Thursday 2 May 2013

நினைவின் நதிக்கரையில்:3-(கௌதம நீலாம்பரன்) பற்பல பணிகளில்


நினைவின் நதிக்கரையில்:3-(கௌதம நீலாம்பரன்)
பற்பல பணிகளில்

அன்று எனக்கு நா.பா. முதல் தரிசனம், வல்லிக் கண்ணன் மறு தரிசனம்!

நான். நா.பா.வின் நாவல்களை ரசித்த விவரங்களை மூச்சு விடாமல் விவரித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அது ஒரு ‘நயன தீட்சை’ போலிருந்தது!

நீங்கள் நா.பா.வின் ‘மணிபல்லவம்’ நாவலைப் படித்திருக்க வேண்டும். அதில் வரும் மகான்-நாங்கூர் அடிகள் பாத்திரம் என் மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. அந்த நாங்கூர் அடிகளாகவே நான் அப்போது நா.பா.வைப் பார்த்தேன்.

அவர், ‘என்ன வேலை பார்க்கிறாய்...?’ என்று கேட்டார். பதினாறு அல்லது பதினேழு வயதுப் பையன் நான். பசி, பட்டினியால் காய்ந்து போய்க் கிடந்தேன். அலைந்து திரிந்து களைத்துப் போயிருந்தேன். பார்த்த மாத்திரத்தில் என் மீது இரக்கம் சுரந்திருக்க வேண்டும் அந்தப் பெருந்தகைக்கு.

சொல்லிக் கொள்ளும்படியான ஒருவேலையுமில்லை நான் பார்த்தது.

கடற்கரையில் நண்பர்களுடன் போய், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்றிருக்கிறேன். கொத்தவால் சாவடியில் சைஸ் வாரியாகப் பழங்கள் பொறுக்கிப்போட்டு, கிடைத்த காசில் வயிற்றுப் பசி தணித்திருக்கிறேன். அன்னப்பா என்று ஒரு கன்னட பிராமணர், பிராட்வேயில் அவர் வீட்டு வாசலில் போய் நிறைய பசங்கள் நிற்பார்கள். கல்யாண சமையல் காண்ட்ராக்ட் எடுக்கும் அவர், முதல் நாள் லட்டு பிடிப்பதில் துவங்கி, மறுநாள் சப்ளை செய்வது வரைக்குமாக உதவியாட்கள் செலக்ட் செய்வார். அங்கு போய் நின்று நானும் பல நாட்கள் பல கல்யாண மண்டபங்களுக்குச் சென்று வந்ததுண்டு. இன்னும் பல வேலைகள் செய்திருக்கிறேன்.

சிறுவயதில் கோவில் பணிகளில் நான் ஈடுபட்டிருந்தபோது, எத்தனையோ பேர் என்னை வணங்கியிருக்கின்றனர். விருத்தாசலம் அருகில் மணவாள நல்லூர் என்னுமிடத்தில், காடு சூழந்த பகுதியில், கொளஞ்சியப்பர் கோயில் என்று ஒரு முருகன் கோவில் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் இங்கு கூட்டம் சொல்லி முடியாது. என் பெரிய அண்ணனோடு ஒத்தாசைக்கு நானும் செல்வேன். அங்கு வரும் ஒரு ஜமீன்தார் ‘அப்பா, நீ பாலமுருகன் போல் இருக்கிறாய்’ என்று கூறி, என் காலில் விழுந்து வணங்குவார். நிலை தாழ்ந்து, சென்னையில் வந்து நான் சுற்றிக் கொண்டிருந்தபோது, எத்தனையோ பேரிடம் அடி வாங்கியிருக்கிறேன். கேவலமான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருக்கிறேன்.

ஏற்றத் தாழ்வுகள்!

நா.பா.வின் கேள்விக்கு ஏதோ பதில் சொன்னேன். அவர், ‘நீ இங்கு வந்து ‘தீபம்’ அச்சகத்தில் வேலை செய்கிறாயா?’ என்று கேட்டார்.

உடனே சம்மதித்தேன்.

நா.பா. ‘தீபம்’ அலுவலக மேனேஜர் திருமலையை அழைத்து, என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச் சொன்னார்.
‘தீபம்’ எஸ். திருமலை


‘தீபம்’ இலக்கிய மாத இதழ் ஆபீஸில் அதிக ஊழியர்கள் யாருமில்லை. நா.பா.வின் அத்தை மகனான எஸ். திருமலை தான் அங்கு நிர்வாகி. அவர்தான் சகலமும். பேப்பர், அச்சுமை வாங்குவதில் துவங்கி, ‘தீபம்’ இதழை முழுவதும் உருவாக்கி முடிப்பது வரை எல்லாமே திருமலைதான் கவனித்துக் கொண்டார். அச்சுக் கோர்க்கும் இடம் அங்கேயே இருந்தது. ராஜதுரை என்கிற அன்பர் ஆலந்தூரிலிருந்து வருவார். பெரும்பாலும் அச்சுக் கோர்க்கும் வேலைகள் முழுவதும் அவரேதான் செய்வார். சில சமயங்களில் ஒத்தாசைக்கு ஒரு பையனோ அல்லது ஒரு பெண்ணோ இருப்பதுண்டு. ஆனால், அடிக்கடி அவர்கள் வேலையை விட்டு நின்று விடுவர். ராஜதுரை மட்டுமே அந்த அறையில் கருமமே கண்ணாக நின்று பணிபுரிவார்.

தீபம் அச்சகம் நாலுதெரு தள்ளி, ஒரு தனிக் கட்டிடத்தில் இருந்தது. அங்கு மோகன் என்று ஒரு மிஷின் மேன் இருந்தார். பாரங்கள் அச்சடிக்கும் டபுள்கிரவுன் சிலிண்டர் மிஷின் ஒன்றும், அட்டைப்படம் அச்சடிக்கும் டிரெடில் மிஷின் ஒன்றும் இருந்தன. மோகனுக்கு உதவியாக இரண்டொரு பையன்கள் மாறி மாறி இருந்து, வேலையை விட்டுப் போய்விட்டனர். அவருக்கு உதவியாக மேனேஜர் திருமலையே அடிக்கடி சென்று, தீபத்தின் பக்கங்கள் அச்சாகும் மிஷின் பின்னால் ஏறி அமர்ந்து, அச்சாகி வரும் தாள்களை சிதறாமல் அடுக்கும் வேலையைச் செய்வார். நான் போய்ச் சேர்ந்ததும் பெரும்பாலும் இந்த வேலையை நானே செய்தேன். இதன் விளைவாக நான் அந்த மிஷினை இயக்கும் வித்தையும் கற்றேன். பல சமயங்களில் மோகன் இந்த மிஷினைத் தயார் செய்து, என்னை இயக்கச் சொல்லிவிட்டு, தெருவில் போய் நின்று சிகரெட் பிடித்தபடி யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்.

டிரெடில் மிஷினில் தீபம் அட்டைப்படங்கள் ஒவ்வொரு கலராக அச்சாகும். கட் கலர் மெத்தேடில்தான் அட்டைகள் உருவாயின. அந்த மிஷினையும் மோகன் தயார் செய்த பிறகு நானே இயக்கப் பழகினேன். அச்சகத்தில் வேலையில்லாத நேரத்தில் நான் ‘தீபம்’ அலுவலகம் வந்து விடுவேன். தினமும் மூன்று முறை மவுண்ட் ரோடு போஸ்ட் ஆபீஸ் சென்று, தனி போஸ்ட் பாக்ஸிலிருந்து தபால்களை எடுத்து வரவேண்டும். டவுனுக்குச் சென்று திருமலை சொல்கிற கடைகளிலிருந்து பேப்பர், அச்சு மை வாங்கிவர வேண்டும். சில போதுகளில் திருவல்லிக்கேணியில் உள்ள கடைகளிலேயே வாங்கி விடுவோம். நிறைய விளம்பர நிறுவனங்களுக்குச் சென்று, தீபம் டேரீஃப் கொடுத்து, விளம்பரம் சேகரித்து வர வேண்டும்.
(வளரும்)

No comments:

Post a Comment