Thursday 9 May 2013

எங்கள் பாசறை கவிஞர் பொன்னடியானின் பாட்டுப் பாசறை.

கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்

சரித்திர நாவலாசிரியர் சிறுகதையாசிரியர் தமிழ்மாமணி திரு. கௌதம நீலாம்பரன் அவர்களைப் பற்றி

பெரிய பணக்காரர்கள், பிரபலமான அரசியல்வாதிகள், புகழ்வாய்ந்த கலைஞர்கள், பெரும்பதவி வகிக்கிறவர்களைத் தெரிந்து வைத்திருப்பதில் அல்லது அவர்களோடு பழகுவதில் கிடைக்கிற பெருமையும், பெருமிதமும் பெருந்திறன் வாய்க்கப்பெற்ற படைப்பாளர்களுடனான நட்பிலும், நெருக்கத்திலும் பெற முடியும். இன்னும் சொல்லப் போனால் அதிகமாகவே பெறுதல் கூடும் என்பதைப் பெற்றுணர்ந்து பெருமையுறுகிறவன் நான். மூத்த தலைமுறையாயினும் சரி இளைய தலைமுறையாயினும் சரி அல்லது சமகாலத்துப் படைப்பாளர்களாயினும் சரி அவரை எனக்குத் தெரியும், என்னை அவருக்குத் தெரியும் என்று ஒரு எளிமையான ரசிகனாகக்கூட மாறிப் பெருமகிழ்ச்சியடைவேன்.

அப்படி ஒரு பெருமைதான் கௌதம நீலாம்பரன் என்கிற புகழ்வாய்ந்த படைப்பாளருடன் எனக்கான தொடர்பும் தோழமையும். எனக்குப் பின்னால் இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் அவர் மணிவிழாக் கண்டிருக்கிறார். என்றாலும் நூறாண்டு காலச் சாதனைகளை எழுத்தில் நிகழ்த்தியிருக்கிற இமயமாகவே அவர் எனக்குக் காட்சியளிக்கிறார். அதற்கு எழுத்தை மட்டுமே அவர் நம்பியிருக்கிறார் என்பது மட்டும் காரணமல்ல;  எழுத்துலகமும் அவரை நம்பியிருப்பது கூடுதல் காரணம்.

நாங்கள் இருவருமே சமகாலத்தில்தான் எழுதத் தொடங்கினோம். எங்களுடைய பாசறை கவிஞர் பொன்னடியான் அவர்களுடைய பாட்டுப் பாசறை. எங்களைப் பட்டை தீட்டத் தொடங்கியவரே கவிஞர் பொன்னடியான் அவர்கள்தான். அவருடைய இல்லத்திலும்,  கடற்கரைக் கவியரங்குகளிலும்தான் நானும் நண்பர் கௌதம நீலாம்பரனும் அடிக்கடிச் சந்தித்துக் கொள்வோம்.

எப்போதும்போல அவர் இப்போதும் எளிமையாகத்தான் தோன்றுகிறார். என்றாலும் அப்போது அவரைக் கொஞ்சம் வசதியின்மை வறுத்து வைத்திருந்தது. அலட்டிக் கொள்ள மாட்டார். ஆழ்கடல் போல அமைதியாக இருப்பார். சென்னைக்கு வந்த புதிதில் அவர் அனுபவித்த துன்பங்கள்,  மேற் கொண்ட பணிகளால் நேர்ந்த வலிகள் சொல்லி மாளாது. ஆனாலும் ஒரு பிரகாசமான எதிர் காலத்துக்காகத் தன்னுள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளத் தவறவில்லை. வாழ்க்கைக்கான வசதிகளை அவர் அதிகமாகப் பெறாது போயினும் நல்ல வாழ்க்கையைப் பெற்றுள்ளார் என்பதை இன்று அவர் வாழும் நிலையான நல்ல வாழ்வு நமக்குப் புலப்படுத்துகிறது.

 ஸ்ரீ அரவிந்தர் அன்னை “நீங்கள் வேண்டிப் பெறவேண்டியது வாழ்க்கை தானே தவிர வாழ்க்கைக்கானவற்றை அல்ல” என்றது நினைவுக்கு வருகிறது. வாழ்வாங்கு வாழ்வதற்கும், வசதியான வாழ்க்கைக்கும் தொடர்பு கிடையாது. நண்பர் கௌதம நீலாம்பரன் நிறைவாக உணரும் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்.
தமிழில் சரித்திர நாவல்கள் எழுதுவோரின் எண்ணிக்கை எப்போதும் குறைவாக - மிகக் குறைவாக இருக்கும். இருக்கிற பத்து விரல்களே இவர்களை எண்ணிவிடப் போதுமானவை என்றுகூடக் கூறலாம். கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி. மணிசேகரன் போன்ற சரித்திர எழுத்துச் சான்றோர் வரிசையில் வைக்கத்தக்க அளவுக்கு நண்பர் கௌதம நீலாம்பரன் வளர்ந்திருக்கிறார் உயர்ந்திருக்கிறார் என்பதற்கு இத்துறையில் அவருக்கு ஈர்ப்பு,  ஆய்வு நோக்கு,  அபாரமான நினைவாற்றல், ஆழமான சரித்திர அறிவு, எழுத்தாற்றல் போன்றவை காரணம். 

சரித்திரத்தைப் போலவே சமூகக் கதைகளும் அவருக்குச் சிறப்பாக எழுத வருகிறது.‘சரித்திரமும் சமூகமும்’ அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளன. ‘சமூகமும் சரித்திரமும்’ என்ற இவரது நூல் வெளியீடு இணைந்த மணி விழாவில் நானும் கலந்து கொள்கிற பேறெனக்கு வாய்த்தது. விழாவில் பங்கேற்பதே பரிசு... கூடவே இந்த நூலும் பரிசாகக் கிடைத்ததில் கனமாவேன். இந்நூலின் பதிப்புரையில் பதிப்பித்த நண்பர் நிவேதிதா சுவாமிநாதன் அவர்கள்,  “உச்சரிக்கும் போதே ஒரு ராஜ கம்பீரத்தை உணர்த்துகிற கௌதம நீலாம்பரன் என்னும் பெயர் தமிழ் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானதுதான்” என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் சரியானது. ஏற்கத்தக்கது. உண்மையிலேயே என் நண்பர் கைலாசநாதனுக்கு கௌதம நீலாம்பரன் என்ற புனைபெயர் ஒரு ராஜ கம்பீரத்தை அளித்துள்ளது.

நண்பர் கௌதம நீலாம்பரனின் பெயர் மட்டுமல்ல. பெயருக்குரிய அவரும் கர்வமறியாத கம்பீரமானவர் (கர்வத்திற்கும் கம்பீரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவென்பது வேறு விஷயம்) சரித்திரமும் சமூகமும் கதை கூறலின் இருவேறு பெரும் பிரிவுகள். இரட்டைத் தண்டவாளங்கள். இரண்டிலும் தடம் பதிப்பதும்,  நடம் புரிவதும் இலகுவான வேலையல்ல;  ஆனால் இவருக்கு எளியது என்றும் அவற்றும் எந்த எழுத்தும் இனியது என்றும் வரலாற்றுப் புகழை வசமாக்கிக் கொண்டுள்ளார்.

எழுத்தில் இவருக்கான பயிற்சி பல்வேறு தமிழ் இதழ்களில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து மட்டுமல்ல;  பயின்றது புகழ்மிக்க எழுத்துச் சிற்பிகளிடமிருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘தீபம்’ பார்த்தசாரதி, ‘இதயம் பேசுகிறது’ ‘ஞானபூமி’ மணியன்,  ‘ஆனந்த விகடன்’  பாலசுப்பிரமணியன்,  ‘குங்குமம்’,  ‘சாவி’ பராசக்தி என்ற பட்டியலே போதும் இவர் பயின்றது பிரமாண்டமான புகழ் வாய்ந்த எழுத்துப் பல்கலைக்கழகங்களில் என்பதற்கான சான்று கூற. இப்போது ‘குங்குமச் சிமிழ்’ மாதம் இரு முறை இதழின் பொறுப்பாசிரியாகப் பணியாற்றுகிறார்.

