Sunday, 21 September 2014

சீலையம்பட்டியின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவு /பாரதிபாலன்

காற்று வரும் பருவம் /பாரதிபாலன்

இரா, எட்வின்

சீலையம்பட்டியின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவு 

 "ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.


                                 
பாரதிபாலன்.

                    
இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"

என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.

வெளியீடு
புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayaoli.Blogspot.in]



Thursday, 18 September 2014

தமிழ் இனி மெல்ல [பா.3 :அத்தியாயம் 4 ]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [பா.3 :அதி.3 ]சென்ற பதிவின் இறு தியில் 
 ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?” என்று கனிவான குரலில் வினவுகிறார். வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரோ இவர்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது நிலவுமொழிக்கு. சட்டென்று எழுந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்கிறாள் அவள்.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கி விட்டோம். நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பி இருக்கலாமே!” மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.

“அதனாலென்ன அம்மா. நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!” என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார் அவர்.

இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண்விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காலில் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார். “ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி.” என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. “தெரியும். தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள் போல இருக்கிறது. உங்களை அழைத்துச் சென்று வசதியாகத் தங்க வைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள். நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே உண்டுவிட்டு, அருகிலிருக்கும் வீட்டிலேயே இரவு தங்கிக் கொள்ளுங்கள். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப் பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான்.” என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின் தொடர்கிறார்கள்

தமிழ் இனி மெல்ல [பா.3 :அத்தியாயம்  4 ]தொடர்கிறது 

நிலவுமொழிக்கு ஏதோ கனவு போல இருக்கிறது. ஏகாம்பரநாதர் கோவிலின் அதிகாரி தாங்கள் உறங்கி விழிக்கும் வரை அருகில் காத்திருந்ததும், அவர் தங்களை அடையாளம் கண்டு கொண்டதும், சிவாச்சாரியார் தாங்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததும் அவளுக்கு வியப்பாகவே இருந்தது. அப்படியென்றால் அவர்களை அவர் கண்காணித்துக் கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எது எப்படியிருந்தாலும், தனது தந்தைக்கு சிவாச்சாரியரின் சொற்கள் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எப்படிப் பிறந்தது? ஒருவேளை இறைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவருக்கு மனிதர்கள் மீதும் நம்பிக்கை வைப்பது எளிதாக இருக்கிறதோ என்னவோ? பழையாறை மாளிகையிலும், தஞ்சையிலும் தங்கியிருந்த தனக்கு சிவாச்சாரியார் மீது ஏன் அப்படிப்பட்ட நம்பிக்கை பிறக்கவில்லை? ஒருவேளை அறிவு முதிர்ச்சியின்மை என்பது இதுதானோ? இருபது வயதிற்கும் மேலான தனக்கு இன்னுமா அறிவு முதிர்ச்சி வரவில்லை என்று நினைத்துப் பார்க்கிறாள்.

என்ன இருந்தாலும் தன் உள்ளுணர்வுக்குத் தோன்றியபடியே சிவாச்சாரியரைத் தான் சந்திக்கப் போகிறோம் என்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது சந்திப்பு தன் வாழ்வில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்றும் அவளது உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருக்கிறது.

விடுதிக் காவலன் இரவில் அவர்களை கோவில் வீடு ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். வீடு சிறிதாக இருந்தாலும், மிகவும் தூய்மையாக இருக்கிறது. அவர்கள் உறங்குவதற்காக புதிய பாய்களும் தலையணைகளும் சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் பானையில் விளாமிச்ச வேர் ஊறும் குடிநீர் நிரம்பி இருக்கிறது. கூடத்தில் ஒரு நிலைக் கண்ணாடி - தூங்கா விளக்கு முற்றத்திற்கருகில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

“அய்யா, கொல்லையில் கிணறு இருக்கிறது. காலையில் நீராட கிணற்று நீரை உபயோகித்துக் கொள்ளுங்கள். கூடையில் பழங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு சாப்பிடுங்கள். விடிந்து மூன்று நாழிகைக்குள் நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன். உள்ளே அறையில் இருக்கும் பெட்டியில் நீங்கள் அணிந்து கொள்ள மாற்று உடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்து கொண்டு வரும்படி ஓலைநாயகம் தெரிவித்திருக்கிறார். கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்குங்கள். நான் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பேன். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும், என்னைக் கூப்பிடுங்கள். நான் வருகிறேன்.” என்று கிளம்புகிறான் கோவில் காவலன்.

பிரையில் எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கை எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறக்கிறாள் நிலவுமொழி. உள்ளே ஒரு மூலையில் ஒரு பெரிய மரப்பெட்டி இருக்கிறது. அதன் அருகில் இருந்த முக்காலியில் ஒரு பேழை இருக்கிறது. அதை மெல்லத் திறந்து பார்த்தவள் அதிர்ச்சியில் தந்தையை விளிக்கிறாள். “இங்கே வந்து பாருங்கள் அப்பா!”

“என்னம்மா, ஏதாவது பூச்சி பொட்டு இருக்கிறதா? இரு, கூட்டுமாரை எடுத்து வருகிறேன்.” என்று அவரிடமிருந்து பதில் வருகிறது.

“கூட்டுமாருக்கு அவசியமில்லை. இங்கே வந்துதான் பாருங்களேன்!” என்ற அவள் குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு அறைக்குள் நுழைகிறார் அவர்.

நிலவுமொழியின் ஒரு கையில் நான்கைந்து தங்கச் சங்கிலிகள் தொங்குகின்றன. இன்னொரு கையில் பத்து வைரங்கள் பதித்த வளையல்கள் இருக்கின்றன. மரப்பெட்டியின் மீது வைத்திருக்கும் விளக்கு வெளியில் அவை பளபளக்கின்றன.

அவற்றைப் பார்த்து பொன்னம்பல ஓதுவார் அப்படியே பேச்சிழந்து நின்று விடுகிறார். மகளையும், அவள் கைகளில் உள்ள ஆபரணங்களையும் மாறிமாறிப் பார்க்கிறார். அவரது கண்கள் திறந்திருக்கும் பேழையில் படிகிறது. அதில் மேலும் பல நகைகள் உள்ளன. அவையும் நல்ல மணிகள் பதித்த நகைகளாகவே இருக்கின்றன. அவைகளும் விளக்கு வெளிச்சத்தில் தகதகவென்று மின்னுகின்றன. எப்படி அவை வந்தன என்று வினவுகிறார்.

“தெரியவில்லை. நான் பேழையைத் திறந்து பார்த்தேன். பேழை முழுவதும் நகைகளாகவே இருக்கின்றன.” என்று தன் கையில் உள்ள நகைகளையும், வளையல்களையும் பேழைக்குள் வைத்து மூடுகிறாள். பிறகு மரப்பெட்டியைத் திறக்கிறாள்.

பெட்டியின் உள்ளே கண்ணைப் பறிக்கும் சீனப்பட்டாடைகள் இருக்கின்றன. வண்ண நூல் வேலைப்பாடு செய்த மார்புக் கச்சைகளும், கீழாடைகளும், மேலாடைகளும், தலைப்பாகையும், சரிகை வேஷ்டிகளும் உள்ளன. இருவருக்கும் ஒரே குழப்பமாக இருக்கிறது.

“இதென்ன ஒரே குழப்பமாக இருக்கிறது! கோவில் காவலன் மாற்று உடைகள் என்றுதானே சொன்னான்? இது அரச குடும்பத்தினர் அணிந்து கொள்ளும் உடைகளாகவும், நகைகளாகவும் அல்லவா இருக்கின்றன! நான் வெளியே சென்று கோவில் காவலனை அழைத்து வருகிறேன். ஏதோ மாறி வந்து விட்டது என்று நினைக்கிறேன்.” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வருகிறார் ஓதுவார். அவர்கள் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் திண்ணையில் படுத்திருந்த விடுதிக் காவலன் எழுந்திருந்து, “என்ன வேணும்?” என்று விசாரிக்கிறான்.

“மாற்று உடைகள் பெட்டியில் இருக்குன்னு சொன்னியேப்பா. ஆனா ஏதோ அரச குடும்பத்து உடைகள்தாம்ப்பா இருக்கு. தவிர ஒரு பேழையில் நிறைய அரச ஆபரணங்களும் இருக்குப்பா. ஏதோ தவறு நடந்து போயிருக்கோ என்னவோப்பா.” என்று பதட்டமான குரலில் கேட்கிறார் ஓதுவார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. சரியாகத்தான் இருக்கணும். ஓலைநாயகம் அய்யாதான் கொடுத்தனுப்பிச்சாரு. ஓதுவாரும், அவுங்க பொண்ணும் வருவாங்க, அவங்க நாளைக்கு அந்த உடைங்களைப் போட்டுக்கிணு வரணும்னு தகவல் சொல்லு. அதுலே இருக்கறது எல்லாம் அவுங்களுக்குத்தான்னும் சேதி அனுப்பியிருந்தாரு. ஒங்களுக்கு ஏதோ ஓலை வேற வச்சுருக்கறதாவும் சொல்லியிருந்தாரே, பார்த்தீங்களா? இருட்டுலே எங்கேயாவது இருக்கும், பாருங்க. எல்லாம் உங்களுக்குத்தான். உங்கள கண்ணுல வச்சுக் காப்பாத்தத்தான் நான் திண்ணைலே படுத்துக்கிட்டு இருக்கேன். கவலையே படாதீங்க. நல்லாப் படுத்துத் தூங்குங்க. நாளைக்குப் பார்க்கலாம்.” திரும்பப் படுத்துக் கொண்டு விடுகிறான் கோவில் காவலன். அவன் தொண்டை மண்டல ஒற்றர் தலைவன் என்பதும், கோவில் அதிகாரி அவன் கீழ் பணியாற்றும் காஞ்சிப் பகுதியில் ஒற்றர்களில் ஒருவர் என்பதும் அரச இரகசியம்.

பேழைக்கு அடியில் இருந்த ஓலையில் அந்த நகைகளும், உடைகளும் அவர்களுக்கு அருள்மொழிநங்கையின் பரிசு என்று எழுதியிருக்கிறது. இரவு முழுவதும் நிலவுமொழிக்கு உறக்கமே வரவில்லை. மறுநாள் இந்த உடைகளை அணிந்து கொண்டு எங்கு செல்லப் போகிறோம், என்ன அதிசயம் காத்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு மலைப்பாகவே இருக்கிறது. ஆனால் அவளது தந்தையோ நிம்மதியாக மெல்லிய இழையாக குறட்டை விட்டவண்ணம் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

விடியுமா விடியுமா என்று தன்னையும் அறியாமல் உறங்கியவளைத் தட்டி எழுப்புகிறார் அவளது தந்தை. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த நிலவுமொழி கொல்லைக் கதவைத் திறந்து பின்புறம் சென்று நீராடிவிட்டு வருகிறாள். அவள் திரும்பி வரும் பொழுது ஒரு மூதாட்டி அவளது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். நிலவுமொழியைப் பார்த்தவுடன் தனது காவி படிந்த பற்கள் தெரிய புன்னகைக்கிறாள். என்ன என்பது போல கண்களாலேயே தந்தையை வினவுகிறாள் நிலவுமொழி. “இவர்கள் உன்னை அலங்கரிக்க வந்திருக்கிறார்கள். சிவாச்சாரியார் இவர்களை அனுப்பி வைத்தாராம்.”

“வாம்மா கண்ணு. எம்புட்டு அழகா இருக்கே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!” என்று அவள் முகத்தைத் தடவி திருஷ்டி நெறிக்கிறாள் அந்த மூதாட்டி. தான் கொண்டு வந்த ஒரு சிறிய பெட்டியுடன் நிலவு மொழியை அறைக்குள் அழைத்துச் சென்று நன்கு அலங்கரித்து விடுகிறாள். அவள் பெட்டியில்தான் எத்தனைவிதமான அழகு சாதனங்கள் - இதுவரை நிலவுமொழி அப்படிப்பட்ட சாதனங்களைப் பார்த்ததே இல்லை. அவளுக்கு நன்றாகச் சீவிச் சிங்காரித்து, கண்ணில் மை தீட்டி, புருவங்களில் ஜவ்வாது கூட்டி, கூந்தலில் சாம்பிராணிப் புகையேற்றி, வளைத்துச் சுற்றி அவளது நீண்ட கூந்தலைக் கொண்டையாக முடிகிறாள். நகைப் பேழையைத் திறந்து ஆபரணங்களை எடுக்கிறாள். முடிந்த கொண்டையில் கல் பதித்த தங்கச் சங்கிலியைக் கட்டிவிடுகிறாள். நெற்றிச் சுட்டி, மூக்குத்திகள், காதுக் குழைகள், எல்லாவற்றையும் அணிவிக்கிறாள். அந்த மூதாட்டி தன் வேலையை முடித்து விட்டு கூடத்தில் இருந்த நிலைக்கண்ணாடி முன்பு தன்னை நிறுத்தியதும், அதில் தெரிந்தது தான்தான் என்று நிலவுமொழியால் நம்பவே முடியவில்லை. அவளைக் கண்டு அவளது தந்தையும் பிரமித்துப் போய்விடுகிறார். அவரும் ஒரு அரசு அதிகாரி மாதிரியே காட்சி அளிக்கிறார். கோவில் காவலன் அவருக்கு மாற்று உடைகளை அணிவித்து விட்டிருக்கிறான்.
ஒரு சிவிகை வாயிலில் வந்து நிற்கிறது. மூதாட்டி நிலவுமொழியை அதில் அமரும்படி சுட்டிக் காட்டுகிறாள். அதன் திரையை விலக்கிப் பார்த்த நிலவுமொழி திடுக்கிடுகிறாள். சிவிகையின் உள்ளே சிரித்தவாறு அமர்ந்திருக்கிறாள் அருள்மொழிநங்கை.
* * *
                                    அத்தியாயம் 4
                       சுந்தர சோழரின் பொன் மாளிகை
                        நள, சித்திரை 15 - ஏப்ரல் 30, 1016
கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது சிவிகை. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான் சிவிகையுள் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப இயலவில்லை. சிவிகைக்குள் அவளைக் கண்டவுடன் அப்படியே சிலையாய் நின்றுவிட்டதும், தன் கையைப் பிடித்து இழுத்து அருள்மொழிநங்கை இருத்திக்கொண்டதும் கனவுபோல அவள் மனக்கண் முன்னர் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கிறது. எத்தனை முறை துருவித் துருவித் தன்னை அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் காரணத்தைக் கேட்டாலும் அருள்மொழிநங்கை பதிலே சொல்லவில்லை. எனவே அருள்மொழிநங்கை மற்ற விவரங்களைப் பேசி வந்தும் மனம் பேச்சில் ஈடுபடாமல் அமைதியாகிவிட்டாள் நிலவுமொழி. இதைக்கண்ட அருள்மொழிநங்கையும் அவளைக் கனவுலகில் அலைந்து திரிய விட்டுவிட்டிருக்கிறாள்.

ஒரு குலுக்கலுடன் சிவிகை கீழே இறக்கப்படுகிறது. திரையை விலக்கிக்கொண்டு இறங்கிய அருள்மொழிநங்கை நிலவுமொழியையும் தன்னுடன் இறங்கி வருமாறு கண் காட்டுகிறாள். அவளைத் தொடர்ந்து இறங்கியவள், ஒரு அழகிய மாட்டு வண்டியிலிருந்து தன் தந்தையை விடுதிக் காவலன் கைவாகு கொடுத்து இறக்கி விடுவதைக் கவனிக்கும் பொழுது நெஞ்சு பெருமையால் விம்முகிறது.

எப்பொழுதுமே மேலாடை இல்லாமலும், சாதாரண உடையுடனும் அவரைப் பார்த்து வந்த அவளுக்கு பளபளக்கும் மேலாடை, கீழாடைகளுடனும், வேலைப்பாடு மிக்க தலைப்பாகையுடன் பார்க்கும் பொழுது சிரிப்பு வந்தாலும், அவர் தற்பொழுது ஒரு அரசு அலுவலரைப் போலக் காணப்படுவது பெருமையாகத்தான் இருக்கிறது. தானாவது அரச குடும்பத்தினருடன் நன்கு பழகி வந்திருக்கிறோம், இப்படிப்பட்ட அனுபவத்தை அவர் இதுகாறும் பெற்றதுகூட இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்கிறாள்
.
கோவில் விடுதிக் காவலன் அவர்களை வணங்கி விட்டு பொன்மாளிகை வாயிலிலேயே நின்றுகொண்டுவிடுகிறான். வாயிலில் காத்திருக்கும் தாதியர்களும், காவலர்களும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். முதல் வளாகத்தைத் தாண்டியதும் சிவாச்சாரியனும், அருள்மொழிநங்கையின் தாய் பஞ்சவன்மாதேவியும் அவர்களை எதிர்கொள்கிறார்கள். இருவரையும் தரையில் விழுந்து வணங்க முற்பட்ட நிலவுமொழியைக் கைகளில் தாங்கி நிறுத்துகிறாள் பஞ்சவன்மாதேவி.

சிவாச்சாரி திருமந்திர ஓலைநாயகத்தின் உடைகளை அணிந்திருக்கிறான். அவனைக் கண்டதும் கயல் விழிகள் விரிய, கருவண்டுகள் போன்ற கண்மணிகள் பளபளக்க, பூவிதழ் பிளந்து, முத்துப் பற்கள் பளிச்சிட, பெரிய புன்னகை நிலவுமொழியின் முகத்தில் மலர்கிறது.

ஓடிச் சென்று, “ஐயா, தங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும், என் தந்தைக்கும் இந்த வேஷம் எதற்காக?” என்று கேட்கிறாள். ஒரு புன்னகையையே விடையாகத் தருகிறான் சிவாச்சாரி. பஞ்சவன்மாதேவி அவளது நெற்றிச் சுட்டியைச் சரிப்படுத்தி விடுகிறாள். மேலும் அவளது ஆடைகளையும் சிறிது சரிசெய்து விடுகிறாள். அவளது தோள்களைப் பற்றி அழைத்துச் செல்கிறாள் அருள்மொழிநங்கை.

அவளுடன் அரச மண்டபத்திற்குள் நுழைந்த நிலவுமொழி மகிழ்ச்சியான அதிர்ச்சிக்கு ஆளாகிறாள். மகுடமணிந்த இராஜேந்திரன் நடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும், வீரனும், ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறார்கள்.

இராஜேந்திரனின் சாயலுடன் இருந்த ஆளவந்தானைப் பார்த்து மலைக்கிறாள் நிலவுமொழி. அவனுக்கு அருகில் குறுநில இளவரசனைப் போன்ற ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் எழுபதிலிருந்து எழுபத்தைந்து வயது மதிக்கக் கூடிய முதியவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தால் ஒரு குறுநில மன்னர் மாதிரி இருக்கிறது. வெள்ளை வெளேறென்ற முறுக்கு மீசையும், காதில் வைரக் கடுக்கனும் அணிந்திருக்கிறார். நெற்றியில் தீட்டப்பட்டிருந்த நீண்ட சிவப்புக் கோடு அவர் வைணவர் என்பதைக் காட்டுகிறது. ஊடுருவிப் பார்க்கும் கண்களால் நிலவுமொழியை அளவெடுக்கிறார் அவர். தலையைக் குனிந்து கொள்கிறாள் நிலவுமொழி. அவருக்கும், அவருக்கு அருகில் இருப்பவனுக்கும் சாயல் ஒற்றுமை இருக்கிறது. வயது வித்தியாசத்தை மனதில் கொண்டு அவரது பேரனாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறாள்.

“அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளம்மா!” என்று காதில் கிசுகிசுக்கிறாள் பஞ்சவன்மாதேவி. அனைவரையும் வணங்குகிறாள் நிலவுமொழி.

“வாம்மா நிலவுமொழி. நீ இப்பொழுது ஒரு அரசகுமாரி மாதிரித்தான் இருக்கிறாய். உன்னை ஒரு தந்தையாக வரவேற்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் தந்தையாக ஒரு கடமையைச் செய்யவும்தான் உன்னை வரவழைத்திருக்கிறேன்!” கணீரென்று முழங்குகிறது இராஜேந்திரனின் குரல்.

“மகாராஜா! என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏழை ஓதுவாரின் மகளை உங்கள் மகளென்று சொல்கிறீர்களே!” தழுதழுக்கிறது பொன்னம்பல ஓதுவாரின் குரல். அவரது கைகள் தலைக்குமேல் உயர்ந்து வணக்கத்தில் ஒன்று சேர்கின்றன.

“ஆம், பொன்னம்பல ஓதுவாரே!” என்று இராஜேந்திரன் சொன்னதும் அவரால் தன் காதுகளையே நம்ப இயலவில்லை. தன்பெயர் சோழப் பேரரசரான இராஜேந்திரனுக்கு எப்படித் தெரிந்தது! இப்பொழுதுதானே இராஜேந்திரனனை அவர் முதல்முதலாகச் சந்திக்கிறார்?

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவளை எம் மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். அவளுக்கும் திருமண வயது ஆகிவிட்டதல்லவா! ஆகவே தந்தையாக எனது கடமையைச் செய்ய விரும்பி எமது திருமந்திர ஓலைநாயகம் வாயிலாக உம்மையும், எமது மகளையும் இங்கு வரவழைத்தோம்!” அவன் குரல் கனிவாக இருந்தாலும், ஓதுவாருக்கு அது கனவில் ஒலிப்பதுபோல இருக்கிறது.

சிவாச்சாரி அவரை ஒரு ஆசனத்தில் அமரும்படி கைகாட்டுகிறான். இருப்பினும் இராஜேந்திரன், மற்றும் அரசு அதிகாரிகள் பலரின்முன் அவர்களுக்குச் சமமாக அமர ஓதுவாருக்குக் கூச்சமாக இருக்கிறது. அவரைக் கையைப் பிடித்து அமர்த்திய சிவாச்சாரி தானும் அவரருகில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து கொள்கிறான்.

பஞ்சவன்மாதேவி இராஜேந்திரனுக்கருகில் அவனது அரியாசனத்தில் அமரவே, இராஜாதிராஜனும், இராஜேந்திர தேவனும் எழுந்திருந்து அருள்மொழிநங்கைக்கும், நிலவுமொழிக்கும் தங்கள் இருக்கையை அமரக் கொடுத்துவிட்டு வேறொரு இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்கள். மிகவும் கூச்சத்துடன் அமர்ந்து கொள்கிறாள் நிலவுமொழி.

“சேதுராயரே, உமது பெயரனை எம் மகள் நிலவுமொழிக்கு மணமுடிக்க உமது சம்மதத்தை யாம் கோருகிறாம்!” சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறான் இராஜேந்திரன்.

பனித்த மீசையுடன் அமர்ந்திருந்த சேதுராயர் புன்னகையுடன், “எந்தப் பெயரனுக்கு?” என்று வினவுகிறார்.

“வயதாகிவிட்டது உமக்கு, சேதுராயரே!” கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன். “அதுதான் எதையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலவில்லை! எப்பொழுது எமது மகள் என்று சொல்லி விட்டோமோ, அப்பொழுதே ஆளவந்தான் நிலவுமொழியின் அண்ணனாகி விட்டான். நாம் குறிப்பது உமது மகன் வயிற்றுப் பேரனான காடவனைத்தான்!”

“அரசே! தாங்கள் ஆணையிட்டால் அதற்கு நான் மறுப்புச் சொல்லவா போகிறேன்! இருப்பினும்...”  என்று இழுக்கிறார் சேதுராயர்.

“என்ன தயக்கம் உமக்கு?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

“தாங்களும், தங்களது மகளாகச் சொல்லப்படுபளும் சைவர்கள். நானும் எனது பெயரனும் வைணவர்கள். அப்படியிருக்க, மணவினை நடத்து என்றால்...” மீண்டும் இழுக்கிறார் சேதுராயர்.

“ஏன்? சைவர்களும் வைணவர்களும் மணவினை செய்து கொள்வதில்லையா? உமது மகளை நான் மணந்து கொள்ளவில்லையா?”

“நான் மனம் விட்டுப் பேச கோப்பரகேசரியாரின் அனுமதி வேண்டும்.” சேதுராயரின் குரலில் இருக்கும் உறுதி சபையில் இருக்கும் அனைவருக்கும் ஒருமாதிரியாகப் படுகிறது.

“அரசனாகவும், குறுநில மன்னராகவும் இப்பொழுது நாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை சேதுராயரே! மணவினைக்காக உரையாடுகிறோம். எனவே, நம் உள்ளத்தில் உள்ளதைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொண்டால்தான் இளம் மக்களின் மணவாழ்க்கை சிறப்பாக விளங்கும்.” இராஜேந்திரன் முகத்தில் தவழும் புன்னகை சேதுராயர் என்ன சொல்ல விழைகிறார் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மாதிரித்தான் இருக்கிறது.

தொண்டையை இலேசாகச் செறுமிக் கொண்டு விட்டு எழுந்திருக்கும் சேதுராயரைக் கையமர்த்திய இராஜேந்திரன், “நான்தான் அரசுப் பணி இல்லை என்று சொல்லிவிட்டேனே! நீர் தயக்கமின்றி இருக்கையில் அமர்ந்தவாறே பேசலாம்.” என்கிறான்.

“நன்று, நன்று!” என்று தொடர்கிறார் சேதுராயர்.

“அரசே! தாங்கள் என் மகளைக் காதல் கடிமணம் செய்தீர்கள். இருப்பினும் தங்களுடன் சோழ அரியணையில் ஏறவேண்டிய என் மகளும், அவளது வழித்தோன்றல்களும் அரசுரிமைக்கு அருகதையற்றவர்கள் என்ற சக்கரவர்த்தி அவர்களால் அறிவிக்கப்பட்டனர். தாங்கள் அரசுரிமை ஏற்ற பின்னர்தான் என் மகள் வயிற்றுபெயரன் சோழ அரசவைக்கே அழைக்கப்படுகிறான். காரணம் தாங்கள் அறியாததல்ல - என் மகள் வைணவப் பெண் என்பதால்தானே!”

மேலே தொடர முயன்ற அவரை இடைமறித்து, “அல்ல சேதுராயரே, அல்ல! என் தந்தை சிறந்த சைவராக இருந்தாலும், வைணவத்தை மதித்தவர். நிறைய வைணவக் கோவில்களுக்கு நிலமும், அறக்கட்டளையும் வழங்கியவர். சாக்கிய முனியான புத்தருக்கு நாகைப்பட்டினத்தில் விகாரம் அமைக்க என் தந்தையார் அறக்கட்டளை வழங்கவில்லையா? என் அத்தையார் தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகரம் அமைக்கவும், சமணக் கோவில் கட்டவும் அறக்கட்டளை வழங்கியதை இந்நாடே அறியும். மேலும், தங்கள் மகள் என்னை மணந்ததும், சைவத்தை ஏற்று ஒரு சைவப் பெண் ஆகிவிடவில்லையா? அதல்ல காரணம்...”

சில கணங்கள் அமைதியான இராஜேந்திரனின் குரலில் இலேசான கரகரப்பு இருக்கிறது. “என் முதல் திருமணம் காதல் கடிமணமாக அமைந்ததை தந்தையார் ஒப்புக் கொள்ளவில்லை. சோழநாட்டின் பட்டத்து அரசியாக வரவேண்டியவள் நாடறிய, உலகறிய என்னை மணக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எங்கள் திருமணம் அரசர்களுக்கு அனுமதிக்கப் பட்டதே என்பினும், களவுக் காதல் கடிமணமாக அமைந்ததால், அது அரசுப் பதவி உரிமைக்கு அருகதையற்றது என்று முடிவெடுத்து - எனக்குத் தண்டனையாக தங்கள் மகள் வழியோர் சோழ அரச உரிமையற்றவர்கள் என்று செப்பேட்டில் பதிப்பிட்டுவிட்டார். இன்றுவரை என் அவசரச் செயலுக்காக நான் இதயத்திற்குள் குருதி சிந்தி வருகிறேன். உமது மன ஆற்றாமை எமக்குப் புரிகிறது. அதனால் உம் மனதைக் குளிர வைக்கும் ஒரு அறிவிப்பைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.”


இராஜேந்திரனின் கண்கள் பளிச்சிடுகின்றன. “அரசகேசரியான எமது தந்தையாரின் கட்டளையை மீற இயலாவிட்டாலும், சோழ அரசர்களுக்கே உரிய பட்டப் பெயரில் கடைசியான கேசரியை ஆளவந்தானுக்கு வழங்கிச் சிறப்பிக்கிறோம். ஓலைநாயகமே, இனி ஆளவந்தான் மனுநீதிச் சோழன் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கும் வகையில் “மனுகுல கேசரி”  என்று அழைக்கப் படுவான் என்பதைச் செப்பேட்டில் பதிவு செய்வீராக!” அவன் குரல் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.[வளரும்]

Tuesday, 16 September 2014

தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 3..தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 2[சென்ற பதிவின்  தொடர்ச்சி] 
அரசன் பேசும்போது குறுக்கிடுவது அழகல்ல என்று அமைதியாக இருக்கும் முருகேசன், அவனுடைய ஆணைக்கு மரியாதை செலுத்த, தலையை மட்டும் அசைக்கிறான்.
“இலங்கை மன்னர் மகிந்தரும் ஐயாயிரம் சிங்கள வீரர்களைப் பொக்கிஷப் பாதுகாப்புக்காகத் தர ஒப்பம் அளித்திருக்கிறார். அவர்களுக்கும் நீயே தலைவனாக இருப்பாய். சோழர்களை உறுதியாக இத்தடவை தோற்கடித்து விடுவோம். நீயும் உனது கடமையை உணர்ந்து செயல்படுவாயாக! உன் கவனம் சிதறக்கூடாது, உன் மனைவி மக்களைப் பற்றிய கவலை இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களைப் பாண்டிய நாட்டின் பாதுகாப்பான இடமான நெல்லைக்கு அனுப்பி வைக்க என்று உனக்கு ஆணையிடுகிறோம். அவர்களின் பாதுகாப்புக்கு எமது உத்திரவாதத்தை உனக்கு யாமே அளிக்கிறோம்!” என்று மேலும் விளக்குகிறான் விக்கிரமன். 
“ஆணை அரசே!” என்று பெருமிதத்துடன் பதிலளிக்கிறான் முருகேசன். கடைசியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டி நாட்டுக்காக வாளேந்தும் தருணம் வருகிறது என்பதை அறிந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் பளிச்சிடுகிறது.
“மிக்க மகிழ்கிறேன், முருகேசா!” என்ற விக்ரமன் மேலும் தொடர்கிறான்.
“உன் மாதிரி வீரர்கள்தான் பாண்டி நாட்டுக்குத் தேவை! நாம் வெற்றி பெருவோம்! சோழர்களைத் தஞ்சைக்கு விரட்டி, கிடுக்கிப்பிடி போட்டு மடக்குவோம்! நமது வெற்றி விழாவிலே கலந்து கொள்ள நீ மதுரைக்கு நமது பரம்பரைப் பொக்கிஷத்தோடு வரத்தான் போகிறாய்! அங்கு உன் மனைவி மக்களுடன் இணைந்து பாண்டி நாட்டுக்கு மேலும் பல வீர மக்களைப் பெற்றுத் தரத்தான் போகிறாய்! வெற்றிவீரனுடனும், காளையப்பனுடனும் நாளை பாண்டி நாட்டுக்குத் திரும்பும் என்னுடன் உன் மனைவியையும், குழந்தைகளையும் அனுப்பி வைப்பாயாக!” அவன் முதுகில் அன்புடன் தடவிக் கொடுக்கிறான்.
முருகேசனின் மெய் சிலிர்க்கிறது. நான்கு ஆண்டுகளாக வாளாவிருந்த பாண்டியப் படை சோழர்களின் மீது பாயப் போகிறது என்றதை அறிந்து மகிழ்கிறான். மீனக் கொடி மீண்டும் மதுரையில் பறக்கும் நாளைக் கண்ணுறப் போவதை எதிர்நோக்கி அவன் உள்ளம் பூரிக்கிறது.
“ஆணை, அரசே! என் உடலில் கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை பாண்டியப் பொக்கிஷம் பாதுகாக்கப்படும்! ஒவ்வொரு பாண்டிய மறவனும் ஒன்பது சோழவீரர்களுக்குச் சமம்! தினவெடுத்த எங்கள் தோள்களுக்கு, அவர்களது உயிரைக் குடிக்கும் போர் ஒரு பயிற்சியாக இருக்கும்! இது சொக்கநாதர் மீதும், அங்கயற்கண்ணி அம்மை மீதும் ஆணை!” வீரத்துடன் முழங்குகிறான்.
“இன்று இரவு நான் உன் வீட்டில் உணவு உண்டுவிட்டுத்தான் செல்லப் போகிறேன். என்னுடன் மொத்தம் இருபது பேர் வருவார்கள். இப்பொழுது காளையப்பன் உன்னுடன் வருவான். அழைத்துச் செல்.” என்று திரும்பி நடக்கிறான் விக்கிரம பாண்டியன்.
வீட்டிற்கு வந்த முருகேசன் முதல் வேலையாகத் தன் புஜத்தில் இருந்த தாயத்தை அவிழ்த்து சொக்கனின் கழுத்தில் மாலையாக அணிவிக்கிறான். வள்ளிக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. “என்ன அத்தான் இது. நம்ம பரம்பரைச் சொத்தை இப்படித் திடுமுனு சொக்கன் கழுத்திலே கட்டுறீங்களே!” என்ற பதைபதைப்புடன் வினவுகிறாள் வள்ளி.
“மகாராசா ரவைக்கு (இரவில்) நம்ம வூட்டுக்குச் சாப்பிட வரப்போறாரு, புள்ளே! வெட்டிக் கேள்வி கேக்காம இருவத்தஞ்சு பேருக்கு உடனே சாப்பாடு ஆக்கற வேலையப் பாரு!” என்று முருகேசனிடமிருந்து அதட்டலான பதில் வருகிறது. .
தமிழ் இனி மெல்ல.. அத்தியாயம் 3..தொடர்கிறது 
                                                  அத்தியாயம் 3
                            தஞ்சை அரண்மனை
                              ராட்சச, பங்குனி 10 - மார்ச் 24, 1016
கிட்டத்தட்ட முப்பத்தைந்திலிருந்து நாற்பது பேர்கள் அரச ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றனர். இராஜேந்திரனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜாதிராஜனுக்கு அருகில் இருக்கும் இருக்கைகளில் சிவாச்சாரியனும், அவனுக்கு அடுத்தபடியாக இறையிரவன் பல்லவராயரும் அமர்ந்திருக்கிறார்கள். இராஜேந்திரதேவனுக்கு அடுத்த மூன்று இருக்கைகளில் சோழப் பேரரசின் தலைமை அமைச்சரும், வடபுல, மற்றும் தென்புல அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறான். இன்னும் கடற்படைத் தலைவர்கள், தண்டநாயகர்கள், ஒற்றர் தலைவர்கள், துணை அமைச்சர்கள், நிதியாளர்கள், என்று பலப் பலபேர் குழுமியிருக்கிறார்கள். மண்டபத்தைத் தாண்டி உள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் ஒலி கேட்காத தூரத்தில் வீரர்கள் சுற்றிலும் காவலுக்கு நிற்கிறார்கள். இராஜேந்திரன் அரியணை ஏறியபின் முதல்முதலாக சோழப் பேரரசின் முக்கியமான அரசு அதிகாரிகளைக் கூட்டி நடந்தும் கலந்துரையாடல் இது. சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகம் என்ற முறையில் சிவாச்சாரி எழுந்து நின்று கலந்துரையாடல் ஆரம்பமாவதை அறிவிக்கிறான்.

“கோப்பரகேசரியாரின் ஆணைக்கிணங்க அனுப்பப்பட்ட ஓலை மூலம் இங்கு வந்து குழுமியிருக்கும் சோணாட்டின் தூண்களான உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். கோப்பரகேசரியாரின் ஆணைப்படி இக்கலந்துரையாடல் துவங்குகிறது.”

சிவாச்சாரி தனது இருக்கையில் அமர்ந்து கொள்கிறான். ஆலோசனை மண்டபமே அமைதியாகி விடுகிறது. அனைவரும் இராஜேந்திரனின் முகத்தையே உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். தனது மீசையை நீவிவிட்டுக் கொள்கிறான் இராஜேந்திரன். பிறகு மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் மீதும் தனது பார்வையைச் சில கணங்கள் நிலை நிறுத்துகிறான். அவன் இம்மாதிரி அனைவரையும் கண்டுகொள்ளப் பல நிமிடங்கள் ஆகின்றன. அவனது பார்வை தங்கள் மேல் விழுகிறது என்பதை அறிய ஆரம்பித்த உடனேயே அனைவரும் தங்கள் மன ஓட்டத்தைக்கூடக் கட்டுப்படுத்தி, தங்கள் பார்வையை அவன் மீது நிலை நிறுத்துகின்றனர்.

இராஜேந்திரனுடைய தனித்திறமையைக் கண்கூடாக அறிகிறான் சிவாச்சாரி. இராஜராஜரைவிட அவன் எந்தவிதத்தில் மாறுபடுகிறான் என்பதை அவன் அனைவரின்மீது செலுத்தும் கண்ணோட்டம் அவனுக்குத் தெரிவிக்கிறது. தான் பேசப் போகும் ஒவ்வொரு சொல்லிலும் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் என்பதைச் சொல்லாமலேயே தெரிவிக்கும் அவனது திறமை அவனது கோப்பரகேசரி என்ற பட்டத்தை நிரூபிக்கிறது. இராஜராஜருக்கு எந்தவிதத்திலும் அவன் சளைத்தவனாக இருக்கமாட்டான், சோழப் பேரரசை மிகவும் உன்னத நிலைக்கு அவன் கொண்டு வருவான் என்று அவன் உள்மனம் தெரிவிக்கிறது.

தொண்டையை இலேசாகச் செருமிக் கொள்கிறான் இராஜேந்திரன். உடனே மண்டபத்தில் இருக்கும் அனைவருமே மகுடியில் கட்டுண்ட நாகமாக மாறுகிறார்கள்.

“எமது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் சோழ நாட்டின் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். நமது பேரரசிற்குச் சிறந்த அடித்தளத்தை அரசகேசரியான எனது தந்தையார் அமைத்துக் கொடுத்து பெருவுடையாரின் அடி சேர்ந்தார்கள். மும்முடிச் சோழனாக, திரிபுவனச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஈழத்தின் மூன்றில் இரண்டு பகுதியைத் தனது குடைக்கீழ் கொணர்ந்தார். அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டாலும், அவரது கனவை நாம் தொடர்ந்து நனவாக்க வேண்டும். அவருடைய பணியைத் தொடர்வது - அவர் அமைத்த அடித்தளத்தின் மேல் பெரிய கட்டிடத்தை நிறுவுவதே ஆகும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பை நாடியே உங்களை அழைத்துள்ளேன்.”

தனது பேச்சை நிறுத்தி அனைவரையும் நோக்குகிறான் இராஜேந்திரன். இந்தத் தடவை ஒவ்வொருவராக நோக்காமல் பொதுவாக மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் நோக்குகிறான்.

“கரிகால் பெருவளத்தான் பூம்புகாரையும், உறையூறையும் தலைநகராகக் கொண்டு சோழர் புகழைப் பரப்பினர். அதுமட்டுமல்லாது, அடிக்கடி வெள்ளத்தில் முழுகடித்து வந்த காவிரியிடமிருந்து சோழநாட்டை மீட்க அதற்குக் கரையமைக்கத் தீர்மானித்தார். அத்தோடு நிற்காமல், பருவ காலத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி, அந்த நீரைத் தேக்கி, கால்வாய்கள் மூலம் பாசனம் செய்து செந்நெல் விளைவிக்கவும் முடிவெடுத்தார்.

“அதை நிறைவேற்ற, இலங்கையிலிருந்து பல்லாயிரக் கணக்கானோரை அடிமை செய்து கொணர்ந்து காவிரிக்குக் கரையமைத்தார். கொணர்ந்த அடிமைகளின் தலைமீது கல்லேற்றி ஆற்றின் குறுக்கே கல்லணையையும் நிறுவினார். காட்டாறாகக் கட்டற்றுத் திரிந்த காவிரியை அடக்கி, அவளது நீரைக் கட்டுப் படுத்தி, காடுகளைக் கழனியாக்கி, நம் நாட்டைச் செழிப்பாக்கி, பயிர் வளர்க்கும் பொன்னியாக மாற்றினார். அதனால் சோணாடு சோறுடைத்து என்ற பெருமொழியையும் நம்நாட்டுக்குக் கிடைக்கச் செய்தார்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு திருநகர்களும் சோழர்களின் பெருமையை இவ்வுலகுக்குப் பறைசாற்றியிருக்கின்றன. இப்படிப்பட்ட மணியான திருநகர்கள் ஒன்றான பூம்புகாரை, கடலன்னை பொறாமையால் எடுத்து விழுங்கி விட்டாள். கலியின் தூதர்களான களப்பிரர்களால் தமிழகமே இருண்டது. சோழ நாட்டின் புகழும் மங்கியது.
“விடிவு வராதா என்று ஏங்கிய சோழ அன்னையின் புலம்பலுக்கு அருமருந்தாக - நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எமது மூதாதையரான விஜயாலய சோழர் முத்தரையர்களின் ஊரான தஞ்சையைத் தமதாக்கிக் கொண்டார். சோழர் புகழை மீண்டும் தழைக்கச் செய்த அவர் காலத்திலிருந்து தஞ்சை சோணாட்டின் தலைநகராகச் சிறந்து விளங்கி வருகிறது. பெருவுடையாருக்கு மிகப்பெரிய கற்றளி அமைத்து அதை மேலும் சிறப்பித்தார் எனது தந்தையார். இருப்பினும் சோணாட்டிற்கு தலைநகராக விளங்கிய புகாரோ, கோழியூரான உறையூரோ அல்ல தஞ்சை என்பது நாமறிந்ததே!”

இதுவரை இனிமையாக இருந்த இராஜேந்திரனின் பேச்சு தஞ்சையைப் பற்றித் திரும்பியதும், அனைவரின் முகங்களிலும் குளிர்ந்த நீரை விசிறியடிப்பதைப் போனற் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தஞ்சை முத்தரையர்களின் ஊர் என்பதும், சோழர்கள் தங்கள் அரசை விரிவு படுத்தியபோது அது அவர்கள் ஆட்சிக்குக் கீழ் வந்ததும், இராஜராஜர் தஞ்சையைச் சோழநாட்டின் தலைநகராக்கியதும் அனைவரும் அறிந்ததே! இருப்பினும் அனைவரும் மறந்து வரும் அதை இராஜேந்திரன் ஏன் நினைவு படுத்துகிறான்!

“சோழ நாட்டுக்கு மையமாகத் தஞ்சை இருந்தபோது அதைத் தலைநகராகச் செய்தது தந்தையாரின் மதியூகமே. இப்பொழுது சோழநாட்டின் எல்லை பறந்து விரிந்திருக்கிறது. இயற்கை அரணாகக் காவிரியும், கொள்ளிடமும் விளங்கியது போக, அவை உள்நாட்டு நீர்ப் போக்காக ஆகியதுதான் கண்கூடு. தொண்டை மண்டலமும், கொங்கு நாடும், கீழ்ச் சேரநாடும், பாண்டிய நாடும் சோழப் பேரரசின் நேர் ஆட்சிக்குக் கீழ் வந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிதான். எனவே, இந்தப் புது நிலங்களுக்கு நடுநாயகமாகவும், நமது வட எல்லைகளை விரைவில் அடையவும் ஏதுவாக இருக்கும் இடத்தில் சோழப் பேரரசின் புதிய தலைநகராக நிர்மாணிக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.”

அந்த மண்டபத்தில் “ஆ!” என்ற பேரொலி எழுகிறது. இராஜராஜர் கோலோச்சிய தஞ்சையை விடுத்து இன்னொரு தலைநகரா!

“உங்கள் கருத்துகளைச் செவிமடுக்க ஆவலாக உள்ளோம். முதலில் நமது முத்தரையர் பரம்பரைச் செல்வர் தமது கருத்தைத் தெரிவிக்கட்டும்!”

மெல்ல எழுகிறார் வயதான முத்தரையர். இராஜராஜருடன் களம் பல கண்டவர் அவர். அவரைவிட வயதில் மூத்தவர். தங்கள் முன்னோர்களின் நகரமான தஞ்சை சோழர் வசம் சென்றாலும்,  சோழர்கள் தங்களைச் சிறந்த பதவிகளில் அமர்த்திச் சீரும் சிறப்புமாக நடத்தி வருவதும், தங்கள் குலப் பெண்களை மணவினை செய்து கொள்வதும் அவர்களை சோழர்களில் ஒருவராகவே ஆக்கி வந்திருக்கிறது. அப்படியிருக்கையில் இராஜேந்திரன் திடுமென்று தஞ்சை முத்தரையர்கள் ஊர் என்று குறிப்பிட்டது அவர் இதயத்தைக் கனக்கச் செய்கிறது.

“கோப்பரகேசரியாரே!” தான் தூக்கி வளர்த்து மதுராந்தகா என்று வாய் நிறைய அழைத்து வந்த இராஜேந்திரனை அரச மரியாதையுடன் அழைப்பதும் அவருக்கு என்னவோ போலத்தான் இருக்கிறது.

“தாங்கள் எங்கு வேண்டுமானாலும் சோழப் பேரரசின் புதுத் தலைநகரை நிர்மாணிக்கலாம். அதற்காக எக்காரணங்களையும் நான் ஏற்றுக் கொள்வேன், ஒன்றைத் தவிர. முத்தரையர்கள் என்றும் சோழர்களின் நண்பர்கள். தஞ்சை தங்களது ஊராகும். எனவே அது சோழர்களது ஊர் அல்ல என்று சொல்வது என் மனதை மிகவும் புண்படுத்துவதாக அமைந்திருக்கிறது!” அவரது குரல் தழுதழுக்கிறது. அப்படியே மெதுவாக இருக்கையில் அமர்ந்து கொள்கிறார் அவர்.

“முத்தரையர் பெருமானே! நான் சொன்னது தங்கள் மனதைப் புண்படுத்துவதற்காக அல்ல. அப்படி அமைந்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன். தங்கள் முன்னோர்கள் தஞ்சையை எங்களுக்குச் சீதனமாக அளித்திருக்கிறார்கள். அதற்காக என்றென்றும் சோணாடு தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. தந்தையார் கற்றளி அளித்துச் சிறப்பித்ததைப் போல யாரும் தஞ்சைக்கு திருச்சுற்று மாளிகை அளித்துச் சிறப்பளிக்க இருக்கிறோம். அதற்காக ஓலைநாயகத்தை திட்டம் தீட்டி நிறைவேற்றவும் பணிக்கிறோம். அது மட்டுமல்ல, தஞ்சைக் காவலராக இனிமேல் ஒரு முத்தரையர் குலக்கொழுந்தே இருந்து வருவார் என்று ஆணையும் பிறப்பிக்கிறோம்.” முத்தரையரின் மறுப்புக்கு சமாதானமளிக்கிறான் இராஜேந்திரன். ஒருவாறு சமாதானமடைகிறார் முத்தரையர்
.
முத்தரையரே விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது போலப் பட்டதும் வடபுல அமைச்சர் கையை உயர்த்துகிறார். அவர் பக்கம் திரும்பிய இராஜேந்திரன், “சொல்லுங்கள் அமைச்சரே! உங்களது எண்ணத்தையும் அவையாருக்கு அறிவியுங்கள்!” என்கிறான்.

“அரசே! புதிய தலைநகரை எங்கு அமைப்பதாகத் தங்கள் விருப்பம்?” என்று கேள்வியைத் தொடுக்கிறார்.

“அமைச்சரே எமது விருப்பம் இருக்கட்டும், தங்கள் விருப்பம் என்னவோ?”

“காஞ்சி...” என்று இழுக்கிறார்.

கடற்படைத் தண்டநாயகர் கை உயர்கிறது. அவரைப் பேசச் சொல்வது போலக் கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன்.

“அரசே! இப்பொழுது சோழப் பேரரசு ஒரு சிறந்த கடலோடும் அரசாகி வருகிறது. எனவே, கடற்கரையில் புதிய தலைநகரை அமைப்பதே சாலச் சிறந்ததாகும். திருமயிலை ஒரு சிறந்த இடம் என்று இந்தப் பேரவைக்குச் சொல்ல விரும்புகிறேன்.” என்கிறார் அவர்.

பலரும் பலவிதமான இடங்களை அறிவிக்கிறார்கள். இராஜேந்திரனின் முகத்தில் சிறிய புன்னகை மலர்கிறது. யாரும் அவன் மனதில் உள்ளதை அறிவிக்கவில்லை. இறையிரவன் பல்லவராயரும், சிவாச்சாரியனும் வாயைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்பிய இராஜேந்திரன், “பல்லவராயரும், ஓலைநாயகமும் அமைதியாக அமர்ந்திருப்பதின் காரணத்தை இந்த அவைக்குத் தெரிவிக்கலாமே!” என்று புன்னகைக்கிறான்.

“கோப்பரகேசரியாரே! என் மனதில் சோழ நாட்டுக்கு ஒரு புதிய தலைநகர் வேண்டும் என்று தோன்றவில்லை!” என்று பளிச்சென்று அறிவிக்கிறான் சிவாச்சாரி.

“காரணம் என்னவோ?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது
.
“தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றவேண்டும் என்று எனக்குப் படவில்லை. வேறொன்றுமில்லை. மற்றபடி கோப்பரகேசரியாரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்றக் கடமைப் பட்டவன் நான்!” இப்பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் மன்னன் விரும்புகிறான் என்று அறிநது அதற்குத் தகுந்தபடி - தங்களுக்குத் தோன்றிய ஒரு ஊரின் பெயரை அறிவித்தார்கள். முத்தரையர்கூட தஞ்சை சோழர்களின் சொந்த ஊர் அல்ல என்றுதான் வருந்தினாரே தவிர இராஜேந்திரன் விருப்பத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அப்படியிருக்க, இராஜேந்திரனின் மருமகனாக இருந்தும், அவனது விருப்பத்தை ஆதரிக்காமல் சிவாச்சாரி பேசியது அனைவருக்கும் மலைப்பாகத்தான் இருக்கிறது. இதனால் அவன் எதிர்காலம் எப்படிப் பாதிக்கப்படுமோ என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் பெரிதாக எழுந்து நிற்கிறது.

பெரிதாகச் சிரிக்கிறான் இராஜேந்திரன். “கடைசியில் தஞ்சைக்கு ஆதரவாக ஒரு குரல் எழும்பியிருக்கிறது! முத்தரையர் சார்பாக சோழப் பேரரசின் தலைநகராக தஞ்சையே இருக்கட்டும் என்று ஓலைநாயகம் அறிவிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோமாக!” என்றபடி இறையிரவரன் பல்லவராயரை நோக்கி, “நீர்தான் பாக்கி இருக்கிறீர். உமது கருத்தைச் சொல்வீராக!” என்று அவரை உற்று நோக்குகிறான்.

“அரசே! அனைவரும் ஒரு ஊரையோ, நகரையோ சோழப் பேரரசின் புதிய தலைநகராக அறிவிக்கும்படி குரல் கொடுத்தார்கள். காஞ்சி பல்லவர்களின் தலைநகரம் - என் சொந்த ஊராக இருந்தாலும்கூட. திருமயிலை சிவனாரின் திருத்தலம். கடலில் சீற்றம் அங்கு அதிகமாகவே உள்ளது. மல்லையின் கீழ்ப் பகுதியைக் கடல் கொண்டதும் நாமறிந்ததே. எனவே பெரிய நகரை மயிலையில் எழுப்புவது பூம்புகாரின் நிலைமை அதற்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொண்டே செய்வதற்கு இணையாகும். கடற்கரையில் துறைமுகங்களைக் கட்ட வேண்டும், தலைநகரை எழுப்பக்கூடாது என்பது எனது கருத்து. எதிரிகளின் கடற்படைத் தாக்குதலிருந்து தவிர்த்துக் கொள்ள அது உதவும்.

“எனவே, உள்நாட்டில் தலைநகர் இருப்பதே சாலச் சிறந்தது. அதுவும், புதிதாக, அடிமட்டத்திலிருந்து அதை எழுப்புவதே முறையாகும். பலவிதமான பாதுகாப்புகளுடனும், இக்காலம் மற்றுமல்லாது எதிர்காலத்திற்கும் சிறப்புடையதாகவும், சோழர் பெருமையை நிலைநிறுத்தும் புகழுடையதாகவும் அதை அமைக்கவேண்டும். ஆகவே அது எங்கு இருக்க வேண்டும் என்பதையும் தாங்களே அறிவிக்கவேண்டும் என்றே இந்தப் பேரவைக்கு நான் முன்மொழிகிறேன்!” என்று அமர்ந்துகொள்கிறார் பல்லவராயர். தனது மன்னனின் விருப்பம் என்ன என்று அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்தவராயிற்றே!

“பல்லவராயரே! உம்முடைய, மற்றும் திருமந்திர ஓலைநாயகரின் பதில்களைக் கேட்டால் நீங்கள் இருவரும் எமக்கு அறிவிக்காமல் பதவி மாற்றம் செய்து கொண்டமாதிரி தோன்றுகிறது. அவர் தண்டநாயகர்கள் போலச் சுருக்கமாகத் தன் கருத்தைச் சொன்னார். நீர் ஓலைநாயகரைப் போல் நன்கு விளக்கம் செய்து உமது கருத்தை வலியுறுத்தினீர். உமது விளக்கம் எமக்கு மிகவும் சரியான ஒன்றாகத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு இடத்தையும் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டோம். அந்த இடத்தையும் அரசு கையாக்கம் செய்ய ஆணையும் அப்பொழுது பிறப்பித்தோம். அந்த இடம் கொள்ளிடத்திற்கு வடபாங்கில் அமைந்திருக்கிறது. அங்கே புதிய தலைநகரை உருவாக்குவோம்.

“நீரும், திருமந்திர ஓலைநாயகமும் சேர்ந்து நகரை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவீர்களாக. இன்னும் மூன்று திங்களில் திட்டம் எம் முன் வர வேண்டும். அத்தலைநகருக்கு இப்பொழுது ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயரை நாம் அளிக்கிறோம். அது மட்டுமல்ல, பெருவுடையாருக்கு அங்கு மற்றுமொறு கற்றளியையும் அமைக்கவிருக்கிறோம் என்று இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நமது மரபுப் பெருமையை, சோழர்களின் சிறப்பை உலகுக்குப் பறை சாற்றும் வரையில் அது அமைந்திருக்கும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாம் எதிர் நோக்குகிறோம்.” உற்சாகமாகப் பேசிக் கொண்டே செல்கிறான் இராஜேந்திரன்.

அவையே அவன் பேச்சில் கட்டுண்டு போகிறது. அவன் பேசப் பேச சிவாச்சாரியனுக்கு அவனது தொலைநோக்கு நன்கு புரிகிறது. தனது தந்தையைவிடப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவத் துடிக்கிறான் இராஜேந்திரன் என்று அவனுக்குப் புலனாகுகிறது. மேலும், தனக்கென்று ஒரு தனிப் புகழையும், வரலாற்றில் தனி இடத்தையும் தேடத் துடிக்கிறான் என்றும் அவன் அறிந்து கொள்கிறான். இராஜராஜரிடம் இருந்த செல்வாக்கு தனக்கு இராஜேந்திரனிடம் இருக்குமா, அல்லது தனது உண்மையான பதிலால் அது குறைந்து போகுமா என்றும் அவனால் அப்பொழுது தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் குருநாதர் கருவூரார், “சிவனே, எப்பொழுதும் தாமரை இலைமீது இருக்கும் நீர்த் துளியைப் போல இருந்து பழகு. அரசர்களுடன் இருப்பது நெருப்புடன் பழகுவது போலத்தான். எதற்கும் உன்னைத் தயார் செய்து கொள். புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்” என்று சொன்ன அறிவுரையை நினைவில் நிறுத்துகிறான்.
* * *
                              ஏகாம்பரநாதர் திருக்கோவில், காஞ்சி
                            நள, சித்திரை 14 - ஏப்ரல் 29, 1016
சுற்றுப் பிரகாரத்தில் நிலவுமொழியும் அவளது தந்தையும் நடந்து கொண்டிருக்கின்றனர். ஏகாம்பரநாதர் கோவிலில் சந்திக்கும்படி சிவாச்சாரியனிடமிருந்து சேதி வந்ததால் அவர்கள் திருமயிலையிலிருந்து இரண்டு நாழிகை முன்னர்தான் வந்து சேர்ந்திருந்தனர். சிவாச்சாரியனைச் சந்திப்பதற்குமுன் ஏகாம்பரநாதரைத் தரிசித்துவிட்டு, பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இருவர் மனதிலும் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் - நிலவுமொழிக்கு இன்று ஏதோ ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.

“எனக்குக் காலை வலிக்கிறதம்மா. களைப்பாகவும் இருக்கிறது. சிறிது நேரம் இந்த மண்டபத்தில் அமர்ந்து கொள்வோம் அமர்ந்து கொள்வோம்.” என்று தந்தை சொன்னதும், நிலவுமொழி அருகிலிருந்த மண்டபத்தை நோக்கி நடக்கிறாள். ஒரு காலைத் தொங்கப் போட்டுக் கொண்டபடி மண்டபத்தில் அமர்ந்து தூணில் சாய்ந்து கொள்கிறார் அவளது தந்தை. அவரருகில் அமருகிறாள் நிலவுமொழி. மயிலைக்கு வராமல் காஞ்சிக்குத் தங்களை சிவாச்சாரியார் வரவழைத்ததின் நோக்கம் என்ன என்று அவள் மனது அவளை அரித்துக் கொண்டே இருக்கிறது. அவள் தந்தை அதைப் பற்றிச் சிறிதும் கவலைப் பட்டதாக அவனுக்குத் தெரியவில்லை. ஏன்,  என்ற கேள்வியே கேட்காமல் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அவர்.

“உஸ்” என்று மூச்சைப் பெரிதாக விட்டுக்கொண்டே துணியால் விசிறிக் கொள்கிறார் அவர். சித்திரை பிறந்து பதினான்கு நாள்களே ஆகியிருந்தாலும் வெய்யில் உச்சியைப் பிளக்க ஆரம்பித்திருக்கிறது. இப்பொழுது அவளது தந்தைக்கு அடிக்கடி களைப்பு வருகிறது. ஐம்பது வயதுகூட ஆகவில்லை. ஆனாலும் மிகவும் தளர்ந்து போயிருக்கிறார். தனக்குத் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் ஏற்பட்ட தளர்வா, அல்லது அவரது குடும்பத்தார் அனைவருக்கும் வரும் இளமுதுமையா என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது குடும்பத்தில் யாருமே ஐம்பத்தைந்து வயதைத் தாண்டியதில்லை. அவளது தாய் இருபத்தைந்து வயதிலேயே இறந்து விட்டாளாம். அதிலிருந்து அவளது தந்தைதான் மறுமணம் செய்து கொள்ளாமல் அவளை வளர்த்து வருகிறார். அவளுக்கு முன்னால் பிறந்தவர்கள்கூட ஐந்து வயதைத் தாண்டுமுன்னரே இறைவனடி சேர்ந்து விட்டார்களாம். மூன்று வயது நிறையும் முன்னரே சென்றுவிட்ட தாயின் முகம் கூட அவளுக்கு நினைவில் இல்லை. ஆகவே, தன் தந்தையின் அவசரம் அவளுக்குப் புரிகிறது. அதை எண்ணிப் பார்த்தால் அவளுக்கு இதயம் கனக்கிறது.

“ஏகாம்பரநாதா, என் தந்தை நிறைய நாள் நோய் நொடியில்லாமல் வாழ அருள் செய் அப்பனே!” என்று மனதிற்குள் வேண்டிக் கொள்கிறாள். வாயைத் திறந்து, “தந்தையே, சிவாச்சாரியார் நம்மை எங்கு சந்திப்பதாகச் சொன்னார்? எப்பொழுது சந்திப்பதாகச் சொன்னார்? இரண்டு நாழிகை கழிந்தால் கதிரவன் சாய்ந்து விடுவான். இரவை எங்கு கழிப்போம்? நமக்கோ காஞ்சியில் யாரையுமே தெரியாது. நீங்களோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் அமர்ந்திருக்கிறீர்களே?” என்று வினவுகிறாள்.

“அப்பாடி, என்ன வெய்யில், என்ன வெய்யில்?” என்று அலுத்துக் கொண்ட அவளது தந்தை, “நிலா, ஏனம்மா நீ உன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? சிவாச்சாரியருக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. சோழ சாம்ராஜ்ஜியத்தின் திருமந்திர ஓலைநாயகமான அவர் நம்மை இரவில் தனியாகத் தவிக்க விட்டுவிடுவாரா? தகுந்த காரணம் இல்லாமலா நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்? அவருடன் பழையாறையில் இருந்திருக்கிறாயே! அவரைப் பற்றி உன்னால் புரிந்து கொள்ள இயலவில்லையா? அவருக்கு முக்கியமான பணிகள் ஆயிரம் இருக்கும். அதில்தானே அவர் முதலில் கவனம் செலுத்துவார். நாம் அதற்குப் பின்னர்தானே? எனவே வருவதில் தாமதம் ஏற்பட்டால் அதைப் பெரிது படுத்தாமல் காத்திருப்பதுதான் நமக்கு நல்லது.” என்று பதில் சொல்கிறார். அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சலாக வருகிறது.

சிறிது நேரம் சென்று தன் மனதில் தோன்றுவதை சொல்லலாம் என்று திரும்பினால், அவளது தந்தை கண்களை மூடிக் கொண்டு தூணில் சாய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவரைப் பார்த்தால் அவளுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவரது நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று தானும் எதிரில் இருக்கும் தூணில் சாய்ந்து கொள்கிறாள். களைப்பில் அவளது கண்களும் மூடிக் கொள்கின்றன.

ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?” என்று கனிவான குரலில் வினவுகிறார். வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரோ இவர்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது நிலவுமொழிக்கு. சட்டென்று எழுந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்கிறாள் அவள்.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கி விட்டோம். நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பி இருக்கலாமே!” மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.

“அதனாலென்ன அம்மா. நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!” என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார் அவர்.

இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண்விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காலில் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார். “ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி.” என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. “தெரியும். தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள் போல இருக்கிறது. உங்களை அழைத்துச் சென்று வசதியாகத் தங்க வைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள். நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே உண்டுவிட்டு, அருகிலிருக்கும் வீட்டிலேயே இரவு தங்கிக் கொள்ளுங்கள். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப் பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான்.” என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின் தொடர்கிறார்கள்.[வளரும்]

Sunday, 14 September 2014

நீயே இன்னொரு பிறவி எடுத்து...


 நீயே இன்னொரு பிறவி எடுத்து...
     ம.மீனாட்சிசுந்தரம்

                                                        
அம்மாவிற்கு நாளை வளைகாப்பாம் அம்மா பாட்டியும், அப்பா பாட்டியும் பேசுவது என் காதில் விழுந்தது.
அதோடு அம்மாவும் அப்பாவும் குட்டிப்பாப்பாவுக்கு, என்ன பெயர் வைக்கலாம் என்று இப்போதே பேசிக் கொள்வதைக் கவனித்த  பெரியவர்கள் அனைவரும் மனதிற்குள் மகிழ்சியைக் கொண்டாடுவதையும் நான் கவனிக்கத் தவறவில்லை,
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது குட்டிப் பாப்பாவை பார்ப்பதற்கு.  குட்டிப்பாப்பா அம்மா சாடையில் இருக்குமா, அப்பா சாடையில் இருக்குமா? என்ற கேள்வியோடு அன்றைய இரவின் வருகை என் கண்களை  சூழ்ந்து கொண்டது.
மறுநாள் காலை எல்லோர் முகத்திலும் ரொம்பவே சந்தோசம் களை கட்டியிருந்தது. அம்மாவின் முகத்தில் கொஞ்சம் கூடுதலாகவே சந்தோசம்.

இந்த மூன்று நாட்களிலும் பாட்டிகளும், தாத்தாக்களும், அத்தையும் கவனித்ததில் அம்மா ஒரு சுற்று பெருத்துவிட்ட மாதிரி எனக்குள் ஒரு எண்ணம்.  அப்படி ஒரு சாப்பாடு விதவிதமாய்அதோடு அவர்கள் அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடவில்லை.

என்னை பள்ளிக்கு அனுப்பும் வேலையைக்கூட தாத்தாவும் பாட்டியுமே பார்த்துக் கொண்டார்கள்.

அன்றும் அதேபோல் என்னை பள்ளிக்கு அனுப்புவதற்காக யுனிபார்ம்,ஷ எல்லாம் எடுத்துவைத்த தாத்தாவைப் பார்த்த நான்,  பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடித்தேன்.

இதைக் கேட்ட பாட்டி என் அருகில் வந்து  “அம்மாவுக்கு சாயங்காலந்தாண்டா செல்லம் வளைகாப்பு, நீதான் முணு மணிக்கு வந்துடுவியே என்று சொன்ன பாட்டி எனக்கு பிடிச்ச நெய்யுருண்டையும் செஞ்சு வைக்கிறேன்னு சொல்ல பாதி மனதோடு சம்மதம் தெரிவித்தேன்
.
     இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, என்னைக் கூப்பிட்டு என் காதோரம் சொன்ன சேதியைக் கேட்டு,  ‘சரிம்மா சமத்தா போயிட்டு வரேன்  என்று நான் சொன்னதைக் கேட்ட எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் அது என்ன சேதியாக இருக்கும் என்ற கேள்வியும், எல்லோர் மனதிலும் எழுந்திருக்க வேண்டும்
   
அம்மா சொன்ன சேதியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், என்னை பள்ளிக்கு அனுப்புவதையும் மறந்து அனைவரும் என்னையே சுற்றிச் சுற்றி வந்தார்கள்.         நானும் அவர்களின் பொறுமையை அதிக நேரம் சோதிக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரின் காதிலும் சத்தமில்லாமல் ஏதோ ரகசியம் சொல்வதைப் போல நான் சொன்ன சேதியைக் கேட்ட அனைவரின் முகத்திலும் மகிழ்சிவெள்ளம்.  அப்பா தாத்தாவைத் தவிர.
     
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா தாத்தா உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த எனக்கு பாவமாய் இருந்ததுஅடுத்த நொடியில் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு  “தாத்தா உன்கிட்ட கடைசியா சொன்னாத்தான் சந்தோசப்படுவே  என்று சொல்லி அவர் காதில்   “தம்பிப் பாப்பாவைப் பெத்துத்தரேன்னு அம்மா சொன்னாங்கஎன்று   சத்தமாய் சொன்னவுடன் தாத்தாவின் சந்தோசம் என் கன்னத்தில் முத்தமாய் பதிந்தது.

                இந்த சந்தோசத்தோடயே எல்லோரும் என்னைப்  பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்

      அன்று மாலை பள்ளி முடிந்து திரும்பிய எனக்காக, தாத்தா விட்டு வாசலில் காத்திருந்தார்பள்ளி வேனிலிருந்து இறங்கியதும் தாத்தாவிடம் புத்தகப் பையை கொடுத்துவிட்டு, விட்டுக்குள் நுழைந்ததும் அம்மாவைத் தேடிய எனது கண்களில் அம்மா அசந்து தூங்குவது தெரிந்து.
 
   அம்மாவை எழுப்ப மனமில்லாமல் அவள் அருகில் படுத்துக்கொண்டேன்எனக்கு தூக்கம் வரவில்லை, அம்மாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

      அடுத்த பத்தாவது நிமிடத்தில் அம்மாவின் தூக்கம் கலைந்து, என் நெற்றியில் அழுந்த முத்தம் கொடுத்தாள். இன்னொன்னு, இன்னொன்ன்னு என்று கேட்டு கேட்டு அம்மா கொடுத்த முத்தங்களால் எனது கன்னமும், அம்மாவின் வாயும் வலிக்க போதுண்டா செல்லம் என அம்மா நிறுத்திக்கொண்டாள்.

       அம்மா இனிமேதம்பிப்பாப்பாவத்தானம்மா பக்கத்தில படுக்கவச்சு முத்தம் கொடுப்ப, எனக்கு கொடுக்கிறதுக்கு உனக்கு இனிமே நேரம் இருக்காதுல்ல, அதனாலதான் இப்பவே எல்லாத்தையும் மொத்தமா வாங்கிட்டேம்மா.”

    இதைக்கேட்ட அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொள்ள  “போடி செல்லம் நீங்க ரெண்டுபேரும் எனக்கு ரெண்டு கண் கள் தாண்டி 

இப்படிச்சொன்ன அம்மாவின் கன்னத்தில், என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் வழிய என் உதடுகள் முத்தமழை  பொழிந்தது.
 ’என்னடிம்மா நேரமாகுது, எழுந்து குளிச்சு ரெடியாகணும்  அம்மா பாட்டியின் குரல் கேட்டு, அம்மா எழுந்துவிட்டாள்.

      அடுத்த அரைமணி நேரத்தில் அம்மா குளித்து புதுப்புடவை கட்டி ஹாலில் சாமி அறையின் முன்னால் உட்கார்ந்தாள்.

      அம்மா பார்க்க அழகாய் இருந்தாள்.   “நீ அழகும்மா சடையில் பூவெல்லாம் வச்சு கட்டியிருக்கிறதுல இன்னும் ரொம்ப அழகா இருக்கம்மா  என்று அம்மா காதில் சொல்ல, அம்மா கன்னத்தில் குழிவிழ சிரித்தது கூடுதல் அழகு.

      அம்மா பாட்டி, அப்பா பாட்டி, அத்தை, உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டு ஆண்டிகள் அனைவரும் அம்மாவின் கன்னத்தில் சந்தனமிட்டு, கையில் கண்ணாடி வளையல்களை போட்டுவிட்டார்கள்.

      இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் முகங்களும் சந்தோசத்தால் நிரம்பிவழிந்தது.                          
      அந்த அரைமணிப் பொழுது அனைவருக்கும் ஆனந்தமாய் கழிந்தது.
      என் கண்முன் நடந்தவை அனைத்தும்  சினிமாக் காட்சிகள் போல் ஒவ்வொன்றாய் நகர்ந்து கொண்டிருக்க, அடுத்த காட்சிக்கு தயாரானாள் அப்பா பாட்டி.

      அப்பாவை பக்கத்து தெருவில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போகச் சொன்னாள்இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என் மனதில் எழுந்த கேள்விக்கு அடுத்த பத்தாவது நிமிடத்தில் விடை கிடைத்தது.

      அம்மாவை, தாத்தா வீட்டிற்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும்பொழுது, அப்பா விட்டில் இருக்கக் கூடாது என்பது சம்பிரதாயமாம்.

      இவை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த நான், அம்மா அருகில் சென்று மௌனமாய் நின்றதையும், என் முகத்தில் தெரிந்த மாற்றத்தையும் கவனித்த அம்மா, என் மௌனத்தைக் கலைத்தாள்.
      “செல்லக்குட்டிம்மா நான் சொல்றத பொறுமையா சமத்தா கேக்கணும்அம்மா இப்படிச் சொல்ல தலையாட்டினேன் மௌனமாக.            
அப்பா தாத்தாவுக்கும்பாட்டிக்கும் ரொம்ப வயசாயிடுச்சு, அப்பாவும் அடிக்கடி வேலைவிசயமா வெளியூர் போயிடுவாங்க. அந்த நேரத்தில என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போகணும்னா உதவிக்கு யாரும் இல்லைல்லடா கண்ணு அதனாலதாண்டா செல்லம்அம்மா மீண்டும் தொடர்ந்தாள்.
                         
அம்மா தாத்தா வீட்ல, அத்தை, மாமா எல்லாரும் இருக்காங்க. அவசரத்துக்கு உதவிசெய்றதுக்கும் சொந்தங்க நிறைய இருக்காங்கம்மா. அதெல்லாத்தையும் யோசிச்சுத்தாம்மா அப்பாவும் நானும் சேர்ந்து இந்த முடிவ எடுத்தோம். ஒரு மாசந்தானம்மா. உனக்கு தம்பிப்பாப்பா வேணுந்தான. அம்மாக்கு நீயும் போன் பண்ணுவியாம், நானும் போன் பண்ணுவேனாம். சமத்துக்குட்டிதான. அம்மா போயிட்டுவரேன்.” புறப்படுவதற்கு தயாரானாள்.

அம்மா பாட்டியும், தாத்தாவும், அத்தையும் எனக்கு முத்தம் கொடுத்து, “வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடணும், நல்லா படிக்கணும்இப்படி சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார்கள்
.
அம்மா கன்னத்தில் நானும், என் கன்னத்தில் அவளும் முத்தத்தைப் பகிர்ந்துகொள்ள,அம்மா காரில் ஏறிக்கொண்டாள்
.                         
எல்லோர் முகத்திலும் ஆனந்தக் கண்ணிர் பொங்க, கார் புறப்பட்டு அடுத்த தெருவைக் கடக்கும்போது. அம்மாவின் கண்கள் அப்பாவைத் தேடியிருக்கும் என்று மனதிற்குள் சொல்லியவாறு, விட்டிற்குள் சென்றவுடன், வீடே நிசப்தமாய் இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

கடந்த ஒரு மணிநேர நிகழ்வுகளை மறக்கும்பொருட்டு, பாடப்புத்தகத்தில் என் கவனமும், தாத்தா, பாட்டி டிவி நிகழ்சிகளைப் பார்க்கவும், அடுத்த ஒருமணிநேரம் கடந்துவிட்டது
.
      அப்பாவும் அடுத்த அரைமணிக்குள் வீடுவந்தவுடன், அனைவரும் இரவுச்சாப்பாட்டை முடித்துக்கொண்டு, உடல் அசதியின் காரணமாக அனைவரும் ஓய்வு எடுக்கத் தயாராகிவிட்டார்கள்.
      “‘நாளைக்கி காலைல அம்மாக்கு போன்பண்ணலாம்என அப்பா என்னிடம் சொல்லிவிட்டு தூங்கப்போய்விட்டார்தாத்தாவும் சீக்கிரமே தூங்கிவிட்டார்கள்.
      நானும் பாட்டியும் ஹாலிலேயே படுத்துக்கொண்டோம்பாட்டி என் தலையை வருடிவிட்டு, நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அசதியின் காரணமாக அவர்களும் தூங்கிவிட்டார்கள். 

அம்மாவின் நினைவுகள் என்னை தூங்கவிடவில்லை. இப்படி  இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான்  தூக்கமின்றி தவித்தபொழுது, அப்பா என் அருகில்வந்து உச்சிமுகர்ந்து சொல்லியது என் நினைவில் நிழலாடியது.              

செல்லக்குட்டிம்மா  நான் சொல்றத கவனமாக் கேக்கணும். தாத்தா, பாட்டிக்கும் வயசாயிடுச்சு, என்னோட வேலைப்பளு காரணமா, உன்ன பள்ளிக்கூடத்துக்கு  அனுப்புறதுலயிருந்து உன் படிப்புலயும் என்னால கவனம் செலுத்தமுடியல. அதோட உன்னோட தேவைகளை அறிந்து அதையும் என்னால பூர்த்தி பண்ணமுடியல. அலுவலக வேலையா அடிக்கடி வெளியூர் போறதும் ஒரு காரணமா இருக்கு”. அப்பா மேலும் பேச ஆரம்பித்தார்.

அதனால தாத்தா  பாட்டிக்கு உதவிக்கும், உன்ன பார்த்துக்குறதுக்கும், எனக்கு ஒரு துணையா இருக்குறதுக்கும், நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இது உன்னோட முழு சம்மதத்தோடதான்  நடக்கணும்மா. இதுக்கு உன்னோட பதிலை இப்பவே   நான் எதிர்பார்க்கல. நல்லா யோசிச்சு உன் விருப்பத்தை சொல்லலாம்”. அப்பா இதனை கேட்டது என்னுடைய பன்னிரண்டாவது வயதில்
.
      என்னைப்பெற்ற அம்மா, எங்களை விட்டு பிரிந்து இரண்டாண்டுகள் கழிந்தபின்னரே, அப்பாவின் மனதில் எழுந்த கேள்வி இது.
      
அப்பாவின் மனதிற்குள் இப்படி ஒரு எண்ணம் எழுந்ததில் எந்த ஒரு தவறும் இல்லைதான்அதோடு, எங்களது நலனில் அக்கறைகொண்டே, இந்த எண்ணம் அவருடைய மனதில் எழுந்திருக்கவேண்டும்.   மேலும், இதற்கு  எனது சம்மதத்தையும் கேட்டதிலிருந்தே,  இதில் அவருடைய சுயநலம் கொஞ்சம்கூட இருக்காது என்றே என் மனதுக்குப்பட்டது.
    
நான் ஒரு பெண்ணானதால் எனக்குள் உண்டாகும் உணர்வுகளை, எண்ணங்களை அப்பாவிடம் பகிர்ந்து கொள்ள இயலாதுமேலும் ஒரு பெண்ணுக்குண்டான இயற்கை உபாதைகளை, சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கூச்சமின்றி சொல்வதற்கு வடிகாலாக இருப்பது அம்மா மட்டுமே. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும்கூட இந்த முடிவை அப்பா எடுத்திருக்கக்கூடும்.

இதேபோல் அப்பாவிற்கும் அவருடைய ஆசைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு யோசனைகளை சொல்வதற்கும், எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணைவேண்டும்அந்த இடத்தை மனைவி ஒருத்தியால் மட்டுமே நிரப்பமுடியும்.

அதற்கும் மேலாக, வயதான தாத்தாவையும், பாட்டியையும் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களோடு அன்பை பகிர்ந்து கொள்வதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக வாய்க்கு ருசியாக சமைத்துப்போடுவதற்கும், இந்தக்குடும்பத்திற்கு ஒருமனைவியாக, மருமகளாக, அம்மாவாக ஒரு பெண்வரவேண்டும்தான்.

இதையெல்லாம் யோசித்துத்தான், அப்பா இப்படி ஒரு எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அதோடு இந்த குடும்பத்தின் முன்னேற்றம் கருதியும், எதிர்காலம் வளமோடும், நலமோடும் இருக்கவேண்டும் என்ற அதீத அக்கறையில்தான் இப்படி ஒரு எண்ணம் அவருடைய மனதில் தோன்றியிருக்கக்கூடும்.

என்னுடைய வயதிற்கும் கூடுதலாகமேற்சொன்ன வற்றையெல்லாம் யோசித்து, ஒருவாரம் கழித்து, அப்பாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்.

அடுத்த ஆறுமாதங்களில், எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருப்பாள் எனமனதளவில் அப்பா ஏற்றுக்கொண்ட பெண்ணிடம், எங்கள் குடும்ப நிலையினை எடுத்துச்சொல்லி, அப்பெண்ணின் பூரணசம்மத்த்துடன் அம்மாவை அதாவது எனது சித்தியை, இல்லை இல்லை எனது அம்மாவை மனைவியாக வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டார்.

அப்பாவின் எண்ணப்படியும், நாங்கள் எதிர்பார்த்தற்கு மேலாகவும், ஆண்டவனின் அருளாலும் என்மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல அம்மாவாக, அப்பாமீது அன்பைப்பொழியும் மனைவியாக, தாத்தா பாட்டிக்கு பாசமிகு மருமகளாக இன்றுவரையில் நடந்து வருகிறார்கள். 

இந்த எண்ணங்கள் என் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்ள, பூசை அறையில் நிழற்படமாக இருக்கும் என்னைப்பெற்ற அம்மாவிடம்நீயே இன்னொரு பிறவி எடுத்து அம்மாவா எனக்கு வந்திருக்கம்மா, அம்மா நல்லபடியா தம்பிப்பாப்பாவ பெத்தெடுத்து வரணும்னு உன்ன வேண்டிக்கிறேம்மா. உன் ஆசீர்வாதம் எப்பொழுதும் எங்களுக்கு வேணும்மாஎன் கண்களில் வழிந்தோடிய கண்ணீரோடு அம்மாவை மீண்டும் ஒருமுறை வேண்டிக்கொண்டு அப்பாவின் அருகில்போய் ந்து உறங்கிவிட்டேன்.

 ம.மீனாட்சிசுந்தரம்
8/1, கங்கைஅம்மன் கோவில்தெரு
லட்சுமிபுரம்
திருவான்மியூர், சென்னை 600041                                                                                           அலைபேசி 8122472704