Sunday, 13 July 2014

தமிழ் இனி மெல்ல-7 :நாம எங்கே போறோம்?

நாவலாசிரியர் அரிசோனா மகாதேவன் 
                                                தமிழ் இனி மெல்ல-7
த இ மெ     அத்தியாயம் 5
நினைவூட்டல்:சென்ற பதிவின் இறுதியில் 
“காம்ஸ், காம்ஸ், ரொம்ப தாங்க்ஸ், காம்ஸ். 
எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, காம்ஸ்!” 
மூச்சுக்கு முப்பத்திரண்டு தடவை “காம்ஸ், காம்ஸ்” 
என்று சொல்லிக் கொண்டு காமாட்சியின் கையைப் 
பிடித்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுகிறாள் நிமிஷா.
என்ன நடந்தது, என்ன சொல்கிறார்கள் என்று புரியாவிட்டாலும், 
எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரிந்து
 கொண்டு தானும் அவர்கள் இருவரையும் கட்டிக் கொண்டு
 தட்டாமாலை சுற்றுகிறான் ஏகாம்பரநாதன்.
காமாட்சிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. கடந்த 
பத்து நாள்களாக நடந்து வருவது ஒன்றுமே நனவு மாதிரி இல்லை. 
எல்லாம் கனவு மாதிரி இருக்கிறது. மேல்தட்டு மக்கள் வாழும் 
வாழ்வை பத்து நாள்களாக அனுபவிப்பது ஒருவிதமான சுகமாகத்தான்
 இருக்கிறது.ஆனாலும் நடுநடுவே எத்தனை நாள் இது நீடிக்கப் போகிறது
 என்ற பயமும் அவளுக்கு ஏற்பட்டுக்கொண்டுதான் வருகிறது.

                                                   அத்தியாயம் 5

                          ஷெனாய்க்கும் தஞ்ஜுவுக்கும் இடையே, தக்கண்கண்ட்                               பிரஜோற்பத்தி, ஆடி 4 - ஜூலை 18, 2411



“உய்யென்ற காற்றை உருவாக்கிக்கொண்டு மணிக்கு முள்னூறு கி@லாமீட்டர் வேகத்தில் ஷெனாயிலிருந்து தஞ்ஜு செல்லும் தொடர்வண்டி விரைந்து கொண்டிருக்கிறது. பளபளவென்று கருநீல வண்ணம் பூசப்பட்ட பெட்டிகளின் நடுவில் நீண்ட தங்கவண்ணப் படுக்கைக் கோடுகள் மூன்று தீட்டப் பட்டு இருக்கின்றன. அந்தக் கோடுகள் அவ்வப்போது செவ்வகங்களாகப் பரவி மீண்டும் கோடுகளாக இணைகின்றன. அச் செவ்வகங்களுக்கு நடுவில் கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றன என்றே தெரியாமல் கருநீல வண்ணம்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஊடுருவும் வண்ணப்பூச்சு ஜன்னல்களில் பூசப்பட்டிருக்கிறது.

மின் காந்த சக்தியால் உந்தப் பட்டு இருப்புப் பாதைக்கு மேல் காற்றில் இரண்டு அங்குல உயரத்தில் மிதந்து சென்று கொண்டிருப்பதால் அதன் ஓட்டத்தினால் பலமான சத்தம் கேட்கவில்லை. ‘உஷ்’ஷென்று கிளம்பும் காற்று சத்தம்கூட மூன்று கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஜன்னலைத் தாண்டி உள்ளே வரவில்லை.

இருபத்தைந்தாம் நூற்றாண்டு பாரத ஒருங்கிணைப்பில் இருப்புப் பாதையில் செல்லும் விரைவு வண்டிகள் மிகவும் பெருகி இருக்கின்றன. மின்காந்த விசையினால் அனைத்தும் மிக வேகமாக ஓடுகின்றன. மணிக்கு அதிகபட்சம் நானூற்றைம்பது கி@லா மீட்டர் வரை ஓடும் விரைவு வண்டிகளும் ஏராளம். காற்றில் மாசைக் குறைக்க வேண்டும், மற்றும் சக்தியைக் குறைவாகச் செலவழிக்க வேண்டும் என்று இருப்புப்பாதையில் செல்லும் விரைவு வண்டிகள் அதிகமாக்கப் பட்டிருக்கின்றன.

ஷெனாயிலிருந்து ஐந்து நிமிஷங்களுக்கு ஒருமுறை விரைவு வண்டிகள் எல்லாப் பெரிய நகரங்களுக்கும் கிளம்பிக் கொண்டிருந்ததால் எல்லோருக்கும் விரைவு வண்டி ஒரு பெரிய  வŒதி. உதாரணமாக கன்னியாகுமாரியிலிருந்து காஷ்மீரிலிருக்கும் ஸ்ரீநகருக்கு பத்து மணி நேரத்தில் சென்றுவிட முடிகிறது. அது மட்டுமன்றி, “ராம்ஸ்வர்” (பழைய ராமேஸ்வரம்) “மனாரு”டன் (தலைமன்னார்) சுரங்கத்தில் செல்லும் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டு அமரகவி பாரதியாரின் “சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போம்” என்ற கனவை நனவாக்கியிருக்கிறது. அதனாலேயே விமானப் போக்குவரத்து பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது.

தனிநபர்கள் கார் வைத்திருப்பது மிகவும் குறைந்து பத்தாயிரத்தில் ஒருவர் மட்டுமே கார் வைத்திருக்கும் நிலைமை வந்திருக்கிறது. அதைச் சரிக்கட்ட மின்சக்தியால் ஓடும் வாடகைக் கார்கள், மற்றும் பேருந்துகள் மக்களின் தேவையை நிறைவு செய்கின்றன. எல்லா நகரங்களிலும் அசுத்தம் நீங்கி சுகாதாரம் பெருகி இருக்கிறது.

மரங்கள், கட்டிடங்கள் விரைந்து செல்வதைப் பார்த்துத்தான் ஓடும் வண்டியில்  தான் தாங்கள் இருக்கிறோம். நிற்கும் கட்டிடத்தில் இல்லை என்று தெரிந்து கொள்கிறான் ஏகாம்பரநாதன்.
அவனுக்கு அது மிகவும் வியப்பாக இருக்கிறது. 

அவன் வாழ்வின் முதல் பயண அனுபவம் அது. ஆகவே ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டு, விழிகளை அகல விரித்து, எல்லாவற்றையும் தன் மூளையில் பதிவு செய்து கொண்டிருக்கிறான். அவனைப் போலவே தானும் ஒரு சிறுமியாக மாறி, அவன் அருகில் அமர்ந்து, அவன் அனுபவத்தில் பங்கு கொண்டிருக்கிறாள் காமாட்சி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------           வென்றது ஜெர்மனி                                   

2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை 1/0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
வென்றது எப்படி?
ஒரு ஜெர்மானிய சாப்ட்வேர் நிறுவனம் விளையாட்டின் போக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கவும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் ப்ளஸ் மைனஸ் களை கணக்கிட்டு எப்படி விளையாடவேண்டும் என்று கண்டறிய ஒரு ப்ரோக்ராம் தயார் செய்தது.ஆன் பீல்ட் கேமரா உதவியால் அவர்கள் ஓட்டத்தைக் கவர் செய்தது.அதைக்கொண்டு பௌல் செய்யும் ஆட்டக்காரர் திருந்தும் வழிகாட்டல் வழங்கப்பட்டது.இதனோடு கூட கொலோன் ஸ்போர்ட்ஸ் யுனிவேர்சிடியின் டேட்டா பேஸ் நெருக்கடியான கட்டத்தை  ஒரு குறிப்பிட்ட விளையாட்டு வீரர் எப்படி சமாளிக்கிறார் என்று அவரது கண்டறியப்பட்டு வழிகாட்டப்பட்டது. இது தான்  நான்காவது முறையாக ஜெர்மனி ஜெயிக்ககு உதவிய முக்கிய அம்சம் என்று கருதப்படுகிறது. கடைசியில் சாப்ட்வேர் டெக்னாலஜி விளையாட்டிலும்  ஆதிக்கம் வகிக்கத் தொடங்கி விட்டது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நகர்ப்புறம் மறைந்து கிராமங்கள் அங்காங்கு தென்படுவது நன்றாகவே இருக்கிறது. வயல்கள், சோலைகள், மற்றும் நிலத்தை உழும் டிராக்டர்கள் என்று மனதுக்கு இனிமையாக, கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வாய்  தாய் சொல்லிக் கொடுத்த ஒரு கிராமத்துப் பாடலை முணுமுணுக்கிறது.

இந்த இயற்கைக் காட்சிகள் எதையும் ரசிக்காமல் முப்பரிமாணக் கண்ணாடியை அணிந்து கொண்டு உடலை நெளித்துக் கொண்டு உட்கார்ந்தவாறே ஆடிக்கொண்டிருக்கிறாள் நிமிஷா. அதைப் பார்க்கப் பார்க்க அக்கா, தம்பி இருவருக்கும் சிரிப்பு வருகிறது. அதைக் கவனிக்க இயலாதவாறு முப்பரிமாணக் கண்ணாடி நிமிஷாவின் கண்களை மறைப்பது அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது.

“அக்கா, நாம எங்கே போறோம்? அங்கே என்ன செய்யப் போகிறோம்? சொல்லுக்கா.” என்று அடிக்கொரு தடவை காமாட்சியைக் குடைந்து கொண்டிருக்கிறான் ஏகாம்பரநாதன்.

“திரும்பத் திரும்ப என்னைக் கேட்டு ஏண்டா தொல்லைப் படுத்தறே? நிமிசாம்மாக்கு ஏதோ விருந்து கொடுக்கப் போறாங்களாம். அதுக்காக தஞ்சுன்னு ஒரு ஊருக்குப் போகப் போறோம். அங்கே நிமிசாம்மாவுக்குத் துணையா நாம இருக்கப் போறோம்.” என்று சமாளிக்கிறாள் காமாட்சி.
“ஏங்க்கா, நாம இருக்கற ஊரை விடத் தஞ்சு பெரிசா இருக்குமாக்கா? அங்கே நம்மளை விருந்துக்கு நிமிசாக்கா கூட்டிட்டுப் போவாங்களாக்கா?” 

விழிகளைப் பெரிசாக உருட்டி விழித்தபடி கேட்கிறான் ஏகாம்பரநாதன். அவன் குரலில் ஆர்வமும் ஏக்கமும் தொனிக்கின்றன.

“அதெல்லாம் நடக்குமாடா ஏகாம்பரம்? அவங்க நம்பளை எல்லாம் விருந்துக்கு கூட்டிப் போவாங்களா? அங்கே வேலை செய்யத்தாண்டா நாம போறோம்” என்று ஆதங்கத்துடன் பதில் சொல்கிறாள் காமாட்சி.

“அதுனால பரவாயில்லை அக்கா. வேலை செய்ய அங்கே போகலேன்னா இந்த சொகுசான வண்டிலே நாம் போவோமா? நீ நிமிசாக்கா வீட்டிலே வேலை செய்யறதுனாலேதானே எனக்கு மருந்து கொடுத்து, விரைசா, நல்லபடியா ஆக்கினாங்க? வேலை செஞ்சா பரவாயில்லை அக்கா. அவங்க கூட்டாளிகளையும் நாம பார்க்கலாம். புதுசா ஒரு ஊரும் பார்க்கப் போறோம் இல்லையா, அது எனக்கு சந்தோசமா இருக்கு அக்கா. ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை அக்கா...” என்று இழுக்கிறான் ஏகாம்பரநாதன்.

“என்னடா அது, ஏகாம்பரம்?” என்று மனதில் கவலையுடன் கேட்கிறாள் காமாட்சி. 
இதுவரை தனக்கு ஆசை என்று ஒன்று இருக்கிறது என்று அவன் சொல்லிக் கேட்டதே இல்லை. ஏதாவது செய்ய முடியாததைக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று உள்ளூரத் தவிப்பு தோன்றுகிறது அவனுக்கு.

“ஒண்ணும் பெரிசா இல்லை அக்கா. நிமிசாக்காவும் உன்னை மாதிரி நம்ம பாசையைப் பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு அடிக்கடி தோணுது அக்கா. அவங்களும், நீயும் காதிலே எதையோ மாட்டிக்கிட்டு பேசிக்கறீங்க. நீ சொல்றது அவங்களுக்குப் புரியுது. அவங்க சொல்றது உனக்குப் புரியுது. நிமிசாக்காகூட பேசணும்னு எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு அக்கா. நான் உன்னைக் கேட்டு, நீ அவங்களைக் கேட்டு, அதுக்கு அவங்க பதில் சொல்லித்தான் நான் எதையும் தெரிஞ்சுக்கிட வேண்டி இருக்கு. அவங்ககிட்ட உன்னை மாதிரி நேராப் பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்!

“எனக்குன்னு காதில மாட்டிக்கிற மெசின் இல்லை. பள்ளிக்கூடம் போயி, வேலை கத்துக்கிட்டு, வேலைக்குப் போனாத்தான் - எனக்கு அந்த மெசின் கிடைக்கும்னு நீ சொல்லுறே. அதுதான் நிமிசாக்காவும் உன்னை மாதிரி - எனக்குப் புரியறமாதிரி பேசினா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். அதை நினைச்சுப் பார்த்தாலே ரொம்ப நல்லா இருக்கு அக்கா. அதைத்தான் எனக்கு ஒரே ஒரு ஆசைன்னு சொன்னேன் அக்கா.” என்று இழுத்து இழுத்துச் சொல்லி முடிக்கிறான் ஏகாம்பரநாதன்.

காமாட்சிக்கு கண்களில் லேசாக கண்ணீர் துளிர்க்கிறது. இவன் மனதில் இப்படி ஒரு ஆசையா? தன் கண்ணீர் தெரியாமல் மறைத்துக்கொண்டு, அவனை இழுத்து அணைத்துக் கொள்கிறாள்.
“கவலைப் படாதே ஏகாம்பரம். கடவுளை வேண்டிக்குவோம்டா. உள் மனசோட வேண்டிக்கிட்டா நாம நெனச்சதைக் கடவுள் நிறைவேத்தி வைப்பாருன்னு அம்மாவும், அப்பாவும் சொல்வாங்கடா.” என்று அவனுக்குச் சமாதானம் சொல்கிறாள்.

“அப்படியே வேண்டிக்கிறேன் அக்கா.” என்று கண்களை மூடி, கைகளைக் கூப்புகிறான் ஏகாம்பரநாதன்.

திடீரென்று ஒரு குலுக்கல். விரைவு வண்டி சட்டென்று இரண்டு சென்டி மீட்டர் கீழிறங்கி விட்டு மீண்டும் தன் இயல்பான உயரத்திற்கு ஏறுகிறது.
உடனே ஏகாம்பரநாதனைச் சேர்த்து அணைத்துக் கொள்கிறாள் காமாட்சி. ஒரு நிமிடத்திற்குள் மூன்று தடவை அந்த மாதிரி குலுக்கல் ஏற்படுகிறது. பிறகு வேறு எதுவும் நடக்கவில்லை. பயணம் தொடர்கிறது.

அந்தக் குலுக்கல்கள் எவற்றையும் கவனிக்காமல் கண்களை மூடி, கூப்பிய கைகளுடன் இருக்கிறான் ஏகாம்பரநாதன்.

முப்பரிமாணக் கண்ணாடியைக் கழட்டி விட்டு என்ன என்பது போலப் பார்க்கிறாள் நிமிஷா. வண்டியில் இருக்கும் மற்ற பயணிகளும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பின்னர் தங்கள் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்.

வண்டி ஓட்டுனர் தன் இருப்பிடத்தில் திடுமென்று மின் அழுத்தம் ஏன் இப்படி திடீரென்று மூன்று முறை மிகவும் குறைந்தது என்று குழம்புகிறார். வில்பூர் (விழுப்புரம்) மின் நிலையத்துடன் தொடர்பு கொள்கிறார். அங்கிருந்து காரணம் தெரியவில்லை என்று பதில் வருகிறது. வண்டியைப் பரிசோதனைக்காக வில்பூரில் நிறுத்த வேண்டுமா என்று கேட்கிறார். தேவையில்லை என்று கிடைத்த பதில் அவருக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. தனது மன நிம்மதிக்காக விரைவு வண்டியின் கணிணியில் எல்லாச் சோதனைகளையும் ஒரு தடவை நடத்திப் பார்க்கிறார். வண்டியில் ஒரு கேடும் இல்லை என்று தெரிந்து கொண்டு நிம்மதியுடன் பயணத்தைத் தொடர்கிறார்.
* * *
                                   விண்வெளி ஆராய்ச்சி நிலையம், காரைகட்
                                        பிரஜோற்பத்தி, ஆடி 4 - ஜூலை 18, 2411

மிகவும் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்த ஸஹஜாவுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எந்திரங்களில் ஏதாவது கோளாறா, அல்லது தொலைநோக்கியில் ஏதாவது கோளாறா என்று தடுமாறுகிறாள். சூரியக் கதிர்வீசல் மிகக் குறைந்து தெரிகிறது. இதுவரை அவர்களைக் குழப்பி வந்த சூழலும் கதிர்களும் காணாமல் பாய்விட்டன! உடனே சோம்காந்த்துடன் தொடர்பு கொள்கிறாள்.

அடுத்த நிமிஷமே சோம்காந்த் அங்கு ஓடி வருகிறார். அவரும் ஸஹஜா காட்டும் விபரங்களைப் பார்க்கிறார். “இது என்ன, என்னால் நம்ப முடியவில்லையே! கோட்கள் மூலம் வந்த தகவலா இது?” என்று அதிசயப் படுகிறார். 

“ஸஹ்ஜ், எந்தெந்த கவன மையங்கள் (Observation posts) மூலம் கோட்கல் தகவலை உறுதி செய்தாய்?” என்று கேட்கிறார்.

“இன்டெல்ஸாட் 15டி, 27எஃப், மற்றும் சீனக் கோள்கள் (Chinese satellites) த்யான்-ஜுன்-ஸீ 8, ச்வாங்-ஜுன் 15, 18 மூலம் எல்லா விபரங்களையும் தொகுத்து, சரி செய்த பின்னால்தான் உங்களைக் கூப்பிட்டேன்.” என்று பதில் சொல்கிறார்.

“ம்...” என்று இழுக்கிறார் சோமநாத். “இந்த விபரங்களை என்னால் ஜீரணிக்க முடியலை. சூரியக் கதிர்வீசல் இப்படி திடுமென்று புஸ்வாணமாகப் போனது இதுதான் என் சர்வீஸிலேயே முதல் தடவை. அது போகட்டும், இரண்டாம் நிகழ்ச்சி என்ன ஆச்சு? ஒரு சுழலும் கதிர்கூட தென்படவில்லையே! டெஸ்லா காந்த அலை வடிகட்டி (Tesla magnetic field filter) உபயோகித்து இந்த வடிவத்தை ஒப்பிட்டுக் காட்டு, பார்க்கலாம்.” என்று உத்தரவிடுகிறார்.

ஸஹஜா தன் மேஜையில் உள்ள குமிழ்களைத் திருகி அருகில் உள்ள கண்ணாடியில் சில வட்டங்களைத் தொட்டு இழுக்கிறாள். அவர்கள் பார்க்கும் முப்பரிமாணப் படங்கள் மாற ஆரம்பிக்கின்றன. சூரியனின் சிவப்பு நிறம் ஒருவித ஊதா நிறமாக மாறுகிறது. சூரியப் புள்ளிகள் தென்படவே இல்லை. இந்த விபரப்படி பார்த்தால் இத்தனை நாட்கள் அவர்களைப் பயப்படுத்திய நிகழ்ச்சிகள் வெறும் மாயை என்றே தோன்றுகிறது.

தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொள்கிறார் சோம்காந்த். மேலிடத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பல நாடுகளுக்கும் இந்நிகழ்ச்சிகளைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கை செய்து விட்டு, பின்னால் இவை காற்றுப் போன பலூன்கள் என்று எப்படித் தெரிவிப்பது? 

இதற்குள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சேர்ந்தமாதிரி பத்து இணைப்புகள் அலறுகின்றன. காரைகட் வான் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரின் தொடர்பை முதலில் இணைக்கிறார் சோம்காந்த்.

“சோம்த், எனக்கு சீனாவிடமிருந்து செய்தி வந்திருக்கு. நீங்கள் தேவையில்லாமல் உலகத்தையே பயப்பட வைக்கப் பார்க்கறீங்கன்னு. எனக்கு அவமானமா இருக்கு! உடனே என் ஆபீஸுக்கு வந்து நம் ஆராய்ச்சி மையத்துக்கு வந்த குழப்பத்தை நீக்க உதவி செய்யுங்க!” என்று தலைவர் ஸோஹன்லால், சோம்காந்த்தின் மேலதிகாரியான சுந்தரேச சாஸ்திரியின் மேலதிகாரி, மிகவும் தணிந்த குரலில் உறுமிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார். சோம்காந்த்துக்கு சிங்கமே தன் வாய்க்குள் தலையை விடச் சொல்லி தன்னை அழைப்பது போல இருக்கிறது.

“ஸஹ்ஜ், நான் ஸோஹன் ஸார் ஆபீஸுக்குப் போகிறேன். முக்கியமான விஷயம். நான் திரும்பி வரும்வரை இந்த நிகழ்ச்சிகளில் உன் கண்ணை வைத்திரு. வெளியே எங்கும் போகாதே. ஏதாவது முக்கியமாகத் தெரிந்தால் என்னை உடனே கூப்பிடு. என்னை ஈஸ்வரன் காப்பாற்றட்டும்!” என்று நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளைத் துடைத்துக் கொண்டு விரைகிறார் சோம்காந்த். 

என்ன விஷயம் என்று தெரியாமல் குழம்புகிறாள் ஸஹஜா.[வளரும்]
           * *

No comments:

Post a Comment