Tuesday, 30 October 2012

18வது அட்சக்கோடு

அசோகமித்திரன்
18வது அட்சக்கோடு
அசோகமித்திரன் நாவல்


18வது அட்சரேகையில் அமைந்திருக்கும் ஒரு நகரத்தின் கதை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் ஆரம்பிக்கும் கதை காந்தியின் மறைவையொட்டி முடிகின்றது. ஒருவன் கல்லூரி சிறுவனாக ஆரம்பித்து மெதுவாக முதிர்ச்சியடைந்த ஒருவனாக மாறுவதை, நாட்டின் கதையுடன் சேர்த்து நமக்கு கூறுகின்றார். நாட்டின் பிரிவினை மற்றும் சேர்க்கையை பற்றி பேசுவதால், புவியியல் ரீதியான தலைப்பை தந்துள்ளார் போல

இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் போகும் போது நாம் பார்க்கும் முழு இந்தியாவாக விட்டு செல்லவில்லை. ஆங்காங்கு பழைய மன்னர்கள் தனியாக செல்ல நினைத்தனர். வல்லபாய் படேல் என்னும் இரும்பு மனிதர் அனைத்துவித முறைகளை முயற்சித்து இன்றைய இந்தியாவை உண்டாக்கினார். அப்படி போர்க்கொடி உயர்த்திய நிஜாம், இந்தியாவை எதிர்த்து பின் அடிபணிந்த காலகட்டத்தை நாவலின் பின்புலமாக வைத்து, ஒரு கல்லூரி சிறுவன், சிறுவன் என்ற கட்டத்திலிருந்து இளைஞன் என்ற கட்டத்திற்கு முன்னேறுவதை கூறியுள்ளார்.

நிஜாம் தான் ஒரு இஸ்லாமியர் என்ற காரணத்தால் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி இந்துக்கள் பெரும்பானமையாக இருந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கமுன்வரவில்லை . வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கி அல்லது வாங்குவதாக மக்களை நம்பவைத்து தனி நாடாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்தார். படேல் என்னும் மனிதரின் முன்பு அவரின் வேலை பலிக்கவில்லை. இந்திய அரசின் அனைத்துவித தடைகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் வேறு வழியின்றி ஆட்சியை ஒப்படைத்தார்.

நிஜாம் ஒரு பெரிய கஞ்சர் என்று பிரபலம், அதுவும் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அக்கால ரயில்வே உத்தியோகத்தின் பெருமை, பல நாணய முறைகள், யுந்தகால ரேஷன் முறை, என பல விஷயங்களையும் போகிற போக்கில் தெரியவைத்து செல்கின்றார்.

சந்திரசேகரன் இந்தியா சுதந்திரமடைந்த காலத்தில், நிஜாம் தனிநாடு கனவிலிருக்கையில், அவனும் கிரிக்கெட் கனவிலிருக்கின்றான். சந்துருவின் குடும்பம் நமக்கு ஏதும் ஆகாது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். சந்துருவின் அப்பாவின் நண்பர்களில் சிலர் மெதுவாக ஊரை காலிசெய்து போகின்றனர், சிலர் தனி நாட்டு கனவில் திரிகின்றனர், சிலர் சூழ்நிலையோடு ஒத்துபோய் வாழ நினைக்கின்றனர்.  ராஜாக்கர்களால் தாக்கப்படும் சந்துரு முதலில் அங்குள்ள நிலைமையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றான். மெதுவாக சந்துருவின் கவனம் கிரிக்கெட்டிலிருந்து அரசியல் பக்கம் திரும்பி கல்லூரியை புறக்கணித்தல், போராட்டத்தில் இறங்குதல் என திசைமாறி, ஒரு அதிர்ச்சியை சந்தித்து வேறு பக்கம் மாறுவதை, சந்திரசேகரனின் பார்வையிலும், ஆசிரியர் பார்வையிலும் மாறி மாறி பேசுகின்றது.

சந்துருவின் பழைய நினைவுகளை பேசும் போது கதை சந்துரு கூறுவதாகவும், நிகழ்கால நடப்புகள் ஆசிரியர் கூற்றாகவும் போகின்றது. அசோகமித்ரனின் சிறுசிறு வரிகளில் கதை சொல்லும் முறை மிகவும் பிடித்துவிட்டது, அத்துடன் அங்கங்கு இழையோடும் நகைச்சுவை. சந்துருவின் பால்யகால நினைவுகளில் வரும் நண்பர்கள் எதிரிகள், ஒரு சிறுவனின் மனப்பான்மையை அப்படியே காட்டுகின்றார்.
அரசியல் சூழல் மெதுவாக மாறுவதை அண்டை வீட்டுகாரர்களின் மூலமாக நுட்பமாக விவரித்துள்ளார். நிஜாம் கை ஓங்கும் என எதிர்பார்த்து குரல் உயர்த்தும் அண்டைவீட்டுக்காரர், மெதுவாக மாறி ஒடுங்குவது. தமிழ் இஸ்லாமியராக இருந்து உருது பேசும் மற்ற இஸ்லாமியர் போல மாற முயற்சி செய்யும் சந்துருவின் அப்பாவின் இஸ்லாமிய நண்பர், உரக்க வீர வசனம் பேசி ஓடி ஒளியும் நரசிம்ம ராவ், எதைப் பற்றியும் கவலையின்றி மரத்தில் தொங்கும் சட்டைக்காரன், அவனின் சகோதரிகள் என அனைத்து கதாபாத்திரங்களையும் மறக்க முடியாததாக்குகின்றார்

கடைசி காட்சி மனதை நிறைய தொந்தரவு செய்கின்றது. அனைத்து மனிதனிடமும் அடிப்படையில் கொஞ்சமாவது மனிததன்மை இருக்கும், பல காரணங்களால் அது மறைந்து வேறுதுவேஷம் மேலோங்கி நிற்கும். ஆனால் அந்த மனிதத்தன்மை அவனிடம் எப்போதும் இருக்கும், அதை தூண்டிவிட எதாவது ஒன்று தேவை, அதை எப்போது அணையவிடாமல் வைத்திருக்க அவனது சுற்றமும் சூழலும் சரியாக இருக்க வேண்டும். சந்துரு பல நிகழ்ச்சிகளால் மறந்த அந்த உணர்ச்சி அந்த கடைசி நிகழ்ச்சியில், அந்த அதிர்ச்சியால் தூண்டப்படுகின்றது.

நாட்டின் மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் கலவரம் ஏற்படும் போது உண்மையில் பாதிக்க படுபவர்கள் ஒன்றுமறியா அப்பாவிகள்தான். ஒரு மதத்தை சேர்ந்தவன் இன்னொருவனை அடித்தான் என்றால் பதிலுக்கு அடிபடுவர்கள் அடித்தவனல்ல வேறு எவனோ ஒருவன். மதம், ஜாதி என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த வேளையை பற்றி மட்டும் யோசிக்கும் மக்கள்தான் மாட்டிக்கொள்கின்றார்கள்.
தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்களில் இதுவும் ஒன்று 

No comments:

Post a Comment