இலக்கைத் தேடும் ஏவுகணை
கர்னல் . பா.கணேசன்பி.டெக் .[விசிஷ்டா சேவா விருதுVSM)]
முன்னாள் தலைவர், இந்திய தென் துருவ ஆய்வுத தளம்
தக்ஷிண் கங்கோத்ரி (1987-1989)
கர்னல் கணேசன் எழுதும் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்
நான், என் பணி, என் பின்னணி
சாதாரண கிராமத்துச் சிறுவனாகப் பிறந்து வளர்ந்த எனக்கு மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் சற்றே மிகையாக இருந்தது. எந்த விதமான திட்டங்களும் இன்றி குடும்பத்தில் மூத்தவர் என்ற முறையில் அண்ணன் காட்டிய வழியில் கை கட்டி நடந்த நான் என்னைப் பற்றியும் எனது செயல்பாடுகள் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தது 1961-62ம் ஆண்டு சமயத்தில் எனலாம். அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கை என்ற பெரிய குடும்பத்தில் ஆடு, மாடுகள், கோழி, வேலையாட்கள் என்று ஒரு சிறிய பண்ணை வீடு போன்ற சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு உயர் கல்வி கற்க என்று மாறுபட்ட சூழ்நிலையில் மூன்று வருடங்கள் மாணவர் விடுதியில் தங்கி இருந்த காலமே சுய சிந்தனைத் தூண்டுதல் ஏற்பட்ட காலம். அப்பொழுது தான் நா. பார்த்தசாரதி அவர்களின் “குறிஞ்சி மலர்” படிக்க நேர்ந்தது. நான் வித்தியாசமானவன் என்ற உணர்வு ஏற்பட்டதும் அப்பொழுது தான்.
1962-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதம் இந்திய - சீனப் போர் ஆரம்பித்தது. ஏராளமான இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதுவரை அண்ணன் காட்டிய வழியில் நடந்த நான் எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி அவருக்குத் தெரிவிக்காமலேயே இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வது என்று முடிவு செய்து அரசாங்க வேலையானப் பொதுப் பணித்துறை இளம் பொறியாளர் வேலையை ராஜினாமா செய்தேன்.
உளவியல், உடலியல், நாட்டுப்பற்று என்று நாலைந்து விதமான இராணுவத் தேர்வுகளில் அப்படித் தேர்வுகள் இருக்கும் என்பது தெரியாமலேயேப் பங்கு கொண்டு தேர்வில் வெற்றியும் பெற்றேன். இராணுவ அதிகாரியான ஒரு வருடத்திற்குள் எல்லைப்புற உயர் மலைப் பகுதி வாழ்க்கை என்றும் இந்திய - பாகிஸ்தானிய 1965-ம் ஆண்டு போர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டேன். அப்படி இருந்தாலும் எனது பிறந்த மண்ணின் ஈர்ப்பை என்னால் விட்டுவிட முடியவில்லை. அதனால் ஏராளமான கடிதங்கள் எனது உற்றம் சுற்றம் என்று எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு ஏற்றவாறு அவர்களது பதில் அமையாததால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உறவு கொண்டு பின்னியிருந்த பாசவலை சிதைவுற ஆரம்பித்தது. இவைகளை எனது “எல்லைப் புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” நூலில் காணலாம்.
