மணிரத்னம: |
மணிரத்னம:
தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிப் பிடித்த முன்னோடி மணிரத்னம். தாம் பேசுவதைவிட, தம் படங்கள் பேசவேண்டும்; பேசப்பட வேண்டும் என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். 1983, ‘பல்லவி அனுபல்லவி’ கன்னடத் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் பிரவேசித்தவர். அடுத்த படம் மலையாளத்தில் ‘உணரு’.
உலக சினிமா உயரம் தொட்ட மணிரத்னம்85ல் ‘பகல் நிலவு’ மூலமாக தமிழில் களமிறங்கினார். 86ல், ‘மௌனராகம்’ மூலமாக தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘நாயகன்’ மூலமாக அகில இந்திய வீச்சு கிடைத்தது.
தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் ‘கடல்’ படத்தோடு மணிரத்னத்துக்கும் சினிமாவுக்குமான தொப்புள் கொடி உறவுக்கு வயது முப்பது. இந்தத் தருணத்தில் தாம் வந்த சினிமா பாதையைத் திரும்பிப் பார்த்து, தமது எண்ண ஓட்டங்களை ஆங்கிலப் புத்தகமாகப் பதிவு செய்து, இந்திய சினிமாவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தலைப்பு: Conversations with Mani Ratnam. எழுதி இருப்பவர்: பரத்வாஜ் ரங்கன். பெங்குயின் வெளியீடு. தம் படங்களைப் பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்? ஒரு சுவையான டிரெயிலர்:
விவேகானந்தா கல்லூரியில் பி. காம் படித்த பிறகு, மும்பை சென்று பஜாஜ் இன்ஸ்டிட்டியூட்டில் எம்.பி.ஏ. முடித்து விட்டு, ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அங்கே எனக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும், சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளிக்கூட இல்லை. பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகனும், என் நண்பருமான ரவி சங்கர் தமது முதல் (கன்னட) படத்தை எடுக்க முடிவு செய்த போது, வீணை பாலசந்தரின் மகன் ராமனும், நானும் சேர்ந்து மூவருமாக ஆபீஸ் விட்ட பிறகு மாலை நேரங்களில் சந்தித்து, படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுத முடிவு செய்தோம். ஒவ்வொரு சீன் குறித்தும் கடுமையான விவாதம் நடக்கும். ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டு, ரவிசங்கர் ஷூட்டிங் ஆரம்பித்தார். கோலாரில் படப்பிடிப்பு. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய சீன்களை, கன்னட வசனகர்த்தாவுக்கு விளக்கிச் சொல்வது என் வேலை. முதல் ஷெட்யூல் முடியும் தறுவாயில் ‘எனக்கான இடம் சினிமா’ என்று நான் முடிவு செய்தேன். அப்போது கூட படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி, டைரக்டர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் ‘பல்லவி அனுபல்லவி’ ஸ்கிரிப்ட் ரெடியானபோது, ‘படத்தை நாமே இயக்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.
‘அக்னி நட்சத்திரம்’ படத்துக்கு இளையராஜா ரீ-ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பரான இன்னொரு இசையமைப்பாளர், ‘ இப்படியே படத்தை ரிலீஸ் பண்ணாதீர்கள்! கிளைமாக்சை மறுபடியும் எடுங்கள். இல்லையென்றால் படம் பார்க்கிறவர்கள் கண் வலிக்கிறது என்று சொல்வார்கள். நான் சினிமாவில் பல வருடமாக இருப்பவன். நான் சொல்கிறேன். நீங்கள் தப்பு செய்திருக்கிறீர்கள். படம் வெற்றி பெற்றால், நான் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.
என் படங்களில் வரும் மழைக் காட்சிகளுக்கு (ஜப்பானிய இயக்குனர்) குரசோவாதான் காரணம். அவரது படங்களில் பஞ்சபூதங்களும் உயிரோட்டத்தோடு இடம்பெற்றிருக்கும். மழை, என் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது.
பேபி ஷாம்லிக்கு அப்போது இரண்டரை அல்லது மூன்று வயது. அழகான, ஆரோக்கியமான, துறுதுறு வென்று இருக்கும் அந்தக் குழந்தையை மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடிக்க வைப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வீட்டில் வீடியோவில் ஒருநாள் படம் பிடித்தோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை. ‘அஞ்சலி’ படத்தையே டிராப் பண்ணி விடலாமா என்று யோசித்தோம். அண்ணா நகரில் உள்ள சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, அங்கே இருந்த எஸ்தர் என்ற குழந்தையின் சிரிப்பு, அழுகை, கோபம் என்று விதம் விதமாக இரண்டு மூன்று நாட்களுக்கு கூடவே இருந்து டெஸ்ட் ஷூட் பண்ணினோம். பேபி ஷாம்லிக்கு அதைப் போட்டுக் காட்டினோம். அதன்பிறகு பிரச்னை ஏதுமில்லை.
ரஜினிக்கு என்னோடு பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்துப் படமெடுக்க என்னிடம் கதை இல்லை. ரஜினியை வைத்து வழக்கமான ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ரஜினியின் இமேஜுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் அது என் படமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அப்போது தான் மகாபாரத கர்ணன் ஐடியா எனக்குத் தோன்றியது. என் அண்ணன் ஜி.வி. யோடு போய், ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். உடனே சம்மதித்தார். ‘தளபதி’ இப்படித்தான் ஆரம்பமானது.
‘இருவர்’ படத்தின் ஹீரோயினுக்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, ராஜிவ் மேனன், ஐஸ்வர்யா ராயை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வழிசெய்யும் படம் அல்ல ‘இருவர்’ படம். படத்தில் அவருக்குரிய இருமாறுபட்ட ரோல்களைப் பற்றிச் சொன்னேன். நடிக்க சம்மதமா?’ என்று கேட்டபோது, சினிமாவில் நடிப்பதா? வேண்டாமா? என்று தயக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் ஓ.கே. சொன்னார். அடுத்து, ஆபீசில் டெஸ்ட் எடுத்தோம். தமிழ் வசனம் கொடுத்துப் பேசச் சொன்னோம். முதல் நாள் ஷூட் டிங்கில் ஐஸ்வர்யா ராய் பேசிய ‘எனக்குப் பேசணும்’ என்ற வசனத்தை அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.
ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் ஒரு தம்பதிக்கு, தத்து கொடுக்கப்பட்டது. அதன் வளர்ப்புப் பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றெடுத்தவர்களைக் காட்டுவதற்காக ஃபிலிப்பைன்சுக்கு அழைத்து வந்தார்கள். உணர்ச்சிபூர்வமான அந்தச் சந்திப்பு பற்றி டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதை சுஹாசினி படித்துவிட்டு, என்னிடம் காட்டினார். அதை வைத்து ஒரு படம் எடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் டி.வி. சீரியலில் பிசியாக இருந்ததால், நானே, ஸ்ரீலங்கா பின்னணியில் படமெடுத்தேன். அதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்.’
சீதை கேரக்டருக்கு மிகப் பொருத்தமான முகம் ஐஸ்வர்யா ராய்யுடையதுதான் என்று நான் நினைத்தேன். அதனால்தான் ராவணனில் அவரை நடிக்க வைத்தேன்.
மணிரத்னத்தோடு 100 மணி நேரம்
மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:
நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.
ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்’ படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார்.
ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்.”
-எஸ். சந்திரமௌலி
-நன்றி கல்கி
No comments:
Post a Comment