Wednesday, 2 July 2014

தமிழும் நானும்



                  தமிழும் நானும்


நம் இணையவெளி மின்னிதழில் 'தமிழும் நானும்' என்ற தலைப்பில்  தொடர்ந்து உலகெங்கிலும் வசிக்கும் தமிழ்ப் பெருமக்களைப் பேட்டி கண்டு தொடர்ந்து வெளியிட  இருக்கிறோம். அதன் முதல் பதிவாக அரிசோனா மகாதேவன் அவர்களை அணுகினோம்.. மிக்க மகிழ்ச்சியோடு அவர் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி கூறிவிட்டு நேர்காணலைத் தொடங்குகிறோம். அரிசோனாவில் வசிக்கும் திரு.மகாதேவன் அவர்களை உலகறிந்த வலைப்பதிவரும் தேசிய உணர்வும் தமிழுணர்வும் உள்ளவருமான  சங்கர ராமசாமி அவர்கள் மெயில் மூலம் பேட்டி காண்கிறார்.

                                                           

                                                           

                                                    அரிசோனா மகாதேவன்

 சங்கர ராமசாமி:உங்களை தமிழ் ஏன் அவ்வளவு ஈர்க்கிறது?
அரிசோனா மகாதேவன்என்னை தமிழ் ஏன் ஈர்க்கிறது என்று கேட்டால், என்னைப் பற்றி நான் கூறிக்கொள்ளத்தான் வேண்டும்.
எனக்குத் தமிழில் ஆர்வம் வரக் காரணமே என் தாய்வழிப் பாட்டிதான்.  நான் சிறுவனாக, ‘ஒரு கதை சொல்லு பாட்டி!” என்று இரவு படுக்கப்போகும்போது நான் காரைக்குடியில் அவர்கள் வீட்டில், கேட்ட பொழுதெல்லாம், சிறிதும் அலுத்துக்கொள்ளாமல், தனது மடியில் என்னைப் படுக்க வைத்துக்கொண்டு இராமாயணத்தையும், மகாபாரதத்தையும், கந்தபுராணத்தையும், பல நீதிக் கதைகளையும் தமிழில் கரைத்து ஊட்டியவர்கள் அவர்கள்தான்.
சங்கர ராமசாமி: அவர்கள் எப்படிக் கதை சொல்வார்கள்?
அரிசோனா மகாதேவன்:“தேவா, நீ ராமனைப்போல தாய் தந்தையர் சொல்லைத் தட்டாமல் இருக்கவேண்டும், தர்மனைப்போல நல்லதையே செய்யவேண்டும், அர்ஜு னனைப்போல புகழோடு சிறந்து விளங்கவேண்டும், கர்ணனைப் போல தான தர்மங்கள் செய்யவேண்டும்.  பிள்ளையாரைப் போல புத்தியுடன் விளங்கவேண்டும், முருகனைப்போல சக்தியுடன் வளரவேண்டும்!” என்ற ஆசியுடன் கதை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
ஐந்து வகுப்புகளே படித்திருந்தாலும் அவர்களின் தமிழ் அறிவு என்னை வியக்க வைக்கும்.

சங்கர ராமசாமி
சங்கர ராமசாமி: அவர்களுக்கு அந்தத் தமிழறிவு எவ்வாறு கிட்டியது?
அரிசோனா மகாதேவன்:நான் உயர்நிலைப்பள்ளி செல்லத் துவங்கியவுடன், அவர்களது சின்னத் தாத்தா ஆயிரம் விருத்தப் பாக்களில், தமிழில் எழுதிப் பதிப்பித்த “சங்கிரக இராமாயண”த்தை எனக்குப் படித்துக் காட்டி, பதம் பிரித்து பொருள் சொல்வார்கள்.
சங்கர ராமசாமி:சங்கிரக ராமாயணமா? கேள்விப்பட்டதே இல்லை. தங்களிடம் அந்தப் புத்தகம் உள்ளதா?
அரிசோனா மகாதேவன்இன்றும் அப்புத்தகம் என்னிடம் இருக்கிறது.
சங்கர ராமசாமி:அத்தகைய அரிய புத்தகத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த விழைகிறோம்.அதன் செராக்ஸ் பிரதியை இணையவெளிக்குத் தாங்கள் அனுப்பித்தர இயலுமா?
அரிசோனா மகாதேவன்ஓ! தாராளமாக.
சங்கர ராமசாமி.நன்றி. தொடரலாம்
அரிசோனா மகாதேவன் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, தமிழ் இலக்கணப் பாடத்தில் தடுமாறியபோது, என் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள்.  யாப்பிலக்கணம் கூட அறிந்திருந்தார்கள்.  எப்படி இதல்லாம் தெரியும் என்று கேட்டால், “கேள்வி ஞானம்தான்.  கற்றலில் கேட்டல் அறிவு என்று நீ படித்ததில்லையா?” என்று என்னையே திருப்புவார்கள்.  அவரது தமிழ் அறிவு அவர்களது சின்னத் தாத்தா புகட்டிய பாடம் என்று பெருமையுடன் சொல்வார்கள்.
சங்கர ராமசாமி:தங்கள் பள்ளிப்படிப்பு எங்கே நிகழ்ந்தது?
அரிசோனா மகாதேவன்அரசுப் பணி ஆற்றிய என் தந்தை மாற்றல் காரணமாக அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு போக வேண்டி இருந்ததால், நான் காரைக்குடியிலேயே என் தாய்வழித் தாத்தா, பாட்டி, இவர்களின் வீட்டிலேதான் படித்து வளர்ந்தேன். அருகில் இருக்கும் நூலகமான இந்து மதாபிமான சங்கத்தில் எல்லா வார மலர்களையும் அட்டைப்படத்திலிருந்து கடைசி அட்டை வரை படித்து மகிழ்வேன். புதிதாக வந்த வாரமலரை புத்தகத்தை யாராவது படித்துக்கொண்டிருந்தால், அவர் அருகில் உட்கார்ந்து அவர் படிப்பதை நானும் படிப்பேன்.
சங்கர ராமசாமிஎதை வாசிப்பீர்கள்? ஏதேனும் சாய்ஸ் உண்டா?
அரிசோனா மகாதேவன்:விடுமுறை நாள்களைக் கழிக்கச் செல்லும் போது சிவகங்கையில் என் தந்தை வழித் தாத்தா மாலையில் பெரிய நூலகத்திற்கு அழைத்துச் செல்வார்.  அங்கு இருக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிக்க எனக்கு ஆசை.  சிறுவர் கதைகளிலிருந்து, விஞ்ஞானம், ஆன்மிகம், மருத்துவம் என்று, கைக்கு எந்தப் புத்தகம் (தமிழில்தான்!) கிடைத்தாலும் அதைப் படித்து மகிழ்வேன்.அப்பொழுதுதான் கதைகள் எழுதவேண்டும், நான் எழுதுவதும் புத்தகமாக நூலகங்களில் வைக்கப்படவேண்டும் என்ற உந்துதல் என் மனதில் தோன்றியது.

1993ல் ஆஸ்திரேலியாவில் அரிசோனா மகாதேவன்

சங்கர ராமசாமிஅப்போது முதலே கதை எழுதும் பழக்கம் உண்டா? நோட்டுப் புத்தகத்தில் எழுதுவீர்களா?
அரிசோனா மகாதேவன்:நல்ல நோட்டுபுத்தகத்தில் கதை எழுத முடியுமா?  வீட்டுப் பாடங்களை எழுதவேண்டாமா? எனவே, ஒருபக்கக் காகிதங்களைச் சேர்த்து, தைத்துவைத்துக் கொண்டு, அதில் கதைகள் எழுதவேன்.
சங்கர ராமசாமி:பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்ததுண்டா?
அரிசோனா மகாதேவன்:ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தினமணி சுடர் போன்ற பத்திரிகைகளுக்கு அந்தக் கதைகளை நூல் அஞ்சலில் அனுப்புவேன்.  பெரும்பாலும் கிணத்தில் போட்ட கல்லின் நிலைமைதான் என் அனுப்புதல்களுக்கு நேர்ந்தது. ஓரிரு சமயம் “உங்கள் கதை நன்றாக இருந்தாலும், பிரசுரிக்கும் அளவுக்கு இல்லை.  தொடர்ந்து எழுதி, எங்கள் பார்வைக்கு அனுப்பிவையுங்கள்.” என்று பிரிண்ட் அடித்த கார்டு ஒன்று வரும்.
இது சரி வராது என்று என் பள்ளித் தோழர்களைச் சேர்த்துக்கொண்டு, “தாரகை” என்ற கை எழுத்துப் பிரதி ஒன்றை ஆரம்பித்தேன்.
சங்கர ராமசாமி:எப்படி இருந்தது அந்த அனுபவம்?
அரிசோனா மகாதேவன்: நானும், என் நண்பர்களும் சேர்ந்து இருபது முப்பது பக்கங்களை நிரப்பி வழவழவென்ற அட்டை போட்டுத் தைத்து, டிராயிங் மாஸ்டராக இருந்த என் தாத்தாவைக் கெஞ்சிக் கூத்தாடி, எண்ணை வண்ணக் கலவையில் (oil paint) முகப்பு வரையச் செய்து, அருகில் இருந்த படிப்பகத்தில் போடுவோம்.  இரண்டு மூன்று பக்கங்களை வெற்றாக விட்டுவைப்போம், வாசகர் கருத்து எழுவதற்காக. யாராவது நன்றாக இருக்கிறது என்று எழுதிவிட்டால் தலை கால் புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும், கோடி ரூபாய் புதையல் கிடைத்தது போல.இது போதாது என்று வீட்டு வாசலில் “தாரகை பத்திரிகாலயம்” என்ற அறிவிப்புப் பலகையையும் மாட்டி வைத்து, அதைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப் பட்டேன்.
சங்கர ராமசாமி:பிறகு தாரகை என்ன ஆயிற்று?
அரிசோனா மகாதேவன்:பள்ளி இறுதிப் படிப்பின் நெருக்கத்தினாலும், வீட்டில் “படிப்பில் கவனம் செலுத்தாமல், கதை எழுதி என்ன கிழிக்கிறாய்!” என்ற அன்புக் கடிதல்களினாலும், “தாரகை”  பத்து இதழ்களுடன் முடிவை எய்தியது.சில சமயம் என் தங்கை ஒருத்திக்கும், பக்கத்து வீட்டு அக்காவுக்கும் நான் எழுதித் தந்த சிறு கதைகள் அவர்களது பள்ளி மலரில், அவர்கள் பெயரில் வெளியாகி இருக்கிறது.  அதை அவர்கள் என்னிடம் கொண்டு வந்து காட்டியதும், எனது கதையே, குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த ஒரு பெருமையான் உணர்வு தோன்றத்தான் செய்தது.
சங்கர ராமசாமி

சங்கர ராமசாமி:அத்துடன் எழுத்துக்கு தலை முழுகிவிட்டீர்களா?
அரிசோனா மகாதேவன்:இல்லை.காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்தபோது, ஒழிந்த நேரத்தில் இரண்டு நாவல்கள் எழுதினேன். திட்டுவார்கள் என்று வீட்டில் யாருக்கும் நான் நாவல்கள் எழுவதைச் சொல்ல மாட்டேன். வாசகர்கள் என் தங்கையர் இருவர்தான்.  எனக்குத் தெரியாமல் நான் எழுதி வைத்ததைப் படித்துவிட்டுப் பாராட்டினார்கள். “ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பேன்!” என்று என்னை ஊக்குவிப்பார்கள்.  மீண்டும் நாக்கில் சூடு பெற விரும்பாது பாலைக் கண்டால் தூர ஓடிய தெனாலி ராமனின் பூனை போல, பத்திரிகைக்கு அனுப்புவது என்ற சொற்தொடர்களைக் கேட்பதே மிகவும் கசப்பாக இருந்தது.  அந்த நாவல்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களில் ஒன்று மாத்திரம்தான் இன்றும் என்னிடம் இருக்கிறது.  மற்றவை எங்கு போயின என்றே தெரியவில்லை.
சங்கர ராமசாமி: அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வையுங்கள். மீண்டும் படித்துப்பாருங்கள் . ஓர் எழுத்தாளர் உதிப்பது அவ்வளவு எளிதல்ல. அவரை நாடு போற்றாவிட்டாலும் அவர் உற்சாகம் இழக்கக் கூடாது. அந்த உணர்வு தான் இன்று தங்களை தமிழ் இனி மெல்ல எழுதவைத்திருக்கிறது என்பேன்.
அரிசோனா மகாதேவன்:உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி. இனி என் மேற்படிப்பும் தொழிலும் என் எழுத்துக்களை எப்படிப் பாதித்தன என்று கூற விரும்புகிறேன்
[தொடரும்]

1 comment: