Sunday 12 May 2013

மீண்டும் குறிஞ்சி பூத்தது

அகிலன்

அகிலன் ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக ‘ஞானபீடம்’ விருது பெற்றிருந்த நேரம். நா.பா.வீட்டில் அகிலனுக்கு விருந்தளிக்கப்பட்டது. நிறைய எழுத்தாளர்கள் வந்திருந்தனர். நானும் திருமலையும் ஓடி ஓடிப் பரிமாறி, எல்லோரையும் உபசரித்தோம். ஓட்டலில் இருந்தெல்லாம் எதுவும் வரவழைக்கப்படவில்லை. நா.பா.வீட்டிலேயே அவரது துணைவியார் சுந்தரம் அம்மையார் இனிப்பு மற்றும் சித்ரான்ன வகைகளை அருமையாகத் தயார் செய்திருந்தார். திருமலையின் தங்கையும் (டீச்சர்) ஒத்தாசைகள் புரிந்தார். அது ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே அமைந்திருந்தது.


இதே போல் அகிலன் வீட்டிலும் ஒருமுறை விருந்து பரிமாறப்பட்டது. அது, அவர் கஸ்டியன் பீச் சாலையில் புதுவீடு கட்டிப் ‘புதுமனைப் புகு விழா’ நிகழ்த்திய போது

அகிலன் ஞானபீட விருது பெற்றமைக்காக அவருக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஒரு பாராட்டுவிழா ஏற்பாடாயிற்று. இதற்காக நா.பா. காரில் புறப்பட்டார். வழியில் வந்தவாசி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம் என்று சில ஊர்களில் பொதுக்கூட்டங்களில், நா.பா. பேசவேண்டியிருந்தது. அவர் அப்போது மொரார்ஜி தேசாயின் கட்சியில் இருந்ததாக நினைவு. நா.பா.வுடன் நானும் சென்றேன். கூட்டம் நடக்கிற ஊர்களில் நான் தனியே சென்று, தீபம் ஏஜெண்டுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையைப் பார்ப்பேன்.

பரங்கிப்பேட்டையில் ஒரு நாளும் சிதம்பரத்தில் ஒரு நாளும் தங்கினோம். சிதம்பரம் கூட்டம் இரவு, டிராவலர்ஸ் பங்களாவில் தங்கியிருந்தோம். பகலில் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நா.பா.வைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் நா.பா. என்னை ஓர் எழுத்தாளன் என்றே அறிமுகப்படுத்தினார். நான் ஒன்றிரண்டு கதைகள்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் நா.பா.அறிமுகம் செய்ததால், அவர்கள் என்னை மிகவும் மதித்தனர். விழா ஒன்றில் பேச அழைப்பதாகவும் கூறினர்.

சிதம்பரத்திலிருந்து நள்ளிரவுக்கு மேல் காரில் திருச்சி புறப்பட்டோம். வழியில் கார் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டு, நா.பா. இறங்கி ஒரு கோவிலைப் பார்த்துக் கொண்டு நின்றார். தூக்கக் கலக்கத்திலிருந்த என்னையும் எழுப்பி, கீழிறங்கச் சொன்னார். இறங்கி வந்து பார்த்தால், நிலா வெளிச்சத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரம் காட்சியளிக்கிறது. எனக்கு ஆச்சர்யம் தாளவில்லை. புத்தகங்களில், படத்தில் மட்டுமே பார்த்திருந்த, ஒரு புகழ் பெற்ற கோவிலின் அருகிலா நிற்கிறோம் என வியந்து போனேன். இன்னமும் அது கனவு மாதிரி இருக்கிறது. இன்னும் கூட நான் அந்த ஆலயத்தை உள்ளே சென்று தரிசிக்க வாய்ப்பு அமையவில்லை, அன்று நா.பா.வுடன், நள்ளிரவில் பார்த்ததோடு சரி.

நா.பா. அந்தக் கோவில்பற்றியும், சோழர்காலச் சிறப்புகள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். அடுத்து ஓரிடத்தில், ‘இது கீழப்பழுர். கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் பழுவேட்டரையர்கள் வாழ்ந்த ஊர்’ என்று கூறினார். அதுபோன்ற இடங்களில் காரை நிறுத்தச் செய்து, ஒரு நிமிட நேரமாவது கீழிறங்கி நின்ற பின் புறப்படுவது நா.பா.வின் வழக்கமாய் இருந்தது. அவர் மனக்குதிரை அங்கெல்லாம் வரலாற்று உணர்வோடு சஞ்சரிக்கும் போல.

