2012ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது
தெலுங்கு எழுத்தாளர் ராவூரி பரத்வாஜாவும், ஒடியா நாவலாசிரியர் பிரதிபா ராயும் பிரபலமான ஞான பீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலக்கியத்துக்குச் சிறப்பான சேவையாற்றி வரும் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருதளித்து மத்திய அரசு கௌரவித்து வருகிறது. அதன்படி, கடந்த 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கான இவ்விருதுக்கு தெலுங்கு எழுத்தாளர் ராவூரி பரத்வாஜாவும், ஒடியா நாவலாசிரியர் பிரதிபா ராயும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஞான பீட விருதுக் கமிட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராவூரி பரத்வாஜா(86) தெலுங்கு மொழியில் 37க்கும் அதிகமான சிறுகதைத் தொகுப்புகளையும், 17 நாவல்களையும் எழுதியுள்ளார். வாழ்க்கையின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து வந்துள்ள அவர், விடாமுயற்சியுடன் தெலுங்கு இலக்கியத்துக்குத் தொடர்ந்து சேவை ஆற்றி வருகிறார். அவர் ஒரு கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர் மட்டுமின்றி பிரபலமான அறிவியல் எழுத்தாளராகவும் விளங்குகிறார்.
அவர் நாவல்கள், சிறுகதைகளைத் தவிர, சிறுவர்களுக்கான சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், வாழ்க்கை வரலாறுகள், நாடகங்கள் ஆகியவற்றையும் படைத்துள்ளார். அவரது பிரபலமான படைப்புகளான காதம்பரி, ஜீவன சமரம் போன்றவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரை ஞானபீட விருதுக்கு, பிரபல கவிஞர் சீதாகாந்த் மஹாபாத்ரா தலைமையிலான விருதுக் கமிட்டி தேர்வு செய்துள்ளது.
இதேபோல், கல்வியாளரான ஒடியா நாவலாசிரியர் பிரதிபா ராய் இதுவரை 40க்கும் மேற்பட்ட நாவல்களையும், பயணக்கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளையும் இயற்றியுள்ளார். அவர் 2012ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இவ்விருதை பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன், கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி உள்ளிட்டோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment