Wednesday, 8 October 2014

தமிழ் இனி மெல்ல[3.8] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல[3.7] சென்ற பதிவின் இறுதியில் 
தனது அரியணையில் இருந்து வேண்டாவெறுப்புடன் எழுந்து, அருகிலிருக்கும் முக்காலியில் தனது மணிமுடியையும், உடைவாளையும் கழட்டி வைக்கிறான் இராஜாதிராஜன்.

“சோழநாட்டின் மணிமுடியை அணிந்து கொண்டு என்னால் இலங்கை மன்னர் தரப்பில் வாதாட இயலாது! எனவே இவ்வழக்கு முடிந்து கோப்பரகேசரியார் தீர்ப்பளிக்கும்வரை நான் மணிமுடி இல்லாமல் இருக்க அனுமதி வழங்கக் கோருகிறேன்!” என்று கேட்டதும், இராஜேந்திரன் தலையசைத்துத் தன் அனுமதியை வழங்குகிறான்.

இராஜாதிராஜன் மெல்ல மகிந்தன் அருகில் சென்று இராஜேந்திரனை நோக்கி அறிவிக்கிறான்.

“அரசே! முதலாக இலங்கை மன்னர் சார்பில் நான் தங்களுக்கு விடுவிக்கும் கோரிக்கை இதுதான்! மகிந்தர் ஒரு அரசர். என்னதான் குற்றம் சாட்டப் பட்டிருந்தாலும் தீர்ப்பளிக்கும் வரை அவரை நாம் ஒரு அரசராகத்தான் நடத்த வேண்டும். அவர் அமர்ந்துகொள்ள ஒரு இருக்கையை அளிக்குமாறும், அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்க்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது குற்றம்தான் சாட்டப் பட்டிருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கவில்லை!”

அதிர்ந்து போகிறான் மகிந்தன். எடுத்த எடுப்பிலேயே தான் செய்யப் போகும் வேலையைச் சரியாகச் செய்யப் போவதை அவனுக்கு உணர்த்தி விட்டானே அவன்! நம்பிக்கை துளிர்விடுகிறது அவனுக்கு.
“ஓலைநாயகத்திற்கு இதில் மறுப்பு ஏதாவது இருக்கிறதா?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

இல்லையெனத் தலையசைக்கிறான் சிவாச்சாரி. இராஜேந்திரன் கையசைக்கவே, ஒரு இருக்கை கொண்டு வரப்படுகிறது. மகிந்தன் அருகே இருந்த காவலன் ஒருவன் அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து எடுக்கிறான்.

இருக்கையில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து கொண்ட அவனை நோக்கி, “நீர் இலங்கை மன்னர்தான்! இருந்தாலும் கோப்பரகேசரியார் முன்னர் இப்படி அமர யாருக்கும் அனுமதி இல்லை! இருகால்களையும் தொங்கவிட்டு அமர்ந்து கொல்லும்!” என்று உத்தரவிடும் தொனியில் எச்சரிக்கிறான் இராஜாதிராஜன்.

அவன் சொல்வதைப் புரிந்து கொண்ட மகிந்தன் சரியாக அமர்ந்து கொள்கிறான். அவன் தனக்காக வாதாடுவானே தவிர, வேறு எந்த சலுகையையும் தரமாட்டான் என்றும் அறிந்து கொள்கிறான்.

சிவாச்சாரி தன் இருக்கையை விட்டுக் கீழிறங்கி வருகிறான்.

“கோப்பரகேசரி அவர்களே! தாங்கள் அறியாததை நான் அரசவையில் கூறவரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மன்னர் அவர் விருப்பப்படி ரோகணத்தை ஆண்டு வந்திருக்கிறார். நாம் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்திருக்கிறோம். சோழநாட்டின் அமைதியைக் குலைப்பதற்கென்றே இலங்கை மன்னர் நமக்குத் திரை செலுத்தி வந்த பாண்டிய மன்னரை நமக்கு எதிராகச் செயல்படுத்தி வந்திருக்கிறார். மேலும்...” என்று மகிந்தன் மீது ஒன்றொன்றாகக் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறான்.

“இலங்கை மன்னர் தரப்பில் பேசப் போகும் சோழ இளவரசரே இதை நன்றாக அறிவார். இலங்கை மன்னர் பாண்டிய மன்னரின் பரம்பரைச் சொத்தை அங்கு வைத்திருக்க உதவி செய்திருக்கிறார். அங்கு இருந்து வந்த ஐயாயிரம் பாண்டிய வீரர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்து சோழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். இதனால் சோழவீரர்கள் பத்தாயிரம் பேர்களுக்கு மேல் உயிரிழக்க நேரிட்டது.” கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக மகிந்தன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறான் சிவாச்சாரி.

