Tuesday, 24 June 2014

படிக்க எதற்கு வயது?


               படிக்க  வயது எதற்கு?


74 வயது மாணவர் தமிழ்ச்செல்வன்

[இடதுபுறம்]தேசிய திறந்த நிலைப் பள்ளி,மண்டல இயக்குநர் ,பி.ரவி. [வலதுபுறம்]74 வயது நிரம்பிய ஏ.தமிழ்ச் செல்வனுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்குகிறார் (படம்: ஜெ.கு.லிஸ்பன்குமார்.)

                        ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? 
                         இது பழமொழி. புது மொழி ஒன்று உண்டு. 
                         ஐம்பது என்ன? எழுபத்தி நாலில் கூட வளையும் .
                         ஆர்வமென்ற அடிப்படை போதும ..

நிரூபித்திருக்கிறார்  தேசிய திறந்த நிலைப் பள்ளியில் சேர்ந்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 74 வயது மாணவர் தமிழ்ச்செல்வன்.  

படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஏற்கெனவே 5 பட்டங்களைப் பெற்றுள்ள இவர், சி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தள்ளாத வயதிலும் கல்வி மீது தணியாத தாகம் கொண்ட பெரியவர் தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம். அந்த கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வசதி இருந்தது. பக்கத்து ஊருக்குச் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர குடும்ப பொருளாதார சூழல் இடம் தராததால் 8-ம் வகுப்போடு நிறுத்திவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆபீஸ் பையனாக சேர்ந்தார்.

வேலையில் சேர்ந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. திறந்தநிலை கல்வி திட்டத்தில் நேரடி எம்.ஏ. படிப்புக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை (இப்போது இந்த திட்டம் நடை முறையில் இல்லை) என்பதை தெரிந்துகொண்டார். 8-ம் வகுப்பு முடித்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து 1973-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் நேரடி எம்.ஏ. வரலாறு படிப்பில் சேர்ந்து வெற்றி பெற்றார். இதற்கிடையே, சென்னையில் கூட்டுறவு மேலாண்மை உயர் பட்டயப் படிப்பை முடித்ததால் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளர் வேலை கிடைத்தது. 1989-ல் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

வீட்டில் இருந்தவர், திடீரென சட்டம் படிக்க ஆசைப்பட்டார். 2004-ல் திருப்பதி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. (சட்டப் படிப்பு) ரெகுலர் படிப்பில் சேர்ந்து 2008-ல் வெற்றிகரமாக முடித்தார்.

இளமையில் வறுமை காரணமாக படிக்க முடியாமல் போனதால், வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற லட்சிய வெறி அவர் மனதில் உருவானது. சட்டப் படிப்பை முடித்த கையோடு 2008-ல் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் எம்.காம். சேர்ந்து பட்டமும் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பி.ஜி.எல். பட்டமும் பெற்றார். 

அப்போதுதான் அவரதுஆசை சி.ஏ. படிப்பு மீது திரும் பியது. 2010-ல் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள தென்னிந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்று விசாரித்தார். நேரடியாக பல்வேறு பட்டங்கள் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்காததால் சி.ஏ. படிப்பில் சேர முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கலாம் என்றும் விருப்ப முறையில் தேர்வு செய்யக்கூடிய அந்தப் பாடங்கள் சி.ஏ. படிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஒரு ஊழியர் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பில் தேர்ச்சி

அந்த ஆண்டே தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 10-ம் வகுப்பை முடித்துவிட்டு, 2012-ல் பிளஸ் 2 சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தார். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. கணிசமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் தமிழ்ச்செல்வன்.

இதையடுத்து, சி.ஏ. படிப்பில் சேருவதற்கான முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார். அத் துடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. (புவியியல்) படிக்கும் திட்டமும் அவர் மனதில் உள்ளது. படிப்பு மீது தீராத ஆர்வம் கொண்ட தமிழ்ச்செல்வன், தற்போது ஆந்திர மாநிலம் நகரி யில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.

“படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்போதும். எந்த வயதிலும் படிக்கலாம். படிக்க வயது ஒரு தடையே இல்லை’’ என உற்சாகத்துடன் கூறுகிறார் இந்த 74 வயது மாணவர் தமிழ்ச்செல்வன்.

சென்னையில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மண்டல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தனது பிளஸ் 2 மதிப்பெண் சான்றி தழை வாங்க வந்திருந்தார் பெரியவர் தமிழ்ச்செல்வன். அவருக்கு மண்டல இயக்குநர் பி.ரவி சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அந்த வளாகத்தில் உள்ள அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மாணவர்களிடம் தனது கல்வி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் தமிழ்ச் செல்வன். அவரது பேச்சு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்றார் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.வைத்தியநாதன்.

நன்றி:தி ஹிந்து 


Monday, 23 June 2014

தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடு

ஜோசஃபின்

                                                 பழுப்புப் புரட்சி 

                                தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது 

மதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் 7 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகளை பெற்றுள்ள  திருமதி.ஜோசஃபின் கூறுகிறார் 


எனது பெயர் ஜோசஃபின், மதுரை விவசாய பல்கலைக்கழகத்தில் பயிற்சி எடுத்தேன். 2006 இல், தேன் வளர்ப்பை ஆரம்பித்தேன். முதன் முதல் தேன் பெட்டிகளில் 8கிலோ தேன் எடுத்ததும், அந்த செய்தியை ஒரு நாளிதழில் வெளியிட்டதும், எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்து, இந்த துறையில் நிறைய சாதனை செய்யவைத்தது. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மார்த்தாண்டம், பூனே, பஞ்சாப் போன்ற பல இடங்களுக்கு சென்று,  இந்த தொழிலின் பல நுணு க்கங்களைக் கற்றுக் கொண்டேன்.



முதலில் நான் மட்டும் தான் செய்தேன். ரொம்பக் கடினமாக இருந்தது. தேன் எடுக்கும்போது, தேன் பூச்சிகளிடம் பல கொட்டுகளை வாங்கியுள்ளேன். தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன்களை எடுப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளவே, எனக்கு ஒன்றரை வருடம் ஆகியது. கிட்டத்தட்ட 1000 தேனீக்களிடம் கடி வாங்கிய பின் தான், இந்த ரகசியத்தைத் தெரிந்துக்கொண்டேன். இப்போது அதை நிறைய பேருக்குக் கற்றுத் தருகிறேன். கடந்த 8 வருஷத்தில், 40000 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடுக்கிறார்கள்.


ஜோசஃபின்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, எனது மதுரை வீட்டிலேயே பயிற்சிக்கூடம் அமைத்து, இதில் விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கின்றேன். இந்தப் பயிற்சிக்கு குறைந்தது 100பேராவது வருவர். நான் இதற்காக விளம்பரம் ஏதும் தருவதில்லை, ஏற்கனவே இங்கு வந்து பயிற்சி எடுத்தவர்கள் மூலமாக சொல்லி வருபவர்கள் தான்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் (NATION HORTICULTURE MISSION) கீழ் 50% மானியமாக தேன் கூட்டுடன் சேர்ந்து தேன் சேகரிக்கும் பெட்டியை, அவ்வாறு பயிற்சிக்கு வருபவர்களிடம் கொடுக்கிறோம். அது மட்டுமன்றித் தமிழ்நாட்டில் ஒரு 23 மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கின்றோம். இருந்தாலும், என்னைப் போல் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பேராவது இருந்தால் தான் தமிழகத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியும்.


என்னால் பயிற்சி பெறப்பட்டவர்கள் 362 பேர் தமிழகத்தின் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு சம்பாதிக்கின்றார்கள். இது மட்டுமின்றி எனக்கு சம்பந்தமில்லாத 50000 பேர், மார்த்தாண்டம், கன்னியா குமரி பகுதிகளில் தேனீ வளர்ப்பை மட்டுமே தொழிலாக செய்து வருகின்றனர். 2007இலிருந்து இதை செய்கிறேன். அப்போது ஒரு வருடத்திற்கு 300 முதல் 500 பெட்டிக் கொடுக்க ஆரம்பித்து இன்று 5000 பெட்டிகள் வரைக் கொடுக்கின்றேன். நான் சொல்லித்தரும் அனைவரும் இதில் வல்லுநர் ஆகிவிடுவதில்லை. ஒரு 10000 பேருக்கு பயிற்சிக் கொடுத்தால் 100 பேர் மட்டுமே ஒழுங்காக வேலை செய்து பயன் பெருகின்றனர்.

                                                    தேன் பெட்டி பற்றி 

ஒவ்வொரு தேன் பெட்டியிலிருந்தும் ஒரு மாதத்திற்கும் 2கிலோ தேன் கிடைக்கும், இந்தப் பெட்டியை நான் தான் டிசைன் செய்தேன். ப்ளாஸ்டிக்கில் இல்லாமல் டப்பர்வேரில் இருப்பதால், கிட்டத்தட்ட 25 வருடம் வரை நீடித்து வரும். முன்பிருந்த பெட்டிகளில் இருந்த பல பிரச்சினைகளை நீக்கி, புது யுக்திகள் பலவற்றை சேர்த்துள்ளதால், உலகத்திலேயே முதல்முறையாக இப்படி மிக அருமையான ஒரு டிசைனாக  வெளி வந்துள்ளது.


நிறைய விவசாயிகளை சந்தித்து பெட்டிகள் கொடுக்கிறேன். நிலங்களில் தேன் கூடு இருப்பது, (மகரந்த சேர்க்கையின் மூலம்) 10 முதல் 70% வரை விவசாயிகளுக்கு மகசூல் கூடுகின்றது. நாம் எடுக்கும் இரண்டு கிலோ தேன் முக்கியமல்ல, இந்த தேன் பூச்சிகளினால் கிடைக்கும் அதிக மகசூல் தான் முக்கியம். இதை நன்கு உணர்ந்த பல விவசாயிகள் நன்றாக ஆதரவு தருகின்றனர். இதேக் காரணத்தினால் தான், தோட்டக் கலையில் இதனை மானியத்தில் தருகின்றனர். இப்போது காதியிலும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

: தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது. அதில் 10வகைத் தேன் தனி மலர் தேனாக இருக்கும். அத்தகைய தேன் பூச்சிகள், பருவநிலைக்கு (SEASON) ஏற்றார்போல், வளர்க்கும் இடங்களில், கிட்டத்தட்ட 60% ஒரே மாதிரியான மரங்களில் இருந்து தேனை எடுத்துவரும். உதாரணத்திற்கு இப்போது உள்ள பருவநிலைப்படி நாவல் மரம், முருங்கை மரம், வேப்பமரம் போன்ற மரங்களிலிருந்து தேன் பூச்சிகள் தேனை எடுத்து வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாகவும், ஒவ்வொரு சுவையாகவும் இருக்கும். சில கசப்புத்தன்மையுடன் இருக்கும் தேன், மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக இருக்கும்.

தேனை எடுத்து அதை புட்டியில் (BOTTLE) அடைத்து பல இடங்களுக்கு விற்பனை செய்கிறேன். மதிப்பூட்டியும் ஒரு புறம் செய்கிறேன். அதாவது தேனிற்குள் மாம்பழம், நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றை ஊறவைத்து புட்டியில் அடைத்து தமிழகம் முழுவதும் நமது நிறுவனம் விநியோகிக்கிறது. இந்த பழங்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள என் தந்தையின் தோட்டத்தில் இருந்து, இயற்கை விவசாய முறையில் (ORGANIC FARMING) வருவது கூடுதல் சிறப்பு. பதனச்சரக்கு (PRESERVATIVE) இல்லாமல், துளசித் தேன், இஞ்சித் தேன், பூண்டுத் தேன் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.


நிறையக் குடும்பங்களுக்கு இந்தத் தொழிலை சொல்லித் தருகிறேன். அவர்கள் அனைவரும் இதனால் நல்ல பயன் பெருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள வீடுகளில் இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும், 3பெட்டி முதல் 5பெட்டி வரை வளர்க்கின்றனர். கோயிலைச் சுற்றி பழக்கடைகளும், பூக்கடைகளும் மிகுதியாக உள்ளதால், தேன் மிகுதியாகக் கிடைக்கிறது.

இது ஒரு மிக அற்புதமான தொழில். மருத்துவ குணமுடையத் தேனை சாப்பிடுகிறவர்களுக்கு சளி, காய்ச்சல், மூல நோய், வாத நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்பெறுகிறது. தேனீ விஷ மருத்துவம் (BEE VENOM THERAPHY) இங்கு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் மிக பிரசித்திப்பெற்றது. தேனீ கடிப்பது நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. தீக்காயத்திற்கு கூட த்தேனைத் தடவலாம். செல்களை புதுப்பிக்கவும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் தேன் அருமையாக உதவுகின்றது. மலைத் தேனீயின் விஷம் மட்டுமே ஆபத்தானது.

 எனது பணியைப் பாராட்டி, 17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள் இதுவரைக் கிடைத்துள்ளது. தேன் வளர்ப்பில் மிகப் பெரிய சாதனை செய்ததாக பஜாஜ் நிறுவனம் என்னைப் பாராட்டி “ஜானகி தேவி புரஸ்கார்” விருதும் மூன்று லட்ச ரூபாயும் கொடுத்து பாராட்டியது. எனது மகனின் முகம் முழுவதும் தேன் பூச்சிகளினால் மூட வைத்து “கின்னஸ் சாதனையும்” முயற்சித்தோம்.

: இந்தப் பணியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும். சென்னை மாதிரியான நகரங்களில் கூட வீடுகளில மொட்டைமாடிகளில் வைத்து வளர்க்கலாம். ஒரு “பழுப்புப்  புரட்சி (BROWN REVOLUTION)” செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இத்தனைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றேன், என்னிடமே சிலர், இந்தத் தேன் சுத்தமான தேனா? என்றுக் கேட்பர். அவர்களிடம் எல்லாம், உங்களுக்கே பெட்டித் தருகிறேன், நீங்களே வளருங்கள் என்று கூறுவேன்.

தமிழகம் முழுவதும் வீட்டிற்கு ஒரு தேன் பெட்டி என்பதே என் இலக்கு. இது சமூக ஆரோக்கியத்தையும், இயற்கையையும் கண்டிப்பாகக் காக்கும்.

     நன்றி: bepositive1000@gmail.com

Sunday, 22 June 2014

சூரியக் கதிர்வீசல் திடும்னு அதிகமாகி இருக்கு

                           தமிழ் இனி மெல்ல  

                                                அரிசோனா மகாதேவன்                                                    
                                                   

......தொடர்கிறது

[சென்ற பதிவின் முடிவு]
“ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” 

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து விட்டார்

...இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரது உதவியாளர் உள்ளே ஓடி வந்தாள்.

“இந்த நாயைப் பதவி இறக்கம் செய்து விட்டேன். இனி இவன் எச்சில் தட்டு கழுவும் வேலைதான் செய்ய வேண்டும். வாழ்நாளுக்கும் இனி இவனுக்குப் பதவி உயர்வு கிடையாது என்று பதிந்து கொள். இவனை இனிமேல் “கார்டு”கள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இனி இவன் இந்தி பேசினால் இவன் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும். இவனது வசதியான குடியிருப்பைப் பறித்து கடைநிலை ஊழியனுக்கான குடியிருப்புக்கு மாற்று.” என்று உதவியாளருக்கு உத்தரவிட்டார்.

“ஐயா, இனி எனக்கு இது தேவையில்லை.” என்று தமிழில் பேசிவிட்டு, தன் காதிலிருந்த மொழிமாற்று கருவியைக் கழட்டி, அவரது மேஜையில் பணிவுடன் வைத்துவிட்டுத் திரும்பினான் ஈஸ்வரன். 

அவரது கோபம் இன்னும் அதிகமாகியது. ஏதேதோ கெட்டவார்த்தை சொல்லி அவனைத் திட்டிக்கொண்டு அவன் முதுகில் எட்டி உதைத்தார். எடுபிடி என்பதால் அவனுக்கு உரிமைகளும் இல்லை. அவன் உரிமைக்காக யாரும் பரிந்தும் பேசமாட்டார்கள். எனவே, இந்த அநியாயத்தை மனச்சலனம் துளிகூட இன்றி அவரது உதவியாளர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீழே விழுந்த ஈஸ்வரனுக்கு மூக்கில் அடிபட்டு ரத்தம் ஒழுகித் தரையில் கொட்டியது. தன் அலுவலக அறை ரத்தக் கறை படுவதைக் கண்டு பொருமிய முனைவர், “ஏ குட்டிச் சாத்தானே! உன் எடுபிடி ரத்தம் இந்த உயர்ந்த இடத்தில் பட்டு அசுத்தப் படுத்திவிட்டதே! இதை நன்றாகத் துடைத்து விட்டுப் போ!” என்று கத்தினார். 

பதிலே பேசாமல் அவர் சொன்னதைச் செய்தான் ஈஸ்வரன்.

...ஒரு பெருமூச்சு வெளிப்படுகிறது அவன் நெஞ்சிலிருந்து...

...அவனுக்கு நேர்ந்ததைக் கண்டு துடித்துவிட்டாள் அவனது தாய்.

 “ஏண்டா மகனே! ஏழைசொல் அம்பலம் ஏறுமா? உனக்கு ஏண்டா இந்த வேலை? உனக்கு அவங்க பாஷை தெரிஞ்சதுனாலே நல்லது நடக்கும்னா ஏண்டா அதை விட்டுட்டு நாயடி படணும்? இப்படியா உன் வாழ்க்கையைக் கெடுத்துப்பே?” என்று கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

ஈஸ்வரனின் தந்தை சங்கரன், “பெரியநாயகி, இது என்ன பேச்சு? நம்மை நம் நாட்டிலேயே எடுபிடி ஆக்கினவங்களுக்கு அடிவருடி ஆகணும்னா சொல்றே? இப்படி எல்லாரும் நினைச்சதுனாலதானே நம்ம மொழிக்கு இந்த நிலைமை வந்து சேந்துது?  இந்த நாட்டைக் கட்டி ஆண்டவங்க நாம. இப்ப நம்ம நாட்டிலேயே எடுபிடி ஆயிட்டோம். எதுனாலே? உம் மாதிரி எல்லாரும் உரிமைக்கு குரல் கொடுக்காம பணம், வசதிக்கு பின்னால போனதுனாலேதான். ஏதோ விடாப்பிடியா நம்ம மொழியைப் பேசி வர்றது மட்டுமில்லாம அதை எழுதப் படிக்கவும் தெரிஞ்சு வச்சுக்கிட்டுருக்கோம். அதையும் விட்டுப்புட்டு ஒரேயடியாகத் தலை முழுகிடுன்னு சொல்லறியா?” என்று தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.

ராஜராஜசோழச் சக்கரவர்த்தியின் அரசகுரு கருவூர்த் தேவரின் தங்கை வழித்தோன்றல்கள் அவர்கள் என்பது தெரிந்திருக்காவிட்டாலும் தமிழ் மீது அளவிலாப் பக்தியும் காதலும் கொண்ட அவரது ரத்தம் அவர் உடலிலும், ஈஸ்வரன் உடலிலும் ஒரு துளியாவது ஓடிக் கொண்டுதானே இருக்கிறது? எனவே, தமிழ் மீது இருக்கும் ஈர்ப்பு அவர்களுக்கு எப்படிக் குறையும்?

தந்தையின் துடிப்பு, தவிப்பு ஈஸ்வரனுக்கும் நன்றாகப் புரிந்துதான் இருந்தது. தனக்கு ஏற்பட்ட அவநிலை அவர் மனதை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்றும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் தாயின் மனநிலை தவறு என்று எடுத்துரைக்க அவருக்கு எத்தனை பக்குவம் இருக்கவேண்டும் என்பதைப் பார்த்துப் பெருமை கொண்டான்.

“அப்பா, இவர்கள் என் உடலை வருத்தியிருக்கலாம். என் மனம் என்றும் உறுதியாகத்தான் இருக்கும். நம் தமிழுக்காக உரிமைக் குரல் கொடுத்தேன் என்ற மன நிறைவு இருக்கிறதே, அதை யாராலும் குறைக்கமுடியாது! அம்மா, எனக்காகக் கலங்காதீங்க அம்மா. நம்ம நாட்டிலேயே இப்படி வாழற வாழ்வும் ஒரு வாழ்வா அம்மா? பணம், வசதி கிடைக்கும்னு உன்னை விட்டுட்டு வேற ஒருத்தியை அம்மான்னு கூப்பிட்டு அவ பின்னால நான் போனா நீ எப்படி மனசு வருத்தப்படுவே? நம்ம தமிழை விட்டுட்டு, அதை மறந்து நாமும் மத்தவங்க மாதிரி மாறினா அது நாம தமிழுக்குச் செய்யற துரோகம் இல்லையா அம்மா?” என்று பெரியநாயகியைச் சமாதானப் படுத்த முயன்றான் ஈஸ்வரன்.

“நீங்க ரெண்டு பேரும் சொல்றது எனக்குப் புரியாம இல்லைடா, நான் பெத்த ராசா. ஆனாலும் இப்படி நீ மூக்கை உடைச்சுக்கிட்டு, கண்டவன் கால்ல உதையை வாங்கிட்டு, எல்லாத்தையும் இழந்து வந்து நிக்கறதப் பாத்தா பெத்த வயறு எரியாதாப்பா, ராசா?” என்று அங்கலாய்க்கிறாள் பெரியநாயகி.

“இப்ப ரொம்ப ராஜாமாதிரியா வாழறோம் அம்மா? விட்டுத்தள்ளு. நமக்கு ஒரு நல்ல நிலைமை வராமலா போகும்?” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ஈஸ்வரன். 

அந்த நிலைமை விரைவிலேயே எதிர்பாராத அதிர்ச்சியுடன் வரத்தான் போகிறது என்று யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்...

