நா.பா.வின் மரணச் செய்தி
பிறகு நா.பா.வே. ‘தினமணி கதிரில்’ வேலைக்குச் சேர்ந்ததும் ‘தீபம்’ கொஞ்சநாள் வந்து, நின்று போனதும் வேறு விஷயம். நா.பா.வின் மகள் பூரணி கல்யாணப் பத்திரிகை வந்தது. சென்றேன். நா.பா. என்னை அன்புடன் வரவேற்று, நலம் விசாரித்தார். அவருடைய துணைவியார் மற்றும் குழந்தைகள் எல்லாருமே என்னிடம் பிரியம் காட்டினர். நாராயணன் கொஞ்சம் பெரியவனாகியிருந்தான். மீரா சிறுமியாக இருப்பதைப் பார்த்தேன். நா.பா.வுக்கும் தினமணி கதிர் நிர்வாகத்துக்கும் ஏதோ தகராறு. வழக்கு நடந்ததாகவும் கேள்விப்பட்டேன்.
‘இதயம் பேசுகிறது’ வார இதழில் நான் ஓர் உதவி ஆசிரியன் என்ற நிலையிலிருந்ததால், புதிய தொடர்கதை யாரிடம் கேட்கலாம் என மணியன் கேட்டபோது, நான் நா.பா. அவர்களின் பெயரைச் சொன்னேன். அங்கு நான் ஏழு ஆண்டுகள் செல்வாக்கான நிலையில் இருந்தேன். என் பேச்சுக்கு அங்கு மதிப்பு இருந்தது. எடிட்டோரியல் மீட்டிங்கில் நான் நா.பா. பெயரைச் சொன்னதும், ‘என்ன... நன்றிக் கடனா?’ என்று கேட்டு ஒருவர் ஏளனம் செய்தார். நா.பா.வுடன் வருத்தங்கள் இருந்தாலும் அவர்மீது மணியனுக்கு நிறைய மரியாதை உண்டு. சாகித்ய அகாடமி சம்பந்தமாகத் தான் ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டிருந்தேன். உண்மை விவரம் தெரியாது.
நான் தீபத்திலிருந்த போது நா.பா. ‘மணியனிடம் போய் உதயமூர்த்தி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து எங்கு தங்கியிருக்கிறார் என்று விசாரித்து, முகவரி வாங்கி வா’ என்று அனுப்பினார். விகடன் அலுவலகம் சென்று, மணியனுக்காக காத்திருந்து சந்தித்து, கேட்டேன். அவர் மிகுந்த அன்புடன் என்னை அறைக்கு அழைத்துச் சென்று, அவர் கைப்பட முகவரி எழுதித் தந்தார். ‘நானே வேண்டுமானால், நா.பா.வை அழைத்துச் செல்கிறேன். போனில் பேசச் சொல்’ என்றார். பிறகு மணியனின் ‘மோகம் முப்பது வருடம்’ கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, ‘தேவி’ தியேட்டரில் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. இதற்காக நா.பா.வுக்கும் அழைப்பு வந்தது.
நா.பா. அதை என்னிடம் கொடுத்து, ‘நீ போ. மணியனைப் பார்த்து, ‘ஏதோ அவசர வேலை இருந்ததால் நா.பா. வர முடியவில்லை’ என்று கூறிவிடு...’ என்றார். நானும் அவ்வாறே சென்று, மணியனைச் சந்தித்து, விவரம் கூறினேன். அவர் கோபமாக, ‘ஒரு எழுத்தாளன் கதை சினிமாவாக ஆகியிருக்கிறது என்று மகிழ்ந்து நா.பா.வந்திருக்க வேண்டாமா?’ என்றார். பிறகு ‘சரி, உட்கார்ந்து படம் பார்த்துவிட்டுப் போ’ என்றார். பார்த்தேன். அதைத் தொடர்ந்து ‘பாம்குரோவ்’ ஓட்டலில் நடந்த விருந்துக்கும் சென்று வந்தேன்.
புதிய தொடருக்கு நான் நா.பா. பெயரைச் சொன்னதும் ஒருவர் விமரிசித்தார். ‘சுதந்திரத்திற்குப் பிறகு உள்ள சமுதாயநிலை, அரசியல் பாதிப்புகள் பற்றியெல்லாம் ஒரு தொடர் எழுதப்பட வேண்டும்’ என்று மணியன் கூறியதை எடுத்துக் காட்டி, ‘இதனால்தான் நா.பா.பெயரைக் கூறினேன்’ என்றேன். நா.பா.வின் ‘ஆத்மாவின் ராகங்கள்’, ‘கங்கை இன்னும் வற்றிவிடவில்லை’, ‘சத்திய வெள்ளம்’ போன்ற கதைகள் அப்படிப்பட்டவை என்பதையும் விவரித்தேன். உடனே மணியன் இசைவு தெரிவித்தார். ஆனால், ‘நா.பா. எழுதுவாரா... நீதான் அவரிடம் பேசவேண்டும்’ என்றார்.
