Wednesday, 3 October 2012

கர்னல் பேசுகிறார் -1

கர்னல் பேசுகிறார் -1
இரண்டு இந்தியப்போர்களில் கலந்து கொண்ட கர்னல் பாவாடை கணேசன் இந்தியா , சுதந்திரம் , நாட்டுப்பற்று என்று சொன்ன மாத்திரத்தில் சிலிர்த்துக் கொள்கிற தேசபக்தராக இருக்கிறார். ஆயிரம் இரண்டாயிரம் லட்சம் கோடி என்று பேரம் பேசி நாட்டையே விற்றுவிடத் தயாராகி வருகிற ஒரு தலைமுறையில் இப்படி ஒரு பழைய தலைமுறைக்காரர் இருப்பது நம்பிக்கையின் தீபம் அணையாது காக்கின்ற திருப்தியைத் தருகிறது . தொடர்ந்து நம் இணையவெளியில் தமது கருத்துக்களை வழங்க இருக்கும் அவரிடம் ஒரு சிறு நேர்காணல்.
#வணக்கம் கர்னல் கணேசன் அவர்களே
வணக்கம்.
#தாங்கள் எங்கே பிறந்தீர்கள் ?
திருவாரூர் மாவட்டத்தில் சன்னா நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தேன்
#பெற்றோர்?
தந்தை பாவாடை, தாய் தெய்வானை
#குடும்பச்சூழல்?
விவசாயக் குடும்பம். சொந்த விவசாயம். நஞ்சையும் புஞ்சையும் கலந்த பத்துப் பதினைந்து ஏக்கர் நிலம் .வசதி என்று சொல்லமுடியாவிட்டாலும் வறுமை இல்லை. இரண்டு அண்ணன்கள்., ஒரு அக்கா, இரண்டு தம்பிகள் ,ஒரு தங்கை , அப்பா அம்மா தாத்தா பாட்டி என்று பெரிய கூட்டுக்குடும்பம்
#எங்கே படித்தீர்கள்?
தொடக்கக் கல்வி சன்னாநல்லூர் , உயர்நிலைப்பள்ளி (ஜில்லா போர்டு ) கழக உயர்நிலைப் பள்ளி நன்னிலம். எஸ். எஸ். எல். சி படித்து முடிந்ததும் ராமநாதபுர மாவட்டத்தில்  செட்டிநாடு என்ற இடத்தில் உள்ள அண்ணாமலை பாலிடெக்னிக்கில் 1958ல் சேர்ந்தேன். மூன்றாண்டுகள்  மாணவர் விடுதியில் தங்கிப்  படித்தேன் .முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். பிறகு வேலை தேடத் தொடங்கினேன்
#அந்தக் காலத்தில் வேலை கிடைப்பது அப்படி ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்பார்களே!
ஆமாம் !தொழிற்கல்வி படித்தவர்கள் அதிலும் முதல் வகுப்பில் தேறியவர்களுக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போதுநிரோனங்கள், பஞ்சாயத்து யூனியன் போன்ற இடங்களுக்கு ஆள் தேவை மிகுதி. அரசாங்கமே நியமன உத்தரவை இண்டர்வ்யூ எதுவும் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் .
#அப்படி உத்தரவுகள் உங்களுக்கும் வந்தனவா? பல உத்தரவுகள் .வந்தன .எதைத்தேர்வு  செய்வது என்று குழம்பினேன்
# எப்படி முடிவெடுத்தீர்கள் ?
மூத்த அண்ணன் அறிவுரைப்படி.
# அவர் என்ன சொன்னார்?
வந்த வேலை வாய்ப்புக்களில் பொதுப்பணித்துறையே சிறந்தது . அவரது அனுபவத்தில் கண்டபடி அதில் தான் வருமானம் கிடைக்கும். இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் சொந்த ஊருக்கருகில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னார். அதையே தேர்வு செய்தேன் 1961ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி பட்டுக்கோட்டை யில் ஸ்பெஷல் மைனர் இரிகேஷன் அதிகாரி என்ற பதவியில் பொதுப்பணித்துறை மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தேன்
#பணியில் சேரும்போது இராணுவத்தில் சேரப்போகிறோம் இரண்டு இந்திய யுத்தங்களில் பங்கேற்று கர்னல் ஆகப்போகிறோம், பிறகு உலகிலேயே மிகமிகக் குளிர் நிறைந்த அண்டார்டிகாவுக்கு பயிற்சி நிலையம் காக்கப் போவோம் என்று நினைத்தீர்களா?
#இல்லை. எந்த விதக் கனவும் இல்லை. செய்யப்போகிற தொழிலை அக்கறையோடும் கண்டிப்பான நேர்மையோடும் செய்ய வேண்டும் என்பது தவிர வேறு எந்த சிந்தனையும் கிடையாது.(வளரும்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பும் சுவையும் நேர்மைக்கும் நடைமுறை வாழ்க்கைக்குமிடையே நடந்த கடுமையான போராட்டத்தில் கர்னலின் அனுபவங்கள் விரிவானவை  அவற்றின் நீளம் கருதி பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். நாளை இரண்டாம் பகுதி வெளிவரும்


No comments:

Post a Comment