பாவ நகரம்பா |
உலக நாடுகளில் சுற்றுலா கண்ணோட்டத்தில், "மாஸ்டர் கார்டு' அளவீடுகளின்படி மூன்றாவது சிறந்த நகரம் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக். லண்டன், பாரீஸ் நகரங்களுக்கு அடுத்த இடத்தை பாங்காக் பிடித்துள்ளது. அதேபோல், லண்டன், நியூயார்க் நகரங்களுக்கு அடுத்தபடியாக அதிகமான செலவுபிடிக்கும் நகரமும் பாங்காக்தான்.
"தாய்லாந்து சென்று வந்தேன்' என்றால் "பட்டயா'வுக்குப் போனீர்களா? என்றுதான் முதலில் கேட்கிறார்கள். பட்டயா நகரத்தின் "இரவு வாழ்க்கை' அப்படி. விடுதிகள், மசாஜ் கிளப்புகள், கேளிக்கைக் கூடங்கள் மட்டுமின்றி தெருக்களில் கூட "செக்ஸ் வியாபாரம்' தாராளமாகி வருவதே அதற்குக் காரணம். பாங்காக்கிலும் இரவு 10 மணிக்கு மேல் அதுதான் நிலைமை. எனவேதான் "பாவ நகரம்' பட்டம்.
இத்தனைக்கும் தாய்லாந்தில் "சிவப்பு விளக்கு' தொழில் சட்டவிரோதம். சுற்றுலாப் பயணிகளின் "வசதிக்காக' அரசு கண்டும் காணாமலும் இருக்கிறது போலும்.
ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அதனுடன் கற்பனை வளத்தையும் இணைத்து, கடினமான உழைப்பையும் சேர்த்து அழகுபட மிளிரச் செய்து, தம்மை நாடி வருகின்ற வெளிநாட்டவர்களுக்கு அவற்றைப் படைத்து களிப்புறச் செய்து கட்டணத்தைப் பெற்று தன்னையும், நாட்டையும் வளப்படுத்திக் கொள்வது எப்படி என்பதை தாய்லாந்தை உற்று நோக்கினால் புலப்படும்.
இதற்கு பாங்காக்கில் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று, அந்த நகரின் மையப் பகுதியில் ஓடும் "சாவோ பிரையா' ஆறு. தாய்லாந்தின் வட பகுதியில் உற்பத்தியாகி சுமார் 372 கிலோ மீட்டர் தூரத்திற்கு தெற்கு நோக்கிப் பாய்ந்து, இறுதியில் தாய் வளை குடாவில் கலக்கிறது. இடையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாங்காக் நகரின் மையப் பகுதி வழியாகப் பாயும் இந்த நதியை அந்த மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுகின்றனர். நதியின் இருபுறமும் வானுயர்ந்த விடுதிகள், உணவகங்கள், கேளிக்கை மையங்கள் என நதியை மையப்படுத்தி வருமானத்தை வாரிக் குவிக்கின்றனர். எனினும், ஆறு எவ்விதத்திலும் மாசுபடவில்லை.
"சாவோ பிரையா' நதியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அந்த நதியில் பகல் நேரங்களில் சிறியதும், பெரியதுமான 40-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வலம் வருகின்றன.
நதியின் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல விரும்புவோரை ஏற்றிச் செல்லும் படகுகளும் உண்டு. உள்ளூர் மக்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சரக்குகளையும், கட்டுமானப் பொருள்களையும் படகுகளில் ஏற்றிச் செல்கின்றனர். அந்திப் பொழுதில் படகுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இசைக் கச்சேரிகளுடன் இரவு நேர விருந்தளிக்கத் தயாராகி விடுகின்றன. ஆற்றில் பயணித்தபடி இரவு விருந்துண்ண சுற்றுலாப் பயணிகள் கால்கடுக்க வரிசையில் நிற்கின்றனர்.
ஒரு நாட்டின் பொது ஒழுங்குக்கு சாலைப் போக்குவரத்தை உதாரணமாகக் கொள்ளலாம். பாங்காக் நகரச் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் எவரும் ஒலி எழுப்புவதில்லை. அவரவர் பாதையில் எவருக்கும் இடையூறு இல்லாமல் செல்கின்றனர். போக்குவரத்து இடையூறு ஏற்பட்டால் நிலைமை சரியாகும் வரை பொறுமையாக வாகனத்திலேயே காத்திருக்கின்றனர். பீம்...பீம்...பீம்...என செவிப்பறை கிழிய ஒலி எழுப்பி சூழலைக் கெடுக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை. ஹாரனுக்கு தடையேதுமில்லை. ஆனாலும் ஓர் சுய கட்டுப்பாடு. அதையும் மீறி ஒருவர் வாகனத்தில் ஒலி எழுப்பினால், அவர் பொறுமை இழந்து சண்டைக்குத் தயாராகிவிட்டார் எனப் பொருள் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
தாய்லாந்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கடின உழைப்பாளிகள்தான். விடுதிகள், உணவகங்கள், மால்கள், சந்தைகள் உள்ளிட்ட சேவைத் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சுற்றுலாப் பயணிகளைச் சிரித்த முகத்துடன் வரவேற்று பொருள்களை விற்பனை செய்வதில் அவர்கள் காட்டும் சாதுரியம் அலாதியானது.
ஐரோப்பியர்களின் ஆதிக்கம் செல்லுபடியாகாத தென் கிழக்கு ஆசிய நாடு தாய்லாந்துதான். எனவேதான் அங்கு ஆங்கிலம் கோலோச்ச முடியவில்லை. அரைகுறை ஆங்கிலத்துடன் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி பொருள்களை சாமர்த்தியமாக விற்பனை செய்து விடுகின்றனர். வாடிக்கையாளர் பொருளை வாங்காவிட்டால் கூட சிரித்த முகம் காட்டி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
No comments:
Post a Comment