தமிழ் இனி மெல்ல[3.8] தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 

அரசவையில் அனைவரும் மகிழ்வடைகின்றனர். உயிர்நஷ்டம், பணநஷ்டம் என்று கணக்குக் கொடுத்து, அனைவரும் விரும்பியதற்கும் மேலாகவே சிவாச்சாரி சோழநாட்டுத் தரப்பு வாதத்தைத் திறமையாக எடுத்துரைப்பது அனைவருக்கும் நிறைவாகவே இருக்கிறது.

“இப்படிப்பட்ட குற்றத்திற்காக, இலங்கை மன்னரின் படைத் தலைவர்களுக்கு அங்கேயே மரண தண்டனை விதித்து அது நிறைவேற்றப்பட்டதும் கோப்பரகேசரியார் அறிந்ததே! அரசர்தான் குடிமக்களின் செயலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது அரசநீதி என்பது ஆன்றோர் வாக்கு. இவரது அனுமதியில்லாமல், ஆணையில்லாமல் இவரது படைத் தலைவர்கள் நம்முடன் போருக்கு வரவில்லை. எனவே அவர்களுக்கு அளித்த தண்டனையான மரண தண்டனையையே இலங்கை மன்னருக்கு அளிக்க வேண்டும் என்றும், அவரது மனைவி மக்களை சோழநாட்டின் அடிமைகளாக்கி வாழ்நாள் முழுதும் குற்றேவல் செய்து வரவும் தீர்ப்பளிக்குமாறு சோழநாட்டின் சார்பில் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.” என்று தன் தரப்பு வாதத்தை முடித்துக் கொள்கிறான் சிவாச்சாரி.

இலங்கை மீது படையெடுத்துச் சென்ற இராஜேந்திரனுக்குத் தோள் கொடுத்து, சிங்களப் படைகளைச் சிதறடித்து, பாண்டியர் பொக்கிஷங்களைக் கைப்பற்றிய இராஜாதிராஜன், இலங்கை மன்னன் மகிந்தனுக்குச் சார்பாக எப்படி சிவாச்சாரியின் ஆணித்தரமான வாதங்களை எதிர்த்து வாதாடப் போகிறான் என்று திகைத்தவாறு, அந்த அரசவையே அவனை நோக்குகிறது.

“கோப்பரகேசரி அவர்களுக்கும், ஆன்றமர்ந்து அடங்கிய பெரியோர்களும், தங்கள் உயிரைவிடச் சோழநாட்டின் பெருமையையே பெரிதாக நினைக்கும் மாவீரர்கள் பல்லோரும் நிறைந்த இந்த அரசவைக்கும் என் தலைசாய்த்து வணங்கி விட்டு இலங்கை மன்னரின் சார்பில் வாதாட முற்படுகிறேன். அதனால் நான் சோழநாட்டுக்கு எதிராக வாதாடுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் இந்த அரசவைக்கு முன் வைக்கிறேன். நான் சொல்லப் போதெல்லாம் இலங்கை மன்னரின் பக்கம் இருக்கும் அவரது பார்வையை, அவர் தரப்பில் இருப்பதாக அவர் நினைக்கும் நியாயத்தைத்தான்!” என்ற பீடிகையுடன் தன் வாதத்தைத் துவங்குகிறான் இராஜாதிராஜன்.

அவன் சொல்வதை உடனுக்குடன் மகிந்தனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார் சோழ மொழிபெயர்ப்பாளர். இதைக் கேட்டதும் மகிந்தனின் முகம் சற்றுச் சுருங்குகிறது. பெயருக்குத்தான் இவன் தன் பக்கம் வாதாடப்போகிறான், முழுமனதுடன் அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.

“எனக்கு வாட்போர்தான் தெரியும். பலநூல்களும், மறைகளும், அரசநீதியும் கற்றுத் தேர்ந்த ஓலைநாயகத்துடன் சொற்போர் புரியவும் நான் வல்லவன் அல்லேன். எனக்குத் தெரிந்த எளிய தமிழில் இலங்கை மன்னருக்கான வாதத்தை முன் வைக்கிறேன்.

“அனைவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்களத் தீவினை அனுராதபுரத்தில் ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்த மகிந்தர் தனது சேரநாட்டு வேலைக்காரப் படைகளின் புரட்சியையும், எனது பாட்டனாரின் சீற்றத்துக்கும் ஈடு கொடுக்க முடியாது, பரம்பரைத் தலைநகரான அனுராதபுரத்தை விட்டு நீங்கி, பொலனருவையைப் புதுத் தலைநகராகக் கொண்டு பாதி இலங்கையை ஆண்டு வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எனது பாட்டனாரின் படைகள் முன்னேறி வரவே, பொலனருவையை விட்டு ஓடி, எஞ்சியிருக்கும் தென்னிலங்கையான ரோகணத்தில் குடியேறினார்.

“அவரது பரம்பரையோர் ஸ்ரீலங்கா என்று அழைத்து வந்த இலங்கையை, எனது பாட்டனார் கைப்பற்றி “மும்முடிச் சோழ மண்டலம்” என்று அழைத்தார். அனுராதபுரத்தை அழித்தார், பொலனருவைக்கு “ஜனநாதபுரம்” என்று பெயரிட்டார். அரசவையோரே, சிந்தியுங்கள்! நமது சோழ நாட்டை சிங்களவர்கள் கைப்பற்றி “சிங்கள மண்டலம்” என்று அழைத்தாலோ, தஞ்சைக்கு “உத்தரலங்காபுரி” என்று பெயரிட்டாலோ, நாம் சும்மா இருப்போமா!

“அதைதான் அவரும் செய்தார். எப்படியாவது இலங்கையை விடுவிக்கவேண்டும் என்று முயற்சி செய்தார். எனவே, சிங்கள அரசர்களுடன் நட்பு பூண்டிருந்த பாண்டியர்களின் உறவினை நாடினார். அவர்களின் பரம்பரைச் சொத்தைப் பாதுகாக்க ரோகணத்தில் இடம் கொடுத்தார். பாண்டியர்களின் படைவீரர்கள் ஐயாயிரம் பேர்களுக்கு உதவியாகத் தன் படைகளையும் தந்து உதவினார். இது இலங்கைக்காக அவர் செய்ததுதானே! தாய்நாட்டின் மீது பற்று உள்ள எந்த மன்னரும் இதைத்தானே செய்வார்!” 

சிறிது நேரம் தனது வாதத்தை நிறுத்தி அவையினரைக் கவனிக்கிறான் இராஜாதிராஜன். இதன் மொழி பெயர்ப்பைக் கேட்ட மகிந்தனின் முகம் மலருகிறது. தன்னால்கூட இவ்வளவு அழகாக வாதாட முடிந்திருக்காது என்று உணர்ந்து கொள்கிறான். அதே சமயம் இராஜேந்திரன் முகத்தில் எந்த விதமான மாற்றமும் தோன்றாமல் இருப்பதையும் கவனிக்கிறான்.
மீண்டும் தொடர்கிறான் இராஜாதிராஜன்.

“நாட்டுப் பற்று உள்ள ஒரு மன்னன் எதைச் செய்ய வேண்டுமோ, அதைதான் இலங்கை மன்னரும் செய்தார். பலம் வாய்ந்த சோழப் படையினை நேருக்கு நேர் எதிர்த்துப் போராட தனக்கு சக்தியில்லை, தன்னிடம் படைபலமும் இல்லை என்பதை நன்றாகவே அறிந்திருந்த அவர், வேறு வழியைக் கையாண்டார்.

“எங்கு அடித்தால் நமக்கு வலிக்குமோ, அங்கு அடிக்க முயற்சி மேற்கொண்டார். பாண்டியர்களின் துணையுடன் நமது வணிக நாவாய்களை வழி மறித்தார். அவர்கள் வணிகம் செய்து ஏற்றி வந்த செல்வத்தைக் கொள்ளையடித்தார். இலங்கையில், குறிப்பாக ரோகணத்தில் அமைதியாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் நமக்கு இடைவிடாத தலைவலியை உண்டாக்கினார்.

