இப்ப என்ன மாறிப் போச்சு?
[ ஒரு சிறுகதை ]
“உஸ்ஸ்... என்ன வெய்யில், என்ன வெய்யில்? எப்படி வெக்கை கொளுத்தறது? இந்த மனுஷனுக்கு இந்த வயசிலே வேகாத வெய்யில்ல என்ன அப்படி வாக்கிங் வேண்டிக் கிடக்கு? எம்பத்திமூணு வயசாயிடும், இன்னும் நாலு மாசத்துலே! மனசில இன்னும் இருபத்திமூணுன்னு நினைப்பு! வேகுவேகுன்னு அதே நடை! சின்னப் பசங்ககூட இவர்கூட சேர்ந்து நடக்க முடியறதில்லே, ஓட வேண்டியிருக்கு! கிருஷ்ணா, ராமா, கோவிந்தான்னு வீட்டோட கெடக்காம இப்படி வெளிலே வெளிலே போயிட்டா, நான்னா வயத்திலே புளியைக் கட்டிண்டு இருக்க வேண்டியிருக்கு? மயிலாப்பூர் முந்தி மாதிரியா இருக்கு? காரும், ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும், ஆட்டோவும், லாரியுமான்னா நெளியறது? தடுமாறிக் கீழே விழுந்துட்டா கிழட்டுப் பிராணன்னா போயி வைக்கும்? நான் சுமங்கிலியா எப்படிப் போய்ச் சேர்றது?” என்று வாய்விட்டு முணுமுணுத்துக்கொண்டே, வெளியில் போன தன் கணவர் இன்னும் திரும்ப வரக் கொணோமே என்று ஆதங்கத்துடன் வாயிலில் கம்பிக் கதவில் நிழலாடுகிறதா என்று பார்த்தாள் பார்வதி.
பார்வதியின் கணவர் சிவராமனுக்கு எண்பது வயதிற்கு மேலாகியும் நல்ல திடகாத்திரமான உடம்பு. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் யோகாசனம் செய்து குளித்துவிட்டு, சந்தியாவந்தனம் செய்வார். எதோ லேசாக டிபன் சாப்பிட்டு விட்டு ‘வாக்கிங்’ என்று வேகமாகக் கடற்கரையில் நடந்துவிட்டு வருவார். மதிய உணவு சாப்பிட்டு, சற்று நேரம் கண் அயர்ந்து எழுந்திருந்து, மாலையில் கோவிலுக்குச் சென்று, மூன்று தரம் பிரகாரத்தைச் சுற்றிவந்து, வீட்டுக்குத் திரும்பி வருவார். இரவு இரண்டு பழத்தையும், ஒரு டம்ளர் பாலையும் குடித்து விட்டு இரவு எட்டரை மணிக்குத் தூங்கச் சென்று விடுவார். டிவி, சினிமா, வம்புப் பேச்சு எதுவும் கிடையாது. பார்வதியாக ஏதாவது பேசினால்தான் பதில் உண்டு. இல்லாவிட்டால் மௌனம்தான்.
சிவராமன் அறுபது வயதானவருக்கு ஈடான ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று பார்வதிக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவர் தனியாக வெளியில் சென்றால் அவள் மனது படபடவென்று அடித்துக்கொள்ளத்தான் செய்யும். இந்த வயதிலும் மனுஷன் கிழங்கு மாதிரி இருக்கிறாரே என்று ஊர்க்கண் பட்டுவிடக் கூடாதே, ஒன்று கிடக்க ஒன்று நடந்துவிடக் கூடாதே என்று கற்பகாம்பாளை வேண்டிக்கொள்வாள்.
“அம்மா! கடைசிவரை அவரை நன்னா, திடகாத்திரமா வச்சுடும்மா. அவரோட சேர்ந்து என் உசிரும் போயிடனும்!”
வீடுகளெல்லாம் பிளாட்டாக மாறிவரும் இக்காலத்தில் விடாப்பிடியாக தனி வீடாக இருந்துவரும் சிலவற்றில் அவர்களின் வீடும் ஒன்று. தவிரவும் பதினான்கு அடி அகலத்தில் இருக்கும் அந்த வீட்டை வாங்கி இடித்து பிளாட்டாக மாற்றுவது மிகவும் கஷ்டமான வேலை என்றுதானோ என்னவோ விட்டு விட்டார்கள். இருபுறத்திலும் இருக்கும் வீடுகள் அவர்களது தூரத்து உறவினர்களதுதான். இவர்களின் வீடு விற்காத பட்சத்தில் அவர்கள் மட்டும் தங்கள் பதினான்கு அடி அகலமுள்ள வீட்டை விற்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தவிரவும், அவற்றின் சொந்தக்காரர்கள் வெளிநாட்டிற்கு - வெளிநாடென்ன வெளிநாடு - அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் குடிபெயர்ந்து, வீடுகளை வாடகைக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள்.
