Thursday, 31 July 2014

[தமிழ் இனி மெல்ல (22 ) “கருவூர்த்தேவர் செய்த கைங்கரியம் இது!”

[தமிழ் இனி மெல்ல (21 )சென்ற பதிவின் தொடர்ச்சி ]
இராஜராஜர் தன் தோளில் வைத்த கையின்மேல் தன் கையை வைத்து அழுத்துகிறான் இராஜேந்திரன். இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.


குந்தவைப் பிராட்டி அவர்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறாள். சோழமகாதேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரள்கிறது.

இராஜேந்திரன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அரண்மனையில் தன் வளாகத்திற்கு செல்கிறான்.


இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் திடுமென்று அவனுக்கு சற்றுக் குறைந்திருப்பது தன் தந்தை மற்றவர்முன் “அமைதி காப்பாய்!” என்று சொன்னதனாலா என்று நினைத்துப் பார்க்கிறான். இப்போது இருக்கும் மன நிலையில் அதைப் பற்றிச் சிந்திப்பதைவிட, தனக்கு நண்பனாகக் கிடைத்த சிவாச்சாரியை எதிர்காலத்தில் எப்படித் தனது திட்டங்களில் பங்குபெறச் செய்யலாம் என்பதில் சிந்தனையைச் செலுத்துவதே நல்லது என்று எண்ணியபடி தன் வளாகத்தை அடைகிறான்.



“தந்தையே! இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டீர்களே! கருவூர்த் தேவரும், அத்தையாரும் உங்களுடன் சென்றதால் நீங்கள் நெடுநேரம் அவர்களுடன் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.” என்ற மகள் அம்மங்கையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு ஈர்க்கிறது.



எட்டே வயதான இரண்டாம் மகளைக் கண்டதும் அவன் முகம் மலர்கிறது. கைகளை நீட்டுகிறான். ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள் அம்மங்கை.



“கருவூரார் எங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு கொடுத்துவிட்டாரம்மா! நாளை மதிய வழிபாட்டுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லப் போகிறோமம்மா!” என்று அவளது கன்னத்தை நிமண்டியபடி பதில் சொல்கிறான் இராஜேந்திரன்.



“அதுசரி, உன் அக்கா நங்கை எங்கே?” என்று கேட்கிறான். மூத்தமகளின் முழுப்பெயர் அருள்மொழி நங்கை என்றாலும், தந்தையின் பெயரைச் சொல்வது மரியாதை இல்லை என்பதால் நங்கை என்று மட்டுமே சுருக்கி விளிக்கிறான்.



“அக்காவைப் பற்றிக் கேட்காதீர்கள், தந்தையே! எப்பொழுது பார்த்தாலும் தேவாரம், திருவாசகம் என்று பாடிக்கொண்டு, சிவபூசை செய்துகொண்டு இருக்கிறாள். அரசகுமாரியாக மட்டும் இல்லாவிட்டால் கோவிலே கதியாகக் கிடப்பாள். நீங்கள் அவனுக்கு ஒரு சிறிய சிவன் கோவில் கட்டிக் கொடுத்துவிட்டால் நல்லது என்று எனக்குப் படுகிறது!” குறும்பாகப் பதில் கூறுகிறாள் அம்மங்கை.



“இப்படியெல்லாம் பேசக்கூடாது மங்கை! பதினேழு வயதான அவளுக்கும் திருமண வயது வந்து விட்டது. தமக்கை என்ற மரியாதையைக் காட்ட வேண்டும், நீ!” என்று மகளைச் செல்லமாகக் கடிந்து கொள்கிறான்.



“நீங்கள் கொஞ்சம் அக்காவைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் ஒரு சிவனடியாரைத் திருமணம் செய்து கொண்டு, அரசவாழ்வை விட்டாலும் விட்டுவிடுவாள்!” என்று குறும்பாகச் சொன்னது இராஜேந்திரனின் மனத்தில் சிறிய கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நங்கையைப் பற்றி அவள் தாயான இளையராணி பஞ்சவன் மாதேவியிடத்தில் பேசவேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.



