் ஜாலியாக…http://bseshadri.wordpress.com/

விருது கொடுத்து ஊக்கப்படுத்த இவர் புதியவர் இல்லை. தமிழ் பதிவுலகின் பயோனியர். இருந்தாலும் இவரது கணிதம் வலைப்பதிவை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவும். தொடர்ந்து இதில் பதிவுகள் எழுத கட்டாயப்படுத்தவும் இந்த வலைப்பதிவைத் தருகிறேன்.

முருகானந்தன் கிளினிக் –  Dr எம்.கே.முருகானந்தன். –http://hainalama.wordpress.com

எளிமையான உடல் உபாதைகளுக்கான தீர்வுகள் எளிய தமிழில் தொடர்ந்து எழுதுகிறார். அவ்வப்போது படித்த நூலைப் பற்றியும் எழுதுகிறார்.
கொடுமையான முறையில் 50 சதம் இடத்தைப் மகளிருக்குக் கொடுக்க இயலவில்லை. ஒருவேளை இலக்கியம், கலை, பொதுவான IT (facebook, blogging, computer troubleshooting, mobile phones) தவிர்த்த துறை சார்ந்த வலைப்பதிவுகளை நான் தேடிப்பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் அப்பபடிப்பட்ட பதிவுகளைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.
Disclaimer :-) : நான் விருது வழங்கத் தகுதி படைத்தவன் அல்லன். நான் தினசரி வாசிக்கும் நுட்பம் சார்ந்த பதிவுகள், அரட்டை நிறைந்த பிற பதிவுகள் பெறும் பார்வையைப் பெறாத ஆரோக்கியமற்ற போக்கு தமிழ் பதிவுலகளில் உள்ளதாக நினைக்கிறேன். எனவே இவர்களின் முயற்சியை ஆதரிக்கவும் உழைப்பை அங்கீகரிக்கவும் இந்த வெர்சடைல் பிளாகர் விருது வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 நன்றி:http://kadaisibench.wordpress.com

No comments:

Post a Comment