Sunday 5 May 2013

நினைவின் நதிக்கரையில்:4-(கௌதம நீலாம்பரன்) நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன்



 நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன்


வல்லிக்கண்ணன் அவர்களிடம் சகோதரர் கோமதி நாயகம் எபிஷியண்ட் பப்ளிஸிடியில் இருந்தார். அவர் இந்த வகையில் நிறைய உதவிகள் செய்வார். திருமலை ஒரு வில்போல இருந்து, என்னை அம்பாகப் பல இடங்களுக்கும் எய்து கொண்டிருந்தார். அலைச்சல் அதிகம். பெரும்பாலும் நடந்தேதான் எங்கும் சென்று வருவேன்.


‘தீபம்’ மாத இதழ் உருவாக அதிகம் உழைப்பவர்கள் என்று, திருமலை, நான், ராஜதுரை, மோகன் ஆகிய நால்வரையும்தான் சொல்ல வேண்டும். ஒரு குடும்பம் போல் நாங்கள் பாசத்தோடு பழகினோம். திருமலை நா.பா.வின் உறவினர். மற்ற மூவரும் நா.பா. வின் தீவிர ரசிகர்கள். இது போகப் போகத்தான் எனக்கு புரிந்தது. ராஜதுரை வெறும் கம்பாஸிடர் மட்டுமல்ல;  நல்ல இலக்கிய ரசிகர். ஜெயகாந்தன் மீதும் நா.பா. மீதும் அவர் கொண்டிருந்த பற்று அசாதாரணமானது. 

அவர் பேசத்துவங்கினால், ஏராளமான உலக விஷயங்கள் அருவிபோல் கொட்டும். ஆங்கிலப் படங்கள் நிறைய பார்ப்பார். அரசியலில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, கர்மவீரர் காமராஜர் இவர்களை மட்டுமே அவருக்குப் பிடிக்கும். காமராஜர் மீது பக்தி அதிகம் எனலாம். ராஜதுரை பேசுகிற விஷயங்களிலிருந்து அரசியல், உலக சினிமா, நவீன தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் நான் நிறைய அறிய முடிந்தது. 

மனிதர் மகா கோபக்காரர். ஆனால் கர்வி இல்லை. திடீர், திடீரென்று என்னோடு கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பார். கோபம் தணிய சில நாட்கள் ஆகும். நான் கொஞ்சம் வாய்த்துடுக்காக ஏதும் பேசி விடுவேன். அந்த வயதில் விவாதிக்கும் போக்கு என்னிடம் சற்று அதிகம். அதனால் நான் நிறைய துன்பங்களைத்தான் சந்திக்க முடிந்தது.

திரும்பப் பேசுவது ராஜதுரையாகத்தான் இருக்கும். வயதில் பெரியவர் என்பதை நிரூபித்து விடுவார். ‘உன் கருத்து நாளை மாறும்... எது சரியென்று புரிந்து கொள்வாய்... ’ இப்படி ஏதாவது சொல்வார். எம்.ஜி.ஆர். என்றாலே ராஜதுரைக்கு வேப்பங்காய். நானோ தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். இதில் ராஜதுரையின் விமரிசனங்களை நான் இறுதிவரை ஏற்றதில்லை. 

ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதையை அவர் வரிக்கு வரி சிலாகிப்பார். ரொம்ப நாள் கழித்தே நானே அக்கதையை வாசித்தேன். புதிதாக ஏதுமில்லாத அளவு முன்பே அக்கதை என் மனசில் பதிந்திருந்தது. ஒரு கதையோ அல்லது வேறு விஷயமோ ராஜதுரை எடுத்துச் சொல்லும் பாங்கு மகத்தானது. பல கோணங்களில் அதற்கான விமரிசனங்களோடு, ஒப்பீட்டுடன்தான் பேசுவார்.

ஜெயகாந்தனின் பாரதி ஈடுபாட்டைப் பற்றி ராஜதுரை, ‘பாரதி பாடல் முழுவதையும் கிழித்து எறிந்து, எங்கும் இல்லாமலே யாராவது செய்து விட்டால், ஜே.கே. மட்டுமே அதைத் திரும்ப எழுதி உலகுக்கு அளித்து விடுவார்’ என்பார். அதே போல் ஜே.கே.யின் நூல்கள் அனைத்தையும் யாராவது அழித்துவிட்டால், ராஜதுரை திரும்ப எழுதித் தந்துவிடுவார் என்று சொல்லத் தோன்றும்.

எனக்கு முன்னால் ‘தீபத்தில்’ எஸ். சம்பத் என்பவர் வேலை பார்த்தார். இவர்மீது ராஜதுரைக்கு அதீத பாசம் உண்டு. ‘வாழ்வில் மிகப்பெரிய அளவு முன்னுக்கு வரவேண்டியவன். என்ன துரதிர்ஷ்டமோ அவன் அப்படி வரவில்லை’ என அடிக்கடி ஆதங்கப்படுவார். இந்த சம்பத் ஷோபாலலித் என்கிற பெயரில் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் அப்போது ‘அலைஓசை’ நாளிதழில் புரூப்ரீடராகப் பணிபுரிந்தார். அடிக்கடி ‘தீபம்’ அலுவலகம் வந்து செல்வார். இவரும் நா.பா.வின் தீவிர ரசிகரே. இந்த சம்பத்தின் மீதுள்ள அன்பால், ராஜதுரை ‘கலைக்கனல்’ என்றொரு சினிமா மாத இதழைத் துவங்கி, அதில் இவர் பெயரை ஆசிரியர் என்றும் போட்டார்
.
‘தீபம்’ அலுவலகத்தில் ராஜதுரை மிகவும் குறைந்த ஊதியமே பெற்று வந்ததால் நா.பா. இவருடைய ‘கலைக்கனல்’ இதழுக்கான மேட்டர்களை இலவசமாக அச்சுக்கோர்த்துக் கொள்ள அனுமதித்தார். ‘தீபம்’ அச்சகத்தில் இலவசமாக அச்சடித்தும் தரப்பட்டது. பேப்பர் மட்டும்தான் விலைக்கு வாங்க வேண்டும். அதிக விளம்பரமின்றி வெளிவந்தாலும் ‘கலைக்கனல்’ தரமான சினிமா இதழாக வெளி வந்தது. இதில் நான் சினிமா விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். பாரதிராஜா உதவி இயக்குநராக இருந்து வெளியான ‘தாகம்’ என்னும் சினிமாவுக்கு ‘கலைக்கனல்’ இதழில் நான் விமரிசனம் எழுதியதைக் குறிப்பிடலாம்.

ராஜதுரை உடல்நலம் குன்றியதாலோ என்னவோ நடுவில் சில மாதங்கள் வேலைக்கு வரவில்லை. அப்போது வேறு ஒருவர் அந்தப் பணியைச் செய்தார். பெயர் விவேகானந்தன் என்று ஞாபகம். பிரபல திரைப்பட இயக்குநரும், வசனகர்த்தாவுமான மதுரை திருமாறனின் உறவினர் இவர். மதுரை திருமாறனின் வீடு மேற்கு சி.ஐ.டி. நகரில் நா.பா.வீட்டுக்கு மிக அருகிலேயே இருந்தது. இந்த கம்பாஸிடரும் ‘நடிகன் குரல்’ என்றொரு சினிமா பத்திரிகை நடத்தினார் இதிலும் நான் கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

மிஷின்மேன் மோகன் நா.பா.வின் சமூக நாவல்களுக்கு மட்டுமே தீவிர ரசிகர். பொன்விலங்கு, குறிஞ்சிமலர், சமுதாய வீதி, ஆத்மாவின் ராகங்கள், கங்கை இன்னும் வற்றிவிடவில்லை போன்ற கதைகளை வெகுவாகப் புகழ்வார். சரித்திர நாவல்களில் நா.பா.வின் சாதனைகளை இவர் ஏற்பதில்லை. மோகன் கோ.வி. மணிசேகரனின் சரித்திரக் கதைகளை மட்டுமே உயர்வாகப் பேசுவார். இவருடைய தூண்டுதலால்தான் நான் ‘கோ.வி’யின் கதைகள் பலவற்றை வாசித்தேன்

. ‘கோவி’யை மனக்கோபுரத்தின் உச்சியில் வைத்திருந்த மோகன், ஜெகசிற்பியனின் சரித்திரப் புதினங்களையும் புகழ்வார். சாண்டில்யனின் கதைகள் பற்றிக் கேட்டால், ‘அதையெல்லாம் படிக்க உனக்கு வயசு பத்தாது. இப்ப வேணாம். நீ நான் சொல்றதைப் படி’ என்று அதிகாரத் தோரணையில் கூறுவார்.
இவர் நிறைய கதைப் புத்தகங்களை பைண்டு செய்து வைத்திருந்தார். இவரிடம் நிறைய புத்தகங்கள் வாங்கிப் படித்திருக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை, நந்திக்கலம்பகம், கலிங்கத்துப் பரணி போன்ற நூல்களையும் இவர் எனக்கு அளித்தார். நா.பா.வின் ‘மணிபல்லவம்’ போன்ற கதைகளை மோகன் விமரிசித்தது தொடர்பாக இவருடன் எனக்கு பலமுறை தகராறு ஏற்பட்டதுண்டு. அது வழக்கமான ராஜா-ராணி கதையல்ல; மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வணிக குடும்பத்து இளைஞன் பற்றிய நவீனம். தமிழில் அது ஒரு புதுமுயற்சி என்பதால், வழக்கமான சரித்திர நாவல் பிரியர்கள் பலர் அதை ரசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், நா.பா.வின் புகழ் மகுடத்தில் அது ஒப்பற்ற ஒளி வீசும் ஒரு மாணிக்கம். (பிற்காலத்தில் பிரபஞ்சன் இதுபோல் புதுவை வரலாற்றில் ஒருகால கட்டத்தைப் பிரதிபலிக்கும் ‘மானுடம் வெல்லும்’ கதையை எழுதி, சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார்.)