“தந்தையே! அண்ணன்மார்கள் இருவரும் வந்திருக்கிறார்கள். அன்னையார் அவர்களிடம் பேசிக் கொண்டு உள்ளார்கள்.” என்று தெரிவிக்கவும், இராஜேந்திரனின் இரு புதல்வர்களும் அவர்கள் எதிரில் வரவும் சரியாக இருக்கிறது.



“வணக்கம் தந்தையே!” என்று தலை சாய்த்து வணங்குகின்றனர் இருவரும். பதினைந்து வயதான இராஜாதிராஜனையும், பன்னிரண்டு வயதான இராஜேந்திர தேவனையும் கைகளுக்கு ஒருவராகத் தழுவிக் கொள்கிறான் இராஜேந்திரன்.



போர்ப்பயிற்சிக்காகச் சென்றிருந்த இருவரும் விடுமுறையில் அரண்மனைக்கு வந்திருப்பது அவனுக்கு மகிழ்வைத் தருகிறது. அவர்களைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பெருவுடையார் கோவில் குடமுழுக்குக்கூட அவர்களால் வர இயலாது போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் அவர்களும் சோழப் பேரரசின் தூண்களாக நின்று தனக்கு உதவியாகப் போரிடுவார்கள் என்பதை நினைக்கும்போது அவனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.



அவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்றுமுன் ஏற்பட்ட மனக்கலக்கம்கூட நீங்க ஆரம்பிக்கிறது. இவர்களை ஒருகாலும் தான் நடத்தப்ட்டதைப்போல நடத்தமாட்டேன் என்று மனதிற்குள் உறுதி செய்து கொள்கிறான்.



“வெற்றி மாது என்றும் உங்கள் துணையாக இருப்பாளாக!”  என்று வாழ்த்தியவன், “உங்களது போர்ப் பயிற்சி எவ்வாறு இருந்தது? என்னென்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?”  என்று கேட்கிறான்.



“தந்தையே! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் சொற்படி நாங்கள் கடற்படையில் பயிற்சி பெற்றோம். நக்காவரம்24 வரை சென்று வந்தோம். கடல் நீச்சல், நாவாய்ப் போர், கயிறு மூலம் ஒரு கப்பலிலிருந்து மறு கப்பலுக்குச் செல்லுதல், கடலுள் முக்குளித்து நெடுநேரம் நீஞ்சிச் செல்லுதல், கப்பல் ஓட்டுதல், இரண்டு மூன்று நாள்கள் கடலையே நம்பி மீன்பிடித்து அவற்றையே உணவாகக் கொண்டு உயிர்வாழ்தல் முதலியவற்றைக் கற்றோம்!” என்று பதிலளிக்கிறான் இராஜேந்திர தேவன். மூத்தவன் இராஜாதிராஜன் அதிகம் பேசாதவன் ஆதலால், தம்பியையே பெருமை பேசிக்கொள்ள விட்டுவிடுகிறான்.



“அய்யே! பச்சை மீன்களையாக தின்று உயிர்வாழ்ந்தீர்கள்? வ்வே, நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது!” என்று மூக்கைச் சுளிக்கிறாள் அம்மங்கை.



“மீனைப் பாண்டியர்களின் தலைகள் என்று நினைத்துக் கொண்டோம் தந்தையே!” அப்பொழுது பச்சை மீனை உண்கிறோமே என்ற அருவருப்பு தெரியவில்லை!” என்று பெருமையுடன் சொல்கிறான் இராஜேந்திர தேவன்.




பதினைந்தும், பன்னிரண்டு வயதும் உள்ள தன் புதல்வர்கள் பேசும் வீரப் பேச்சு 

--------------------------------------------------------
[தமிழ் இனி மெல்ல (22 ) தொடர்கிறது ]



அரிசோனா மகாதேவன் 
“மகிழ்வடைந்தேன், புதல்வர்களே!” என்று பெருமையாக அவர்களை அணைத்துக் கொள்கிறான். “உங்கள் பாட்டனார் இதைக் கேட்டால் மிகவும் பூரித்துப் போவார். சில நாள்கள் திரைகடலில் யார் உதவியும் இன்றி உயிர் வாழ்ந்திருப்பது உங்களுக்கு நிறைய மனஉறுதியைக் கொடுத்திருக்கும். இதை ஏற்பாடு செய்த கட்றபடை அரையருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவேண்டும்!” என்று மனம் விட்டுப் பாராட்டுகிறான்.

