Monday, 13 May 2013

சீரழிக்கும் “சீரியல்கள்”


சீரழிக்கும் “சீரியல்கள்” - 

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது,
 கொலைசெய்யத் திட்டமிடுவது, 
அப்பாவியைச் சிறையில் தள்ளுவது, 
வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைப்பது, 
கருவே உருவாகாமல் தடுத்துவிடுவது, 
பிறந்த குழந்தையைக் கடத்துவது,
 பச்சைக் குழந்தையை மாற்றுவது, 
மாமியாருக்கு மருமகள் விஷம் வைப்பது,
 மருமகளுக்கு மாமியார் விஷம் வைப்பது, 
கணவனையே கொல்ல சதித் திட்டம் தீட்டுவது, 
கணவருக்கு எதிராக எதிராளியுடன் சேர்ந்து சதி செய்வது, 
திருமணம் ஆன தம்பதியருக்கு முதலிரவுச் சடங்குகள் நடக்காமல் தடங்கல் செய்வது, 
போலியாக மணப்பெண்ணை உருவாக்குவது, 
குண்டர்களின் உதவியைக் குடும்பப் பெண்கள் நாடுவது,
காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைப்பது, 
சூனியக்காரியின் உதவியால் அச்சுறுத்துவது,
சாமியார்களின் உதவியை நாடி குடும்பங்களைக் கலைப்பது, கணவனைவிட்டுவிட்டு இன்னொருவனை நாடுவது 
சொந்த மனைவியை விட்டுவிட்டு மாற்றான் மனைவி தேடுவது ...

இதெல்லாம் என்ன குற்றங்களின் பட்டியலா என்று யோசிக்கிறீர்களா?

இவை தான் நம் அருமைத்தாய் மார்களும் இன்றைய பெண்குலமும் முற்பகலி லும் மாலையிலும் இரவு வரையும் பார்க்கும் டிவி  சீரியல்களின் கதைப்போக்கு.

எப்படி எப்படி எல்லாம் மேற்கண்ட ஐட்டங்களில் ஒன்றை  மிகவும் சுவையோடு திட்டம் தீட்டி அரங்கேற்றி அடுத்து நடக்கப்  போவதற்கு ஆவலோடு காத்திருக்கச் செய்வது .. இப்படிபோகும் சீரியல்கள் குற்றம் செய்யத் தெரியாதவர்களுக்கு பாடம் நடத்திப்பக்குவமான முறையில் குற்றம்  செய்வதைக் கற்றுத்தருவதுதான் இன்றைய சீரியல்கள்.
இதெல்லாம் ஆண்கள் செய்வது பழைய பேஷன் 

இந்த தீங்குகளையெல்லாம் கதைகளில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகளும் மகளிர் நலம்நாடும் ஆர்வலர்களும், பெண்ணுரிமைக்காகவே கொடிபிடிக்கும் இயக்கங்களும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சூடு சொரணையில்லாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் வேதனையை என்னவென்பது?

இல்லத்தரசிகள், "ஹோம்-மேக்கர்'கள், "ஹௌஸ் -ஒய்ஃப்' என்றெல்லாம் பட்டம் தாங்கி பெருமைப்படும் பெண்கள் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர்களைப் புறக்கணித்தால் (அது நடக்கிற காரியமா?) நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள, தரமான கதைகளைத் தயாரிப்பார்கள்; இல்லையென்றால் எல்லோருடைய மனங்களிலும் விஷத்தைத் தூவும் இந்த சாக்கடைகளே தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஓடும்.

உருப்படுமா நாடு?

ஆண்களைக் கெடுக்க மதுக்கடைகளும் பெண்களைக் கெடுக்க இந்த நெடுந்தொடர்களும் தமிழ்நாட்டைப் பிடித்த இரட்டைச் சாபங்களாகத் தொடர்கின்றன.

இளம்பெண்கள், கருவுற்ற பெண்கள், குடும்பப் பெண்கள் தொடர்களைப் பார்க்க வேண்டாம், தவிர்த்துவிடுங்கள் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர் சமீபத்தில் உருக்கமாக வேண்டுகோள்கூட விடுத்தார்.

மத்திய, மாநில அரசுகள் இந்தத் தொடர்களையெல்லாம் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்காது.கேட்டால் கருத்து சுதந்திரம் , தலையிடக்கூடாது என்பார்கள்.

மிக முக்கியமான காரணம்  அது மட்டுமா?

தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகள்தான் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தச் சமுதாயம் உருப்பட்டுவிடுவதை  விட கெட்டுப்போவதில்தான் ஆவல். 

உருப்பட்டால் ஒரு சிங்கிள் பைசா கிடைக்காது.அவர்கள் குடும்பத்துக்கு "நிதி' வேண்டுமே! யார் கொடுப்பது? இருக்கவே இருக்கிறது மக்களின் மதி. மகளிருக்கும்  எப்படி ஐயா பொழுது போகும்?
தங்களுடைய "மதி'யை அடகுவைத்து இவற்றைத் தொடர்ந்து பார்ப்பதையே அவர்கள் விரும்புவார்கள். ஊக்குவிப்பார்கள்.
உற்சாகமூட்டி வளர்ப்பார்கள்.

நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

நமக்குத்தான் விழிப்பு வேண்டும்.

எப்படி வரும் விழிப்பு என்கிறீர்களா?

யோசிக்க வேண்டிய கேள்வி.

நன்றி:ஜி.கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம்

No comments:

Post a Comment