மோகன் எப்படி நா.பா.வின் சரித்திர நாவல்களை அதிகம் சிலாகிப்பதில்லையோ, அப்படியே கோவி.மணிசேகரனின் சமூகநாவல்களயும் கடுமையாக விமரிசனம் செய்வார். நான் ரசித்துப் பாராட்டிய ஒன்றிரண்டு நவீனங்களையும் கூட அவர் ஏற்க மறுத்துவிட்டார். ‘அவருக்கு எதற்கு இந்த வீண்வேலை?’ என்பார். இது அவரவர் மனப்போக்கைக் குறித்த விஷயம். ராஜா-ராணி படங்களில் கத்திச் சண்டை போட்ட எம்.ஜி.ஆர் பேண்ட், சட்டை போட்டு சமூகப் படங்களில் நடித்தாலும் ஆரம்பத்தில் அதை ரசிகர்கள் ஏற்கவில்லை என்பார்கள். இது போன்றதே இதுவும்.

இந்த மோகனும் நானும் பல இரவுகளில் ஒரு டீயை வாங்கி, ஆளுக்குப் பாதி குடித்துவிட்டு வேலை செய்திருக்கிறோம். மோகன், எழும்பூரில் ஒரு அச்சகத்தில் இரவு வேலைக்குச் செல்வார். என்னையும் அழைத்துச் செல்வார். இப்போதைய ஆல்பர்ட் தியேட்டரின் எதிர் வாடையில், கடைசியில் இருந்தது அந்த அச்சகம். பல்ராம் பிரதர்ஸ் அச்சகம் என்று நினைவு. பாடநூல்களுக்கான பாரங்கள் அச்சாகும். மோகன் தயார்செய்து தந்த பிறகு மிஷினை நான் ஓட்டுவேன். இரவு முழுக்க வேலை செய்தால் மூன்றுரூபாய் கிடைக்கும். ஐந்து ரூபாய் சேர்ந்ததும் ஒரு புதிய அரைக்கை சட்டை வாங்கி அணிந்துகொள்வேன்.

தீபத்தில் ஆரம்பத்தில் நான்பெற்ற சம்பளம் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான். இதில் பெரிய ஓட்டல்களில் போய் சாப்பிட முடியாது. டீக்கடையில் குறைந்தவிலைச் சாப்பாடு கிடைக்கும். இதைத்தான் சாப்பிடுவேன். நான் சைவ சாப்பாட்டுக்காரன். ஆனால், அதை அசைவ சாப்பாட்டுக் கடையில் சாப்பிடுகிறமாதிரி சூழ்நிலை. ஒரு முறை தீபம் அச்சகத்துக்கு வந்த நா.பா. , பக்கத்து டீக்கடையில் நான் சாப்பிடுவதை அறிந்து, அங்கேயே திடுமென்று வந்துநின்று விட்டார். பிறகு, ‘என்னப்பா இதெல்லாம்... நல்ல ஓட்டலில் சாப்பிடக் கூடாதா?’ என்று கேட்டார். நான் என் நிலையை விளக்கினேன். உடனே நா.பா.என்னை, ‘இனிமேல் நீ என் வீட்டிலேயே வந்து தங்கிவிடு’ என்று கூறிவிட்டார்.

மாம்பலம் சி.ஐ.டி. நகரிலிருந்த நா.பா. வீட்டுக்கு நான் அடிக்கடி செல்வதுண்டுதான். கதைகள் எழுதி வைத்திருப்பார். தொடர்கதை அத்தியாயங்களை நான் அவருடைய வீட்டுக்குச் சென்று வாங்கிப்போய், விகடன், கலகி போன்ற இதழ் அலுவலகங்களில் கொடுத்துவருவேன். எழுபது அல்லது எழுபத்து ஒன்றாம் ஆண்டு நா.பா.ஆனந்த விகடனில் ‘நித்திலவல்லி’ என்ற வரலாற்று நாவலை எழுதினார். அதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் உட்கார்ந்து பிரதி எடுத்திருக்கிறேன்.

 பெரும்பாலும் மேனேஜர் திருமலை டைப் செய்து, பிரதி எடுப்பதுண்டு. என்ன காரணத்தாலோ இக்கதையை என் கையெழுத்தில் பிரதியெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை என் பாக்கியம் என்றே நான் கருதுகிறேன். இதனால் என் கையெழுத்து மிகவும் திருந்தியது. நா.பா.வின் கையெழுத்து போலவே என் கையெழுத்தும் இருப்பதாகப் பலரும் கூறுவர். பின்னாளில் நான் ஒரு சிறுகதை எழுதி, ‘கல்கி’யில் கொடுத்த போது, உதவி ஆசிரியர் பி.எஸ். மணி, ‘என்னப்பா நா.பா.வின் கதையைத் தூக்கி வந்து, உன் கதை என்கிறாயா?’ என்று கேட்டு தமாஷ் செய்ததுண்டு.
(வளரும் )

No comments:

Post a Comment