“எங்கே எங்களைத் தனியாக விட்டார்கள், தந்தையே?” என்று முதன்முதலாக வாயைத் திறந்து அலுத்துக் கொள்கிறான் இராஜாதிராஜன். “எங்களைச் சுற்றிச் சுற்றி பத்து நாவாய்கள் மிதந்து கொண்டே இருந்தன. அவைகள் எங்கள் கண்களை விட்டு அகலவே இல்லை. வெளியில் செல்லும் பருவப் பெண்களுக்குத் துணை போகும் மூதாட்டிகள் மாதிரி எப்போதும் எங்களைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருந்தன, அந்த நாவாய்கள்!”

“பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? வவ்வவ்வே!”  என்று அழகு காட்டுகிறாள் அம்மங்கை. அவளை அடிப்பது போல விளையாட்டாகக் கையை சிரித்தபடியே ஓங்குகிறான் இராஜேந்திர தேவன்.
“உன் வீரத்தை ஒரு பெண்ணிடம் காண்பி! வவ்வவ்வே!” என்று அழகுகாட்டியவாறே தந்தையின் இடுப்பில் இருந்த பிச்சுவாவை எடுத்து ஓங்குகிறாள் அம்மங்கை.

இராஜாதிராஜனின் கை மின்னலைப் போல விரைந்து கண்மூடிக் கண் திறப்பதற்குள் அம்மங்கையின் மணிக்கட்டை இறுகப் பற்றுகிறது. அந்த இறுக்கத்தின் வலி தாங்காமல் பிச்சுவாவைத் தளரவிடுகிறாள் அம்மங்கை. சிரித்தபடியே அப் பிச்சுவாவை நுனியில் பற்றித் தன் கைக்குக் கொண்டு வருகிறான் இராஜாதிராஜன்.

போர்ப்பயிற்சி பெற்று இறுகிய அவனது கைகளின் பிடியைத் தாங்க மாட்டாது, “ஆ!” என்று பெரிதாகக் குரல் கொடுக்கிறாள் அம்மங்கை. உடனே தன் பிடியை விடுகிறான் அவளது அண்ணன்.

“அரசகுமாரனைத் தாக்கும் எண்ணத்துடன் பிச்சுவாவை எடுத்தது முதல் குற்றம். சோழச் சக்கரவர்த்தியான இராஜேந்திரரின் பிச்சுவாவைத் திருடியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டு அரச குற்றங்களுக்காக உன் வாழ்நாள் முழுவதும் உன்னை என் இதயச் சிறையில் அடைத்து தண்டனை விதிக்கிறேன்!”  என்று குறும்பாக முழக்கமிடுகிறான் இராஜாதிராஜன். மூன்று ஆண்களும் கலகலவென்று நகைக்கிறார்கள்.

அவனது பிடியினால் சிவந்து போன மணிக்கட்டைத் தடவிக்கொண்டே அவர்களின் சிரிப்பில் கலந்து கொள்கிறாள் அம்மங்கை.

“தந்தையே! பாட்டனாரைச் சென்று பார்த்துவிட்டு வந்து விடுகிறோம்!” என்று இருவரும் விடைபெற்றுக் கொள்கிறார்கள். மகளின் தோளில் கையைப்  போட்டுக்கொண்டவாறு அந்தப் புரத்தில் நுழைகிறான் இராஜேந்திரன்.

“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழியாண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!”