எழுத்தாளனாகும் எண்ணமே இவருக்குத் தொடக்கத்தில் இல்லையாம். சென்னைக்கு வந்தது ஒரு சினிமா நடிகனாகத்தானாம். ஆகியிருக்கலாம். அழகாகவும் இருக்கிறார். ‘இதயநதி’ என்ற இவரது நூல் கிட்டத்தட்ட ஒரு சுயசரிதை. அதில் இந்த தகவல் அறியத் தரப்பட்டுள்ளது. குறைந்தது பாடலாசிரியராகவாவது முயன்ற இவரைக் கதாசிரியராக்கியவர் தங்கவேலு நாயக்கர் என்பவர்தானாம். கிராமத்திலிருந்தபோது தங்கவேலு நாயக்கர் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுகிற பாணி, சுவையாகவும், கம்பீரமாகவும் இருக்குமாம்.

சென்னையில் கௌதம நீலாம்பரன், தீபம் பார்த்தசாரதியுடன் பணியாற்றிய நாள்களில் இரவில் தன்னுடைய அறையில் கதை எழுதிப் பார்க்கும் முயற்சிக்கு இக்கதை கேட்ட அனுபவங்கள் உதவியுள்ளன. எல்லா எழுத்தாளர்களுக்கும் நிகழ்ந்தது போலவே பத்திரிகைகளுக்கு எழுதுவதும் அவை பிரசுரமாகாமல் திரும்புவதுமாக ஏமாற்றங்களே தொடக்கமாகி இன்று எழுத்தில் இமயம் காணுமளவு பொறுமையாகப் பயிற்சியும்,  பெருமைகளும் தொடரப் பெற்றுள்ளார்.

கௌதம நீலாம்பரன் அவர்களின் முதற் சிறுகதை என்பதைவிட முதலில் வெளியான சிறுகதையாக  ‘புத்தரின் புன்னகை’ சுதேசமித்திரன் நாளிதழின் வார இதழில் 1970ல் வெளியானது. 

இரண்டாவது சிறுகதை ‘கீத வெள்ளம்’ அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதை வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்களின் ஆசியுடன் கலைமகள் இதழில் வெளியானது. பிறகென்ன உற்சாகம் பெற்றிருப்பார். நிறைய எழுதத் தொடங்கி பிரபலமான வார, மாத இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி என்று சிறுகதைகள், தொடர்கதைகள், வானொலி நாடகங்கள் பல எழுதிப் புகழ்வாய்ந்த பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகி விட்டார். இப்போதும் அவரது எழுத்துப் பணி குன்றாத திறத்தோடும், குறையாத ஆர்வத்தோடும் தொடர்ந்தும், துலங்கியும் நாடறிந்த நல்ல தமிழ் எழுத்தாளராகப் பொலிகிறார். 

கௌதம நீலாம்பரன் நிறைய எழுதினாலும் பேசுவது மிகவும் குறைவு. அதிர்ந்து பேசாத அமைதியான மனிதர்.கௌதம நீலாம்பரன் சிறந்த கவிஞரும் கூட. படைப்பாளர்கள் உரைநடையாளர்களாக மட்டுமல்ல கவிஞர்களாக இருப்பதிலும் வியப்பில்லை. கவிஞர்கள் பிறவகை எழுத்தாற்றலிலும் பொலிவதுண்டு. எங்கள் குருநாதர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் அவர்களே கவிதை எழுதித்தான் களம் இறங்கியிருக்கிறார்.

கௌதம நீலாம்பரனின் ‘அம்பரம்’ கவிதை நூல் படித்திருக்கிறேன். எல்லாமும் புதுக்கவிதைகள். அன்பைப் பற்றி எண்ணற்ற கவிதைகள் படித்திருக்கிறோம். மிகச் சுறுக்கமாக நறுக்குத் தெரித்தாற்போல் “விதைக்கும் போதே விளைச்சலைக் காணும் ஓர் அற்புத விவசாயம் அன்பு செய்வது” போன்ற கௌதம நீலாம்பரனின் கவிதை வரிகள் அவரை ஒரு கவிஞராகவும் கருதும் கனத்தைத் தந்துள்ளது.

அண்மையில் கௌதம நீலாம்பரன் அவர்களின் மணிவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்கிற பேற்றுடன் அறுபதாண்டு வாழ்ந்த நிறைவிலும் நாற்பதாண்டு எழுதிச் சிறந்த பெருமையிலும் செம்மாந்திருந்த அந்த நண்பரின் சிறந்த அவரது சிறுகதைகளின் தொகுப்பும் (சரித்திரமும் சமூகமும்) பரிசாகப் பெற்றேன். 109 மணியான சிறுகதைகள். ஆற அமர்ந்து படிக்க வேண்டும். சிறுகதைக் கலையை ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்ற நிறைவைப் படித்தால் பெறலாம். மணிவிழாவில் கலந்து கொண்ட பெருமக்களின் பட்டியலே தேரந்தெடுக்கப்பட்ட சிறந்த மனிதர்களின் திருக்கூட்டமாயிருந்தது. ஒவ்வொருவரும் எழுத்துலகில் இவரை வரவேற்று வாழ்த்தியவர்கள்.

 கலைமாமணி விக்கிரமன், கவிஞர் பொன்னடியான், பேராசிரியர் ராஜா, பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன், நல்ல நண்பர்களான நான், வாணியம்பாடி டாக்டர் அப்துல் கவுசர், பேராசிரியர் இராம. குருநாதன், நூலக மேனாள் இயக்குநர் திரு. பி. ஆவுடையப்பன், இவர்களுக்கெல்லாம் சிகரமாக அரசியலுக்கு அப்பால் அருந்தமிழ் வளர்க்கும் அமைப்பான ‘பொற்றாமரை’ நிறுவனர் திரு. இல. கணேசன். அன்று விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கௌதம நீலாம்பரனை மதிப்பிட்டாலும் பெருவாரியான வாக்குகள் ‘சிறந்த மனிதர்’ என்கிற இவரது கூடுதல் தகுதிக்கே கொடுக்கப்பட்டன. சிறந்த எழுத்தாளர் சிறந்த மனிதராகவும் இருப்பது கௌதம நீலாம்பரனின் கனம், கௌரவம் எல்லாமும். இவையே இவர் என் இதயத்தில் பதிந்ததற்கான காரணங்களாகும்.

ஏராளமான விருதுகள், பட்டங்கள் பெற்றிருக்கிறார். சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘தமிழ் வாகைச் செம்மல்’ விருதளித்துச் சிறப்பித்துள்ளது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த பேராசிரியர் கல்கி இலக்கிய விருது, மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை 2008ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர் விருதுடன் வழங்கிய பொற்கிழி ரூ.50,000/-  ஆகியன குறிப்பிடத்தக்க விருதுகளாகும். இவரது வரலாற்றுச் சிறுகதைத் தொகுதியான ‘ராஜபீட’த்துக்கு கோவை வில்லி தெய்வசிகாமணி சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் கவிதை உறவும் யுனிவர்சல் அகடமியும் இணைந்து காமராசர் அரங்கில் என் தலைமையில் நடத்திய மாபெரும் கூட்டத்தில் இவருக்குத் ‘தமிழ் மாமணி’ விருது கலைமாமணி டாக்டர் வாசவன் அவர்களால் வழங்கப்பட்டது.

தம் எழுத்துக்கான அங்கீகாரம் மட்டுமே தமக்கு வேண்டுமேயன்றி எவரிடத்திலும் எதையும் வேண்டிப் பெறாத கம்பீரத்தை கௌதம நீலாம்பரன் அவர்களிடம் நான் கண்டு பெருமைப்படுவதுண்டு. இவரது மணி விழாவில் கலந்து கொண்ட வாணியம்பாடி காசினி டாக்டர் அக்பர் கவுசர் ஒரு செய்தியைப் பெருமையோடு குறிப்பிட்டார். ஒருமுறை அவர் கௌதம நீலாம்பரன் அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார்.

\திருவல்லிக்கேணி ஜாம்பஜார் அருகே ஒரு ஒண்டிக் குடித்தனம். வசதிகள் குறைந்த வாழ்க்கை. அதிகப் பரப்பளவில்லாத வீடு. நண்பருக்கு அவர் ஒரு கணிசமான தொகையை உதவியாகக் கொடுத்த போது நன்றியுரைத்துவிட்டு அதை வாங்க மறுத்துவிட்டார் கௌதம நீலாம்பரன். வருகிற ஸ்ரீதேவியை விரட்டக்கூடாதுதான். ஆனால் அவள் காரணமின்றி வரக்கூடாதென்கிற கவனம் கம்பீரமானவர்களுக்கு மட்டுமே இருக்கும். எங்கும் போய் நின்று நேரம் போக்காமலும், எவரிடத்தும் சென்று சோரம் போகாமலும் வாழ இன்று இவரைப்போல் வெகு சிலரால் மட்டுமே முடியும்.

பெரிய தொடர்புகளெல்லாம் உண்டு. ஆனால் பெருமையடித்துக் கொள்ளமாட்டார். இதமாக இயல்பாக இருத்தல் இவரது போற்றுதற்குரிய பண்புகளில் ஒன்றாகும். பழகுதற்கினியவர். நிரம்பப் படிப்பது இவரது நிறைவான படைப்பிலக்கிய ஆற்றலுக்கு உதவுகிறது. சரித்திர நாவல்கள் எழுதுதற்குரிய தலையாய எதிர்பார்ப்பிது. சரித்திரம் தொடர்பாக யாருக்கும் எந்தத் தகவலையும் பெற்றுத் தருவதைப் பெருமையாக கருதி உதவுகிறார்.

அமைதியான குடும்பம். ஒரு எழுத்தாளரின் மனைவிக்கு அசாத்திய பொறுமை வேண்டும். போராடி அவன் வெற்றியைப் பெறுகிறவரை கூடவே பொறுமையாக போராட வேண்டும். இன்னமும் போராடினாலும் இதயத்துள் தம் கணவரைப் பற்றிய பெருமிதம் கொள்ளும் பெண்மணியாகத் திகழ்கிறார் திருமதி அகிலா அவர்கள். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரே மகன் விஜயசங்கர். காக்னிசன்ட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவர்தம் திருமணம் நாகர்கோவிலில் நடந்தபோது கலந்துகொண்டு வாழ்த்தினேன். பேரக் குழந்தை கண்ட கௌதம நீலாம்பரன் அவர்களின் மணிவிழாவின்போது எல்லோரையும் மீண்டும் மகிழ்ச்சியான சூழலில் சந்திக்கப் பெருமையாக இருந்தது.

விழாவில் கௌதம நீலாம்பரன் தன்னுடைய மூத்த சகோதரர் திருமிகு சட்டநாத குருக்கள் அவர்களை மேடைக்கு அழைத்து தம்பதி சமேதராய் அவருக்கு மரியாதை செய்தது எல்லோரையும் நெகிழ்வித்தது. மேடைக்கு அண்ணனையும் அண்ணியையும் அழைக்கும் முன் அவர்கள் தம்மைப் பிள்ளையாக வளர்த்த பாசத்தை விவரித்திருந்தது வந்திருந்தோரின் கண்களைப் பணிக்கச் செய்தது.

No comments:

Post a Comment