நான் அந்த ஊரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில்தான், கொள்ளிடக் கரையில் எங்கள் சொந்த ஊர் இருப்பதாகவும், அங்கேதான் சின்ன அண்ணன் வீட்டில் என் அம்மா வசிப்பதாகவும் கூறினேன். பார்த்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றேன். நா.பா. ‘நீ மதுரைக்கு வரவேண்டாம். திருச்சியில் இறங்கி, ஊருக்குப் போய் அம்மாவைப் பார். பிறகு சென்னைக்குத் திரும்பு’ என்று கூறிவிட்டார். செலவுக்குப் பணமும் தந்தார். திருச்சியில் இறங்கி, காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தபின், டோல்கேட்டில் பஸ் ஏறி, திருமானூர் சென்றேன். இது பெரிய திருப்பமாய் அமைந்தது.

அம்மா, அண்ணனைச் சந்தித்ததும் துண்டிக்கப்பட்டிருந்த குடும்ப உறவு மீண்டும் துளிர்விட்டது. மறுநாளே நான் சென்னை வந்துவிட்டேன். கடிதத் தொடர்புகள் வளர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே என் திருமணம் நடந்தேறியது. மனைவி அகிலாவின் ஊர் திருச்சி! சம்பளம் போதவில்லை. நூற்று ஐம்பது ரூபாய்க்கு மேல் சம்பளம் தருகிற நிலையில் ‘தீபம்’ இல்லை. ஒருவருடம் மிகவும் சிரமப்பட்டேன். ‘தீபம்’ இதழின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள். பக்கங்கள் குறைக்கப்பட்டன. அட்டையில் வண்ணப்படம் அச்சிட முடியாத நிலை. காகிதம், அச்சுமை, அலுவலக வாடகை எல்லாம் செலவுகள் கூடின. தீபத்தின் விற்பனை அதிகரிக்கவில்லை. சந்தாதாரர்கள் தீபத்திற்கு அதிகம். மெல்ல மெல்ல சந்தாக்களும் குறையத்துவங்கின. (படைப்புகள் எழுத விரும்புவோர் எண்ணிக்கை மட்டுமே கூடியது.)

நா.பா. நிறைய வெளியூர் சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவார். இந்த வருமானம்தான் அவருக்கு கைகொடுத்துக் கொண்டிருந்தது. தீபத்தின் தரத்தில் எந்த மாற்றமும் செய்வதை நா.பா. அனுமதிக்க மாட்டார். சினிமா விளம்பரங்கள் போட்டால் கூட, திருமலையை அழைத்துக் கண்டிப்பார். ‘கல்கி’ பத்திரிகையுடன் சில காலம் வருத்தம் கொண்டிருந்த நா.பா. ‘மீண்டும் குறிஞ்சி பூத்தது’ என்று ஒரு கட்டுரை எழுதினார். அதை நான்தான் கொண்டு போய், கல்கி ஆசிரியர் திரு.கி.ராஜேந்திரன் அவர்களிடம் கொடுத்து வந்தேன். இப்போது இருக்கும் வள்ளுவர் கோட்டம் அப்போது இல்லை. ஒரு பெரிய ஏரிப் பள்ளத்தில் இறங்கி, திரு. ராஜேந்திரன் அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். கட்டுரை ‘கல்கி’ இதழில் பிரசுரமாயிற்று. நா.பா. - கல்கி உறவில் மீண்டும் குறிஞ்சி பூத்தது.

தொடர்ந்து நா.பா. கல்கி இதழில் ‘தீரன்’ என்ற பெயரில் ‘தமிழ்நாட்டிலே’ எனும் தலைப்பில், வாரம் தோறும் அரசியல் விமரிசனங்களை எழுதினார். பரபரப்பான கட்டுரைகள், சில கட்டுரைகளால் கண்டனங்களுக்கும் ஆளானார். ‘சத்திய வெள்ளம்’ என்ற சமூகத் தொடர்கதை ஒன்றையும் கல்கியில் எழுதினார். இது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் நடந்த உதயகுமார் கொலை நிகழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக அரசியல் நெடியுடன் இருந்தது.

No comments:

Post a Comment