இனிமையான குரலில் அருள்மொழி நங்கை திருவாசகம் ஓதும் குரல் கேட்கிறது. அருள்மொழி நங்கையின் குரலுக்கு இணைந்தவாறு வீணையின் நாதமும் ஒலிக்கிறது. மனக்கலக்கத்தோடு திரும்பிய அவனது மனதிற்கு அவளது பாட்டு அஞ்சனமாக இருக்கிறது. சந்தன மணமும், குங்கிலிய மணமும் கலந்து அவனது நாசியைத் துளைக்கின்றன. அவனையும் அறியாமல் மனம் ஒருவித அமைதியைப் பெறுகிறது.

சிறு மேடையில் பஞ்சலோகத்தில் செய்யப்பட்ட மூன்றடி உயரமுள்ள தில்லை நடராஜரின் திருவுருவம் காட்சி அளிக்கிறது. அது பொன்னாலும், மணியாலும், தங்கப்பூண் பிடித்த உருத்திராட்ச மாலைகளாலும் நன்கு அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. சிவனுக்கு உரித்தான கொன்றைப் பூமாலை பெரிதாகக் கழுத்தில் தொங்குகிறது. வலது பக்கம் சிவகாமி அம்மனின் சிறிய பஞ்சலோகச் சிலையும், சைவ சமய குரவர் நால்வரின் பதுமைகளும் இருபக்கமும் விளங்குகின்றன. இறைவனார்க்கு முன்னர் முவ்வகைப் பழங்களும், மலர்களும் தங்கத் தட்டுகளில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அருள்மொழி நங்கைக்கு அருகில் இராஜேந்திரனின் மூன்று மனைவியர் களான திரிபுவன மகாதேவி, வீரமாதேவி, பஞ்சவன் மகாதேவி ஆகியோர் கண்களை மூடி சிவபுராண ஓதுதலில் ஆழ்ந்திருக்கிறார்கள். 

பணிப்பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

தான் நுழைவதைக் கண்டதும் மரியாதை செய்ய முயன்ற பணிப் பெண் 
களை, கையால் வாயை மூடி சைகை செய்து காட்டுகிறான் இராஜேந்திரன். ஓதி முடிக்கும் வரை அமைதியாக அம்மங்கையுடன் கைகூப்பி நிற்கிறான்.
பதினைந்து நிமிடங்களில் சிவபுராண ஓதுதல் முடிகிறது. பூசை முடிந்ததும், ஆடலரசனை வணங்கி எழுந்தவர்கள் இராஜேந்திரனைக் கண்டு திடுக்கிடுகிறார்கள். 

எவ்வளவு நேரமாக அவனை நிற்கவைத்து விட்டோம் என்ற மரியாதை கலந்த பரபரப்பு அவர்களிடம் தென்படுகிறது. அனைவரும் எழுந்து நிற்கிறார்கள். கையை அமர்த்தி பரபரப்பு வேண்டாம் என்று புன்னகையுடன் சைகை செய்த இராஜேந்திரன் அருள்மொழி நங்கை தன்னிடம் பரிவுடன் கொடுத்த மலர்களை இறைவனின் காலடியில் வைத்து, தானும் கைகூப்பி வணங்குகிறான்.

அவன் கால்களில் விழுந்து வணங்குகிறாள் அருள்மொழி நங்கை. அவள் தலையில் கைவைத்து ஆசி நல்குகிறான் இராஜேந்திரன்.

“நங்கை! உன் திருவாசக ஓதுதல் மிகவும் இனிமையாக இருந்தது அம்மா. போரில் எத்தனை விழுப்புண்கள் ஏந்தி வந்தாலும் உன் இனிய குரல் அதை ஒரு நிமிடத்தில் ஆற்றும் வல்லமை பெற்றது அம்மா!” என்று நிறைந்த மனதுடன் மகளை வாழ்த்துகிறான் இராஜேந்திரன்.

“தந்தையே! என்னை மிகவும் புகழ்கிறீர்கள். என் குரலை அளித்தவன் ஆடலரசன். என்னைப் பாடுவிப்பவனும் அவனே. என்னை இவ்வுலகில் வழி நடத்திச் செல்வதும் அவனே. இவ்வுலமே போரில்லாமல் அவன் புகழ் பாடி மகிழவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். போர் இல்லாது போனால் யாரும் விழுப்புண்களைத் தாங்க வேண்டிய அவசியம் இல்லையே!” என்று தங்க நாணயம் உருண்டோடும் குரலில் கனிவுடன் பதிலளிக்கிறாள் 
அருள்மொழி நங்கை. 

அவளது நெற்றியில் மூன்று சிறிய திருநீற்றுக் கோடுகளின் நடுவில் சிவந்த குங்குமம் காட்சி அளிக்கிறது. சுருண்ட கருங்குழல் பெரிய முடிச்சாகப் பின்னால் முடியப் பட்டிருக்கிறது. வில்லாக வளைந்த அடர்ந்த கரும் புருவங்களுக்குக் கீழே கருணை ததும்பும் பெரிய விழிகள். எடுப்பான நாசி, கொவ்வைப் பழத்தை ஒத்த உதடுகள்.

அரசகுமாரியாக இருந்தாலும் அணிகலன்கள் மிகவும் குறைவாகவே அவளிடம் காணப்படுகிறது. கொஞ்சம் கருமை நிறக்கலப்பு அதிகமாக இருந்தாலும் இறையழகு அவளிடம் நிறையக் காணப்படுகிறது. கிறங்க வைக்கும் அழகு அல்ல அருள்மொழி நங்கையின் அழகு - கைகூப்பி வணங்கவைக்கும் அழகு.
“இல்லையம்மா இல்லை! உன் குரலுக்குமுன் பாடலில் வல்ல விறலியர்கள்கூட தோற்றுப் போவார்கள்! நீ வேண்டியபடி போரில்லா உலகம் ஏற்படத்தான் நாங்கள் குழப்பம் செய்யும் கசடர்களைப் போரிட்டுக் களைய வேண்டி இருக்கிறது. அதற்குத்தான் உன் பாட்டனாரும் நானும் முனைந்து வருகிறோம்.” என்று மனங்கனிந்து பதில் சொல்கிறான் 
இராஜேந்திரன்.
* * *

                                                அத்தியாயம் 4
                                          கருவூரார் குடில், தஞ்சை
                              சாதாரண, ஆனி 29 - ஜூலை 14, 1010
வைப் பாட்டியார் மாதிரி திருமணமே செய்து கொள்ளாமல் காலம் முழுதும் கன்னியாகவே இருக்கப் போகிறாயா?” என்று பஞ்சவன் மகாதேவி அருள்மொழி நங்கையை அதட்டியதையும், அதற்கு அவள், “அன்னையே!
                    “உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீர் அடியோம்
                     உன் அடியார் தாள் பணிவோம்
                     ஆங்கவர்க்கே பாங்காவோம்
                    அன்னவரே எம் கணவராவார் அவருகந்து
                     சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
                     இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
                   என்ன குறையும் இலோம்26
“என்று திருவாதவூரார்27 சொல்லியிருக்கிறாரே! மார்கழி மாதத்தில் நாம் அதைப் பாடி மகிழ்வதில்லையா? நான் ஒரு நல்ல சிவனடியாரைத் திருமணம் செய்துகொள்வேன்!” என்று வாயாடியதையும் நினைவுகூர்ந்து மகிழ்கிறான் இராஜேந்திரன். 

அரண்மனையிலிருந்து பெருவுடையார் கோவில் மண்டபத்திற்குச் செல்லும் சுரங்க வழியை28 நோக்கி நடக்கிறான்.

அவனுக்கு அருள்மொழி நங்கையை நினைத்தால் கொஞ்சம் மனவருத்தம் ஏற்படுகிறது. அவளின் போக்கு ஒரு அரசகுமாரியைப் போல இல்லை. அவள் வயதுக்குரிய பெண்களைப் போல ஆட்டம், பாட்டம், பொன் நகைகள், புத்தாடைகள், எதிலும் அவள் விருப்பத்தைச் செலுத்தவில்லை. 

சிவபூசையிலும், திருமுறைகளைக் கற்றுக் கொள்வதிலுமே காலத்தைக் கழித்து வருகிறாள். அவளது தமிழறிவு அனைவரையும் வியக்கச் செய்கிறது. அவள் சைவ உணவை மட்டுமே உண்ண ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவபூசை செய்யும் தான் உயிர்க்கொலை செய்து வயிற்றை வளர்க்கக் கூடாது என்று சொல்லி விட்டாள் அருள்மொழி நங்கை.

“கருவூர்த்தேவர் செய்த கைங்கரியம் இது!” என்று மனதிற்குள் எண்ணிக் கொள்கிறான் இராஜேந்திரன். அருள்மொழி நங்கைக்கு சிவபெருமான் மீதும், திருமுறைகள் மீதும் பற்று வரச் செய்தவரே அவர்தான். கொஞ்சமும் சளைக்காமல் அவளுக்கு சிவபோதம் செய்வார். சிலசமயம் மணிக்கணக்கில் அவர்கள் பேச்சு தொடரும். அவளுக்கு நேர் எதிர் அம்மங்கை. இறைவன் மேல் பற்று உண்டு. ஆனால் அருள்மொழி நங்கை மாதிரி அதிகப் பற்று கிடையாது. அக்காளுக்கும் சேர்த்து வைத்து அவளுக்குப் பொன் அணிகலன்கள் மேல் கொள்ளை ஆசை. எனவே, தனக்கு வரும் நகைகளையெல்லாம் தங்கைக்கே அளித்து விடுவாள் அருள்மொழி நங்கை.

சுரங்கப் பாதையின் வாசல் இராஜராஜரின் வளாகத்தின் மையத்தில் இருக்கிறது. அங்கு தன் தமக்கையாருடனும், சோழமகாதேவியாருடனும் அவன் வரவை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார். 

நேற்று சந்தித்த தந்தையா இவர் என்று எண்ணும் அளவுக்கு அரச உடையில் ஜொலித்தார் இராஜராஜர். தூக்கிக் கட்டிய முடிந்த தலை மயிரின் மேல் செருகப்பட்ட மணி மகுடம், உடல் முழுவதும் அரச ஆபரணங்கள், இடுப்பில் உறையிலிட்ட வீரவாள், என்று கம்பீரமாக சோழமண்டலம் மட்டுமின்றி பாண்டிய, சேர, சாளுக்கிய, கருநாடுகளின் பேரரசராக விளங்கினார் அவர். இராஜேந்திரனுக்கே தன்னையும் அறியாமல் அவர்மீது ஒரு மரியாதை கலந்த மதிப்பு தோன்றியது. தந்தை என்று எண்ணாமல் தரணி ஆளும் பேரரசர் என்றே மதிக்கத் தோன்றியது.

“வணக்கம் தந்தை... சக்கரவர்த்தியாரே!”  என்று தலைவணங்கினான் இராஜேந்திரன்.

புன்னகையுடன் அவனைத் தழுவிக் கொண்டார் இராஜராஜர்.

“வழக்கம்போலத் தந்தையாரே என்று விளித்தால் போதும் மதுராந்தகா!” என்று புன்னகைத்த அவர், “செல்லலாமா?” என்று வினவுகிறார்.

அவரது தலைமை மெய்காப்பாளன் அங்கிருந்த புலியின் சிலையின் வாயில் கைவிட்டு எதையோ முடுக்குகிறான். உடனே அங்கு ஆளுயரத்திற்கு வரையப்பட்டிருந்த தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஓவியம் அதன் சட்டங்களுடன் விலகி சுரங்கப் பாதையின் வாசலைக் காட்டுகிறது. உள்ளே தீவட்டியுடன் மெய்காப்பாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். 

தலைமை மெய்க்காப்பாளன் தலைசாய்த்து, “சக்கரவர்த்திகளே! செல்லலாமே!” என்று கையைக் காட்டுகிறான். முதலில் இராஜராஜர் சுரங்கத்தில் நுழைகிறார். 

அவரைப் பின்பற்றி இராஜேந்திரன், சோழமகாதேவி, குந்தவைப் பிராட்டியார் நுழைகின்றனர். கடைசியாகத் தலைமை மெய்காப்பாளனும், இதர காப்பாளர்கள் பத்துப் பேரும் உள்ளே செல்கின்றனர். உடனே ஓவியம் திரும்ப வந்து சுரங்க வாசலை மூடிக்கொள்கிறது.

சுரங்கம் கிட்டத்தட்ட ஏழு அடி உயரமும் ஐந்தடி அகலமாகவும் இருக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் அரச குடும்பத்தினர் பெருவுடையார் கோவிலுக்கு ரகசியமாகச் செல்வார்கள். பெரும்பாலும் இராஜராஜரும், இராஜேந்திரனும்தான் அந்தச் சுரங்கப் பாதையை உபயோகப் படுத்துவார்கள். ஈரக்கசிவு கால்களைத் தாக்காத வண்ணம் தேக்கு மரப் பலகைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே ஒரு பல்லக்கு இருக்கிறது. அதில் சோழ மகாதேவியும், குந்தவைப் பிராட்டியும் அமர்ந்து கொள்கின்றனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள் அப் பல்லக்கைத் தூக்கிக் கொள்கிறார்கள். முன்னே இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு நடக்கின்றனர். 

அவர்களை நான்கு மெய்க்காப்பாளர்கள் உருவிய வாளுடன் பின் தொடர் கின்றனர். அவர்கள் பின் இராஜராஜரும், இராஜேந்திரனும் செல்கின்றனர். பல்லக்கு அவர்களைப் பின் தொடர்கிறது. அவர்கள் பின்னால் நான்கு மெய்க்காப்பாளர்களும், அவர்களைத் தொடர்ந்து இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு வந்த வழியில் யாராவது வருகிறார்களா என்று  அடிக்கொரு தடவை திரும்பிப் பார்த்தவாறே செல்கிறார்கள்.[வளரும்]
----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
26திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையின் ஒன்பதாவது பாட்டில், “(சிவ பெருமானே! உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்கள் உன் சிறப்பு வாய்ந்த திருவடிக்கே உரியவர் ஆகின்றோம். உன் அடியார்களின் பாதங்களை வணங்குவோம். அவர்கள் சொல்லைப் பின்பற்றி நடப்போம். அத்தகையவரே (சிவனடியார்களே) எங்களுக்குக் கணவர் ஆவார்கள். எங்கள் (சிவ)பெருமானே! இப்படிப்பட்ட அருளை எங்களுக்கு நல்குவாயானால் எந்தவிதமான குறையும் இல்லாமல் இருப்போம்!” என்று தங்களுக்கு கணவன்மார்கள் எப்படி வாய்க்கவேண்டும் என்று பெண்கள் சொல்லிப் பாடுவதாக உருவாக்கியிருப்பதையே அருள்மொழி நங்கை தன் தாயிடம் சொல்கிறாள்.
27எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவரைத் திருவாதவூரார் என்று அவர் பிறந்த ஊரைச் சொல்லிக் குறிப்பிடுவதும் உண்டு.
28தமிழ்நாட்டில் அரசு அரண்மனையிலிருந்து பெரிய கோவில்களுக்குச் செல்லும் சுரங்கங்கள் உண்டு. இவை கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து மண்மூடிப் போனதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். திருச்சி மலைக் கோட்டையில் தாயுமானவர் கோவில் அருகில் மலைக் கோட்டைக்கு வெளியில் செல்லும் சுரங்கப் பாதை ஒன்று இருக்கிறது. இது தவிர திருமயக் கோட்டையிலும், இன்னும் பலப்பல கோவில்களிலும் சுரங்கப் பாதைகள் உள்ளன. கோவில்களுக்கு அடியிலும் இரகசிய அறைகளில் அரசுப் பொக்கிஷங்கள் இருக்கக் கூடும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலிலும் இம்மாதிரி இரகசிய அறைகளில் விலைமதிப்பில்லாப் பொக்கிஷ அறைகளை பொது ஆண்டு 2011ல் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment