Tuesday, 30 April 2013

நினைவின் நதிக்கரையில்:2-(கௌதம நீலாம்பரன்)


2

தீபத்தின் ஒளியில் நான்...

ஒரு பத்திரிகையாளனாகவோ, எழுத்தாளனாகவோ நான் ஆவேன் என்று சிறிதும் எண்ணியதில்லை.

‘தீபம்’ தந்த வெளிச்சம்தான் என் வாழ்வில் இந்த மாய மாற்றத்தை நிகழ்த்தியது.

அதுவும் இருண்டு கிடந்த கவலைக் கடலில் நான் தத்தளித்துக் கிடந்தபோது, கலங்கரை விளக்கத்தின் நம்பிக்கை ஒளியாய், தீப வெளிச்சம் என் மீது பட்டு, என்னைக் கரை சேர்த்தது.

1966, 67 களில் நான் சென்னை நகரின் தெருக்களில், குறிக்கோளின்றி சுற்றிக் கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்தது சினிமா ஆசையால்தான். அதற்கு வழி ஒன்றும் புலப்படாது போனதால், அந்த ஆசை நிராசையானது. தூரத்து உறவினர் வீடொன்றில் அடைக்கலம் கிடைக்குமென நம்பியிருந்தேன். முப்பது நாள் கூட அங்கு தங்க முடியவில்லை. விரட்டப்பட்ட நிலை. ஊருக்குத் திரும்பவோ மனமில்லை. வீதிகளில் தஞ்சமடைந்தேன். என் வாழ்வு தறிகெட்டு, சிதைந்து, சின்னாபின்னமாகியிருக்கும். அதிர்ஷ்டவசமாகச் சில நண்பர்கள் கிடைத்தனர்.

சினிமா வாய்ப்புகள் கிடைக்க வழியில்லாது போயினும், சில நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பகலில் கிடைத்த வேலைகளைச் செய்வது, மாலையானால் நாடக ரிகர்ஸல், அது முடிந்தால் தெருவோரம் தூங்குவது என்று பல நாட்கள் ஓடின. துயரம் மிகுந்த இந்த நாட்களை வர்ணிக்க ஒரு சில பக்கங்கள் போதாது. இது ஒன்றும் சுய சரிதையுமல்ல.

நண்பர்கள் சிலர் ஓய்வு நேரங்களில் கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். நானும் அவற்றை இரவல் வாங்கிப் படிப்பேன். சிறு வயதிலேயே, ஊரில் சாண்டில்யன் கதைகள் ஒன்றிரண்டு படித்ததுண்டு. இருப்பினும் இங்கு வந்த பிறகுதான் முழுமையான ஆர்வத்துடன் கடல்புறா, யவனராணி போன்ற பல நவீனங்களை வாசித்தேன். தொடர்ந்து கல்கி, அகிலன், மு.வ., நா. பார்த்தசாரதி, விக்கிரமன், கோவி மணிசேகரன், ஜெகசிற்பியன், சோமு, கி.ரா. கோபாலன், ஜெயகாந்தன், ஜாவர் சீதாராமன் போன்றோர் கதைகளை வாசித்தேன்.

மண்ணடி பவழக்காரத்தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலருகில் இருந்தது நண்பர்கள் தங்கியிருந்த அறை. சில போதுகளில் நான் அங்கு சென்று தங்குவதுண்டு. அதன் அருகில் ஒரு பெரியவர் வாடகை நூலகம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு ரூபாய் கொடுத்து மெம்பர்ஷிப் கார்டு வாங்கினேன். ஒரு புத்தகம் படிக்க நாலணா தர வேண்டும். நிரந்தர வேலையற்ற அந்த நாட்களில், நாலணா சம்பாதிக்கப் படாதபாடு படவேண்டும். 

ராஜா அண்ணாமலை மன்றத்தின் பின்னால் உள்ள வெளியூர் பஸ் நிலையத்தில் ‘மங்களா கேப்’ என்று ஒரு உணவு விடுதி உண்டு. அதில் ஒரு மணி நேரம் சப்ளையர் வேலை பார்த்தால் நாலணா சம்பளம். எப்போதுமே அங்கு கூட்டம் நிரம்பி வழியும். காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் அங்கு சென்று பணிபுரிவேன். டிபனும் சாப்பிடலாம். எட்டணா காசை வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிடலாம். அங்கு நிரந்தரப் பணியாளர்களைவிட, இப்படி பகுதிநேரம் வந்து செல்பவர்களுக்கே வாய்ப்பு அதிகம். இப்படி நான் வாரக்கூலி ஆளாக அம்பீஸ்கேப், மாடர்ன் கேப், கீதா கேப் போன்ற பல ஓட்டல்களிலும் பணிபுரிந்ததுண்டு. எங்கும் நிலையாக இருந்ததில்லை.

கையில் காசு கிடைத்தவுடன் நேரே மண்ணடி சென்று, நா.பா. நூல் ஒன்றை எடுத்துக் கொண்டு லோன்ஸ்குயர் பார்க்கில் வந்து உட்கார்ந்து விடுவேன். ஒரே மூச்சில் கதை முழுக்கப் படித்துவிட்டுதான் வேறு வேலை பார்ப்பேன். திரும்பத் திரும்ப ஓடி வருவதைப் பார்த்த அந்த வாடகை நூலகப் பெரியவர், “அப்பா, ஒரு முழு நாளாவது புத்தகம் உன்னிடம் இருக்கட்டும். மறுநாள் மாலையில் வா. இத்தனை சீக்கிரம் படித்தால், ஒரு விஷயமும் உன் மனத்தில் பதியாது. உனக்குப் புத்தகம் கொடுத்து எனக்குக் கட்டுப்படியாகாது போலிருக்கே...” என்பார்.

அவர் சொல்வதிலுள்ள உண்மை எனக்குப் போகப் போகப் புரிந்தது. கதையில் அடுத்து என்ன நிகழ்கிறது என்று சம்பவங்களை அறிவதில் மட்டுமே ஆர்வம் காட்டிய நான், அதுவரை மேம்போக்காக - நுனிப்புல் மேய்வது போலவே பக்கங்களைப் புரட்டியிருந்தேன். இது ஒரு வித அலட்சியமான வாசிப்பு முறை. இதைத்தான் பெரும்பாலும் பலரும் செய்வது வழக்கம்.

புத்தகத்தின் பெயரைச் சொன்னதும், “ஓ... அதை நான் வாசித்திருக்கிறேனே... ’ என்று கூறி, மேலோட்டமாக அந்தக் கதை பற்றியும் கூறி விடுவர். ‘இந்தப் பொண்ணு அந்தப் பையனைக் காதலிச்சா...எதிர்ப்பு இப்படி வந்தது. கதை இப்படி முடிந்தது. என்கிற வகையிலேயே அந்தப் பேச்சு இருக்கும். இந்த மாதிரி சொல்வது என்றால், ராமாயணத்தைக் கூட நாலே வரியில் கூறி விடலாமே...! அதன் கவித்துவம், இலக்கிய நுட்பம், தத்துவச் சிறப்பு போன்றவை எப்படிப் புரிபடும்?

அந்த வாடகை நூலகப் பெரியவரின் அறிவுறுத்தலுக்குப் பின் நான் புத்தகங்களை ஆழமாகப் படிக்கத் துவங்கினேன். குறைந்தது மூன்று நாட்களாவது ஒரு புத்தகம் என் கையில் இருக்கும். திரும்பக் கொடுக்க மனமில்லாமல் அதைக் கொடுப்பேன். ஒருவாரம் கழித்து மறுபடியும் அதையே ஒரு முறை எடுத்து வந்து, திரும்பவும் வாசிப்பேன். இப்படி நான் நா.பா. வின் குறிஞ்சிமலர், பொன் விலங்கு, மணிபல்லவம், கபாடபுரம் போன்ற நூல்களைப் பலமுறை வாசித்து, தேனுண்ட வண்டாய் அதனுள் மயங்கிக் கிடந்தேன்.

‘கல்கி’ நா.பாவின் கதைகள் வெளிவந்த போது, சில அற்புதமான வர்ணனைகளைப் பொன்மொழிகள் மாதிரி கட்டம் கட்டி, கதை நடுவே வெளியிட்டிருப்பர். அவற்றை நான் மிகவும் ரசித்து, கையில் கிடைக்கிற தாள்களில் எழுதி வைப்பேன். நண்பர்கள் வட்டத்தில் சில மலையாளிகள் இருந்தனர். அவர்கள் நல்ல படிப்பாளிகள். கையில் எப்போதும் மலையாளப் புத்தகங்கள் அல்லது ஆங்கில நூல்கள் மட்டுமே வைத்திருப்பர். பல நூல்களை, எழுத்தாளர்களைப் பற்றி மிகவும் சிலாகித்தபடி இருப்பர். தமிழ்க் கதைகள் படிக்கிற ஆசாமிகளை அவர்கள் சற்று இளப்பமாகவே பார்ப்பது வழக்கம். 

நான் அவர்களிடம் நா.பா.வின் கதை நடுவே இடம் பெற்ற பொன்மொழி போன்ற வாசகங்களைக் குறித்து வைத்திருப்பதை மேற்கோள் காட்டிப் பேசுவேன். அதைக் கேட்டு அவர்கள் வியந்து போனதுண்டு. படித்த நூல்களிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததும் என்னைச் சுற்றி நண்பர்கள் வட்டம் பெரிதானது. நாங்கள் அடிக்கடி மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் கடற்கரை மணலில் ஒன்றாய் அமர்ந்து நிறைய விஷயங்கள் பேசலானோம். நான் கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன். அசட்டுத்தனமாய் அதைப் பத்திரிகைகளில் கொண்டு போய்க் கொடுக்கும் ஆசையும் எழுந்தது.

லோன்ஸ் குயர் பார்க் எதிரேதான் ஜனசக்தி, தாமரை பத்திரிகைகளின் அலுவலகம் இருந்தது. ஒரு நாள் அங்கு நேரில் போய், ஒருவரைச் சந்தித்து என் கவிதைகளைக் கொடுத்தேன். ஒரு நோட்டத்திலேயே அவை ஒன்றுக்கும் உதவாதவை என்பதை அவர் கணித்திருக்க வேண்டும். இருப்பினும் அவர் என்னைப் பற்றி விசாரித்தார்;  தன்னைப் பற்றியும் சொன்னார். அவர்தான் அறந்தை நாராயணன். நான் உடனே தூத்துக்குடியிலிருந்து வெளிவந்த ‘சாந்தி’ பத்திரிகையில், வியட்நாம் யுத்தக் கொடுமைகள் பற்றி ‘அன்புள்ள சாந்திக்கு’ எனும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகளை வாசித்த விவரம் சொன்னேன். மகிழ்ந்து போன அவர், “நிறைய படியுங்கள், கவிதைகளும் எழுதுங்க. நல்ல கவிதைகள் எழுத உங்களுக்கு நிச்சயம் வரும்”  என்று ஆறுதல் கூறி, எதிரே அமர்ந்திருந்த ஒரு பெரியவரை அறிமுகம் செய்து வைத்தார்

.
அந்தப் பெரியவர் - எழுத்துலக பீஷ்ம பிதாமகரான

வல்லிக் கண்ணன்!
(வளரும்)

1 comment:

  1. Gouthama Neelambaran sir,it was a great day I met you on 24 Dec in Mr.Vaiyavan's 75th birth day function.your introduction authenticate that thoughts are dynamic and vital and it actually change conditions.It happened in many people's life.your progress is simply great!

    ReplyDelete