...மனது ஒருமாதம் முன்பு நடந்ததை அசை போடப்போட, எச்சில் தட்டுகளை கழுவும் இயந்திரத்தில் அடுக்கிவைக்கிறான் ஈஸ்வரன்.

                                                                         * * *
                                                              Highlight 

                                       ஸஹஜாவுக்கு ஸாத்விக்கின் பேச்சு அவ்வளவு 
                                      சமாதானமாகப் படவில்லை. தான் பார்த்தது 
                                      தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றும், 
                                     நிபுணர்களிடம் தெரிவிப்பதுதான் சரி என்றும் 
                                     அவளது உள்மனது கூறுகிறது. மேலிடத்திலிருந்து 
                                      உடனே பதில் வராது. மேலும் நிபுணர்களுக்கு 
                                     இதை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி 
                                     வந்தால் என்ன பதில் சொல்லமுடியும்?
                                     ஒருக்கால் இது ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சியாக
                                      இருந்து விட்டால்? ..

                                 கொட்கல் விண் நோக்கு நிலையம்

                                       பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411

கண்களைக் கசக்கிக் கொண்டு கணிணியில் தெரிந்த விவரங்களைப் பார்க்கிறாள் ஸஹஜா. இது உண்மையாக இருக்க முடியுமா என்ற கேள்வி அவனுக்குள் எழுகிறது. உடன் வேலை செய்யும் ஸாத்விக்கை அழைக்கிறாள்.
“என்ன ஸஹஜ், என்ன வேணும்? ஒரே பரபரப்பாக இருக்கியே?” என்றவாறு அவள் அருகில் வருகிறான் ஸாத்விக்.

“ஸாத்வ், இந்த டேட்டாவைப் பார். ஒரே குழப்பமாக இருக்கு. சூரியக் கதிர்வீசல் (solar flares) திடும்னு அதிகமாகி இருக்கு. இது தவிர, சூரியன் பின்னாலேந்து ஏதோ கோடு கோடாகத் தெரிகிறதே, அது என்ன? அது சூரியனிடமிருந்து வருவதாகத் தெரியவில்லை. கொஞ்சம் பாரேன்...” என்று கணிணியில் தெரிந்த புள்ளிவிபரக் காட்சியின் ஒரு பகுதியைக் காட்டுகிறாள் ஹைஜா.

“ம்,” என்று பேனாவை வாயில் கடித்தபடியே உற்று நோக்குகிறான் ஸாத்விக். அவன் நெற்றியில் கோடுகள் கீழும் மேலும் எழுந்து வளைகின்றன. பேனாவால் உச்சி மண்டையில் இரண்டு தட்டுத் தட்டிக் கொள்கிறான்

. “ஸஹஜ், இரு, இந்தக் கோடுகள் நிஜமா, இல்லே ஸ்டாடிக்கா (static)  என்று சரி பார்த்துடறேன்.” என்று கணிணியில் இணைத்திருந்த ஒரு கருவியைக் காதில் மாட்டிக் கொள்கிறான்.

அது ஒரு மூக்குக் கண்ணாடியை ஒத்திருக்கிறது. அதிலிருந்து ஒரு சிறிய குழல் அவன் வாய் வரை வந்து தொங்குகிறது. வலது காதுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பொத்தானைத் தட்டி, கையில் இருந்த பேனாவால் ஏதேதோ சைகை செய்கிறான். அவர்களுக்கு முன்னால் ஒரு ஹோலோ கிராம் விரிகிறது. அதில் உள்ள கோடுகள் சூரியனுக்குப் பின்னால் இருக்கின்றன. பேனாவினால் மீண்டும் சைகை செய்கிறான். ஆனாலும் கோடுகள் விரிவடையவில்லை. ஆனால், அவைகள் கொஞ்சம் அசைவது போலத் தோன்றுகிறது.

“ஸ்டாடிக் என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை...” என்று இழுத்தவன், மீண்டும் பேனாவினால் சைகை செய்கிறான். இருந்தபோதிலும் கோடுகள் விரிவடையவில்லை. அசைவுகள்தான் தெரிகின்றன. “இது என்னை மீறிய ஃபினாமினன் (நிகழ்ச்சி) ஸஹஜ். மேலிடத்திற்குத்தான் தெரியப்படுத்த வேண்டும்.”

“ஸாத்வ், எக்ஸ்பர்ட்ஸ்களிடம் தெரியப்படுத்தாமல் மேலிடத்திற்கு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டுமா? மேலிடத்தில் மேற்கொண்டு கேள்வி கேட்டால் என்ன செய்வது?” என்று இழுக்கிறாள்.

“அப்பொழுது எக்ஸ்பர்ட்ஸ்களிடம் எடுத்துக்கொண்டு போவோம். இது பெரிய நிகழ்ச்சியாக இருந்தால் நமக்குத்தானே பேர் கிடைக்கும்!” என்று சாதுர்யமாகப் பேசுகிறான் ஸாத்விக். “மேலிடத்திலிருந்து பதில் வருவதற்குள் இதற்கு விடை கிடைத்து விட்டால் நமக்குப் பதவி உயர்வு கிடைத்தாலும் கிடைக்கலாமல்லவா?”

ஸஹஜாவுக்கு ஸாத்விக்கின் பேச்சு அவ்வளவு சமாதானமாகப் படவில்லை. தான் பார்த்தது தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றும், நிபுணர்களிடம் தெரிவிப்பதுதான் சரி என்றும் அவளது உள்மனது கூறுகிறது. மேலிடத்திலிருந்து உடனே பதில் வராது. மேலும் நிபுணர்களுக்கு இதை ஏன் தெரிவிக்கவில்லை என்று கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லமுடியும்?

ஒருக்கால் இது ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சியாக இருந்து விட்டால்? 

எது எப்படி இருந்தாலும் இந்தக் கோடுகளைத் தொடர்ந்து கவனித்து வரலாம் என்று முடிவு செய்துவிட்டு, அரைகுறை மனத்துடன் ஸாத்விக்குக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

இந்த உரையாடல் “கொடைக்கானல்” என்று அழைக்கப்பட்ட “கொட்கல்” வான ஆய்வு தொலைநோக்கிக் கூடத்தில் நடைபெறுகிறது. தென் பாரதத்தின் தலைமை வானஆராய்ச்சி மையம் “காரைகட்” (இருபதாம் நூற்றாண்டுக் காரைக்குடி)டில் மிகப் பெரிதாக நிறுவப்பட்டிருக்கிறது. அங்குதான் ஸாத்விக் குறிப்பிட்ட மேலிடம் இருக்கிறது.

கிட்டத்தட்ட எண்ணூறு ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த மையத்திற்கு உலகத்தைச் சுற்றிவரும் ஏராளமான செயற்கைக் கோள்களில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது தவிர பாரதத்தில் பல இடங்களில் மலை உச்சிகளில் நிறுவப்பட்டிருக்கும் தொலைநோக்கிக் கூடங்கள் காரைகட் மையத்திற்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு நிபுணர்கள், ஐயாயிரத்து அறுநூற்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், நூற்றைம்பது மேலதிகாரிகள், இவர்களுக்கு உதவி செய்யும் “எடுபிடிகள்” என்று நிறையப் பேர் அங்கு பணிபுரிகிறார்கள். உலகத்திலேயே தலைசிறந்த வானஆராய்ச்சி மையமாக அது திகழ்கிறது.

இந்த மையத்திலிருக்கும் ஒரு மேலதிகாரியிடம்தான் ஸஹஜாவும், ஸாத்விக்கும் தாங்கள் பார்த்த கோடுகளைப் பற்றித் தெரிவிக்கத் திட்டம் தீட்டி விபரம் அனுப்பியிருக்கின்றனர். பொதுவாக “முக்கியம்” என்று குறியிட்டு அனுப்பியிருந்தால் அவருக்கு உடனே விஷயம் போயிருக்கும். ஆனால் “பார்வைக்கு மட்டுமே” என்று குறியிட்டு அனுப்பியதால் அவரே வந்து நேரில் பார்க்கும்வரை அவரது அலுவலகத்தில் அந்த கணிணி அஞ்சல் காத்துக் கிடக்கிறது.
[தொடரும்]

Saturday, 21 June 2014

பணத்திற்கு அடிமையாகிப் பேச்சையே இழந்துவரும் தமிழ்



                             தமிழ் இனி மெல்ல  

                                                அரிசோனா மகாதேவன்                                                    
                                                   

......தொடர்கிறது

[சென்ற பதிவின் முடிவில்.. ஏகாம்பரநாதனைப் பார்த்தால் நிமிஷாவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மெலிந்த தேகம், எலும்பும் தோலுமான உடம்பு, சுருள்சுருளான பரட்டைத்தலை, கருகருவென்ற துருதுருப்பான கண்கள். தொளதொளவென்ற அரை-டிராயரும், பெரிதான, சாயம் போன சட்டையையும் அணிந்து கொண்டிருக்கிறாள். அவளை வைத்த கண் வாங்காமல் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
“எலே ஏகாம்பரம், நான் சொன்னேனே, அந்த நிமிசாம்மாடா இவங்க. இவங்க வூட்டுலதான் ரெண்டுநாள் இருக்கப் போறோம். வணக்கம் சொல்லிக்கோடா” என்று அவனை மெதுவாக இடிக்கிறாள் காமாட்சி]

“வணக்கம் நிமிசாக்கா” கைகூப்புகிறான் ஏகாம்பரநாதன். அவன் கண்களில் ஒரு நன்றியுணர்வு பளிச்சிடுவதைக் காண்கிறாள் நிமிஷா. “நிமிசாக்கா” என்பது தன்னைத்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் அவனைக் கனிவுடன் பார்க்கிறாள்.

“உன் பேர் என்ன?” என்று வினவுகிறாள்.

அவனுடைய தமிழ் மொழிமாற்று கருவி மூலம் அவனுக்கு இந்தியாகப் புரிகிறது. ஆனால் அவளுடைய  இந்தி அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான்.

“ஏகாம்பரநாதன், நிமிசாம்மா, ஏகாம்பரம்னு நாங்க கூப்பிடுவோம்.” என்று அவன் சார்பில் பதிலளிக்கிறாள் காமாட்சி.

“பேர் ரொம்பப் பெரிசா இருக்கு. நான் “ஏக்ஸ்”னுதான் கூப்பிடப் போறேன். இரு இரு, நான் டாக்டரோட இவனை செட்டப் செய்து என்ன ட்ரீட்மென்ட்னு கேட்கிறேன்” என்று அங்கு தென்புறச் சுவற்றில் பதித்திருக்கும் போர்டில் இருக்கும் ஒரு பச்சைப் பொத்தானை அமுக்குகிறாள். சுவரில் ஒரு மருத்துவரின் அலுவலகப் படம் தோன்றுகிறது.

ஒரு மருத்துவர் அப்படத்தில் தோன்றுகிறார்.

“ஹாய் நிம்ஸ். என்னம்மா வேணும் உனக்கு? உடம்பு சரியாக இல்லையா?” என்று கனிந்த குரலில் விசாரிக்கிறார்.

“ஐ ஆம் ஆல்ரைட் டாக்டர். இந்த மின்யன் பையனுக்குத்தான் உடம்பு சரியில்லை. நீங்கதான் கொஞ்சம் ஹெல்ப் செய்யணும்” என்று கொஞ்சுகிறாள் நிமிஷா.

“அவளை ஹூக்கப் செய், நிம்ஸ்” என்கிறார் மருத்துவர்.

ஏகாம்பரத்தின் வலது புறங்கையில் மேல் ஒரு பட்டையைக் கட்டுகிறாள் நிமிஷா. அதிலிருந்து ஒரு கம்பி துருத்திக் கொண்டிருக்கிறது. அது ஏகாம்பரத்தின் கணிணி எண், அவனது உடல் நிலை பற்றி மின்னலைகள் மூலமாக மருத்துவருக்குச் செய்தி அனுப்புகிறது. அவர் சில நிமிடங்கள் தன் கணிணியில் கவனமாகக் கவனிக்கிறார்.

“நிம்ஸ், இந்தப் பையனுக்கு பசியின்மைதான் குறை. நிறைய சத்துணவு கொடுத்தால் போதும். தேறிவிடுவான். என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்று உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இரண்டு நாளில் சரியாகி விடும்” என்று சொல்லிப் புன்னகை செய்கிறார். அத்துடன் அவரது நிழற்படம் சுவரில் மறைந்து விடுகிறது.
                                                   * * *

                                                            Highlight 

[“ஐயா, ஸம்ஸ்கிருதம் செத்த மொழிதானே! இருந்தபோதிலும் அது உயர்மட்டத்தில் வைக்கப்படவில்லையா?அதைப்பற்றி ஆராய்ச்சிகள் இன்றும் செய்யப் பட்டு வருகின்றனவே!

“முட்டாள்! திருட்டுப் பயலே! தேவ மொழியான, வேதமொழியான ஸம்ஸ்கிருதத்தை செத்தமொழி என்று சொல்ல உனக்கு எத்தனை துணிச்சல்? அதுவும் தமிழும் ஒன்றா? பாரதம் முழுவதும் இன்றும் உயர்வாகப் போற்றப் படுகிறது ஸம்ஸ்கிருதம்

...“ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” ]



                                                  அத்தியாயம் 2

                                    ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜு
                                 பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411

 இரண்டு நாள்களில் திரும்பி வந்து விடுவதாகச் சொன்ன ஷிஃபாலியை, ஆறு நாட்களுக்கு மேல் தங்க வைத்து விடுகிறது அவளுடைய வேலை. எனவே, ஷிபாலி காமாட்சியையும், அவள் தம்பியையும் தன் வீட்டிலேயே நிமிஷாவுக்குத் துணையாக இருக்கும்படி கட்டாயப் படுத்துகிறாள். ஏகாம்பரநாதன் உடல்நிலை தேறிவருவதற்கு ஷிஃபாலியின் வீட்டில் தங்கியிருப்பது உதவியாக இருக்கும் என்பதால் அதற்கு ஒத்துக் கொள்கிறாள் காமாட்சி. நிமிஷாவின் உதவியுடன் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கிறாள். பெரிய இடத்தில் வசதியாகத் தங்கியிருக்கட்டும் என்று அவள் பெற்றோர்களும் சம்மதித்துவிடுகின்றனர்.

“மிஸ்டர் லீ, இந்தத் திட்டத்தில் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைப்பது கஷ்டம்.” என்று தன்னம்பிக்கையுடனும், தன்னால் இப்படி ஒரு பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடிந்தது என்ற கர்வத்துடனும் சொல்கிறாள் ஷிபாலி. கம்பெனியின் பாரதக் குழுவுக்கு இந்த இளம் வயதிலேயே தலைவியாகி விட்டாளே, கர்வம் இல்லாமலா இருக்கும்!
“மிஸ் ஷிஃப்ஸ், ஏன் இப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டதும், மிகவும் உற்சாகத்துடன் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கிறாள்.

லீ அவளது அறிவுத் திறனை வியப்பாகக் கவனிக்கிறார். அரை மணி நேர விளக்கத்திற்குப் பிறகு அவளது முடிவை ஏற்றுக் கொள்கிறார். ”மிஸ் ஷிப்ஸ். எக்ஸலன்ட், எக்ஸலன்ட்! உங்கள் ஐடியா நூத்துக்கு நூறு கரெக்ட். இந்த ப்ராப்ளத்தை எப்படி ரெக்டிபை செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?”

ஷிஃபாலி வானத்தில் மிதக்க ஆரம்பிக்கிறாள். மிஸ்டர் லீ தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கிறார் என்பது அவளுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இது பதவி உயர்வுக்கு வழி வகுக்குமே!

“மிஸ்டர் லீ! நான் சொல்லும் மாற்றங்களைச் செய்தால் திட்டம் இரண்டு மாதம் முன்னதாகவே முடிந்து விடும். திட்டச் செலவும் பத்து பெர்ஸெண்ட் குறையும். அதுமட்டுமல்ல, இரண்டு மாதங்கள் முன்னால் நமது பொருள் மார்க்கெட்டுக்கு வருவதால் நம் கம்பெனிக்கு அதிக லாபமும் கிடைக்கும். கல் ஒன்று, மாங்காய் ரெண்டு மாதிரி..” என்றுஆரம்பிக்கிறாள். மதிய உணவையும் சாப்பிட்டுக் கொண்டே கூட்டம் தொடர்கிறது. கூட்டம் முடியும் பொழுது மாலை ஆறு மணி ஆகி விடுகிறது. இரு தரப்பாருக்குமே மிகவும் நிறைவான வகையில் முடிவுகள் எடுக்கப் பட்டதனால் அங்கு ஒரு மகிழ்ச்சி நிலவுகிறது.

“மிஸ் ஷிப்ஸ். இந்த நல்ல முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன். ஐ ஆம் வெரி எக்ஸைடெட். இந்த அக்கேஷனை நன்றாகக் கொண்டாட வேண்டும். என்ன செய்யலாம்? நீங்களே சூஸ் செய்யுங்கள். மிகவும் பெரிய முறையில் கொண்டாடுவோம்.” மகிழ்ச்சி கலந்த உற்சாகத்தால் ஷிபாலியின் கைகளைப் பிடித்துக் குலுக்கியவர் அப்படியே சேர்த்து அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பில் தன் தந்தையைக் காண்கிறாள் ஷிஃபாலி.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “மிஸ்டர் லீ, இந்த தஞ்ஜுவில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய கோவில். ஆயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அதுதான் இங்கே பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். நைட் லைட் அரேஞ்ச்மென்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ட்ரெடிஷனல் டான்ஸ், மீல்ஸ் எல்லாம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக ஃபீல் பண்ணுவீர்கள். எல்லோருமே போய் என்ஜாய் செய்துவிட்டு வரலாமே!” என்று சிபாரிசு செய்கிறாள் ஷிஃபாலி.

“மை டியர் ஷிப்ஸ், அப்படியே செய்யலாம்!” என்கிறார் லீ. இருபத்தைந்து பேர் அடங்கிய குழு உல்லாசத்துடன் அந்த முப்பத்தைந்து மாடிக் கட்டிடத்தை விட்டுக் கிளம்புகிறது.
               
                                                                 * * *

                                              பெரிய கோவில், தஞ்ஜு
                               பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411
தஞ்சைப் பெரிய கோவில் ஒரு திருவிழாக் கோலம் கொண்டிருக்கிறது. கட்டி முடித்த ஆயிரத்திநானூறு ஆண்டுகளில் கோவில், பெரிய நந்தி, நுழைவாயில்கள், மதில்கள் இவற்றில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அதன் சுற்றுப்புறம் மிகவும் மாறிவிட்டிருக்கிறது.

உள்ளே பெரிய அரங்கம் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. விளக்குகள் கோவில் கோபுரத்தில் பலவித வண்ணங்களை மாறிமாறி வீசிக் கொண்டிருக்கின்றன. கண்ணைக் கவரும் அலங்காரத்துடன் கூடிய அழகிய பெண்களின் நடனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கு மேஜை நாற்காலிகள் போடப் பட்டுள்ளன. அதில் பரிமாறப்பட்டு வரும் உணவின் பசியூட்டும் மணம் நாசியைத் துளைக்கிறது. அந்த மணம், ஏற்கெனவே  நிறையச் சாப்பிட்டு வந்தவர்களுக்கும் உண்ணவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. உள்ளே நுழைவதிலிருந்து வெளியே வரும்வரை மின்நடைகள் (moving platforms) போடப்பட்டு அவற்றில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

உள்ளே நுழையும் போதே, அனைவருக்கும் விளக்கம் கேட்க வசதியாக இருக்கவேண்டி காதுக்கருவிகள் கொடுக்கப்படுகின்றன. மின்நடையில் ஏறி அமர்ந்து கொண்டவுடன் நாற்காலிகள் மெல்ல நகர்ந்து செல்ல ஆரம்பிக்கின்றன.

ஓர் இனிய பெண்குரல், “அன்பர்களே! தஞ்ஜூ பெரிய கோவிலுக்கு உங்கள் அனைவரையும் சுற்றுலாக் குழு வரவேற்கிறது. இந்தக் கோயில் ராஜ்ராஜ் சோழக் சக்கரவர்த்தியால் பொது ஆண்டு ஆயிரத்துப் பத்தில் கட்டப்பட்டது. இங்கு இருக்கும் சிவலிங்கம் மிகவும் பெரியது. இந்தக் கோவிலின் உச்சியில் இருக்கும் கலசக் கல்லை பதினாறு கிலோமீட்டர் தூரம் சாய்தளம் அமைத்து மேலே கொண்டு சென்றார்கள். அக்காலத்து மக்கள்...” என்று வர்ணித்துக்கொண்டே போகிறது.

“முன்பு ஐந்து கால பூசைகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சகர்களை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வராத காரணத்தாலும், அர்ச்Œகர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராததாலும்,  மக்களிடையே அவர்களுக்கு மதிப்புக் குறைந்து போய்விட்டதாலும், இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் கடைசியில் அர்ச்சகர் கல்வி கற்க முன்வருவோர் மிகவும் குறைந்து போய் விட்டனர். கடந்த இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக அர்ச்சகர்கள் இல்லாது போய்விட்டதால், கோவில்களில் ஆகம முறைப்படியான பூசைகள் நின்று விட்டன. இதனால் தற்பொழுது புராதன வழிபாடுகளும் விழாக்களும் நடப்பது நின்று போய்விட்டன.

“எனவே, எல்லாக் கோவில்களிலும் தெய்வச் சிலைகளை நன்கு துடைத்துப் பராமரிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப் பட்டனர். பாரத தேசத்தின் பாதுகாப்புத் திறன் குறித்த சிறப்பினால் தெய்வச் சிலைகளைத் திருடுவது பற்றி யாரும் கனவில்கூட நினைப்பது கிடையாது. முப்பரிமாண அலை வரிசைகள், ஹோலோகிராம் டிரான்ஸ்மிஷன் ஆகிய முன்னேற்றத்தால், வீட்டில் இருந்த படியே எந்தக் கோவிலில் இருக்கும் கடவுளரையும் வணங்கவும், பூசை செய்யவும் வசதியாகி விட்டது. இதனால் கோவில்களுக்கு வழிபாட்டாளர்கள் வருவதும் குறைந்து வந்து நின்றும் போய்விட்டது. இதே நிலைமைதான் மற்ற பிற சமய வணங்குமிடங்களான மசூதிகளுக்கும், தேவலாயங்களுக்கும் ஏற்பட்டது. இதனால்தான் இவை எல்லாம் சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டு விட்டன.

“கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் என்ற ஒரு மொழியில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இப்பொழுது இவற்றின் மொழிபெயர்ப்புகள் இணைய நூலகங்களில் இருப்பதால், அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

“கோவில்கள், மற்ற சமய வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு விட்டாலும் அவைகளின் பழம் பெருமைகளை உணர்த்தும்படியாகவே சுற்றுலா நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சிகளை நிதானமாக அனுபவித்து மகிழுங்கள்!” என்று அந்தப் பெண்குரல் வரவேற்புரையை முடிக்கிறது.

நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. ஷிஃபாலியுடன் வந்த குழுவினர் நிகழ்ச்சிகளை நன்றாக அனுபவித்து மகிழ்கின்றனர். ஷிஃபாலிக்கு ஒரே பெருமை. தன் மதிப்பு வேலை விஷயத்தில் மட்டுமல்லாமல், மனித உறவு விஷயத்திலும் கூடுகிறது என்பதல் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை உறுதி படுத்துவதுபோல இருக்கிறது. லீ சொல்லிய ஒரு விஷயம்.

“மிஸ் ஷிப்ஸ், இந்த திட்டத்திற்கு திறமையாக வழிகாட்ட நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டவே இந்தக் கம்பெனி ஒரு முடிவு எடுத்திருக்கிறது...” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறார் லீ. ஷிஃபாலி ஆவலுடன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள்.

“இந்த திட்டத்திற்கு உங்களையே தலைவியாக நியமிப்பது என்று தீர்மானம் எடுத்து இருக்கிறோம். நீங்கள் இதை மறுக்கக் கூடாது. ஓ.கே?” என்று கட்டை விரலை உயர்த்திச் சைகை செய்கிறார்.

ஷிஃபாலி மகிழ்ச்சியால் திக்கு முக்காடுகிறாள். இப்படிப்பட்ட பதவி உயர்வை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

நன்றி பெருக்கெடுத்தோடும் குரலில், “ஷ்யூர் மிஸ்டர் லீ. உங்களை நான் மிகவும் பெருமைப்படச் செய்வேன். இத் திட்டத்தின் தலைவியாக எனக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றுவேன்!” என்று தன் கட்டை விரலையும் உயர்த்தி பதில் சைகை செய்கிறாள்.

ஆனால் அவர் அடுத்தபடி சொன்ன விஷயம்தான் அவள் மகிழ்ச்சியை ஊசி குத்தப்பட்ட பலூனினுள்ளே இருக்கும் காற்றைப் போல அவளுள்ளிலிருந்து வெளியேற்றிவிடுகிறது.
* * *
அங்கு நடக்கும் கோலாகலங்களுக்காக “எடுபிடி” வேலை செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் அமைதியாகச் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவுவதற்காக அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும் சுற்றுலா நிகழ்ச்சிகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சில் உணர்ச்சி பொங்கி பொங்கி அடைக்கிறது. தக்கண்கண்டில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் அவனும் ஒருவன்.
தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த சுவரில் சிறப்புக் காறைப் பூச்சுப் பூசி அதன் மீது பலவண்ணக் கலவைகளால் ஓவியங்கள் வரையப் பட்டபோது தன் உடலின் மீதே யாரோ காறைப் பூச்சுப் பூசியது போல மூச்சுத் திணறியது அவனுக்கு. தமிழைக் கொல்வதற்கென்றே உயிருடன் சமாதி கட்டி அவளைப் பிற்காலத்தில் யாரும் அறிந்துகொள்ளக் கூட முடியாது செய்கிறார்களே என்று அவன் துடித்ததை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

பிற்காலத்தில் மறந்துகூட தமிழ் உயிர்பெற்று வளரக்கூடாது என்பதற்காகத்தான் உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பு இல்லைதான். தட்டுத் தடுமாறி தானாகவே இந்தி கற்றுக் கொண்டவன் அந்த முடிவுக்கு எதிராக பெரியகோவில் சுற்றுலா மட்டத்துத் தலைவருடன் பேச அனுமதி பெற்றதை நினைவு கூர்கிறாள்...

...அவனுக்கு இந்தி பேசத் தெரியும் என்பதே அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்தி பேசத் தெரிந்த எடுபிடி என்பதால் அவன்மீது இரக்கம் கொண்டு அவனைக் காண அனுமதி தந்தார் அவர். ஆனாலும் அவன் வந்த காரணம் தெரிந்ததும் அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

“ஈஸ்வ், நீ நல்ல உழைப்பாளி என்பதால்தான் உனக்கு ஐந்து ஆண்டுகளில் மூன்று பதவி உயர்வுகள் தந்து கடைநிலை எடுபிடியாய் இருந்த உன்னை சூப்பர்வைஸர் ஆக்கி இருக்கிறோம்.” அவனுடைய ஆவணங்களை தன் ஒளி ஈர்ப்புக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டே பேசுகிறார் அவர், “நீ நாட்டு மொழியான இந்தியைத் தானாகவே கற்று கொண்டு விட்டாய் என்பது உன்னை எடுபிடி நிலையிலிருந்து உயர்த்திவிடும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன். நீ நினைத்தால், உன் பழைய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு பாரத முன்னேற்றப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டால், நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு முன்னேறலாம். அதை விட்டுவிட்டு, செத்த மொழியான தமிலை வளர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதை நாங்கள் நல்லபடி எடுத்துக் கொள்ள முடியாது.” பெரிதாக இரைந்தார், சுற்றுலாக்குழு முனைவர்.

“ஐயா, ஸம்ஸ்கிருதம் செத்த மொழிதானே! இருந்தபோதிலும் அது உயர்மட்டத்தில் வைக்கப்படவில்லையா?அதைப்பற்றி ஆராய்ச்சிகள் இன்றும் செய்யப் பட்டு வருகின்றனவே! அந்த அளவுக்காவது இல்லாவிட்டாலும் தமிழை அடையாளம் தெரியாமல் அழிக்கவேண்டாமே! தமிழ்க் கல்வெட்டுகள் மீது காறையைப் பூசவேண்டாமே! கெஞ்சினான் ஈஸ்வரன்.

இதைக் கேட்ட முனைவர் தீயை மிதித்தவர் மாதிரி அலறினார்.

. "பணம் வருகிறதே என்று அடகு வைக்கப்பட்டு பேச்சைக்கூடக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது உன் தமிழ்.“பாரதத்தின் பெருமைகள்  மறைந்து போய் விடக்கூடாதே  என்று - போனால் போகட்டும்என்ற எண்ணத்தில்  - கோவில் கல்வெட்டுகளைப் படம் எடுத்து அதற்கு மொழிபெயர்ப்பும் செய்து கணிணி மையத்தில் ஏற்றி வைத்திருக்கிறோம். நீ தேவைக்கும் அதிகமாகவே தெரிந்து  வைத்திருக்கிறாய். ஒரு எடுபிடி நாய்க்கு இவ்வளவு சலுகை கொடுத்துப் பேசியதே என் தப்பு.

“ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” 

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து விட்டார்
[தொடரும் ]
நன்றி: நமது தொடரை உலகெங்கும் பரப்பும் அன்புள்ளம் கொண்ட திரு. சங்கர இராமசாமி -நிர்வாக ஆசிரியர், தமிழ் ஸ்பீக் .காம் அவர்களுக்கு 
இனி இந்நாவலைத் தொடர்ந்து பின்வரும் சேனனலிலும் வாசிக்கலாம். 
 நாவல் : 01. தமிழ் இனி மெல்ல... -அரிசோனா மகாதேவன்
http://tamilspeak.com/?p=27909



கவிஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்

                           கவிஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள் 


போட்டிக்கான முடிவு தேதி : ஜூலை !-2014

“கமான் காம்ஸ், டான்ஸ் ஆடி ஆடி எனக்குப் பசி ஜாஸ்தி"-4

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

இந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி அவர்கள் தமது முகவரியைத் தரவில்லை. இந்தப் பதிவை அவர்கள்  கண்டால் அன்புகூர்ந்து தம் முகவரி வழங்கி எங்கள் வாக்குறுதியை நாங்கள் காப்பாற்ற ஒரு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம் 

இனி இந்தப் பதிவு..... 

[இருபத்திஒன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நின்று போக ஆரம்பித்தது. அவற்றைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக மற்ற கல்வி நிறுவனங்களும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தன. இருநூற்றைம்பது ஆண்டுகளில் தமிழைக் கற்பிப்பது அறவே நின்றுபோய் விட்டது. பாரதநாடு வல்லரசாகி வரும்பொழுது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்தால் மட்டுமே நல்லவேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மாறிவிட்டது.
வாழ்க்கையின் மேல்தட்டுக்கு ஏறத்தெரிந்தவர்கள் அந்த இரு மொழிகளையும் மட்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழ் பேசுவதே குறைந்துகொண்டு வந்தது]

இந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேசியா எல்லாம் இணைந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய “பாரத ஒருங்கிணைப்பி”ல் (Bharath Federation)எல்லாக் குழந்தைகளின் உடலிலும் பிறந்த உடனேயே கணிணி நுண்ணணு (Computer Chip ) பதிக்கப்பட்டு விடுகின்றன. அதிலேயே எடுபிடிகள், உரிமைக் குடிமக்கள் (elite citizen) என்று பதிந்து விடுகிறார்கள்.

உடனேயே ஒவ்வொரு எடுபிடிக்கும் ஒரு காப்பாளி நியமிக்கப் படுவார். அவர்தான் அவர்களைக் கண்காணித்து வருவார். அந்த அதிகாரிதான் அவர்கள் என்ன வேலை கற்றுக்கொள்ள வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்து, அந்த வேலையைக் கற்றுக் கொடுக்கும் பள்ளியையும் தேர்ந்தெடுக்கிறார். வேலை சரியாகச் செய்யவில்லை என்ற புகார் வந்தால் அந்த எடுபிடியின் பாடு மகா திண்டாட்டம்தான்.

“காப்பாளி ஆபீசரா, வேண்டாம்மா! என்னை அப்புறம் திருத்தும் பள்ளி (Correction School) க்கு அனுப்பிச்சுடுவாங்க. என் அப்பா, அம்மா, தம்பி இவங்க எல்லோரையும் ஒரு மாசம் பார்க்க முடியாம போயிடும்.” என்று நடுங்குகிறாள் காமாட்சி. 

அவள் மனம் ஷிஃபாலியையும், அவளைப் போன்ற இரக்கமில்லாத எஜமானர்களையும் வெறுக்கிறது. என்னவோ புரியாத மொழியில் பேசிக்கொண்டு கொத்தடிமை போல அல்லவா நடத்துகிறார்கள்?!
“மம்மி... பாவம் மம்மி ....காம்ஸ்! தம்பிக்கு உடம்பு சரியில்லைன்னா அவனைத் தனியா வீட்டிலே விட்டுட்டு எப்படி என்கூட இருக்கமுடியும்? காம்ஸ், நீ ஒண்ணு பண்ணு. உன் தம்பியை ஆஸ்பத்திரியிலே காட்டிட்டு, அங்கே விட்டுட்டு வா! ரெண்டு நாள் அவள் அங்கேயே இருக்கட்டும்!” அவள் பக்கம் பேசுகிறாள் நிமிஷா.
“நீங்க நல்லா இருப்பீங்க நிமிசாம்மா. என் தம்பிப் பையனை டாக்டர் ஐயாகிட்ட காண்பிச்சுட்டு எங்கூடவே இங்கேயே வைச்சுக்கறேன் நிமிசாம்மா. உடம்பு சரியில்லாத சின்னப் பையன் ஆஸ்பத்திரியிலே எப்படீம்மா தனியா இருப்பான்?” தன்பக்கம் பரிந்து பேசும் நிமிஷாவை நிமிசாம்மா, நிமிசாம்மா என்று அழைத்துக் கெஞ்சுகிறாள் காமாட்சி. ஷிஃபாலியுடன் பேச அவனுக்குப் பயமாக இருக்கிறது.

ஷிஃபாலி பேச வாயெடுப்பதற்குமுன், “ஓகே காம்ஸ்! இங்கேயே கூட்டிவா. எங்க குடும்ப டாக்டர்கிட்டயே ஓவர்-த-வேவ்ஸ் (அலை பரப்பு மூலம்) காட்டி விடலாம்!” என்று நிமிஷா காமாட்சிக்கு அனுசரணையாகப் பேசுகிறாள். அவளே முடிவெடுப்பதால் ஷிஃபாலியால் ஒன்றும் பேச முடிவதில்லை.

“அஞ்சு நிமிசத்திலே தம்பியைக் கூட்டியாந்திடறேம்மா!” என்று விரைகிறாள் காமாட்சி

அவள் சென்ற பிறகு மகள்மீது வெடிக்கிறாள் ஷிஃபாலி. “நிம்ஸ், நீ ரொம்ப இரக்க குணத்தோட இருக்கே! எடுபிடிகளுக்கு இரக்கம் காட்டினா அவங்க நம்மை எடுபிடிகளாக்கிடுவாங்க. எப்போதான் இதை நீ தெரிஞ்சுக்கப் போறியோ?

“எனக்கு இருக்கும் இன்ஃப்ளூயன்ஸுக்கும், பணவசதிக்கும் நான் கல்யாணம் செய்துக்கிட்டு கணவரோட வாழமுடியும். இருந்தாலும் நிறைய சாதிக்கணும்னு இந்த நாட்டில் இருக்கற பாதிப்பெண்கள் மாதிரி நானும் கல்யாணமே செய்துக்கலை. அதுபடியே எப்படி சாதிச்சுட்டு வரேன் தெரியுமா? அதுக்காக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கிட்டு அறிவை மட்டுமே உபயோகிச்சு வாழ்க்கையிலே முன்னேற எத்தனை முடிவுகள் எடுத்திருக்கேன் தெரியுமா? என் மகளாப் பிறந்துட்டு நீ உணர்ச்சிகளுக்கு அடிமையா இப்படிக் கோழையா இருக்கறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை!”

“மேடம் ஷிப்ஸ்! நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது!” என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

“வரேன் கண்ணு!” என்று செல்லமாக நிமிஷாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுக் கிளம்புகிறாள் ஷிபாலி. 

கதவு சாத்திக்கொண்டவுடனேயே முப்பரிமாணத் தொலைக்காட்சிக் கருவியை மாட்டிக் கொண்டு நடனமாட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.
* * *

தன் தம்பியையும் அழைத்துக்கொண்டு நிமிஷாவின் வீட்டை நோக்கி விரைகிறாள் காமாட்சி. உலகத்தின் முதல் வல்லரசுகளில் ஒன்றான பாரதநாட்டின் கடைசித் தட்டுக்குடிமகள் அவள். அவளை இந்த நாடு பிறக்கும்போதே எடுபிடி என்று வரிசைப்படுத்தி கணிணித் துகளில் பதிவு செய்து வலதுகையிலும், இடது தோளிலும் பதித்து, தக்கண்கண்ட்டின் பெரும் கணிணியியில் சேர்த்து வைத்திருக்கிறது என்பதைக்கூட அறியாதவள் அவள். அவளுக்கு “அடிமை” என்று பட்டம் கொடுக்க வில்லையே தவிர, அவள் வாழ்க்கை ஒரு அடிமை வாழ்க்கைதான்.
காரணம் -

அவளது முன்னோர்கள் நூற்றைம்பது ஆண்டுகளாக விடாமல் தமிழைப் பேசிக் கொண்டிருப்பதுதான். இருபத்திஒன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நின்று போக ஆரம்பித்தது. அவற்றைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக மற்ற கல்வி நிறுவனங்களும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தன. 

இருநூற்றைம்பது ஆண்டுகளில் தமிழைக் கற்பிப்பது அறவே நின்றுபோய் விட்டது. பாரதநாடு வல்லரசாகி வரும்பொழுது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்தால் மட்டுமே நல்லவேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மாறிவிட்டது.

வாழ்க்கையின் மேல்தட்டுக்கு ஏறத்தெரிந்தவர்கள் அந்த இரு மொழிகளையும் மட்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழ் பேசுவதே குறைந்துகொண்டு வந்தது. இருப்பினும் ஆங்காங்கு தமிழ்ப் பற்று உள்ள பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தார்கள். எழுதப் படிக்கவும் கற்றுத் தந்தார்கள். சிறுசிறு கிராமங்களில்தான் தமிழ் பேசுபவர்கள் இருந்தார்கள்.

எல்லாத் தொழில்களும் மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட பின்னர் உடலுழைப்பு மட்டுமே செய்வோர்கள் எடுபிடி வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டிலேயே மனம் வெதும்பி “தமிழ் இனி மெல்லச் சாகும்..” என்று பாடிவைத்துப் போன அமரகவி பாரதியாரின் வாக்கு மெல்லமெல்ல உண்மையாகிக் கொண்டிருந்தது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழன்னை தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தாளோ என்றும் தோன்றியது.
எனவே தமிழ் பேசுபவர்கள் எடுபிடிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். இந்தி தெரிந்தவர்கள் உரிமைக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள். எடுபிடிகள் இந்தி கற்றுக்கொண்டு உரிமைக் குடிமக்கள் ஆகிவிட்டால் 

எடுபிடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அஞ்சி அவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கக்கூடாது என்றும் (நிமிஷா தன் அன்னையிடம் குறிப்பிட்ட) சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பற்றியே தெரியாத அவர்கள் ஓட்டுரிமையைப் பறிக்கும் இச்சட்டத்தை எப்படி எதிர்த்துப் போராடுவார்கள்? ஓட்டுரிமை இல்லாததால் எந்த அரசியல்வாதிகளும் அவர்களின் உரிமையைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.

இருந்தபோதிலும் எப்படியோ காமாட்சியின் முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தருவதைத் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்கள். எனவே, காமாட்சிக்கு தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.

ஆனால் அவனுக்கோ, அவளது பெற்றோர்களுக்கோ, தாங்கள் தமிழைப் பரப்ப ராஜராஜ சோழச் சக்ரவர்த்தியின் மகள் குந்தவிக்குத் துணையாகவும், அங்குள்ள ஆந்திரப் பெண்களுக்குத் தமிழ் கற்பிக்கவும், வேங்கை நாட்டிற்கு (வெங்கி) அனுப்பப்பட்ட நிலவுமொழியின் பரம்பரை என்பதோ, தமிழைக் காக்க உறுதி மொழி எடுத்த வீரப் பரம்பரையின் குருதி தங்கள் உடலில் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் ஆயினும்  இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்றோ அறிய நியாயம் இல்லைதான்.

வேர்க்க விறுவிறுக்க நிமிஷாவின் வீட்டை அடைந்து அவர்கள் வீட்டுக் காலிங் பெல்லை அமுக்குகிறாள் காமாட்சி. அவள் கையைப் பிடித்தபடி பயந்தவாறே உடன் நிற்கிறான் அவளது தம்பி ஏகாம்பரநாதன். அவன் தன் வாழ்நாளில் இதுவரை உரிமைக் குடிமக்களின் குடியிருப்பின் உள்ளே நுழைந்து பார்த்ததே இல்லை. அதுவரை போவானேன்,  இரண்டு அறைகள் மட்டும் உள்ள கடைசித் தட்டு மக்களின் குடியிருப்பை விட்டு அவன் வெளி வந்ததும் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுபிடிப் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குக் கலை நுணுக்கம் அதிகம். மேல்தட்டு மக்கள் தூக்கி எறியும் சாமான்களைக் கொண்டு விதம் விதமாகப் பொம்மைகள் செய்ய அவனுக்குத் தெரியும். அட்டையோ, பிளாஸ்டிக் துண்டுகளோ கிடைத்தால் விடவே மாட்டான். காமாட்சி அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்கள் சொல்லித் தந்து கொண்டிருக்கிறாள். அவன் தனக்குக் கிடைத்த அட்டைகளில் சிறிதும் பெரிதுமாகத் தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து வெட்டி எடுப்பான். தம்பியின் சாதனையைப் பார்த்து மனமகிழ்ந்து அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டு ஆசையுடன் முத்தமாரி பொழிவாள் காமாட்சி.

“கமான் காம்ஸ், டான்ஸ் ஆடி ஆடி எனக்குப் பசி ஜாஸ்தியாகி விட்டது. எனக்கு ஏதாவது சாப்பிட செய்து தா!” என்று அவளை உள்ளே அழைத்த நிமிஷா, ஏகாம்பரநாதனை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்த்தாள். அவளுடைய நடை, உடை பாவனையைப் பார்த்து அசந்து போய்விட்டான் ஏகாம்பரநாதன். அவனுடைய அக்காவுக்கும் இவனுக்கும்தான் எத்தனை வேறுபாடு? அவனுக்கு மொழிமாற்று கருவி தரப்படவில்லை. எனவே, நிமிஷா பேசியது என்ன என்று அவனுக்குப் புரியவே இல்லை.

அழகான தன் பெயரைச் சுருக்கி “காம்ஸ்” என்று அவள் அழைப்பது காமாட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் என்ன செய்வது? 

