Monday, 8 October 2012

திரைகடல் ஓடித் தேடிய அனுபவம் -5

சிங்கை விஜயகுமார் 

திரைகடல் ஓடித் தேடிய அனுபவம் -5

தாய்பேய்-2

  ஒரு சிறு நடுக்கம் தான், இருந்தாலும் முதல் முறை நில நடுக்கம் அனுபவிக்கும்போது ஒரு பதற்றம் தானாக வந்தது. இதய துடிப்பு அதிகரித்தது. ஆனால் அவர்களோ ஏதோ தேநீர் அருந்த வெளியில் செல்வது போல முறையாக மாடிப்படிகளில் பேசிக்கொண்டே இறங்கி வெளியில் வந்தனர். அதற்கெனப் பல முறை டிரில் செய்த பழக்கமாம். சிறிது நேரம் கழிந்த பிறகு மீண்டும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். தாய்பெயில் நில நடுக்கம் என்பது ஏதோ மழை பெய்வது போல ஒரு சாதாரண சம்பவம் – ஆனால் நம்ம ஊரு மழை போல இல்லாமல் வருடத்தில் பல முறை வருமாம்.

   சாமானிய வேலைகள் தொடர்ந்தன. அன்று மேலும் நான்கு கஸ்டமர் மீட்டிங். எங்கு சென்றாலும் ஒரு சிறு குவளையில் – நமது மரச்சொப்பு மாதிரி அளவில் சிறிய கப் – அதில் சுடச் சுட ஏதோ மலையாள நண்பர்கள் வீட்டில் ஓமத்தண்ணீர் கொடுப்பார்களே, அதே போல எதையோ ஊற்றிக் கொடுத்தார்கள். சீனத்து தேநீர் அது. ஆனால் முதலில் அதை அருந்தக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. 

  நீங்களே சொல்லுங்கள்,தேநீர்க் கப்பை வாய் அருகே எடுத்துச் செல்லும் போதே நல்ல மல்லிகை வாசம்! அதுவரை மல்லிப்பூ என்றால் பெண்களின் தலையை மட்டுமே அலங்கரிக்கும் பொருளாய்ப் பார்த்த எனக்கு அதை அருந்தும் பானம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. வெறும் டீ அல்ல, ஜாஸ்மின் டீ. அதே போல கிருசாந்தமம் டீ (மஞ்சள் பூ) என்றெல்லாம் கூட உண்டு. ஏறத்தாழக் கொத்தவால் சாவடிப் பூக்கடையில் பலவகைப் பூக்கள் கொட்டி வைப்பது போல அவர்களின் மணக்கும் பூக்கள் கலந்த தேநீரும் பலவகையாகத் தயார் செய்வார்கள்.

   வாசத்தை வைத்துக் குறைவாக எடை போடக்கூடாது என்பது பின்னர் தான் விளங்கியது. அன்று இரவு ஓட்டலில் திரும்பத் திரும்பப் புரண்டு படுத்துப் பார்த்தும் அதிகாலை நான்கு மணி வரை ஆங்காங்கே குடித்த அந்தச் சிறு குவளைப் பூத்தண்ணீர் நித்ரா தேவியை அண்டவே விடவில்லை. பிறகு அடுத்த நாள் கூட வந்தவர் 'மெதுவாக சும்மா சிப் பண்ணி வெச்சுடுங்க,  இல்லே நீங்க குடிக்கக் குடிக்க அவங்க ரொப்பி வைப்பாங்க!' என்றார். 

  இது தெரியாமல், முந்தைய நாள் மடக் மடக் என்று அவர்கள் கொடுக்கக் கொடுக்கக் கவுத்ததன் விளைவு தெரிந்து ஏம்பா இதை நேத்தே சொல்லி இருந்தால் !!

  தேநீர் பிரச்சனை இப்படி என்றால், சாப்பாடுப் பிரச்சனை அதற்கும் மேல். மேஜை மேலே அனைத்து உணவுப் பொருள்கள் இருந்தும் – கைக்கே எட்டவில்லை. தாய்பெயின் எந்தப் பெரிய உணவு விடுதிகளிலும் ஸ்பூன் போர்க் இல்லவே இல்லை. கெஞ்சிக் கெஞ்சி கேட்டால் குழந்தைகளுக்கு ஊட்டும் பேபி ஸ்பூன் ஒன்று அபூர்வமாகக் கிடைக்கும். ஆனால் அவர்களோ இரண்டு குச்சிகளைக் கொண்டு டேபிளின் நடுவில் குமித்து வைத்துள்ள அனைத்துப் பொருள்களையும் ஓடையில் கொக்கு லாவகமாக மீனைக் கொத்துவது போல சடக் சடக் என்று எடுத்துத் தங்கள் ப்ளேட்டில் போட்டு விளையாடும் காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தாலும் 

  காலியாக இருக்கும்  வயிற்றில் இன்னும் எரிச்சலை கிளப்பியது. குறிப்பாக இள மூங்கில் டிஷ் ஒன்று – இதுவரை நாம் மூங்கிலை டேஸ்ட் பண்ணதே கிடையாதே, அவர்கள் வேறு குட் ஃபார் மேன் என்று அழுத்தி அழுத்திச் சொல்ல, குச்சியை எப்படிப் பிடித்துச் சுழற்றினாலும் வழுக்கி வழுக்கி மாதக் கடைசியில் நண்பர்கள் ட்ரீட் கேட்கும்போதெல்லாம் மணிபர்சில் சிக்கி முரண்டு பிடித்து வெளியே வர மறுக்கும் ரூபாய் நோட்டு போல முரண்டு பிடித்தது.

  அதே சமயத்தில் அனைவரும் மேஜையில் எனது கத்திச் சண்டையை வேறு ஏதோ ஸ்பெஷல் காமெடி ஷோ போல பார்த்துச் சிரித்தனர். இப்படியே சென்றால் டிக்கெட் போட்டுத் தினசரி நான்கு காட்சிகள் என்று ஆகும் நிலைமை. இதை இப்படியே விடக்கூடாது என்ற வைராக்கியத்திலும் இன்னும் ஒரு நாள் இப்படி பட்டினி கிடந்தால் கதை கந்தல் என்று தெரிந்ததும் – அன்று இரவு முழுவதும் ஸ்பெஷல் கிளாஸ் ட்ரெயினிங். 

  ஓட்டலில் ஒரு மேட்ச் பாக்ஸ் மற்றும் அந்தப் பாழாய் போனக் குச்சிகளையும் கடன் வாங்கி இரவு முழுவதும் ப்ராக்டிஸ் – ஒவ்வொரு குச்சியாக வெளியில் எடுத்துப் பின்னர் மீண்டும் உள்ளே போட. முடிவு அடுத்த நாள் சள க் என்று வைத்த மல்லாக்கொட்டையை கூடக் குச்சியில் எடுத்து அரங்கமே அதிரும் அளவிற்குக் கைத்தட்டல் வாங்கினேன். இதைப் பற்றி பின்னர் கேள்விப்பட்ட எனது முதலாளி ‘இதில் அப்படி என்ன அதிசயம். விஜய்க்குப் பசி என்றால் ரெண்டு குச்சி எதற்கு ஒரு குச்சி இருந்தால் கூட அதைக் கொண்டு எப்படியோ சாப்பிட்டு இருப்பானே!!’ என்றார்.

  அதையும் தாண்டி ஒரு பெரும் பிரச்னை வந்தது. அங்கே இரவு உணவு ஆறரை மணிக்கே முடித்து விடுவார்கள். நல்ல பழக்கம் தான் – அதனால் தான் அவர்கள் எல்லோரும் சிக் என்று இருக்கிறார்களோ? நமக்கோ இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டுப் பழக்கம், அதுவும் தாய்பேய்க்கும் இந்தியாவும் உள்ள நேரம் வேறு ஒட்டிக் கொண்டு மணி ஒன்பது ஆக வயிறு கவான் கவான் என்று பசிக்கும். 

  நன்றாகப் பெரிய தட்டில் வீடு கட்டி கைகளால் பிசைந்து உருட்டி பொரியலில் ஒரு புரட்டுப் புரட்டிச் சாப்பிட்ட நமக்குக் குச்சியைக் கொண்டு கொத்திக் கொத்தித் தின்றால் எப்படி! வெளியில் சென்று எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் நம்ம ஊர் மாதிரி கையேந்தி பவன் பொடி தோசை கிடைக்கும் இடமா அது !!

  வெகு தூரம் நடந்தும் ஒரு பிட்சா கடை கூட தென்படவில்லை. அப்போது எதிரில் ஒரு பெரும் கட்டட கட்டுமானப் பணி தென்பட்டது. பெரும் எனபதைக் காட்டிலும் ராட்சச என்றே சொல்ல வேண்டும். நகரின் நடுவில் அப்படி ஒரு கட்டடம் திடீரென விண்ணை நோக்கி அம்பு போலப் புறப்பட்டது. அடுத்த நாள் அவர்களை அதைப் பற்றிக் கேட்டேன். அதுதான் தாய்பேய் 101 என்றாகள். அது என்ன 101 என்று கேட்டதற்கு அவ்வளவு மாடிகள் என்றார்கள். அது வரை சென்னையில் LIC பில்டிங்கின் 15 மாடியையே மல்லாக்கப் பார்த்து பிரமித்திருந்த எனக்கு முதலில் நம்பிக்கை இல்லை. 