பாசவலை சிதைவுறுவதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது ஒரு உணர்வுகளின் கொலை அல்லது தற்கொலை என்று சொல்லலாம். மனதளவில் மிக பலசாலி ஆனவர்கள்தான் அதுபோன்ற சூழ்நிலையை எதிர் கொண்டு தன்னளவில் அழிவுறாமல் தப்பித்து வர முடியும். இறையருள் காரணமாக எனக்கு அந்த ஆன்ம சக்தி இருந்தது. நான் வெளிவந்து விட்டேன். இளம் இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய காலம் மாறி தலைமைப் பண்பு பயின்று தலைவனாகப் பொறுப்பேற்ற பொழுது எனது செயல்பாடுகள் பற்றியது “இலக்கைத் தேடும் ஏவுகணை” என்ற இரண்டாவது நூல்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏவுகணைகள் அறிவியல் முன்னேற்றத்தின்
நவீன வெளிப்பாடுகள்.பாரதம் தொன்று தொட்டு
போர்க்கலையில் வித்தகம் பெற்றிருந்ததை
நமது இதிகாசங்களும், புராணங்களும் காட்டும்
அவை இலக்குக் குறி பெற்று இலக்கு நோக்கி
எறியப்பட்டன.வெற்றியும் பெற்றன
ஆனால் எனது இனிய நண்பர் கர்னல்
திரு .கணேசன் அவர்கள் வாழ்வின் இலக்கை
இன்னும் தேடிக்கொண்டிருப்பவர். வீரம்.தீரம்
கூடவே மெய்ஞ்ஞானம் என்ற பல பண்புகளின்
அபூர்வ வார்ப்பு. தன்னையே தான் தேடிக்
கொண்டிருக்கும் ஆத்மா.
அதை ஏவியவை எந்தெந்த புறக்காரணங்கள்
அவரது உள்ளத்தில் உந்தியவாறு இயங்கும்
அகக்காரணங்கள் எவை எவை என்று இந்தப்
பதிவுகளில் விளக்குகிறார்
ஒரு நல்ல நாவல் வாசிக்கும் சுவாரசியத்தோடு
இதை நான் வாசித்தேன்.தமிழ்கூறும் நல்லுலகம்
இதை மிக்க அன்புடன் வரவேற்திரு ஆர்வத்துடன் வாசிக்கு .
என்பதில் எனக்குச சற்றும் ஐயமில்லை
-வையவன் ,நிர்வாக ஆசிரியர்
இராணுவம் என்றதும் கரும்பச்சைச் சீருடை அணிந்த எல்லாரும் ஓரினம் என்றும் போரிடுவதுதான் அவர்களது வேலை என்றும் பரவலான எண்ணம் மட்டுமே
தென்னிந்தியாவில் நிலவுகிறது. இதன் காரணமாகவே பலர் இராணுவப் பணியைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. மாதந்தோறும் சம்பளம் பெறும் ஒரு வேலை என்றளவில் இல்லாமல் உறுப்பினர்களை உடலாலும் மனதாலும் வலுவுள்ளவர்களாக ஆக்குவதும் அவர்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னேற்றமடையக் கூடிய உயர்கல்வி தருவதும் இராணுவத்தின் செயல்பாடுகளில் ஒன்றாகும். அதிகாரிகளில் பலர் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பெறுகிறார்கள். பன்முகப் பரிமாணம் உள்ள அந்த அமைப்பில் தங்களுக்கு ஏற்ற பணியை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், விருப்பம் ஒன்றாகவும் செயலாக்கத் திறமை வேறொன்றாகவும் இருக்கும்போது அங்கு ஏமாற்றமே நிலவுகிறது. உளவியல் தகுதித் தேர்வுகளின்படி கிடைக்கக்கூடிய வேலையை நேசிக்க நாம் கற்றுக் கொள்வதில்லை. அப்படி இல்லாமல் செய்யும் வேலையை மகிழ்வோடும் மனநிறைவோடும் செய்யும்போது அங்கு ஓர் அற்புதமான மனிதன் உருவாகிறான்.
