சி. ஜெயபாரதன், கனடா
கவிஞர் புகாரியின் குடும்பத்தார் கனடா, அண்டாரியோ மாநிலத்தில் உள்ள டொராண்டோ பெரு நகரிலிருந்து,கிங்கார்டின் சிறு கிராமத்துக்கு வருகை தந்து எங்கள் வீட்டில் இரண்டரை நாட்கள் தங்கிக் கலகலப்பை உண்டாக்கினார். அந்த வரலாற்று நாளை நினைவூட்ட எழுந்த கவிதை இது.
ஒரு மரத்துப் பறவைகள்
சி. ஜெயபாரதன், கனடா
வலைப் புறாவை ஏவி விட்டுத்
தூதனுப் பினேன்!
கூடு விட்டுக்
கூடு பாய்ந்தன குயிலின் பறவைகள்,
கனடாவின்
கூரான் ஏரிக்கரை நோக்கி!
வீடுகள் வேறாயினும்
வேர்கள் ஒன்றே!
கிளைகள் வேறாயினும்,
விதைகள் ஒன்றே!
பறவைகள் யாவும் பிறந்தகம் விட்டு
புதுத்தளம் அடைந்தவை!
கூடுகள் மாறினும்,
வீடுகளின் அடித்தளம் ஒன்றே!
இல்லத்தரசி
வெளியூர் செல்ல,
மெல்லத் தயங்கினேன் வரவேற்க!
வீட்டாளி விழித்து நிற்க,
அறுசுவை உண்டியை முந்தைய நாள்
இரவோடு இரவாய்
முறுவலோடு சமைத்து
வீட்டுக்காரன் இலையை நிரப்பியவர்,
விருந்தாளி அம்மையார்!
வேடிக்கை அல்லவா இது?
வீட்டுக்காரன் விருந்தி னாக,
விருந்தாளி
வீட்டாளி யான தெங்கே?
சென்னைக் கவிதை விழாவைப்
படமெடுத்துப்
கணினியில் போட்டுக் காட்டினார்.
பூரித்தேன், போற்றினேன், வியந்தேன்!
வைரமுத்து, மாலன் முன்னமர,
வைகைச் செல்வி வியப்படைய,
நூறு பேர் முன்பாக,
அன்னைக்குப்
பொன்னாடை போர்த்திய
உன்னத புத்திரனைப்
பொன்னெ ழுத்தால் பொறிக் கின்றேன்,
கண்களில்
வெந்நீர் பொங்கு தப்பா!
பிரியும் வேளை வந்ததும்,
கண்ண பெருமானுக்கு,
அளிக்க ஏது மின்றி
அவல் கொடுத்தான் குசேலன்!
நான் அளித்த
தோட்டக் கனிகளும்,
காய்கறிப் புதினா இலைகளும்,
கருவேப் பிலையும்,
பச்சை மிளகாய்க் கொத்துகளும்,
கனிவுடன் விஜயம் செய்த
கவி வேங்கை குடும்பத்துக்குக்
கைமா றாகிடுமா?
****************************** ***
கவிஞர் புகாரியின் பதிலிது:
இனிய ஜெயபாரதன் அவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். எனவே நட்சட்திரக் குறியிட்டு அப்படியே இம்மடலை வைத்திருந்தேன். என் பணிச்சுமை அப்படி...
இன்றும் போதிய நேரல் இல்லை என்றாலும் சில வரிகளாகவது சொல்லிப் போகவே வந்தேன்...
கனடாவில் அறிவியல் கட்டுரைப் பேரரசை இந்த அடியேன் குடும்பத்தோடு சென்று பார்த்து இரு தினங்கள் அவரின் மாளிகையில் தங்கி மகிழ்ந்து வந்த கதையைச் சொல்ல பக்கங்கள் போதாது.
குறிப்பாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
ஜெயபாரதனின் அறிவு இல்லத்தில் நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார்.
அடுக்கிவைக்கப்பட்ட ஒளிநாடாக்களில் சரித்திர விசயங்கள் ஏராளம். அதில் ஈழத்தின் புலிமுகாம்களில் பிபியெஸ் [PBS] எடுத்த குறும்படம் பார்தோம். சொல்ல வார்த்தைகள் இல்லை. சயனைட் தாலி கட்டிக்கொள்ளும் பிஞ்சுகளைக் கண்டால் கண்ணீரல்ல கண்களே வெளிவந்து விழுகின்றன...
இந்திய சுதந்திரகால பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் இன்னொரு ஒளிநாடாவில்...
பின் தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் காய்கறிகள் பழங்கள் என்று சுறுசுறுப்பாய்த் தோட்டவேலையில் சாதனை காட்டி இருக்கிறார்
ஒரு கறுவேப்பிலைக் கன்றை தத்தெடுத்துக்கொண்டு வந்தோம் நாங்கள் டொராண்டோவுக்கு..
ஏரிக்கரையில் உல்லாசமாக அலைந்தோம் புகைப்படங்கள் எடுத்தோம்...
இனிப்பாய்க் கழிந்த நாட்களைக் கடந்து மீண்டும் வீடுநோக்கி வரும்போது வழியில் ஒரு அழகி பூனைக்குட்டி மியாவியது என்னை அழைத்துப்போ என்று. அள்ளி எடுத்துக்கொண்டோம். வரும் வழியிலேயே அதற்குப் பெயர் சூட்டு விழா நடந்தது.
தேன்முகில் என்று பெயரிட்டேன். என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது பெயர். முகில்... முகில்... என்றால் இப்போதெல்லாம் பூனைக்குட்டிக்கு ஒரே ஆனந்தம். அதற்கும் அந்தப் பெயர் பிடித்துப் போனதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...
அன்புடன்
புகாரி
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address
idhayaoli.Blogspot.in]
கற்றோரை கற்றோரே காமுறுவர்.....கனடாவில் புதினா இலைகளா? அறிவியல் விஞ்ஞானி காய்கறி விஞ்ஞானியாகவும் இருக்கிறார் எனில் அது இம்மண்ணின் குணம். நிச்சயமாக தங்கள் புதினாவில் வீசியிருக்கும் தாய் மண்ணின் மணம். மறுபுறம் தமிழரின் குழந்தைகளின் கையில் சயனைட் . என்ன முரண் பாருங்கள்.வாழ்க்கை நம்மை எங்கே கொண்டு செல்கிறது?
ReplyDeleteஒரு புறம் அறிவியல் வளர்ச்சி கனடா வீட்டுத் தோட்டத்தை அறிய உதவுகிறது. மறுபுறம் கல்விச்சாலைக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் கையில் அதே அறிவியல்.......சாவின் அழைப்புகளோடு......பேசாமல் பூனைக்குட்டிகளாக இனித் தமிழர் பிறந்திடலாம். உலகெங்கும் ஒரே மொழி.......மியாவ்