Thursday, 10 July 2014

.தமிழ் இனி மெல்ல

.தமிழ் இனி மெல்ல தொடர்கிறது 

சென்ற பதிவின் முடிவு 

“இந்திய, சீன மேலிடம், மற்றும் அனைத்து
 அரசாங்கங்களுக்கும் இந்நிகழ்ச்சியைப் பற்றி 
தகவல் அனுப்பி உள்ளோம். அரசாங்கம் 
இந்நிகழ்ச்சிகளுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்பு, 
மற்றும் பதில் நடவடிக்கைகள் எடுக்க 
வேண்டும் என்று தீர்மானித்து வருகிறது. 
நீங்கள் இந்தக் கூட்டத்தைப் பற்றியோ, 
அல்லது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறீர்கள் 
என்பதைப் பற்றியோ எவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும்
 கூடத் தெரிவிக்கக் கூடாது.
“கடைசியில் என் கவலை வீண் கவலை ஆனாலும் 
ஆகக் கூடும். அப்படி ஆகவேண்டும் என்றுதான் 
நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்
 கொண்டு வருகிறேன். இனிமேல் பேச ஒன்றும் 
இல்லை. எனக்குத் தெரிந்த அளவுக்கு 
உங்கள் எல்லோருக்கும் தெரிந்தாகிவிட்டது. 
உங்கள் கூட்டுறவு, உதவி மிகவும் 
தேவைப்படுகிறது. உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று 
உடனே ஆராய்ச்சியைத் துவங்குங்கள். குட் லக்.” 
கண்ணாடியைக் கழட்டி விட்டு மேடையை விட்டு 
இறங்குகிறார் சோம்காந்த். ஸஹஜாவும் 
அமைதியாக அவரைப் பின் தொடர்கிறாள்                            

                                            ஷிஃபாலியின் அலுவலகம், மத்ரா
                          பிரஜோற்பத்தி, ஆடி 1 - ஜூலை 15, 2411
                         

      ன் முன்னால் கைகட்டி நின்ற அழகேசனை ஏறஇறங்கப் பார்க்கிறாள் ஷிஃபாலி. அவன் கை கட்டி நின்றிருந்தாலும் அதில் இருந்த கம்பீரம் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மாநிறத்திற்கும் ஒரு மாற்று கருப்பாக இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மல்யுத்த வீரனாக இருந்து, சில நாள்களுக்கு முன்னால் அந்தத் தொழிலே வேண்டாம் என்று விட்டுவிட்டான் என்றும் அவளுக்குத் தெரிவிக்கிறான்.

“அம்மா, எனக்கு சண்டை போடப் பிடிக்காமல் போயிட்டுதும்மா. அதுதான் வேற வேலை செய்யலாம்னு கிளம்பிட்டேன்.” என்றவனை ஏற இறங்கப் பார்க்கிறாள்.

“ஏன், பயமா?” என்றவுடன் கோபத்துடன் இடைமறித்து, “அது எங்க பரம்பரைலேயே கிடையாதும்மா! இன்னொரு தடவை இந்தமாதிரி கேட்டா எனக்கு புடிக்காதுங்க.” என்று பதிலளிக்கிறான்.

“என்னப்பா இது? கேள்வி கேட்டா இப்படி உனக்கு இப்படி மூக்குக்கு மேல கோபம் வருது? நல்லா விசாரிச்சுத்தானே வேலைக்கு எடுத்துக்க முடியும்? அஞ்சு வருஷமாச் செஞ்சுக்கிட்டிருந்த வேலையை, அதுவும் நல்லாப் பணம் கிடைக்கற வேலையை, உடம்புக்கு ஒண்ணும் ஆகாத போது திடும்னு விட்டுட்டேன்னா கேள்வி கேக்கமாட்டாங்களா? உனக்கு வேலை வேணுமா வேணாமா? இப்படி எதுக்கெடுத்துக்கெல்லாம் கோவிச்சுக்கற ஆளை எப்படி வேலைக்கு எடுத்துக்க முடியும்?” என்று பட்டென்று கேட்கிறாள் ஷிஃபாலி.

“அம்மா. எனக்கு வேலை கொடுக்கறதும் கொடுக்காததும் உங்க இஷ்டம். அதை நான் கட்டுப் படுத்த முடியாது. ஒரு ஆளை வேலைக்கு எடுத்துக்கறத்துக்கு முன்னால நீங்களும் நல்லா விசாரிக்க வேண்டியதுதான். நானும் அதுக்கு நல்லாப் பதில் சொல்ல வேண்டியதுதான். வேலைய வுட்டதுக்கு என்ன காரணமுன்னு கேட்டுருந்தா அதுக்குப் பதில் சொல்லாமப் போவேனா?

“பயமான்னு எப்படி நாக்குமேல பல்லைப் போட்டுக் கேட்டுப்புட்டீங்க? என் கன்னத்துல நீங்க அடிச்சாக்கூட எனக்குக் கோவம் வராதும்மா, ஏன்னா இத்தனை நானும் தினந்தினம் அடி வாங்கறதுதான் எம்பொழப்பா இருந்துச்சு. பயப்படற மனுசன் எப்படிம்மா காவக்காரன் வேலைக்கோ, புள்ளைகளப் பாத்துக்கற வேலைக்கோ போக முடியும்? அப்படிப் பட்டவனை நீங்க வேலைக்கு எப்படிம்மா எடுக்க முடியும்?

“என்னைய வேலைக்கு எடுத்தா, என்னைப் போகச் சொல்லற வரைக்கும் உங்க பாதுகாப்புக்கு என் உயிரைக்கூடக் கொடுப்பேம்மா. நாளைக்கி சோறு துண்ணணுமே, அதுனால எனக்கு வேலை கண்டிப்பா வேணும்மா. நீங்க ஏன் வேலைய விட்டேன்னு கேட்டதுக்கு பதில் இதுதாம்மா - மனுசனை மனுசன், மத்தவங்க@ளாட பொழுது போக்குக்காக எதுக்கு அடிச்சுக்கறது அப்படீன்னுதான் வுட்டுப்புட்டேங்க.

“ஏண்டா, அந்த புத்தி இத்தனை நாளா வல்லையான்னு கேட்டா, ஆமான்னுதான் சொல்லணும்மா. இப்பத்தான் அந்த புத்தி வந்துதும்மா!” ஏதோ ஒரு அருவறுப்பான செயலைச் செய்து வந்ததுபோல மனம் குன்றிய, வருத்தத்துடன் மடை திறந்த காட்டாற்று வெள்ளம் போலப் பேசிவிட்டு அமைதியாகி விடுகிறான் அழகேசன். அவன் சொன்ன காரணத்தை அவள் மனம் ஏற்றுக் கொள்கிறது.

“குட். நீ சொல்லறது எனக்குப் புரியுது. நீ பதில் சொன்ன விதமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உன் பேரு, அதை என்னால படிக்கக்கூட முடியலை. சுருக்கமா எப்படி உன்னைக் கூப்பிடறது சொல்லு.”

“அழகுன்னு கூப்பிட்டாச் சரிதாங்கம்மா!”

“அலுக். ஓகே, ஓகே!” என்று ஷிஃபாலி சொன்னதும் சிரிக்கிறான் அழகேசன். 

அவன் பற்கள்தான் எவ்வளவு வெள்ளையாக இருக்கின்றன? மல்யுத்தக்காரன் எப்படி பற்களை உடையாமல் பாதுகாத்துக் கொண்டான்!

அவனது சிரிப்புக்குக் காரணம் தெரியாது அவள் விழிப்பதைப் பார்த்தவுடன், “அம்மா, நீங்க சொல்லறதைப் பாத்தா என்னை அழுக்குன்னு சொல்ல மாதிரி இருக்கு. நான் அழுக்காவாம்மா இருக்கேன்?” சிரித்தபடி கேட்கிறான் அழகேசன்.

“அப்ப இன்னும் சுருக்கமா ‘கேஷ்’னு கூப்படறேன். சுலபமா இருக்கும்.”

“சரிம்மா. அப்ப என் வேலை என்னம்மா?”

சிரித்தவாறே, “நான் உன்னை வேலைக்கு எடுத்துக்கிட்ட மாதிரி இல்லே கேட்கறே?” கேட்கிறாள் ஷிஃபாலி.

 “ஏம்மா, என்னை வேலைக்கு எடுக்கணும்னு நீங்க முடிவு செய்யாட்டா,  என்னை எப்படிக் கூப்பிடறதுன்னு ஏம்மா கேக்கப் போறீங்க?” பதிலுக்குச் சிரிக்கிறான் அழகேசன்.

“பரவாயில்லையே, ரொம்ப கெட்டிக்காரனா இருக்கியே, அது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. இன்னும் மூணு நாள் கழிச்சு நீ தஞ்ஜூ வரணும். அங்கே என் பெண்ணும் வருவா. நான் ஒரு வாரத்துலே சீனா போயிடுவேன். திரும்பி வர மூணு மாசம் ஆகும்.“நான் சீனா போனதும், நீ அவ கூட ஷெனாய் போகணும். நான் திரும்பி வர்ற வரைக்கும் என் பெண்ணையும், கூட அவனுக்குத் துணையா இருக்கப் போற ஒரு எடுபிடிப் பெண்ணையும், அவள் தம்பியையும் பத்திரமா பாத்துக்கணும். அவங்க சொல்ற வீட்டு வேலையைச் செய்யணும். கூட ஒத்தாசையா இருக்கணும். அவங்களை உன் உயிர்மாதிரி பாத்துக்கணும். ஏன்னா, என் பெண்ணுதான் என் உயிரு.” வேலையைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கிறாள் ஷிஃபாலி.

“பெண்தான் உயிர் என்றால், உயிரை விட்டுவிட்டு ஏன் மூன்று மாதம் வெளிநாடு போகவேண்டும்?” என்று நினைத்துக் கொள்கிறான் அழகேசன். 

இருந்தாலும் அவள் வெளிநாடு செல்வதால்தானே தனக்கு வேலை கிடைக்கிறது என்ற நினைவும் கூடவே வருகிறது. எனவே தன்னுள் எழுந்த அந்த எண்ணத்தை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு,  ஷிஃபாலி சொல்வதில் கவனம் செலுத்துகிறான்.

“இதுதான் நான் தஞ்ஜூவில் இருக்கும் முகவரி. ஹோட்டல் ராஜ்ராஜில் இருபத்தைந்தாவது மாடியில் 2518 நம்பர் அறையில் இருப்பேன். ஹோட்டல் ரிஷப்ஷனில் என் பெயரைச் சொல்லிக் கேள். நீ என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன்னு கடிதமும் எழுதித் தர்றேன். உன்னை என் ரூமுக்குக் கூட்டி வருவாங்க. நீ ரொம்பத் துணிமணி எடுத்துட்டு வரவேணாம். உனக்கு யூனிஃபார்ம் நானே எடுத்துக் கொடுத்திடறேன். உனக்கு சம்பளமா கம்பெனிலே என்ன சொல்றாங்களோ, அதுக்கு மேலேயே போட்டுத் தருவேன். சரிதானே!” என்று கேட்கிறாள் ஷிஃபாலி.

“ஏம்மா மூணு நாள் கழிச்சு வரச் சொல்றீங்க? எனக்கு இங்கே வேற வேலை எதுவும் இல்லை. நீங்க இங்கேந்து போற வரைக்கும் ஏதாவது உங்களுக்கு ஏதாவது செய்யணும்னா அந்த வேலையையும் செய்துட்டுப் போறேன். ஊட்டுக்குப் போயி எங்க ஆத்தாகிட்டேயும், அக்காகிட்டேயும், புது வேலை கிடைச்சுருக்குன்னு சொல்லிட்டு ஓடியாந்துடறேங்க.” என்று பணிவுடன் பதில் சொல்கிறான் அழகேசன்.

“அதில்லை, கேஷ். நான் இன்னிக்கு ராத்திரியே தஞ்ஜுக்குப் புறப்படறேன். அங்கே எனக்கு ஆபீஸ் வேலை ரொம்ப ஜாஸ்தி. அதுனால ஒங்கிட்ட ஒரு நிமிஷம்கூட பேச முடியாமத்தான் இருக்கும். மூணுநாள் கழிச்சு நீ வந்தா என் பெண்ணும் வந்திருப்பா, எனக்கும் நேரம் நிறைய இருக்கும். இந்த மூணு நாளுக்கும் சம்பளம் நான் கொடுத்திடறன். அதைப் பத்தி நீ கவலைப் படாதே. உன் அம்மாவோட மூணு நாள் இருந்துட்டுத்தான் வாயேன்.” என்று புன்னகையுடன் பதில் சொல்கிறாள் ஷிஃபாலி.

“சரிங்கம்மா. வேலை செய்யாம இருக்கறதுக்கு எனக்கு நீங்க எதுக்கும்மா சம்பளம் கொடுக்கணும்? நான் தஞ்சுவுக்கு வந்தப்பறம் சம்பளம் வாங்கிக்கறேம்மா!” என்கிறான் அழகேசன்.

“பரவாயில்லை கேஷ். நான் கொடுத்த பணத்திலே உன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் நான் கொடுத்ததா ஏதாவது வாங்கிக் கொடேன். நீ வேலையை ஒப்புக்கிட்டேன்னு எனக்கும் திருப்தியா இருக்கும். சரிதானா?” என்று கேட்கிறாள் ஷிஃபாலி.

நெகிழ்ந்து போகிறான் அழகேசன். 

உரிமைக் குடிமக்களுடன் அவன் நேருக்கு நேர் அதிகம் பழகியது கிடையாது. எப்பொழுதும் தங்களை அடக்கி, வருத்தி, அதில் மகிழ்ச்சி அடையும் மிருகங்கள் என்றுதான் அவர்களைப் பற்றி நினைத்து கொண்டிருக்கிறான். அவன் இதுவரை செய்து வந்த தொழிலும் அந்த எண்ணத்தையேதான் வலுப்படுத்தி வந்திருக்கிறது. அவனுக்காக என்று இதுவரை எந்த உரிமைக் குடிமக்களும் எதுவும் செய்தது கிடையாது.

ஆனால், அவனுடன் முகம் கொடுத்துப் பேசிய முதல் மேல்தட்டுப் பெண் ஷிஃபாலிதான். “உன் அம்மாவுக்கும், அக்காவுக்கும் ஏதாவது வாங்கிக் கொடு!” என்றது அவன் மனதைத் தொட்டு விடுகிறது. 

நாம் ஒட்டு மொத்தமாக எல்லா உரிமைக் குடிமக்களையும் பற்றித் தவறாக முடிவு எடுத்திருக்கிறோமோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்.எது எப்படி இருந்தாலும் இவர்கள் நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள், இவர்களுக்கு நாம் உண்மையாக வேலை செய்ய வேண்டும், அதுதான் ஆத்தா நமக்குச் சொல்லிக் கொடுத்தது என்ற முடிவுக்கு வருகிறான்.

“சரிங்கம்மா! நீ சொன்னாப்பலேயே செய்துப்புடறேங்க!” என்று பதில் சொல்கிறான் அழகேசன். ஷிஃபாலி, மேஜையிலிருந்து ஒரு உறையை அவனிடம் நீட்டுகிறாள். அதைப் பணிவுடன் வாங்கிக் கொள்கிறான்.

“இதில் என் கடிதம், உன் வேலைக்கான ஆர்டர், பணம், தஞ்ஜு வருவதற்கான டிக்கெட் இருக்கிறது. வேலைக்கான ஆர்டர் காப்பி இன்னொன்னும் இருக்கு. அதை உன் கம்பெனிக்கு கொடுத்துடு. தஞ்ஜுவில் சந்திக்கலாம்.[வளரும்]

No comments:

Post a Comment