பொதுப் பணித் துறையில் இளம் பொறியாளராக இருந்த நான் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு இராணுவப் பணியை ஏற்றுக் கொண்டேன். மிகவும் சுறுசுறுப்புடனும் விளையாட்டுகளில் ஆர்வமுடையவனாகவும் இருந்த எனக்கு இராணுவப் பணி மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இளமைக் காலத்தில் பெரிய குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் என்று வளர்ந்ததால் இராணுவ பணியின் ஆரம்ப காலத்தில் அந்த பாசவலையிலிருந்து வெளியே வருவது சற்று கடினமாக இருந்தது. அதிலும் இராணுவப் பணியைப் பற்றி எந்த தலைமுறையிலும் அறிந்திராத எங்கள் குடும்பத்தில் எனது வெற்றியை பாராட்டவோ, தோல்விகளைக் கண்டு மனம் வருந்தி ஆறுதல் கூறவோ யாருமில்லை. “தானே தனக்கு தலை விதியாய்” என்பது போல் இருந்தது எனது பணி. ஆரம்ப காலத்தில் எனது மனநிலையை பற்றியும் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொண்டேன் என்பது பற்றியும் எனது நூல் “எல்லைப்புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” விளக்கம் தரும்.
அது ஒரு பத்துவருட அனுபவத் தொகுப்பு. அந்த தொகுப்பின் இறுதிகட்ட நிலை என்பது போல் இந்த நூலின் முதல் மூன்று கட்டுரைகள் இருந்திருக்கும். அதன் பின் உள்ள கட்டுரைகள் எனது எஞ்சிய இருபதாண்டு கால வாழ்வின் அனுபவங்களும் இடைக்காலம் 1 ஆண்டுகள் இந்திய தென்துருவ ஆய்வுக்குழு தலைவனாகவும் தென்துருவத்தில் பணியாற்றியது பற்றியது. உலகில் மிகமிகச் சிலருக்கே கிடைக்கக்கூடிய அரிய வாய்ப்பு அது. உலக மக்கள்தொகையில் சுமார் 700-800 பேர்களுக்குதான் அந்த அனுபவம் கிடைப்பதாக சொல்லுகிறார்கள். அந்த அனுபவங்கள்
“வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வை துளிகள்” என்ற தலைப்பில் திரு.பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இடைக்காலம் தவிர்த்து மற்ற காலங்களில் நான் பணியாற்றியது. பனிகாலத்தில் எனது செயல்பாடுகள் என்று விளக்கி இருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் வீர வாழ்க்கை பற்றி பேசுவது புறநானூறு. அதன் பாடல்களில் சிலவற்றை மேற்கோள் காட்டி அவை எப்படி இன்றைய இராணுவ வாழ்க்கைக்கு மிகவும் பொருந்துகின்றன என்றும் தெளிவாக்கி இருக்கிறேன். எனது இராணுவ வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்திருக்கிறது என்பதற்கு இன்றைய எனது நிலையே சாட்சியாகும். மூத்த மகன் ஜி.அரவிந்தன் பொறியாளர் படைப்பிரிவு அதிகாரியாக உள்ளார். தேசீய பாதுகாப்பு கல்லூரி வழியாக பயிற்சி பெற்று இந்திய இராணுவக் கல்லூரியில் ((Indian Military Academy) B.Sc., B.Tech., பட்டம் பெற்று இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவில் அதிகாரியாக உள்ளார். இன்றளவும் பெற்றோர்களுடனே இருந்துவரும் இளைய மகன் கார்த்திக் கணேசன் B.E., M.B.A.., முடித்து புகழ் மிக்க ஒரு வங்கி சார்ந்த பணியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
எங்கள் இல்லறச் சோலையை நிர்வகிக்கும் அதிகாரியாக எனது வாழ்க்கை துணைவி திருமதி. அனந்த லட்சுமி B.Sc., B.Ed.விளங்குகிறார். எனது இராணுவப் பணி சிறப்பாக அமைய எனது மனைவி மக்கள் ஒரு பலமான உறுதுணை என்றால் மிகையில்லை. அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும் என்றும் உரியன..
மனித வாழ்வில் குழந்தைப் பருவம் தாண்டி விடலைப் பருவம், பின்னர் இளமைப்பருவம் என்றும், இயற்கையில் ஏற்படும் பருவ காலங்கள் போல, மாறுதல்கள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் பாதுகாப்பிலான குழந்தைப்பருவம் தாண்டி, தானே சிந்திக்கவும், பெற்றோர்கள்-நண்பர்கள் சொல்வதை ஏற்கவும் முடியாமல் ஒதுக்கி விடவும் முடியாமல் தவிக்கும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை சுமார் 15 வயது முதல் 20 வரை என்று சொல்லலாம். அந்த பருவத்தில்தான் எனக்கு நானே முடிவு செய்து பொதுப் பணித்துறை வேலையை விட்டு இராணுவத்தில் சேர்ந்தேன்.
இராணுவ வாழ்க்கை அதுவும் அதிகாரிகளின் உயர்மட்ட வாழ்க்கை கிராமத்து சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு புதிய உலகமாக அறிமுகமாகியது. அங்கு தனியாளாக என்னால் நுழைய முடிந்ததே ஒழிய உற்றம் சுற்றம் என்று எனது உறவினர்களை அழைத்து செல்ல முடியாததை உணர்ந்தேன். நானே ஏற்படுத்திக் கொண்ட பாசவலையில் சிக்கிக் கொண்டபோது அதை நானே அவிழ்த்துவிட வேண்டும் என்றும் உணர்ந்து கொண்டேன்.
இந்த எண்ண மாற்றங்கள் எப்படி இருந்தன என்பதே இந்த நூலின் ஆரம்ப நிலையில் உள்ள மூன்று அத்தியாயங்கள்.
“மெய்யாக இருந்தது நாட்செல நாட்செல.
இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே
மற்றும் விளக்கறியா இருட்டறையில்” ஆகியவை.
குடும்பத்தில் ஒரு பெரு மகிழ்ச்சியாக இல்லாமல் “எப்படியோ முடிந்ததப்பா” என்று எல்லாரும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் நிகழ்ச்சியாக எனது திருமணம் நடந்தது. ஆனால் இன்றைக்கு சுமார் 42 ஆண்டு கால மணவாழ்வின் அனுபவத்தில் எனது திருமணம் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு மகத்தான வெற்றிவிழா என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். அந்த வெற்றியின் பெரும்பங்கு எனது வாழ்க்கைத் துணைவி திருமதி. அனந்தலட்சுமி அவர்களையே சாரும்.
எல்லா அத்தியாயங்களுமே தனிமனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய கருத்துகள் அடங்கியவைகள். எல்லாமே உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. எனது வாழ்வின் சிறப்புக்கு நான் நீண்ட நாட்கள் பணியாற்றிய 4 என்ஜினியர் ரெஜிமெண்ட் என்ற இந்திய இராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவின் அதிகாரிகளும் அதிகாரி அல்லாதோரும் மிக மிக உறுதுணையாக இருந்திருக்கின்றனர். அந்த அமைப்பிற்கு எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடமைபட்டிருக்கிறேன். மற்றபடி நான் எடுத்த முடிவுகள் எனது தீவிர சிந்தனையின் காரணமாகவே ஒழிய எந்தவித புறக்காரணங்களோ அல்லது பிறரது தூண்டுதல்களோ இல்லை என்று உறுதியாகச் சொல்வேன்.
எத்தனையோ இடையூறுகள் இருந்தாலும் இராணுவம் ஒரு நல்ல அமைப்பு என்று நான்
ஏற்றுக் கொண்டதற்கு உதாரணமே எங்களது மூத்தமகன் இராணுவ அதிகாரியானது. லெப்டினெண்ட் கர்னல் ஜி.அரவிந்தன் என்ற அவர் ஐ.நா. சபை அமைதிப்படை உறுப்பினராகத் தேர்வாகி ஆப்பிரிக்க நாடான காஙகோவில் பணயாற்றியவர். சமீபத்தில் வடக்கு மண்டல இராணுவத்தின் தலைமைத் தளபதியின் “பணிச்சிறப்பு பாராட்டு” பெற்றது ஈன்ற போதினும் பெரிதும் மகிழ்ந்த எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. குடியரசுத் தலைவரின் விருதுபெற்ற தந்தையைப் போல் வருங்காலத்தில் அவர் பெயரோடும் புகழோடும் பணியாற்றிடவும் பாராட்டுகள் பெற்றிடவும் வாழ்த்துவோம்.
எனது எழுத்து ஆர்வத்தைக் கண்ட உறவினரும் நண்பருமான திரு.க. அமுதசேகரன் என்ற இளைஞர் இந்த நூலை ஆக்கித் தரும் பணியில் கணிணியில் உருவாக்கவும் பிழைதிருத்தவும். முதலில் புத்தக வடிவில் இதைக் கொண்டு வரவும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார். அவருக்கு அவரது குடும்பத்தாருக்கும் எனது மனப்பூர்வமான நன்றி உரித்தாகும். எனினும் இது நூல் வடிவம் பெற நெடுங்காலம் காத்திருக்க வேண்டி வந்தது.
தற்போது தாரிணி பதிப்பக உரிமையாளரும் என் மதிப்பிற்குரிய நண்பரும் தமிழகத்தின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவருமான திரு . வையவன் அவர்கள் என் மீதும் என் நாட்டுப்பற்றின் மீதும் கொண்ட மதிப்பின் காரணமாக இந்நூலை வெளியிடுமுன் உலகெங்கிலுமுள்ள தமிழர் பார்வைக்கு முதலில் சென்று பிறகு நூலாக்கம் செய்யலாம் என்று கருத்துக்கூறினார்கள் . அவர்களது கருத்துரையை ஏற்று பகுதி பகுதியாக :இலக்கைத் தேடும் ஏவுகணை"நூலை இணையவெளி மின்னிதழில் வெளியிட வேண்டி அவர்களுக்கு மகிழ்ச்சியோடு அனுமதி தருகிறேன்
தற்போது தாரிணி பதிப்பக உரிமையாளரும் என் மதிப்பிற்குரிய நண்பரும் தமிழகத்தின் மாபெரும் எழுத்தாளர்களுள் ஒருவருமான திரு . வையவன் அவர்கள் என் மீதும் என் நாட்டுப்பற்றின் மீதும் கொண்ட மதிப்பின் காரணமாக இந்நூலை வெளியிடுமுன் உலகெங்கிலுமுள்ள தமிழர் பார்வைக்கு முதலில் சென்று பிறகு நூலாக்கம் செய்யலாம் என்று கருத்துக்கூறினார்கள் . அவர்களது கருத்துரையை ஏற்று பகுதி பகுதியாக :இலக்கைத் தேடும் ஏவுகணை"நூலை இணையவெளி மின்னிதழில் வெளியிட வேண்டி அவர்களுக்கு மகிழ்ச்சியோடு அனுமதி தருகிறேன்
.
வாசக அன்பர்களுடன் கலந்துரையாட என்றும் எனது வீட்டின் வாசல் கதவுகள் திறந்தே இருக்கும்.
அன்புடன்
பா. கணேசன்
Colonel.P.Ganesan VSM
“The Poles”
943
H-Block
17th
Main Road,
Anna
Nagar,
Chennai-600040
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பிற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய உயரிதிரு. கர்ணல் கணேசன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் பாக்கியத்தை நான் இன்று பெற்றேன்.. ஐயாவின் எழுத்துக்களை வாசிக்கும் போது, உடம்பின் ரத்த குழாய்களின் வழியே புது ரத்தம் பீரிட்டு ஓடும் உணர்வு நமக்கு உண்டாகும்.. பல சமயங்களில் வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் போது, துவண்டு கிடக்கும் நம் வாழ்வை தூக்கி நிறுத்தக்கூடிய ஆற்றலை திரு. கணேசன் ஐயாவின் எழுத்துக்கள் பெற்றிருக்கின்றன. இதை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, ஐயாவின் எழுத்துக்களை மின் புத்தக வடிவில் தயார் செய்து பங்காற்றிய மதிப்பிற்க்குறிய ஐயா, உயர்திரு. வையவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..
ReplyDelete