 “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று ஒருகாலத்தில் புரட்சி நடிகர் பாடியது போல இப்பொழுது எல்லோரும் தங்கள் பெயரை மூன்றெழுத்தாகச் சுருக்குவது காமாட்சிக்குப் புரிய நியாயமில்லைதான். அதிலும் கடைசி இரண்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களாக இருப்பதுதான் ஸ்டைல் என்றும் அவனுக்குத் தெரியாது. 

அதனால்தான் நிமிஷா “நிம்ஸ்” என்றும் ஷிஃபாலி “ஷிப்ஸ்” என்றும் அழைக்கப் படுகிறார்கள் என்பதையும் அவள் உணர்ந்து கொள்ளவில்லை. இருந்தபோதிலும் நிமிசாம்மா சிபாலிம்மா என்றுதான அவர்களை அழைத்து வந்தால் - அவர்கள் அப்படி அழைக்காதே என்று அவளைக் கண்டித்த போதிலும்.

“நிமிசாம்மா, இதுதான் என் தம்பி. இவனுக்குத்தான் உடம்பு சரியில்லை. ஒரே சுரம். ரொம்பச் சோர்ந்து சோர்ந்து போகிறாள்!” என்று தன் தம்பியை நிமிஷாவுக்கு அறிமுகப் படுத்துகிறாள் காமாட்சி.

ஏகாம்பரநாதனைப் பார்த்தால் நிமிஷாவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மெலிந்த தேகம், எலும்பும் தோலுமான உடம்பு, சுருள்சுருளான பரட்டைத்தலை, கருகருவென்ற துருதுருப்பான கண்கள். தொளதொளவென்ற அரை-டிராயரும், பெரிதான, சாயம் போன சட்டையையும் அணிந்து கொண்டிருக்கிறாள். அவளை வைத்த கண் வாங்காமல் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“எலே ஏகாம்பரம், நான் சொன்னேனே, அந்த நிமிசாம்மாடா இவங்க. இவங்க வூட்டுலதான் ரெண்டுநாள் இருக்கப் போறோம். வணக்கம் சொல்லிக்கோடா” என்று அவனை மெதுவாக இடிக்கிறாள் காமாட்சி.
[தொடரும்]

Friday, 20 June 2014

துரைசாமி உருத்திரமூர்த்தி:மஹாகவி

மஹாகவி 

துரைசாமி உருத்திரமூர்த்தி (அளவெட்டி, யாழ்ப்பாணம்) (ஜனவரி 9 1927 – ஜூன் 20 1971) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் மஹாகவி என்ற புனைபெயரில் எழுதியவர். இவரது ஏனைய புனைபெயர்கள் – பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன் என்பனவாகும். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்துக்கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.

 துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு ‘மஹாகவி உருத்திரமூர்த்தி’ என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்

ஆகஸ்ட் 30, 1954ல் பத்மாசினி முத்தையா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் சேரன் ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
நவம்பர் 20, 1945 ல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரசசேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருக்கோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967ல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968-1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971ல் கொழும்பு அரசகரும மொழித்திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.

மஹாகவியின் காவியங்கள்
கல்லழகி எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
சடங்கு எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட “மஹாகவியின் இரண்டு காவியங்கள்” நூலில் இடம்பெற்றது.
தகனம் 1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
கண்மணியாள் காதை எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
கந்தப்ப சபதம் எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட “மஹாகவியின் இரண்டு காவியங்கள்” நூலில் இடம்பெற்றது.
இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்
வள்ளி (‘மஹாகவி’ கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, வரதர் வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.

மஹாகவியின் குறும்பா முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.

மஹாகவியின் கண்மணியாள் காதை, (வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966
முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967
முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 – கலைஞர் லடிஸ் வீரமணி
முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968, அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.

மஹாகவியின் கோடை(பா நாடகம்)
எழுதியது: பெப்ரவரி 1966
முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969 – நாடகர் தாசிசியஸ் இயக்கத்தில்
முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970
இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988
மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.

ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் (1971)

வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூன் 1973, வாசகர் சங்கம், ‘நூறிமன்சில்’, கல்முனை- 6

மஹாகவியின் இரண்டு காவியங்கள்
கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்
சடங்கு
முதற்பதிப்பு: ஜூலை 1974
பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7.

பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.

மஹாகவி கவிதைகள் (1984)

புதியதொரு வீடு (1989)
முதல் மேடையேற்றம்- நாடகர் தாசீசியஸ் இயக்கத்தில்

மஹாகவியின் ஆறு காவியங்கள்
கல்லழகி
சடங்கு
ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்
கண்மணியாள் காதை
கந்தப்ப சபதம்
தகனம்
முதற்பதிப்பு: மார்ச் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

மஹாகவியின் மூன்று நாடகங்கள்
கோடை
புதியதொரு வீடு
முற்றிற்று
முதற்பதிப்பு: ஜூன் 2000
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்

பொருள் நூறு
நூறு குறும்பாக் கவிதைகள்
முதற்பதிப்பு: அக்டோபர் 2008
வெளியீடு: மித்ர வெளியீடு, சென்னை
பதிப்பாசிரியர்: எஸ்பொ

நன்றி: தமிழ் ஸ்பீக் .காம்

                                          மாதிரிக்கு இரு  கவிதைகள்  

Thursday, 19 June 2014

அத்தியாயம் 1.கிளப்புக்கே போகாமல் டிஸ்கோ நடனம்-3

[Warning:As  this  novel is simultaneously published as printed book in Tamil and English it is under copyright act .Any violation has to be considered seriously under legal proceedings ]


                                              அத்தியாயம் 1

                              ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
                            பிரஜோற்பத்தி, ஆனி 20 - ஜூலை 4, 2411
                               (கவனிக்கவும். காலம் எதிர்காலத்தில்)

       மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
       மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
       என்றந்தப் பேதை உரைத்தாள், ஆ!
        இந்த வசையெனக் கெய்திடலாமோ?
                          - அமரகவி சுப்பிரமணிய பாரதியார்

“நிமிஷா, ஹெச்பி கோ கம் கர்க்கே ஸீ. மேக்ஸ் ஜ்யாதா கட்பட்! (ஹெச்பியை மெதுவாக வைத்துப் பார். நிறையச் சத்தம் போடுது!)” என்று இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் தன் மகளைப் பார்த்து இரைகிறாள் ஷிபாலி. 
கூப்பிடும் அன்னையின் குரலைக் கேட்கவே முடியாமல் நிமிஷாவின் கவனம் எங்கோ இருக்கிறது. தரையில் ஒளிரும் பலவண்ணக் கட்டங்களில் உடலை நெளித்து நெளித்து நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.

“நிம்ஸ்” என்று செல்லமாக அழைப்பதை விட்டுவிட்டு “நிமிஷா” என்று கோபத்துடன் கூப்பிடுவதைக்கூட அவள் காதில் வாங்கவில்லை.

பதினாறே வயது இருந்தாலும் வயதை மீறிய செழிப்பு அவள் உடம்பில் இருக்கிறது. முகத்தில் பாதியை மறைத்தவாறு ஒரு பெரிய கருப்புக் கண்ணாடி - காதுகளைச் சுற்றி மூடிக்கொண்டிருக்கிறது. அந்த ஹாலில் டிவி எதுவும் தென்படவில்லை. இசையும் கேட்கவில்லை. ஆனால் எங்கிருந்தோ பூம், பூம் என்ற அதிர்வு மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சற்று உற்றுக் கவனித்தால் அந்தக் கண்ணாடிகூட ஒளி ஊடுருவ முடியாத மறைப்பாகத்தான் இருக்கிறது. பின் எப்படி அவள் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள்?

அவள் மாட்டிக் கொண்டிருக்கும் கண்ணாடிதான் அவளது தனிப்பட்ட டி.வி. ஹெச்பி அல்லது ஹோலோக்ராஃபிக் ப்ரொஜெக்டர் என்னும் முப்பரிமாணக் கருவியின் மூலம் நேரில் பார்ப்பதுபோல முப்பரிமாண நிகழ்ச்சிகளை அவளால் பார்த்து உணர முடிகிறது. காதைச் சுற்றி வளைத்திருக்கும் அமைப்பு, நிகழ்ச்சிகளின் ஒலி அலைகளை அவளுக்கு உணரவைக்கிறது.

கிளப்புக்கே போகாமல் டிஸ்கோ நடனம் ஆடும் நிறைவை அந்தக் கருவியும், வண்ணக் கட்டங்களும் அவளுக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றன. சுவர்களிலும், கூரைகளிலும் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒலிபெருக்கிகள் - அலைபரப்பிகள் - அவள் காதில் அணிந்து இருக்கும் கேட்கும் கருவிக்கு டிஸ்கோ டிரம்களின் பேரிரைச்சலை, கீழ்வரிசை அலைகளை கனகச்சிதமாகத் தந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிர்வுதான் ஷிஃபாலிக்குத் தலைவலியைத் தருகிறது.

”நிம்ஸ் ஏ கைஸா? லிஸன். காம்ஸ் ஆனே டைம் கம். ஸ்டாப் யே ஷைத்தான்! (ஏன் இப்படி? கேள். காம்ஸ் வரும் நேரம். இந்த சைத்தானை நிறுத்து!)” என்ற செல்லமான முரட்டுத்தனத்துடன் நிமிஷாவின் ஹெச்பியை அவள் காதிலிருந்து கழட்டி அதிலிருந்த ஒரு பொத்தானை எரிச்சலுடன் அமுக்குகிறாள் ஷிஃபாலி.

உடனே நிமிஷா நடனமாடிக்கொண்டிருந்த வண்ணக் கட்டங்கள் அணைந்து போய் தரையின் டிசைனுக்கு மாறுகின்றன. அந்தக் கட்டங்கள் இருந்தனவா என்று வியக்கும் அளவுக்கு ஒரு தடயமுமே இல்லை. ஓடிக் கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று போனால் எப்படிக் குலுங்கி விழுவார்களோ அப்படி நிலை தடுமாறுகிறாள் நிமிஷா.

“யே க்யோன் மா? (இது ஏன் அம்மா)” என்று ஷிஃபாலியை முறைக்கிறாள் நிமிஷா.
(இனி மொழிமாற்றம் செய்யாமல் எல்லாப் பேச்சுகளையும் தமிழிலேயே)

“தஞ்ஜு, மத்ராவிலிருக்கும் என் நண்பர்கள்கூட எவ்வளவு உற்சாகமா புது டிஸ்கோ ஆடிக்கிட்டிருந்தேன்? அவங்க என்னை எப்படி மிஸ் செய்வாங்க தெரியுமா? கெடுத்திட்டியே!” என்று குறைப்பட்டுக் கொள்கிறாள்.

“பள்ளிக்கூடம் லீவு விட்டா இப்படித்தான் டிஸ்கோ, டிஸ்கோன்னு கூத்தடிப்பாயா நிம்ஸ்? சீனாவிலேந்து தலைமை மானேஜர் வராரு. நான் ரெண்டு நாள் தஞ்ஜுவுக்குப் போகணும். அதுனால உனக்குத் துணையா காம்ஸ். இங்கே இருப்பா. உனக்குத் தேவையானதை அவ கவனிச்சுப்பா. அவளை ரொம்பப் படுத்தாதே!  அரசாங்கத்து கிட்டே நான் கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தனிப்பட்ட முறையிலே வேலை செய்ய வச்சிருக்கறதுனாலதான் நினைச்ச போதிலெல்லாம் உன்னை நம்பிக்கையா இங்கே விட்டுட்டுப் போகமுடியுது.” என்று கனிந்த குரலில் கண்டிக்க முயல்கிறாள்.

காம்ஸ் என்றதும் முகத்தைச் சுளிக்கிறாள் நிமிஷா. “காம்ஸா அம்மா? அவளுக்கு நான் பேசறது புரியாது, எனக்கு அவள் பேசறது புரியாது. எப்பவும் டிரான்ஸ்லேட்டரைக் (மொழிமாற்றுக்கருவி) காதில் மாட்டிக்கணும். சரியான காட்டுமிராண்டி. எப்பப் பார்த்தாலும் நான் பண்றதையே வெறிச்சு வெறிச்சுப் பாப்பா...”

“டிரான்ஸ்லேட்டரை உபயோகப்படுத்தறதுல என்ன கஷ்டம்? ஹெச்பியைவிட சுலபம்தானே! நானும் சைனாக்காரங்கட்ட பேசறதுக்கு அதைத்தானே உபயோகப் படுத்தறேன். யாரு இப்ப எல்லா பாஷையையும் கத்துக்குவாங்க?” மகனுக்குச் சமாதானம் சொல்கிறாள் ஷிஃபாலி.

“சும்மா சும்மா டிரான்ஸ்லேட்டரைக் காதில மாட்டிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்தக் காம்ஸ் ஏன் நம்ம பாஷையைக் கத்துக்க மாட்டேங்கறா?” என்று அலுத்துக் கொள்கிறாள் நிமிஷா.

“நிம்ஸ்! நீ சரித்திரப் பாடத்தை மறந்துட்டியா? எடுபிடிகள் நம்ம பாஷையைக் கத்துக்கக் கூடாதுன்னு படிக்கலை?” என்று குரலை உயர்த்துகிறாள் ஷிபாலி.

“எதையும் சொல்ல விடமாட்டியே! பாடத்தை நான் மறக்கலை. நூத்தைம்பது வருஷத்துக்கு முன்னால டிரான்ஸ்லேட்டர்ஸ் வந்துட்டதுனால இந்தி தெரியாதவங்ககூட அதை வச்சே பேசிக்கலாம். எழுபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே எடுபிடிச் சட்டம் (Mடிணடிணிண ஃச்தீ) கொண்டு வந்தாங்க. வெறும் கூற்றுமொழி (ஞீடிச்டூஞுஞிt)  மட்டுமே தெரிஞ்சவங்களை எடுபிடின்னு சொன்னாங்க. அவங்க நாம போற பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாது, அவங்களுக்கு யாரும் இந்தி கத்துக் கொடுக்கக்கூடாது. அவங்க உடல் உழைப்பு மட்டுமே செய்து பிழைப்பு நடத்தணும். அதுமட்டுமில்லை, அப்படி ஒரு சட்டமே வந்ததுகூட அவங்களுக்குத் தெரியாது. ஏன்னா அவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்களுக்கு ஓட்டுரிமையும் கிடையாது. இதெல்லாம் எனக்குத் தெரியும்மா! தெரியும்மா!! ஒரு அலுப்பிலே சொன்னா, பிலுபிலுன்னு பிடிச்சுக்கறியே!”

காலிங் பெல் ஒலிக்கிறது. கதவில் “காம்ஸ்” என்று அவர்களால் அழைக்கப்பட்ட காமாட்சியின் நிழற்படம் தெரிகிறது. 

காதில் மொழிமாற்றுக்கருவியை (ப்ளூடூத் போல இருக்கும் ஒரு குமிழான அமைப்பு) அணிந்து கொண்டு “கதவே திற!” என்று சுவற்றில் இருந்த ஒரு சதுரச் சல்லடை மாதிரி இருந்த அமைப்பைப் பார்த்துச் சொன்னாள் ஷிஃபாலி. 

உடனே கதவு தானாகத் திறந்ததும் உள்ளே நுழைகிறாள் காமாட்சி. அவள்தான் அவர்களால் எடுபிடி என்று அழைக்கப்பட்டவள். நூறு வருடங்கள் முன்பு வரை தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட “தக்கண்கண்ட்” மாநிலத்தில் தற்பொழுது “ஷெனாய்” என்னும் சென்னையில் வாழ்ந்து வரும் ஆயிரக் கணக்கான, தமிழ் மட்டுமே பேசும் எடுபிடிகளில் அவளும் ஒருத்தி.

நிமிஷாவைவிட இரண்டு வயதுதான் அவளுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் வயதை மீறிய ஒரு பொறுப்பு அவள் முகத்தில் தெரிகிறது. அவளுக்கும் நிமிஷாவுக்கும்தான் எத்தனை மாறுபாடு, நடை, உடை பாவனையில்? உடலை ஒட்டிய உடைகளை (சட்டை, பாண்ட்) நிமிஷா அணிந்திருந்தால், புடவை அணிந்திருக்கிறாள் காமாட்சி. கழுத்தை ஒட்டியபடி தலை மயிரை வெட்டிவிட்டு, புசுபுசுவென்று வானவில்லின் நிறங்களில் வரிவரியாக வண்ணம் தீட்டியிருக்கிறாள் நிமிஷா - 

எண்ணெயிட்டு,  இழுத்து வாரிப் பின்னிக் கொண்டு திலகமிட்டுக் கொண்டிருக்கிறாள் காமாட்சி. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது இருவருக்குள்ளும்.

அவர்களைப் பார்த்து வெள்ளை வெளேரென்ற பற்கள் தெரியப் புன்னகைத்த காமாட்சி, “வணக்கம் அம்மா!” என்று நல்ல தமிழில் சொல்கிறாள். அது மற்ற இருவரின் காதுகளிலும், “ப்ரணாம் மாஜி!” என்று இந்தியில் ஒலிக்கிறது. அவனும் காதில் ஒரு மொழிமாற்றுக்கருவி செருகியிருக்கிறான்.

“சரியான நேரத்துக்கு வந்துட்டே காம்ஸ். நீ ஒரு லைஃப் ஸேவர்! நான் தஞ்ஜுவுக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். திரும்பிவர ரெண்டு நாளாகும். நீ நிம்ஸுக்குத் துணையா இருக்கணும். இங்கேயே விருந்தாளி அறையிலே தங்கிக்கோ!” ஷிஃபாலியின் குரல் உத்தரவாகத்தான் இருக்கிறது.

“ரெண்டு நாளா?” காமாட்சியின் முகம் சுருங்குகிறது.

அதைக் கவனித்த ஷிஃபாலி, “ஆமாம். அதற்கு என்ன?” என்று அதட்டலாகக் கேட்கிறாள்.“என் தம்பிக்கு உடம்பு சரியா இல்லை. நான்தான் வீட்டுக்குத் திரும்பிப் போயி அவனைக் கவனிச்சுக்கணும். என் அப்பாவும் அம்மாவும் உங்க மாதிரிப் பெரிய மனுஷர் ஒருத்தர் வீட்டுக் குழந்தைகளைக் கவனிச்சுக்கறதுக்காக அங்கேயே தங்கி இருக்காங்க. என் தம்பியை நான்தான் கவனிச்சுக்கணும்” என்று தயக்கத்துடன் இழுத்து இழுத்துப் பதில் சொல்கிறாள் காமாட்சி. அவள் குரலில் பயமும் கலந்திருக்கிறது.“

அதற்காக நிம்ஸைத் தனியாக விட முடியுமா? நான் சொல்றதைக் கேக்கப் போறியா இல்லை, காப்பாளி ஆபிசரிடம் உன்னைப்பத்தி புகார் செய்யவா?” என்று பயமுறுத்துகிறாள் ஷிபாலி.
[தொடரும்]
இத் தொடரைப் படித்து விட்டு கருத்து எழுதும் 

                             அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

இந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் 

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும்


                                               பாகம் 1

முதல் பகுதியின் முக்கிய இடங்களும் கதாபாத்திரங்களும்
இடங்கள்: பாரத ஒருங்கிணைப்பு: இருபத்தைந்தாம் நூற்றாண்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான். நேபாளம், பூடான், மயன்மார் (பர்மா). இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா. இவற்றை உள்ளடக்கிய பகுதி.

தக்கன் கண்ட்: பாரத ஒருங்கிணைப்பின் ஒரு மாநிலம். (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தமிழ்நாடு)

ஷெனாய்: தக்கன் கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் சென்னை)
தஞ்சு: தக்கன் கண்ட் மாநிலத்தின் தலைநகர். (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தஞ்சாவூர்)
மத்ரா: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு பெரிய நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாணடின் மதுரை)
கோட்கல்: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு மலை வாழிடம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் கொடைக்கானல்)
காரைகுட்: தக்கன் கண்ட் மாநிலத்தில் ஒரு நகரம் (இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் காரைக்குடி)

                                            உரிமைக் குடிமக்கள்:

நிமிஷா: ஷெனாயில் வாழும் ஒரு இளம் பெண்.
ஷிபாலி: நிமிஷாவின் தாய். ஒரு சீனக் கம்பெனியின் ஷெனாய் கிளையில் பணி செய்பவள்.
ஸஹஜா: கோட்கல் விண்நோக்கு நிலையத்தில் பணி செய்யும் விஞ்ஞானி.
ஸோம்காந்த்: ஸஹஜாவின் மேலதிகாரி. காரைகுட் விண் ஆராய்ச்சி மையத்தில் ஒரு வல்லுநர்.

                                                   எடுபிடிகள்:

காமாட்சி: ஷிபாலி வீட்டில் வேலை செய்யும் இளம்பெண். [நிலவுமொழி பரம்பரையில் வந்தவள்]

ஏகாம்பரநாதன்: காமாட்சியின் தம்பி.
ஈஸ்வரன்: தஞ்ஜூவில் பணி செய்பவன். இந்தி தெரிந்தவன் (சிவாச்சாரி பரம்பரையில் வந்தவன்)
சங்கரன்: ஈஸ்வரனின் தந்தை.
அழகேசன்: மத்ராவில் வாழும் ஒரு மல்லன் (வெற்றி மாறன் பரம்பரையில் வந்தவன்)
                                                             
                               அடுத்த பதிவில் கதை தொடங்குகிறது 
                                       ஒரு முக்கிய அறிவிப்பு : 
                இத் தொடரைப் படித்து விட்டு கருத்து எழுதும் 

                             அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

இந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம்