Sunday 12 May 2013

எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கிறார் நா.பா

நா.பா

இவர் நடிக்க வந்திருந்தால் எனக்கு ஒரு போட்டி

நா.பா.வின் எழுத்தில் மயங்கியவர்களும் உண்டு; அவருடைய தோற்றப் பொலிவில் மயங்கியவர்களும் உண்டு. கம்பீரமான தோற்றம். அவர் நடந்துசென்றால், ‘யாரோ நடிகர் மாதிரி இருக்கே... இவர் யாராக இருக்கும்’ என்று பலரும் காதுபடவே பேசுவர். இப்படிச்சிலர் என்னை அழைத்து விசாரித்ததுண்டு. நிமிர்ந்த நடை, யார்க்கும் அஞ்சாத தோற்றம். இத்தனைக்கும் ஒப்பனைகள் ஏதுமின்றி, எளிய கதராடைகளிலேயே அவர் வலம் வருவார்.

கட்சி மேடைகளாயினும் சரி, இலக்கிய மேடைகளாயினும் சரி, அவர் தங்களோடு வீற்றிருப்பதை அனைவரும் பெருமையாகவே எண்ணினர்.
ஜெமினி அதிபர் வாசன் ஒருமுறை நா.பா.வை ‘நீங்கள் என் படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா?’என்று கேட்டதாக ஒரு செய்தி நான் கேள்விப்பட்டதுண்டு.
நா.பா.ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஒரு இலக்கியச் சுற்றுப்பயணம் சென்று திரும்பிய சமயம், அவருக்கொரு பாராட்டுவிழா சென்னை, அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘எனக்கு நா.பா.வைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. இவர்மட்டும் நடிக்க வந்திருந்தால் எனக்கு ஒரு போட்டியாக இருந்திருப்பார். இவரளவு நான் அழகாக இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ வெற்றிச் சிகரங்களை எட்டியிருப்பேன். அப்பா... என்னவொரு கம்பீரம்!’ என மனம்விட்டுப் பாராட்டினார்.

இன்னும் எத்தனையோ பேர், ‘எம்.ஜி.ஆர். மாதிரி இருக்கிறார் நா.பா.’ என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கிறேன்.
ஒருமுறை சத்தியமூர்த்தி பவனில் நா.பா.வின் ‘சத்திய வெள்ளம்’ நாவல் வெளியீட்டு விழா நடந்தது. பெருந்தலைவர் காமராஜர் நூலை வெளியிட்டு, நா.பா.வை வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் பா.ராமச்சந்திரன் தலைமை ஏற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி பிளவுற்று, தமிழகத்தில் பழைய காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கியதாக நினைவு இதற்கு பா. ராமசந்திரன்தான் தலைவர். நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நானும் திருமலையும் ஓடிஓடி உழைத்தோம். பெருந்தலைவர் காமராஜர் மீது நா.பா.வுக்கு ஈடுபாடு அதிகம். அடிக்கடி அவரைச் சந்திக்கச் செல்வார். அவரும் நா.பா.வின் புதல்வன் நாராயணனை மடிமீது தூக்கி வைத்துக் கொஞ்சுவார்.

கட்சிக் கூட்டங்களுக்கு தேதி வாங்க, பயணச்சீட்டு வாங்கவெல்லாம் பெரும்பாலும் நான்தான் செல்வேன். இந்த வகையில் மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி, டி.என். அனந்தநாயகி, குமரி அனந்தன், தி.சு. கிள்ளிவளவன், பி.ஜி. கருத்திருமன் எனப் பலரை நான் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இவர்களிடம் சிறு சிறு பேட்டிகளும் எடுத்து நான் தீபத்தில் எழுதியதுண்டு.

No comments:

Post a Comment