‘நீ வேறு இடம் தேடு
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து, அ.தி.மு.க.வை ஆரம்பித்திருந்தார். நா.பா. சில கூட்டங்களில் எம்.ஜி.ஆரை விமரிசித்துப் பேசியதால் ரசிகர்கள் நா.பா.மீது கோபத்துடன் இருந்தனர். ஒரு நாள் நா.பா.வின் கார் தாக்கப்பட்டது. அதுவும் அவர் வீட்டுக்கு அருகிலேயே, சாலையிலிருந்து அவர் வீட்டுக்குத் திரும்புகிற முனையில் ஒரு ஹாஸ்டல் உண்டு. அதில் தங்கியிருந்த மாணவர்கள் சிலர் நா.பா.வைத் தாக்கத் திரண்டு வந்தனர். காரை நா.பா.பதற்றத்தில் திருப்ப முயல, சிறுவிபத்து நிகழ்ந்தது. கார் ஒரு கல் மேடையில் மோதி நிற்க, அவர் இறங்கி எப்படியோ தப்பிவிட்டார். கோபத்தோடு வந்தவர்கள் காரை அடித்து நொறுக்க, உள்ளே நான் மாட்டிக் கொண்டு விட்டேன். இரத்தம் சொட்டக் கிடந்த என்னை போலீஸ் உதவியோடு, பொது மக்கள்தான் மீட்டனர். அதற்குள் நா.பா.வும் ஆட்களைத் திரட்டி வந்தார்.
1976-ல் என் மகன் பிறந்தான். மனைவி பிரசவத்திற்காகத் திருச்சி சென்ற பிறகு நான் வீட்டைக் காலி செய்து விட்டு, தீபம் அலுவலகத்திலேயே தங்கியிருந்தேன். ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல், வயிற்று வலியால் சிரமப்பட்டேன். ராயப்பேட்டை மருத்துவமனையில் ஒரு நள்ளிரவில் சேர்க்கப்பட்டு, வயிற்றில் குடல் வால் அறுவை சிகிச்சை நிகழ்ந்தது. ஆறுமாதம் கழித்து மனைவி வந்தாள் மகனுடன். வீடு பார்த்துக் குடியேறினேன். செலவுகள்.... பணம் போதவில்லை. நா.பா.விடம் சொன்னேன். ‘சரி, நீ வேறு வேலை தேடு’ என்று கூறினார். இடையில் நா.பா.ரஷ்யா சென்றிருந்த சமயம் நான் ஒன்றிரண்டு மாதம் ‘அலை ஓசை’ நாளிதழில் புரூப்ரீடராக வேலை பார்த்தேன்.
திருவாரூர் தியாகராஜன் (சின்னக்குத்தூசி) இந்த வேலையை எனக்கு வாங்கித் தந்திருந்தார். நாளிதழ் என்பதால், மதியத்துக்கு மேல் வேலை இராது. உடனே ‘தீபம்’ அலுவலகம் வந்துவிடுவேன். இதுவும் சம்பத் என்று சொன்னேனே, அவருக்கு உடல் நலமில்லையென்று லீவு போட்டிருந்ததால் கிடைத்த வேலை தான். சம்பத் அங்கு திரும்பிவந்ததும் நான் அந்த வேலையை விட வேண்டியதாகி விட்டது. அப்போது தான் இரத்தினகிரி பாலமுருகடிமை சாமியார் ஒரு கொலை வழக்கில் சிக்கி, அச்செய்தி பரபரப்பாக ‘அலை ஓசை’யில் வந்து கொண்டிருந்தது.
நா.பா. வே, ‘நீ வேறு இடம் தேடு’ என்று கூறிவிட்டதால், நான் பெரியவர் கி.வா.ஜ. அவர்களிடம் போய் நின்றேன். ‘கலைமகள்’ இதழில் என் சிறுகதைகள் ஒன்றிரண்டு பிரசுரமாகியிருந்தன. நா.பா. முற்போக்குச் சிந்தனை உள்ள ஒரு சினிமா இயக்குநரை நாயகனாக வைத்து, ‘நீல நயனங்கள்’ என்றொரு தொடர்கதையைக் கலைமகளில் எழுதினார். இதற்காக நான் அடிக்கடி அந்த அலுவலகம் செல்வேன். கி.வா.ஜ நன்கு அறிமுகமாகியிருந்தார். அவரிடம் போய் என் கஷ்டங்களைச் சொன்னேன்
.
அவர் உடனே ஒரு கடிதம் எழுதிக் கொடுத்து, ‘இன்று ஹிண்டு நாளிதழில் மணியன் ‘இதயம் பேசுகிறது’ வார இதழ் ஆரம்பிக்கப்போவதாக விளம்பரம் வந்துள்ளது. நீ உடனே மணியனைப் போய்ப்பார். நல்லதே நிகழும்’ என்றார்.
கிண்டியில், ஸ்பிக் பில்டிங்கில் இருந்தது அந்த அலுவலகம். அங்கே போய், மணியனைச் சந்தித்து, கி.வா.ஜ.வின் கடிதம் கொடுத்தேன். அவர் மகிழ்ந்து போய், ‘பெரியவர் - தமிழறிஞரின் ஆசி உன் மூலம் வந்துள்ளது. நீ நாளைக்கே வந்துவிடு’ என்றார். எஸ். லட்சுமி சுப்பிரமணியம், தாமரை மணாளன் போன்றோர் அங்கு இருந்தனர். அது தீபாவளி சமயம். ‘தீபம்’ தீபாவளி இதழ் தயாராகிறது. ‘ஒரு வாரம் டைம் கொடுங்கள்’ என்று கேட்டேன். மணியன் கோபத்தோடு ‘போ...போ’ என்றார். வெளியே நல்ல மழை. நானும் மனசுக்குள் அழுதபடி வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றேன்.
நா.பா.மீது மணியன் ஏதோ வருத்தத்தில் இருந்தார். இது எனக்குத் தெரியும். நான் மணியனை முன்பே சந்தித்திருக்கிறேன். அதுவும் நா.பாவுக்காகத்தான். எனவே ‘இந்த வேலை கிடைக்காது’ என்றே திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆள் ஓடிவந்து, ‘உங்களை மணியன் அழைக்கிறார்’ என்று கூப்பிட்டார். திரும்பிச் சென்றேன். மணியன், ‘எத்தனை பெரிய இடத்து சிபாரிசுகளோடு எல்லாம் என்னைப் பலரும் வந்து சந்தித்து வேலை கேட்கிறார்கள் தெரியுமா? நீ. நா.பா.விடம் இருப்பவன், பெரியவர் கி.வா.ஜ வேறு கடிதம் தந்து அனுப்பியுள்ளார் என்று தானே ‘உடனே வா’ என்றேன். புரியவில்லையே உனக்கு. சரி, போய்விட்டு முதல்தேதி வந்து விடு’ என்றார்.
இதையெல்லாம் நான் நா.பா.விடம் கூறி, ‘எனக்கு வேலை கிடைத்துவிட்டது’ என்றேன். நா.பா. அனுமதிக்க மறுத்தார். ‘அந்த இடம் உனக்கு சரிப்படாது. போகாதே. பிறகு பார்க்கலாம்’ என்றார். இதுதான் எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட வருத்தம். நான் பிடிவாதமாக வெளியேறி, ‘இதயம் பேசுகிறது’ அலுவலகம் சென்று விட்டேன். அதுவும் தீபம் தீபாவளி இதழை முடித்து விட்டுத்தான்.
No comments:
Post a Comment