Thursday 2 May 2013

குழந்தைகளுக்குக் கதை சொல்வது எப்படி?


குழந்தைகளுக்குக் கதை சொல்வது எப்படி? 

குழந்தைகளுக்குக் கதை சொல்வது எப்படி?என்ற நூல், மூத்த குழந்தை எழுத்தாளர் ரேவதி எழுதியது. சமீபத்தில் படித்தேன். பாட்டியிடம் கதை கேட்கும் பாக்கியம் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு இல்லையே என்ற வருத்தம் மேலிட, அவர் அந்நூலை எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பொறுப்பு இன்று பெற்றோர் களிடமும் ஆசிரியர்களிடமும் வந்து விட்டதாக நான் நினைக்கிறேன். எந்தக் காலத்திலும் குழந்தைகள் கதை கேட்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். 

சம்பந்தப்பட்டவர்களுக்குத் தான் நேரமில்லை. கதைகளுக்கும் பஞ்சம் வந்து விட்டது. பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகள், நாடோடிக் கதைகள், புராண இதிகாசக் கதைகள் இன்றும் இவையே உலா வருவது முகஞ் சுளிக்க வைக்கிறது. இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துச் சொல்லவில்லை. காலத்தால் அழியாதவை அவை.

50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை களுக்காக சிறுகதைகள், நாவல்கள் எழுத ஒரு எழுத்தாளர் பட்டாளமே இருந்தது. அன்றுள்ள விளைச்சலையும் இன்றுள்ள கட்டாந்தரையையும், ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கல்கி கூட சிறுவர்களுக்காக ‘சோலைமலை இளவரசி’ என்ற வரலாற்று நாவல் எழுதியிருக்கிறார். இன்று யாராவது எழுதியிருக்கிறார்களா? 

சமூகக் கதைகள், மாயாஜாலக் கதைகள், தேவதைக் கதைகள், துப் பறியும் கதைகள் என்று சிறுவர்களுக்காகப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு கதைகள் எழுதிய காலம் இருந்தது. இன்று அத்தி பூத்தாற்போல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கிறுகிறு வானம், சுஜாதா எழுதிய பூக்குட்டி, லூர்து எஸ். ராஜ் எழுதிய தொலைந்த மணியார்டர், நான் எழுதிய நம்பிக்கை இல்லம் போன்று ஒரு சில நாவல்களே வந்துள்ளன. 

அன்று அழ.வள்ளியப்பா, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, ஆர்வி, தங்க மணி, துமிலன், கே. ஜெயலட்சுமி, முல்லை தங்க ராஜ், தமிழ்வாணன், புவனை கலைச்செழியன், மாயன், சௌந்தர், எத்திராஜன், நெ.சி.தெய்வசிகாமணி ரத்னம், வை.கோவிந்தன், முல்லை முத்தையா, ராஜா சூடாமணி, கே.பி.நீலமணி, கி.மா.பக்தவச்சலன் பூரம், பூதலூர் முத்து, கூத்தபிரான், ரா.மாரிமுத்து, ர.திரு நாவுக்கரசு, மாயூரன், பூவை அமுதன், ராஜி, கொ.மா. கோதண்டம், ஏஜிஎஸ் மணி, பி.வி.கிரி, குழ. கதிரேசன், அகிலன் கண்ணன் என்று ஒரு பட்டாளமே குழந்தை களுக்காக எழுதியது.

இன்று யூமா.வாசுகி, வேலு சரவணன், ச.முருகபூபதி, ச.தமிழ்ச்செல்வன், கூத்தலிங்கம் என விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டும் குழந்தை இலக்கியம் என்ற தளத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

ஆக, ஒரு பட்டாளமே எழுதிக் குவித்த பிறகு புதையல் போல் குழந்தை இலக்கியம் நம்மிடம் இருக்கும் என நினைப்பீர்கள், பழங்காலச் செல் வத்தை எந்த அளவு நாம் பாதுகாப்போம் என்பது தான் தெரிந்த விஷயமாச்சே, அதுவும் தமிழ்நாட்டில் வெளிவரும் நூல்கள் 80ரூ மறு பதிப்பைப் பார்ப்ப தில்லை. இலட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் 1000 பிரதிகள் விற்கத் தலைகீழாக நிற்க வேண்டும். தரமான முறையில் குழந்தை இலக்கிய நூல்களைத் தயாரிக்கவும், மறு பதிப்பு செய்யவும் எந்தப் பதிப்பகத்திற்குத் துணிச்சல் வரும்?

நேற்று இப்படி இருந்தது என்று சொல்வதன் மூலம் தமிழில் குழந்தை இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன என்பதை ஜாடை மாடையாகச் சொல்லி விட்டேன்.

குழந்தை இலக்கியம் மேலும் மேலும் செழித்து வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக் கிறார்கள். அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து சில முயற்சிகளை (முன்னோர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வுடன்) செய்தால் போதும்.

என்ன முயற்சிகளைச் செய்வது, அதற்கென்ன வழிமுறைகள் என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அத்தகைய யோசனைகளைப் பரிமாறிக் கொள்ள உசிதமாக ஒரு மேடையாகக் குழந்தை எழுத்தாளர் வலைப்பூ (http://kulanthaieluthaalar.blogspot.in/) உதவும்.
Thanks:சுகுமாரன்
(http://kulanthaieluthaalar.blogspot.in/

No comments:

Post a Comment