நான் மணியன் தந்த கடிதத்துடன் நா.பா.வை சந்தித்தேன். அவர் எளிதாகச் சம்மதிக்கவே இல்லை. அடுத்தடுத்து போனில் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர், ‘அகிலனிடம் பேசினேன். அவர் இதயம் பேசுகிறது இதழ் பற்றி விமரிசனம் செய்தார். எனக்கும் தயக்கமாக இருக்கிறது’ என்றார். இதயம் பேசுகிறது இதழில் சினிமாவும் கவர்ச்சியும் அதிகம் என்பது அவருடைய குற்றச்சாட்டு. நான் அதை ஒப்புக்கொண்டு, ‘வாரம் இரண்டு லட்சம் காப்பிக்கு மேல் விற்பனையாகும் இதழ். நீங்கள் நல்ல கதை எழுதுங்கள். அதில் கைவைக்க மாட்டோம்... மணியனிடம் எப்படியும் உங்களை எழுத வைப்பதாகச் சொல்லி வந்துள்ளேன்’ என்றேன். நா.பா.சம்மதித்தார். அவர் கேட்ட பணமும் வாங்கிக் கொடுத்தேன்.
‘சுந்தரப் புன்னகை’ என்ற அந்த நாவல் ‘இதயம் பேசுகிறது’ இதழில் தொடராக வந்து முடிவதற்கு முன்பே நான் அங்கிருந்து, வேலையை விட்டு வெளியேறினேன் என்பது வேறு விஷயம்.
கடைசியாக நான் நா.பா.வைச் சந்தித்தது சிவசங்கரி ஆரம்பித்த ‘அக்னி’ அமைப்பின் துவக்க விழாவில்தான். தாஜ்ஓட்டலில் நடைபெற்றதாக நினைவு. அப்போது நான் ஆனந்தவிகடனில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ‘பஃபே’ சிஸ்டத்தில் அவரவர் உணவை அவரவர் எடுத்து வந்து உன் கையில், நா.பா.என்னருகே வந்து நின்று பேசியபடி சாப்பிட்டார்.
‘ஏன் மணியனிடமிருந்து விலகினாய்?’ என்று கேட்டார். இப்படி வீண் கோபங்களால் அடிக்கடி வேலையைத் தொலைப்பதும் இடம் மாறுவதும் உனக்கு நல்லதில்லை’ என அன்புடன் கடிந்து கொண்டார். ‘நீ என்னிடம் வந்து சொல்லியிருந்தால், நான் உனக்காக மணியனிடம் பேசி, சமாதானம் செய்திருப்பேனே’ என்றார்.
உண்மைதான். நான் ‘இதயம் பேசுகிறது’ இதழிலிருந்து விலகிய செய்தி அறிந்ததும், நா.பா. என்னைச் சந்திக்க விரும்பினார். இது பற்றி தி.க.சி. எனக்கொரு தபால் போட்டு அழைத்தார். பெரியவர் வல்லிக் கண்ணன் வீட்டில் சென்று தி.க.சி அவர்களைச் சந்தித்தேன். அவர் நா.பா.வின் விருப்பம் கூறி, ‘நீங்கள் போய் நா.பா.வைச் சந்தியுங்கள். நல்லது நிகழும். கவிஞர் விக்கிரமாதித்தன் மாதிரி நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் கோபத்தால் வேலையை விடுவது சரியல்ல. மணியனுக்கு நான்கூட தபால் எழுதுகிறேன் என்றார். வல்லிக்கண்ணனும் சமாதானமாகப் போகுமாறு கூறினார். நான் அவர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு, நிலைமையின் சிக்கலை விவரித்தேன். தி.க.சி. அவர்கள் ‘மணியன் மீது வழக்கு தொடுக்கவும் ஆலோசனை கூறினார்.
ஒரு சிறு பிரச்னைக்காகத் தபால் மூலம் என்னை வேலை நீக்கம் செய்து, கணக்கையும் முடித்திருந்தனர். இதில் சில நியாயங்கள் என் பக்கம் இருந்த போதும், நான் அங்கு திரும்பவும் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. எனக்கு ஆனந்த விகடனில் வேலை கிடைத்துவிட்டதைக் கூறி, நா.பா.வுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.
மறுபடியும் மூன்றாண்டுகளுக்குள் வேலையை இழந்து, சின்னக்குத்தூசி அவர்கள் மூலம் நான் குங்குமம் வார இதழில் பணிபுரிந்து கொண்டிருந்த போதுதான் நா.பா.வின் மரணச் செய்தி என்னை வந்து தாக்கியது. மயானம் வரை சென்று மனமுடைந்து நின்றேன். அங்கு நா.பா. அன்பர்கள் ஒரு இரங்கல் கூட்டமும் நடத்தினர். நா.பா.வின் திருத்தோற்றம், அவரது இறுதிக்கிடத்தலில், ஒரு பெருமாள் சிலையைக் கிடத்தி வைத்திருப்பது போலவே தோன்றியது. சாவின் அவல ரேகைகள் எதுவும் அவரது திருவதனப் பொலிவில் மாற்றம் ஏற்படுத்தி விடவில்லை.
No comments:
Post a Comment