உறவினர்களுக்கு உதவி செய்வோமே என்று சிவராமன் பொறுப்புடன் வாடகையை வாங்கி வங்கியில் போட்டுவிடுவதும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இந்தியா வந்துபோனால் தங்குவதற்காக அடையார், பெசன்ட்நகர் என்று ஏசியுள்ள பிளாட் வாங்கி வைத்திருந்தார்கள்.
...நான்கு பெண்களுக்குப் பின் கடைக்குட்டியாக சிவராமன் 1924ல் பிறந்ததே இந்த வீட்டில்தான். குடும்பப் பெயரை நீடிக்க ஒரு பிள்ளை பிறந்ததில் சாமா சாஸ்திரி தம்பதிகளுக்கு ஒரே பெருமை.
தன்னைப் போல உபாத்தியாயம் செய்து கஷ்டப்பட வேண்டாம், நாலு இங்கிலீஷ் எழுத்துகளை கற்றுக்கொண்டு, ஒரு சர்க்கார் உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டால், அரை அணாவுக்கும், ஒரு அணாவுக்கும் மற்றவர் கையை எதிர்பார்க்காமல், முதல் தேதி வந்ததும் டாண், டாண் என்று சம்பளம் வாங்கி செலவு செய்வான், வயசு காலத்தில் அக்கடா என்று பிள்ளையின் நிழலில் கடைசிக் காலத்தைக் கழித்துவிடலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டு, தன் அம்மாவின் திட்டல்களையும் பொருட்படுத்தாமல் சிவராமனை சர்க்கார் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார் சாமா சாஸ்திரி.
“பிராமணனாகப் பிறந்தவன், அதுவும் இந்தக் குடும்பத்துக்கு ஒரே வாரிசு, வேதம் கத்துண்டு, பரம்பரை உபாத்தியாயத்தைச் செஞ்சு வச்சு, எல்லோரும், நன்னா க்ஷேமமா இருக்கணும்னு ஈஸ்வரனை வேண்டிண்டா, அந்த ஈஸ்வரன் நம்மைக் கவனிச்சுக்க மாட்டாரா? ஈஸ்வர கடாட்சத்திலேதானே உங்க அப்பா இந்த வீட்டை வாங்கினார்?
“உனக்குத்தான் ஈஸ்வரன் மேலே நம்பிக்கையே இல்லாம போச்சு! கல்லுக்குள்ளே இருக்கற தேரைக்கும் படி அளக்கற அந்த பரமேஸ்வரன் நமக்கும் படி அளப்பார்ங்கற சரணாகதி பாவம் உனக்கு ஏன் இல்லாம போயிடுத்து? உன் அப்பா பேர் விளங்கப் பொறந்தவனை வேதமும், சாஸ்திரமும் படிக்கவொட்டாம, ஏதோ தஸ்,புஸ்னு மிலேச்ச பாஷை சொல்லித்தர பாடசாலைலே சேக்கப் போறேன்கறியே, இது அந்த ஈஸ்வரனுக்கே அடுக்காதுடா!” என்று பழைமையில் ஊறிப்போன தன் தாய் பிலாற்றியதையும் சாமா சாஸ்திரி காதில் போட்டுக்கொள்ளவில்லை.
சிவராமன் பகலில் ஏபிசிடி படித்துவிட்டு வந்தால், மாலையில் ருத்ரம், சமகம், தேமாரம், திருவாசகம், இன்னும் வைதிக விஷயங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார் சாமா சாஸ்திரி. பதினேழு வயதானதும், ஆறு வயதான (சாரதா சட்டம் வரவில்லை, வந்தாலும் அதைச் சட்டை செய்யக்கூடிய ஆளுமில்லை சாமா சாஸ்திரி) தன் தங்கை பெண் பார்வதியை சிவராமனுக்குத் திருமணம் முடித்து வைத்தார்.
