திருமாலின் பெருமை |
[பாச்சுடர் வளவ.துரையன்]
இராமபிரானும் வருணனும்
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோக வனத்தை அழித்தார். இலங்கைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார்.
எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்” என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார்.
பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் வானரப் படையும் உடன்வர இராம இலக்குவர் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர்.
அப்பொழுது வீடணன் “பெருமானே! இந்தக் கடலானது மறைந்துள்ள உன் தன்மையை முழுவதும் அறியும். மேலும் உமது மரபில் முன்தோன்றிய சகரால்தான் இது தோண்டப்பட்டது. எனவே இக்கடல் அன்புடன் நீ வேண்டும் வரத்தைத் தரும். இக்கடலை நாம் கடந்து செல்ல வழிவிடுமாறு இதனிடம் நீர் வேண்டுவாயாக” என்று கடலைக் கடக்க வழியைக் கூறினான்.
இராமபிரான் வருணனை வேண்டியதைக் கம்பர் “கருணை அம்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி” என்று பாடுவார்.
அதாவது கருணைக் கடலான இராமன் கரிய கடலை நோக்கி விதிமுறையே வருண மந்திரத்தை எண்ணியபடியே தர்ப்பைப் புல்லில் அமர்ந்திருந்தான்.
இத்தகைய முறையில் ஏழுநாள்கள் கழிந்தன. வருணன் வரவில்லை. “சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த தாமரைக் கண்கள் சினம் கொண்டு சிவந்தன. நீண்ட புருவங்களும் வில்லைப் போல வளைந்தன.
வில்லைத் தருவாயாக என்று இலக்குவனிடமிருந்து வில்லை வாங்கிய இராமபிரான் கடலின் மீது கணைகளை விடுத்தார். உடன் கடல்கள் ஏழும் எரியத் தொடங்கின. பல அம்புகள் பாய்ந்தும் வருண தேவன் வரவில்லை. எனவே இராமன் பிரம்மாத்திரத்தை மந்திரித்து விடத் தொடங்கினான் உலகம் முழுவதும் வெப்பம் பரவியது. எல்லா உயிர்களும் அஞ்சின.
நிலம், நெருப்பு, காற்று, வானம் ஆகிய மற்ற பூதங்கள் நீர்ப் பூதமாகிய வருணனை இகழ்ந்துரைத்தன. தீய்ந்து போன தலையுடன், வெந்து அழிந்து உருகிய உடலுடன், புகைப்படலத்தில் வழிதடுமாறி வருணன் குருடரைப் போல வந்தான்.
நீங்கள் என்னை நினைந்ததைப் பெரிய கடலின் கோடியில் நின்ற யான் அறியேன். எல்லார்க்கும் தலைவராகிய தாங்களே சினம் கொண்டால் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கு உரிய கவசம் உன் திருவடிகளே அல்லாது வேறு உண்டோ “கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டதுண்டோ” அடைக்கலம், உமக்கு நான் அடைக்கலம் என்று வருணன் வேண்டினான்.
மேலும் வருணன்
ஆழிநீ அனலும்நீயே அல்லவை எல்லாம் நீயே
ஊழிநீ உலகும்நீயே அவற்றுறை உயிரும் நீயே
என்று இராமனின் அவதாரத்தை உணர்ந்து போற்றினான்.
“எம்பெருமானே நீ உலகங்களைப் படைப்பாய்! படைத்துக் காத்து முடிவில் தீ உண்ணுமாறு செய்வாய்! இல்லையேல் அவற்றை நீயே உண்பாய்! உன்னால் முடியாதது உண்டோ” எனும் பொருளில்
“காட்டுவாய் உலகம் காட்டிக் காத்து அவை கடையில் செந்தீ
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கு உண்ணாததுண்டோ”
என்று வருணன் வேண்டினான்.