  அது மட்டும் அல்ல பூமியின் மேலே தான் 101, கீழே இன்னும் 5 தளங்கள் என்றார்கள். 

""நில நடுக்கம் மிகுதியான ஒரு பகுதியில் அதுவும் நகரின் நடுப் பகுதியில் இப்படி ஒரு பிரம்மாண்ட கட்டடம் எப்படித் தைரியமாகக் கட்டுகிறீர்கள்?" என்று கேட்டேன். 

  இந்தக் கட்டடம் ஒரு இன்ஜினியரிங் மார்வேலாக திகழும். நிலநடுக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் தன்மை கொண்ட கட்டுமானம் இது. கட்டடத்தின் உச்சியில் ஒரு பெரிய உலோக உருண்டை வைக்கப்படும். அது நில நடுக்கம் வரும்போது ஒரு பக்கம் கட்டடம் சாயும் பொழுது மறுபக்கம் சாய்ந்து சரிப்படுத்தும் என்றார்கள். எங்கள் நகரத்தின் பெருமையின் சிகரமாகத் திகழும் இந்தக் கட்டடம் என்று பெருமையாக அவர்கள் கூறும்போது 101 மாடிக்கும் நமது 15 மாடிக்கும் உள்ள வேறுபாடு இன்னும் பெரிதாகத் தெரிந்தது. 

 புவியின் பலவீனத்தால் பீதி அடையாமல் அதை வென்று சாதிக்க எத்தனிக்கும் அவர்களைக் கண்டு வியப்பு வரும் அதே வேளையில் எதையும் எளிதாகச் சாக்கு சொல்லி ஒத்துக்கொள்ளும் நம்மைக் கண்டு துயரமும் வந்தது. நம்மூருக்கு நூறு மாடிக் கட்டிடம் வேண்டாம் ஓட்டை உடைசல் இல்லாத ரோடுகள் வந்தாலே போதும்.

  அவர்களுடன் இருந்த பத்து நாட்களில் நான் அவர்களில் வெகு சில நல்ல அறிவாளிகளை பார்த்தேன். ஆனால் அவர்களையும் சூப்பர் பிரைன் என்று சொல்ல முடியாது. பொதுவாக எல்லோருமே நன்றாக உழைத்தார்கள். நேர்மையாக நடத்தினார்கள். இருந்தும் எப்படி உலகப் பொருளாதாரத்தில் நம் நாட்டைக் காட்டிலும் மேலோங்கி நிற்கின்றனர் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் வந்தது.

  எங்கள் துறைமுகத்தைப் பார்க்கப் போகலாமா என்ற போது உடனே சரி என்றேன். இரண்டாம் உலகப்போரின் போது கீளுங் துறைமுகம் முழுமையாகக் குண்டு மழையின் பாதிப்பில் சிக்கியது.

 பல கப்பல்கள் துறைமுகத்தின் வாயிலில் முழுகடிக்கப்பட்டன. எனினும் போர் முடிந்த உடனே அரசாங்கம் அந்தத் துறைமுகத்தின் செப்பனிடும் வேலைகளை மீண்டும் துவக்கியது. அதை மட்டுமே நம்பி இருக்காமல் கௌசியுங் துறைமுகத்தைத் துவக்கி அதை மிக விரைவில் சரக்குப் போக்குவரத்துக்கு அர்ப்பணித்து, அதற்கு ஏதுவாகப் பல ரயில் மற்றும் ரோடுகள் மூலம் பாக்டரிகளுடன் இணைத்து அதனை உலக அளவில் பெரிய துறைமுகங்கள் வரிசையில் இடம் பிடிக்கச் செய்தது.

துறைமுகத்திற்கு அருகில் பல கோடௌன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பார்க் கட்டி இன்று உலகில் பல நாடுகள் இதனை ஒரு மாடல் துறைமுகமாகப் பார்க்கும் அளவிற்குச் செய்துள்ளனர். அன்று இருந்த சென்னைத் துறைமுகத்தை விடவும் சுமார் நானூறு மடங்கு சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் அந்தத் துறைமுகம், அதன் நவீன யுக்திகள்!! ஒரு பெரிய ஊரைப் போல இருந்தது அந்தத் துறைமுகம்.

சுதந்திரம் கிடைத்து அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆகியும் நாம் கோட்டை விட்ட அந்த வளர்ச்சி நம் கண்முன்னே தெரிந்து இப்போது புரிகின்றது அல்லவா?
(தொடரும்)


No comments:

Post a Comment