Tuesday 7 May 2013

நினைவின் நதிக்கரையில்:6-நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம்




திருமலை

நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம்

((கௌதம நீலாம்பரன்)

இத்தனைக்கும் கே. பாலசந்தரின் நெருங்கிய நண்பரும், இணைத் தயாரிப்பாளர்களில் ஒருவருமான கலாகேந்திரா கோவிந்தராஜன் தீபம் அலுவலகத்திற்கே அடிக்கடி வருவார். அருகில் மவுண்ட்ரோடு போஸ்ட் ஆபிஸில்தான் வேலை பார்த்தார். நா.பா.வுக்காக நான் இவரைப் பலமுறை சந்தித்ததுண்டு.


நா.பா. அனுப்பி, நான் யாரையெல்லாம் சந்தித்தேனோ இச்சந்திப்புகள் ஒவ்வொன்றும் எனக்கு நெஞ்சார்ந்த பெருமிதங்களை ஏற்படுத்தியது. நிறைய எழுதலாம். தமிழ்ப்புத்தகாலயம் பெரியவர் கண.முத்தையா, கு.அழகிரிசாமி, ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, கு.ராஜவேலு, ந.சிதம்பர சுப்பிரமணியம் என்று எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறேன். நா.பா.வுடன் காரில் சிதம்பரம் சென்றபோது, முதுபெரும் எழுத்தாளர் மௌனியை அவருடைய இல்லம் சென்று சந்தித்தோம்.

நா.பா. கார் வாங்கிய புதிதில் ஒருமுறை அவருடன் திருப்பதி சென்றேன். நா.பா.வின் குழந்தைகளும் உடன் வந்தனர். எதிர்வீட்டு மணி என்ற நண்பர் காரை ஓட்டி வந்தார். மலை அடிவாரத்தில் நானும் நா.பாவும். இறங்கிக் கொண்டு, அவர்களை மேலே செல்லுமாறு கூறிவிட்டு, நடந்தே ஏழுமலைகளையும் கடந்தோம். மூன்று மணி நேரத்திற்கு மேலானது. நா.பா.நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு வந்தார். நான் கொஞ்சகாலம் தெய்வநம்பிக்கையே அற்றவன் போல இருந்தேன். 


ஒருமுறை திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன் பேட்டை சிவன் கோவிலருகே நடந்த போது, நா.பா. செருப்பைக் கழற்றிவிட்டு, கும்பிட்டார். நான் ஒதுங்கி நின்றிருந்தேன். ‘ஏனப்பா, நீ சுவாமி கும்பிடும் பழக்கம் இல்லையா?’ என்று நா.பா. கேட்டார். நான் கொஞ்சகாலமாகப் பலவிதக் குழப்பமான சிந்தனைகளோடு இருப்பதைக் கூறி, வைணவரான அவர் சிவன் கோவிலைக் கும்பிடுவது வியப்பாக இருப்பதாகச் சொன்னேன். நா.பா. ‘எனக்கு அது போன்ற பேதங்கள் கிடையாது. மேலும் இந்தக் கோவிலைப் பார்க்கும் போதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் அவர்களின் நினைவுதான் எழும். அவர் இங்குதான் குடியிருந்தார். தினமும் நாலு வீதிகளையும் சுற்றி வருவார். அதே போல் பார்த்தசாரதி ஆலயத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதியார் நினைவுதான் எழும்... ’ என்று கூறினார்.

திருப்பதி செல்லும்போது நா.பா.கூறினார்.... திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரும்’ என்பார்கள். உனக்கும் ஒரு திருப்பம் வரப்போகிறது பார்’ என்றார். நாங்கள் சுமார் ஏழுமணி நேரம் வரிசையில் காத்திருந்தே சுவாமி தரிசனம் செய்தோம். இத்தனைக்கும் நா.பா.விடம் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலம் அளித்த சிபாரிசுக் கடிதம் இருந்தது. ஆனால், அவர் அதைப் பயன்படுத்தவில்லை. முன்னிரவில் பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு, நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தோம்.

நா.பா. சொன்னது போல் ஒரு திருப்பம் அடுத்த சில மாதங்களில் வந்தது. அகிலன் ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக ‘ஞானபீடம்’ விருது பெற்றிருந்த நேரம். நா.பா.வீட்டில் அகிலனுக்கு விருந்தளிக்கப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நானும் திருமலையும் ஓடி ஓடிப் பரிமாறி, எல்லோரையும் உபசரித்தோம். ஓட்டலில் இருந்தெல்லாம் எதுவும் வரவழைக்கப்படவில்லை. நா.பா.வீட்டிலேயே அவரது துணைவியார் சுந்தரம் அம்மையார் இனிப்பு மற்றும் சித்ரான்ன வகைகளை அருமையாகத் தயார் செய்திருந்தார். திருமலையின் தங்கையும் (டீச்சர்) ஒத்தாசைகள் புரிந்தார். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே அமைந்திருந்தது. 

இதே போல் அகிலன் வீட்டிலும் ஒருமுறை விருந்து பரிமாறப்பட்டது. அது, அவர் கஸ்டியன் பீச் சாலையில் புதுவீடு கட்டிப் ‘புதுமனைப் புகு விழா’ நிகழ்த்திய போது.அகிலன் ஞானபீட விருது பெற்றமைக்காக அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஒரு பாராட்டுவிழா ஏற்பாடாயிற்று. இதற்காக நா.பா. காரில் புறப்பட்டார். வழியில் வந்தவாசி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் என்று சில ஊர்களில் பொதுக்கூட்டங்களில், நா.பா. பேசவேண்டியிருந்தது. அவர் அப்போது மொரார்ஜி தேசாயின் கட்சியில் இருந்ததாக நினைவு. நா.பா.வுடன் நானும் சென்றேன்

. கூட்டம் நடக்கிற ஊர்களில் நான் தனியே சென்று, தீபம் ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையைப் பார்ப்பேன். பரங்கிப்பேட்டையில் ஒரு நாளும் சிதம்பரத்தில் ஒரு நாளும் தங்கினோம். சிதம்பரம் கூட்டம் இரவு, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். பகலில் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நா.பா.வைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் நா.பா. என்னை ஓர் எழுத்தாளன் என்றே அறிமுகப்படுத்தினார். நான் ஒன்றிரண்டு கதைகள்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் நா.பா.அறிமுகம் செய்ததால், அவர்கள் என்னை மிகவும் மதித்தனர். விழா ஒன்றில் பேச அழைப்பதாகவும் கூறினர்.

சிதம்பரத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் காரில் திருச்சி புறப்பட்டோம். வழியில் கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு, நா.பா. இறங்கி ஒரு கோவிலைப் பார்த்துக் கொண்டு நின்றார். தூக்கக் கலக்கத்திலிருந்த என்னையும் எழுப்பி, கீழிறங்கச் சொன்னார். இறங்கி வந்து பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரம் காட்சியளிக்கிறது. எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. புத்தகங்களில், படத்தில் மட்டுமே பார்த்திருந்த, ஒரு புகழ் பெற்ற கோவிலின் அருகிலா நிற்கிறோம் என வியந்து போனேன். இன்னமும் அது கனவு மாதிரி இருக்கிறது. இன்னும் கூட நான் அந்த ஆலயத்தை உள்ளே சென்று தரிசிக்க வாய்ப்பு அமையவில்லை, அன்று நா.பா.வுடன், நள்ளிரவில் பார்த்ததோடு சரி.

நா.பா. அந்தக் கோவில்பற்றியும், சோழர்காலச் சிறப்புகள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். அடுத்து ஓரிடத்தில், ‘இது கீழப்பழுர். கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர்கள் வாழ்ந்த ஊர்’ என்று கூறினார். அதுபோன்ற இடங்களில் காரை நிறுத்தச் செய்து, ஒரு நிமிட நேரமாவது கீழிறங்கி நின்ற பின் புறப்படுவது நா.பா.வின் வழக்கமாய் இருந்தது. அவர் மனக்குதிரை அங்கெல்லாம் வரலாற்று உணர்வோடு சஞ்சரிக்கும் போல.

நான் அந்த ஊரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில்தான், கொள்ளிடக் கரையில் எங்கள் சொந்த ஊர் இருப்பதாகவும், அங்கேதான் சின்ன அண்ணன் வீட்டில் என் அம்மா வசிப்பதாகவும் கூறினேன். பார்த்துப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றேன். நா.பா. ‘நீ மதுரைக்கு வரவேண்டாம். திருச்சியில் இறங்கி, ஊருக்குப் போய் அம்மாவைப் பார். பிறகு சென்னைக்குத் திரும்பு’ என்று கூறிவிட்டார். செலவுக்குப் பணமும் தந்தார். திருச்சியில் இறங்கி, காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தபின், டோல்கேட்டில் பஸ் ஏறி, திருமானூர் சென்றேன். இது பெரிய திருப்பமாய் அமைந்தது
.
(வரும்)

No comments:

Post a Comment