உலகெல்லாம் தானே படைத்து இடந்து தானே
உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே (10-5-3)
என நம்மாழ்வாரும்
“பாரைப் படைத்துக்காத்து உண்டு உமிழ்ந்த பரமன்”
என்று திருமங்கை மன்னனும் (7-8-10)
படைத்தபார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து”(திரு-28)
என்று திருமழிசையாழ்வாரும் அருளிச் செய்திருப்பதை கம்பர் வருணன் மூலமாக எடுத்துரைக்கிறார்அடைக்கலமாய் வந்த வருணன்
“சோதி வள்ளலேமறையின் வாழியவே! புண்டரீகத்து வைகும் புராதனா
போற்றி போற்றி” என்று துதிக்கிறான்.
“மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே”என்று நம்மாழ்வார் அருளிச் செய்வார்.அடைக்கலமாய் வந்த வருணன் கசேந்திர எனும் யானைஅடைக்கலமாய் வந்து வேண்டியதை நினைவுபடுத்துகிறான்
“வள்ளலே என்று மா கரி வருத்தம் தீர
புள்ளின் மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி”
என்று வருணன் வணங்குவது“புள்ளூர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கிமுதலை துணித்தானை” என்று மங்கை மன்னன் திருநறையூர் பெருமாளைப் புகழ்வதை நினைவூட்டுகிறது.
திருமாலின் பெருமைகளை அறுதியிட்டு எவராலும் அறிய முடியாது; உணர முடியாது. இதையே வருணன் அவர் பெருமையை அவரே உணர மாட்டார்; நாய் போல கீழானவான நான் எங்ஙனம் உணர்வேன் என்கிறான் “உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை” எனப்
பெரிய திருமொழியில் (5-7-6) திருமங்கையாழ்வாரும்
“ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச
அறிதுயில் அலைகடல் நடுவே
ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான்” என்று திருவரங்கப் பெருமாளைப் போற்றுவார்.
“நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா” என்றுவேண்டும் சிறுமியர் ‘எம் சிற்றிலைச் சிதைக்காதே” என்று கேட்டுக் கொள்வதாக நாச்சியார் அருளிச் செய்வார்.
“நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான்’ (5-9-10) என்று நம்மாழ்வார் புகழ்ந்துரைப்பார்.
ஆழ்வார் பெருமக்களின் இவ்வாறான அருளிச் செயல்களை உள்வாங்கிய கம்பர் வருணனின் சரணாகதியைக் கூறும்போது “சிறியனவற்றைத் தீயவர் செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் பெரியோர் செயலன்றோ” என்று வேண்டி“ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான்” என்று எழுதுவார்.
இராம பிரானும் சினம் தணிந்து “உன்பால் அளித்தனம் அபயம்” என்றார். “ஏழாம் கடலில் சுறாக்களின் போர்ச் செயலை விலக்கி விடப் போயிருந்தேன். அதனால் தாமதம்” என்று வருணன் தலைதாழ்ந்தான். என் பிரம்மாத்திரத்துக்கு இலக்கு யாது என்று இராமன் வினவ “மருகாந்தரம் எனும் தீவில் வாழும் தீயவரான அவுணர் நூறு கோடிக்கு மேல் உள்ளனர். உங்கள் அம்பு அவர்மீது ஏவி அழிக்கட்டும் என்று வருணன் வேண்ட இராமபிரான் அவ்வாறே செய்து அருள்புரிந்தார். பிறகு வருணன் இராமபிரானிடம் “என்மேல் கிட்ட கல் அழியாதபடி காலமெல்லாம் தாங்குவேன்; என்தலை மேல் சேது எனும் அணையைக் கட்டிச் செல்வீர் என மொழிந்தான். வானரர் அணைகட்ட இராமன் இலங்கை சென்று வென்றார்.
தவறு செய்தவர் திருந்தி அடைக்கலம் என வரின் அழகியபெருமாள் அபயமளிப்பார் என்பதை வருணனின் சரணாகதி உணர்த்துகிறது.
[விட்டு விட்டு வைணவ ஆசார்ய வைபவம் தொடர்ந்து வெளிவரும் ]
No comments:
Post a Comment