நிறைய மதிப்பெண்கள் பெற்ற மகன் கல்லூரி செல்ல அனுமதி கேட்டபோது - காலணாகூடச் செலவில்லாமால் படிக்க உதவிப்பணம் கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லி அனுமதி கேட்டபோது - பூரித்துப்போனார். தன் கனவு நனவாகும் நாள் வந்துவிட்டது என்று புளகாங்கிதம் அடைந்தார்.
சாமா சாஸ்திரியின் அம்மாதான் கொஞ்சம்கூட மகிழ்ச்சி அடையவே இல்லை.
“என்னடா, படிப்பு, படிப்புன்னு எத்தனை வருஷம்தாண்டா அலையறது? இவனுக்கும் வேலைக்குப் பொய் நாலு காசு சம்பாதிச்சுண்டு வர்ற வயசாகலையா? கால் கட்டு வேற போட்டாச்சு. எத்தனை நாள்தான் நீயும் தர்ப்பைக் கட்டைத் தூக்கிண்டு, ரெண்டணாவுக்கும், நாலணாவுக்கும் நாயாய் அலஞ்சிண்டிருப்பே? நீ இப்பிடி இருந்தா அவனுக்கு எப்பத்தான் குடும்பக் பொறுப்பு வரும்?” வழக்கமான பாட்டைத்தான் தன் தாய் பாடுகிறாள் என்று அவர் சட்டை செய்யவில்லை...
வாயிலில் நிழலாடவே பார்வதியின் பழங்கால நிகழ்சிகளின் சிந்தனை கலைந்தது. தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தாள். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
“அப்பாடா! இப்பவாவது மனுஷன் திரும்பினாரே!” என்று படுத்திருந்தவள் பெஞ்சிலிருந்து எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தாள். இருபத்திமூன்றிலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கக்கூடிய ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். நல்ல களையான புன்னகை ததும்பும் முகம், கனிவான பார்வை, நல்ல உயரம், வெளிர் நீலச் சட்டையும், வெள்ளை வேஷ்டியும் உடுத்தி இருந்தான். கையில் சிறிய எர்பாக். பார்வதிக்கு சாட்சாத் முருகப் பெருமானே வீட்டுக் கதவைத் தட்டியது போன்ற ஒரு பிரமை. கண்களை இடுக்கிக்கொண்டு, புருவத்தின்மீது கையை வைத்துக்கொண்டு, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.
“பாட்டி, இது சிவராமத் தாத்தா வீடுதானே?” என்று அதே கனிவான புன்னகையுடன் கேட்டான் அந்த இளைஞன்.
“யார் நம்மை பாட்டி, தாத்தா உறவு சொல்லி விசாரிக்கிறார்கள்?” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே, “ஆமாம்ப்பா! இது அவராம்தான். நீ யாருப்பா? எங்கேந்து அவரைத் தேடிண்டு வரே?” என்று கதவைத் திறக்காமலேயே கேட்டாள் பார்வதி. இந்தக் காலத்தில்தான் யாரையுமே சீக்கிரம் நம்ப முடிவதில்லையே?
“பாட்டி, நான் மும்பையிலிருந்து வரேன். என் தாத்தாவும், சிவராமத் தாத்தாவும் வெள்ளைக்காரங்களை எதிர்த்து நடந்த போராட்டத்திலே, ஒண்ணா அமராவதி ஜெயில்ல ஆறு மாசம் இருந்தாங்களாம். ரொம்ப ப்ரண்ட்ஸாம். எனக்கு சென்னையில் வேலை கிடைச்சிருக்கு. என் தாத்தாதான் உங்க ரெண்டுபேரையும் பார்த்து, ஆசிர்வாதம் வாங்கின பின்னாலே வெளிலே சேரச் சொன்னார்.” என்று பதில் சொன்னான்.
இதைக் கேட்டதும் பார்வதிக்கு மனம் நெகிழ்ந்து விட்டது. “அடாடா, உள்ளே வாப்பா! நான்பாட்டுக்கு ஆசீர்வாதம் வாங்க வந்த பிள்ளையை வெளீலையே நிறுத்தி வச்சுப் பெசிண்டிருக்கேனே! உள்ளே வாப்பா. உன் பெரு என்ன சொன்னே?” என்றபடி கதவைத் திறந்து விட்டாள்.
“என் பேரு ராஜா, பாட்டி.”
உள்ளே நுழைந்தவனை பெஞ்சில் உட்காரச் சொன்னாள். தன் ஏர்பாக்கைத் திறந்து, அதிலிருந்து ஒரு பொட்டலத்தையும், ஒரு அட்டைப் பெட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“பார்வதிப் பாட்டி பழுத்த சுமங்கலி. வெறுங்கையா போகக்கூடாது, பூ கொண்டுபோன்னு தாத்தா சொன்னார். இந்தப் போட்டலத்திலே பூ இருக்கு. சிவராமத் தாத்தாவுக்கு பாம்பே ஹல்வா பிடிக்கும்னு ஒரு பாக்ஸ் தாத்தா கொடுத்து அனுப்பினார்.’
பார்வதிக்குக் கண்கள் பனித்தன. குழந்தை குட்டிகள், பேரன் பேத்திகள் என்று யாரும் கிடையாது. அவளுக்கு மூன்று முறை குறைப் பிரவசமாகவே பிறக்கவே, இதற்குமேல் கருத் தரித்தால், உயிருக்கு ஆபத்து என்று கருப்பையை எடுத்து விட்டார்கள். எனவே, ஒருவருக்கொருவர்தான் குழந்தை. அந்த ஔவைக்கு முருகன் நாவல் பழங்களை உதிர்த்தான். அதே முருகனே, யாரோ பெற்ற இந்த ராஜா வடிவில் பூ கொண்டுவந்து தருகிறானா?
“என்ன பாட்டி, அப்படியே நின்னுட்டீங்க? இந்தாங்க!” என்று ராஜா உரிமையுடன் சொன்னது அவளை உலகிற்குக் கொணர்ந்தது. முகமலர்ச்சியுடன் அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
“கொஞ்சம் இரு ராஜா. வெள்ளிக்கிழமை கார்த்தாலே புஷ்பம் கொண்டு வந்திருக்கே
.
கற்பகாம்பிகைக்குச் சாத்திட்டு வந்துடறேன்.” என்று கிளம்பியவள், “அது சரி, நீ எங்கே தங்கப் போறே? சொந்தக்காரா யாரும் இருக்காளா? இருக்க ஜாகை பார்த்தாச்சா?” என்று வினவினாள்.
“இல்லே பாட்டி. இனிமேத்தான் பார்க்கணும். நேரே இங்கேதான் வந்தேன்.”
“பம்பாய்லேந்து வரேன்னு சொன்னே? ஒரே ஒரு சின்னப் பை மட்டுமே கொண்டு வந்திருக்கியே? நன்னா ஸ்நானம் பண்ணி வேஷ்டி சட்டை வேறே புதிசாப் போட்டுண்டு இருக்கே?” அவள் கவனத்திலிருந்து எதுவும் தப்பவில்லை.
“நேரா அப்படின்னா, ரயில்வே ஸ்டேஷன்லேந்து நேர இங்கே வரலை பாட்டி. ஒரு ஹோட்டல்லே ரூம் எடுத்து, பெட்டியை எல்லாம் அங்கே போட்டுட்டு, அங்கேயே குளிச்சேன். வர்றபோது பூ வாங்கி வந்தேன். அதையே சுருக்கமா நேர வந்ததாச் சொன்னேன். ஆசீர்வாதம் வாங்க வர்றபோது பாண்ட் வேண்டாம்னுதான் வேஷ்டி கட்டி வந்தேன்.”
“உன்னைப் பெத்து வளத்தவா ரொம்ப நல்லவா அப்பா. நல்லபடியா உன்னை வளத்திருக்கா. இப்படி மரியாதையா நடந்துக்க இப்ப எத்தனை குழந்தைகளுக்குத் தெரியறது? நன்னா, தீர்க்காயுசா, ஷேமமா இருப்பா.” என்று ஆசி வழங்கிவிட்டு, உள்ளே சென்று பூவை படத்தில் சாத்திவிட்டு வந்தவள், அவனோடு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.
சிவராமன் வாழை இலையில்தான் சாப்பிடுவார். வெளியே சென்ற அவரிடம் இலை வாங்கிவரச் சொல்ல மறந்துவிட்டது அவளுக்கு திடுமென்று ஞாபகம் வந்தது. “அடாடா! மறந்து போச்சே!” தன்னையும் அறியாமல் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.
[அடுத்த பதிவில் முடியும்]
ஆரம்பம்மே ஜோர்.
ReplyDeleteWow. Taking us back in time. Looking forward to the continuation...
ReplyDelete