Tuesday 7 May 2013

நினைவின் நதிக்கரையில்:5



                                            இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்




என்ன காரணத்தாலோ நான் நா.பா.வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நா.பா.வின் குழந்தைகளை நான் அடிக்கடி கண்ணதாசன் வீட்டுக்கு எதிரே இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வேன். பூரணி சற்று பெரிய பெண். பாரதி சிறுமி. நாராயணன் கைக்குழந்தை. மீரா அப்போது பிறந்திருக்கவில்லை. ஒருமுறை பூரணி நா.பா.வீட்டு வாசல் கேட்டில் ஏறிக்குதித்து, விரலில் நல்ல அடிபட்டு விட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில்தான் சிகிச்சை செய்தார்கள். நான் பலமுறை அழைத்துவந்து, கட்டுப் போட்டு அழைத்துச் சென்றதுண்டு.

நா.பா. குழந்தைகளை அழைத்துக் கொண்டு சில மாலை வேளைகளில் பீச்சுக்கு வருவார். நானும் உடன் செல்வேன். யாராவது இலக்கியப் பிரமுகர்கள் சந்தித்துவிட்டால், நா.பா.வோடு மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுவார்கள். நான் குழந்தைகளை அலையோரம் அழைத்துச்சென்று விளையாட்டுக் காட்டி, அழைத்து வருவேன். பிறகு அவர்களை நா.பா.வுடன் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு, தீபம் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். குளியல், படுக்கை எல்லாம் அங்கேயேதான். ஒரேயொரு டிரங்குப்பெட்டி தவிர என்னிடம் வேறுபொருள்கள் ஏதுமில்லை. மாற்று உடுப்பு ஒரு செட் இருக்கும். 

இரவில் திருமலை ‘தீபம்’ அலுவலகத்தைப் பூட்டிச் சென்றபின், அந்த அறையின் வாசலிலேயே படுத்திருப்பேன்.அது பெரிய கட்டிடம். நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், மெட்ரோ பாலிடன் பிரஸ், மவுண்ட் பார்மஸியின் ஸ்டாக் ரூம், கோஆப்டெக்ஸின் குடோன், ‘சம்யுக்த கர்நாடகா’ எனும் கன்னடப் பத்திரிகையின் சென்னை அலுவலகம் என பல்வேறு நிறுவனங்கள் அதில் செயல்பட்டன. மொட்டை மாடியில், பத்திரிகைகளுக்குத் தேவையான படங்களை ‘பிளாக்’ செய்து தரும் மேரிபிராஸஸ் ஒன்றும் இருந்தது. இதை நடத்தும் அந்தோணி, இரவில் வெகுநேரம் இருப்பார். இதனால் தனிமையோ, பயமோ இல்லாமல் அங்கு படுத்துக் கிடப்பேன். 

அந்தோணி கிளம்பிவிட்டாலும் மெட்ரோ பாலிடன் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் சீனுவாசன், வாட்ச்மேன் போல அந்தக் கட்டிட வாசலில் படுத்திருப்பார். பிறகு இது நா.பா.வுக்குத் தெரிந்து, அலுவலக சாவியையே என்னிடம் தந்து, உள்ளே படுக்கச் சொல்லிவிட்டார்.

‘தீபம்’ மேனேஜர் திருமலையும் பெரும்பாலும் அலுவலகத்திலேயே தங்க ஆரம்பித்தார். பிரஸ்ஸில் வெளி வேலைகள் வாங்கி, பாரங்களை மட்டும் அச்சிட்டோம். இதனால் பிரஸ்ஸூம் இரவில் இயங்கத் துவங்கியது எனக்கு வசதியாகப் போயிற்று.

தீபம் காரியாலயம் கிட்டத்தட்ட ஒரு சத்திரம் போல (இலக்கிய சத்திரம்) இருந்தது எனலாம். மலேசியா, இலங்கை போன்ற இடங்களிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமிழகம் வந்தால், சென்னையில், தீபம் அலுவலகத்திற்கு உரிமையுடன் வந்து தங்குவர். இதே போல், பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களிலிருந்தும் பல எழுத்தாளர் அன்பர்கள் வந்து தங்குவர். சிலர் வாரக்கணக்கில் தங்கி, தங்கள் கதைத் தொகுதிகளை அல்லது கவிதைத் தொகுதிகளை அச்சிட்டு, நூல் வடிவிலாக்கி எடுத்துச் செல்வர். சில தமிழ்ச் சங்க மலர்களும் இப்படி இங்கு அச்சாகும்.

 பம்பாய் தமிழ்ச்சங்கத்திற்காக ‘ஏடு’ என்றொரு இலக்கிய இதழ் ‘தீபம்’ காரியாலயத்தில் தயாரிக்கப்பட்டு, மாதம் தோறும் அனுப்பப்படும். திருமலையும் நானும் இதன் பொறுப்புகளைக் கவனிப்போம். நானும் ‘ஏடு’ இதழில் கதை, கவிதை எழுதியிருக்கிறேன்.

‘தீபம்’ அலுவலகத்தில் நான் சற்றேறக் குறைய பத்தாண்டுக் காலம் பணிபுரிந்தேன். ஆயினும் என் கதை ஒன்று கூட ‘தீபம்’ இதழில் இடம்பெற்றதில்லை. ஆரம்பத்தில் ஒரு சிறுகதை எழுதி, நா.பா.வின் மேஜை மீது வைத்தேன். அவர் மறுநாளே என்னைக் கூப்பிட்டு ‘இதுபோல் இனிக் கதை எதுவும் எழுதி வைக்காதே’ என்று கூறிவிட்டார். முதலில் என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. நாளடைவில் நான் மனச் சமாதானம் அடைந்ததுடன், நா.பா. நான் எதுவுமே எழுதக்கூடாது என்று கூறிவிடவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். 

தீபத்துக்கு வருகிற கதைகளை வரிசை எண்இட்டு நான்தான் கட்டிவைப்பேன். திருமலையும் கதைகளை வாசிப்பார். நா.பா. சில இலக்கியப் பிரமுகர்களிடம் கதைகளை அளித்துப் படிக்கச் சொல்வதுண்டு. யார் படித்தாலும் நாலுவரி சுருக்கம் எழுதி வைக்க வேண்டும். நானும் அப்படிச் செய்திருக்கிறேன். நா.பா. பிரசுரிக்க எண்ணி எடுத்து வைத்த கதையைப் பற்றிய விவரம் கேட்டால் நான் சொல்வேன். அவரும் படித்துப் பார்த்த பிறகே ‘கம்போஸ்’ என்று குறிப்பிட்டு அளிப்பார்.

பின்னால் மிகப் பிரபலமான பல முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் தீபத்திலிருந்து ‘பிரசுரிக்க இயலவில்லை’ என்ற குறிப்போடு திருப்பி அனுப்பப்பட்டதுண்டு. சிவசங்கரி, இந்துமதி போன்றவர்கள் ஆரம்ப நாட்களில் தீபத்தில் கதை வெளிவரவில்லையே என்று நா.பா.விடம் வந்து ஆதங்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். என் கதைகள் தீபத்தில் இடம்பெறாவிட்டாலும், ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும் வெளிவருகிற சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து, ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை தீபத்தில் வெளியாகும். அப்படிச் சில மாதங்களில் நான் மதிப்பீடு செய்து எழுதிய கட்டுரைகளை நா.பா.வெளியிட்டார். இதேபோல் தீபாவளி மலர்களில் வெளியான கதைகள் பற்றியும் நான் விமரிசனக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.

‘அஞ்சறைப்பெட்டி’, ‘ஆறங்கம்’ எனச் சில பகுதிகள் ‘தீபம்’ இதழில் உண்டு. இதில் ‘மினி’ பேட்டி மாதிரி சிலரைச் சந்தித்துப் பேசி, அவர்கள் படத்துடன் இலக்கியச் செய்திகளை வெளியிடுவதுண்டு. இப்பகுதிகளுக்காக நான் பலரைச் சந்தித்து ‘பேட்டி’ எடுத்து எழுதினேன். சினிமாவுக்கு தீபத்தில் இடமில்லை. ஆனால், திரைப்பிரபலங்கள் சிலரின் ‘இலக்கிய உணர்வு பற்றிய செய்திகளை இப்பகுதிகளில் இடம்பெறச் செய்வார் நா.பா. பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு இதன் மூலம் கிடைத்தது. எஸ்.ஸார். என்பவர் இதற்கான உதவிகளைச் செய்தார். கே.பாலசந்தர், ஏ.பி. நாகராஜன், வசனகர்த்தா பாலமுருகன், பஞ்சு அருணாசலம், ஏ.எஸ். பிரகாசம், சகஸ்ரநாமம், டி.கே. பகவதி, அவ்வை சண்முகம் போன்ற பிரபலங்கள் பலரை நான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த அனுபவங்களை இங்கு விரிவாக எழுதினால், பக்கம் வளர்ந்து விடும். நெஞ்சை விட்டு நீங்காத செய்திகள் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் சொல்வது அவசியமாகிறது. 

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வீட்டினுள் என்னை அழைத்து, அருகில் அமர வைத்துக் கொண்டு, தீபத்திற்காக அவர் எழுதிய மேட்டரைப் படித்துக் காட்டி ‘எப்படி இருக்கிறது’ என்று கேட்டார். என் மனம் முழுக்க, ‘இவர் காலில் விழுந்து நடிக்க வாய்ப்பு கேட்டோமா?’ என்பதிலேயே இருந்தது. 

சிறுவயதிலேயே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து சில மாதங்கள் நடித்த அனுபவமுள்ளவன் நான். அந்த ஆசையில்தான் சென்னைக்கே வந்திருந்தேன். ஆனால், அந்தக் கணத்தில் நா.பா. எப்பேர்ப்பட்ட மனிதர். அவர் பெயரிலுள்ள மரியாதையால் அல்லவா இவர் நம்மை மதித்துப் பேசுகிறார். நாம் நடிக்க வாய்ப்பு கேட்டால், அது அசட்டுத்தனமாகவல்லவா போய்விடும்’ என்று எண்ணி, என் மனக்கதவை இறுக்க மூடிக்கொண்டேன். பிறகு ‘அட்டா...நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு விட்டோமே’ என வருந்தியதுண்டு. ஒரு வேளை அன்று அது நிகழ்ந்திருந்தால் நான் ரஜினி, கமல் போன்ற நிலைகளை அடைந்திருப்பேனோ என்னவோ! (ஆசைதான்!)

No comments:

Post a Comment