“இப்படிச் செய்வது முறையான செயல் என்று நான் வாதாட முன்வரவில்லை. இப்படியும் மறைமுகப் போரிடலாம் என்று அறிந்து, அப்படிச் செய்தார். நாளை, என் எதிர்காலத்தில் இப்படி முறையற்ற போர்கள் நடத்துவதும் ஒரு வழிதான் என்பதற்கு முன்னோடியாக, நமக்கு இடைவிடாது தொந்தரவு கொடுத்து வந்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

                                       இடையூறுக்கு மன்னிக்கவும் 

                    இதய ஒளி [idhayamae oli.Blogspot.in]ப்ளாகில்                   தமிழ் இலக்கியத்தின் அமுதக் கனிச்சாறான                       படைப்புகள் காண்க 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

“இதை தனது ஆதாயத்திற்காகச் செய்தாரா என்றால், அதுதான் இல்லை. நம்மிடமிருந்து கொள்ளையடித்த செல்வம் அவரது படைகளுக்கு ஊதியம் கொடுக்கக் கூடப் போதுமானதாக இல்லை. செல்வத்தில் பெரும் பகுதி பாண்டியர்களுக்குத்தான் சென்றது. இருந்தும் அவர் இத்தகைய தலைவலியை நமக்குக் கொடுத்து வந்ததற்குக் காரணம் - அப்படியாவது நாம் இலங்கையை விட்டு வெளியேற மாட்டோமா என்றுதான்.

“சோழநாட்டின் கண்ணோட்டதிலிருந்து பார்த்தால் இது முறையற்ற செயல்தான்.” ஒரு குவளையிலிருந்த நீரைச் சற்றுப் பருகிவிட்டு மேலும் தொடருகிறான் இராஜாதிராஜன்.

“சேரர்கள், கருநாட்டார், கங்கர்கள், வேங்கை நாட்டார் போல நமக்குத் திரை செலுத்தி நன்கு வாழ்ந்திருக்கலாம். நமது நட்பைப் பெற்று நிம்மதியாக ரோகணத்தை ஆண்டு கொண்டிருக்கலாம். அப்படி அவர் செய்யாதது நமக்குச் சினத்தை வரவழைத்தாலும், அது அவரது நாட்டுப் பற்றைத்தானே காட்டுகிறது! நாட்டின்மீது அளவற்ற பற்று வைக்கும் எப்படி வீரர்கள் நடந்து கொள்வார்கள் என்பதைக் கண்கூடாக, இலங்கையில் தங்கள் பரம்பரைப் பொக்கிஷத்தைக் காப்பாற்றப் போர் புரிந்த பாண்டிய வீரர்களிடம் கண்டேன். அவர்கள் எனக்கு எதிராகப் போராடியதால் அவர்களை அழித்தேன். ஆயினும் அவர்களது வீரத்திற்கு இன்னொரு வீரனாகத் தலை வணங்கியதால், அவர்களுக்கு வேதியர்கள் மூலம் முறைப்படி ஈமக்கடன்களையும் செய்வித்தேன்.

“இலங்கை மன்னர் ஒரு வீரரைப் போல நடந்து கொண்டு நம்மிடம் போரிட்டு நமது மதிப்பைப் பெறவில்லை. அப்படி இருந்தால் இப்படி ஒரு வழக்காடத் தேவையே இருந்திருக்காது. ஆயினும் அவர் செய்த செயலுக்குக் காரணம் நாட்டுப் பற்று என்பதால் - அவருக்கு எப்படிப்பட்ட தண்டன வழங்கினாலும் - இழிவான தண்டனையை வழங்கக் கூடாது என்று பகைவனுக்கும் அருளும் பரம்பரையில் வந்த கோப்பரகேசரியாரைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த அளவுக்கு நான் முழுத் திறமையுடன் வாதாடி இருக்கிறேன். இது போதாது என்றால், வேறு எந்தக் கருத்தையும் நான் விட்டுவிட்டேன் என்று மனதிற்குத் தோன்றினால், அதை இலங்கை மன்னர் எனக்குத் தெரிவித்தால், அதை கோப்பரகேசரியாருக்கும் இந்த அரசவைக்கும் முன்வைக்க ஆயத்தமாக உள்ளேன்.” என்று தனது வாதத்தை முடித்துக் கொண்டு இலங்கை மன்ன்ன் மகிந்தனை நோக்குகிறான் இராஜாதிராஜன்.
நன்றியுடன் கைகூப்புகிறான் மகிந்தன்.

அனைவரும் இராஜேந்திரனை நோக்குகிறார்கள். தனது இறுதி முடிவு அவன் கையில்தான் இருக்கிறது என்று அறிந்த மகிந்தன் அவனை ஏறிட்டு நோக்குகிறான். ஒரு சில கணங்கள் இராஜேந்திரனது பார்வையைச் சந்தித்த அவன், பிறகு தனது கண்களைத் தாழ்த்திக் கொள்கிறான்.

அரசவையில் இருக்கும் அமைதி அனைவருக்கும் தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இராஜேந்திரன் சிறிது நேரத்திற்குப் பிறகு தனது செங்கோலை உயர்த்துகிறான். அனைவரும் அவனையே உற்று நோக்குகின்றனர்.

“இரு தரப்பு வாதத்தையும் கேட்டோம். பொதுவாக கடற் கொள்ளையருக்கும், நாட்டின் அமைதியைக் குலைப்பவருக்கும், குற்றமற்ற மக்களைத் துன்புறுத்துபவருக்கும், சோழநாட்டில் அளிக்கப்படும் தண்டனை மரணம்தான். அவரது குடும்பத்தினர் அடிமைகளாகிக் குற்றேவல் செய்வதுதான் மரபு. இதை ஓலைநாயகம் மிக அழகாக எடுத்துரைத்தார்.”

அரசவையையும், இலங்கை மன்னனையும் கவனிக்கிறான் இராஜேந்திரன். அவன் சொல்வதை ஆமோதிப்பது போலக் கைகளை உயர்த்தியும், தலைகளை ஆட்டியும், தங்கள் கருத்துகளை ஆரவாரத்துடன் தெரிவிக்கின்றனர் அரசவையினர். அவன் மீண்டும் கையை உயர்த்தவே, ஆரவாரம் அடங்குகிறது.

“ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் சொன்ன வாதத்திலும் பொருள் இருக்கிறது. நாட்டுப் பற்றினால் உந்தப்பட்டே, இலங்கை மன்னர் இத்தகைய கொடிய செயல்களைச் செய்திருக்கிறார் என்றே நம்புவோம். இத்தகைய செயல்களைச் செய்பவர்களை ஐந்தாம்படைகள் என்றுதான் நாம் அழைப்போம். ஐந்தாம்படைகளுக்குச் சோழநாட்டில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் மரணதண்டனைதான் விதிப்பார்கள்.”

இராஜேந்திரன் இப்படிச் சொன்னதும் சப்தநாடிகளும் அடங்கி விடுகிறது மகிந்தனுக்கு. மரண தண்டனை என்றுதான் உறுதியாகிவிட்டது. இருப்பினும், ஐந்தாம் படை என்ற பழியுடனா சாகப் போகிறோம் என்று வருந்துகிறான்.

“இருப்பினும், பகைவனுக்கும் கருணை காட்டுவது நமது வழக்கம்தான். நம்முடன் போரிட்ட மன்னர்களுக்கே நாம் கருணை காட்டி விடுவித்து, நமக்குத் திரை செலுத்தி வாழுமாறு அவர்களுடைய நாட்டினையும் திரும்ப அளித்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கருணையை - நாட்டிற்காக நம்மிடம் போரிட்டுத் தோற்றுப் பிடிபட்டிருந்தால் - அப்படிப்பட்ட கருணையைக் காட்டியிருக்க இயலும். அதுவும் இல்லை.

“இவரை இப்படியே விட்டுவிட்டால் நாளை சோழர்களை எல்லோரும் கிள்ளுக்கீரையாக நினைத்து ஐந்தாம்படையாகச் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே இவர் மாதிரிச் செயல் புரிந்தால் சோழர்களிடமிருந்து தப்ப முடியாது. அதே சமயம் நாட்டுப் பற்று கொண்டு தவறாக செயல் செய்தார் என்பதால் சிறிது கருணையும் காட்டினோம் என்று எதிர்காலம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே இவருக்கும், இவரது குடும்பத்திற்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கிறோம்!”

தனது செங்கோலை உயர்த்தித் தன் முடிவைத் தெரிவிக்கிறான் இராஜேந்திரன்.

அரசவையே கைதட்டி ஆரவாரம் செய்கிறது. “சரியான தண்டனை! சரியான தண்டனை!!” என்ற முழக்கம் அரசவையையே பிளக்கிறது. கையை உயர்த்துகிறான் இராஜேந்திரன். அரசவை உடனே அமைதியாகிறது.

“ஆயினும் இளவரசன் இராஜாதிராஜன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இலங்கை மன்னருக்கும் அவரது குடும்பத்திற்கும் நாம் மேலும் கருணை காட்டப் போகிறோம். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தாலும், மற்ற சாதாரணக் கைதிகளைப் போல நடத்தாமல், அவருக்குச் சிறந்த முறையில் வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கிறோம். சோழநாட்டின் விருந்தாளியாக, பாதுகாப்புக் கைதியாகவே அவரும், அவரது குடும்பமும் நடத்தப்படும். சிறையில் யாரேனும் அவரை முறைதவறி நடத்தினால் எமது சீற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆயினும், அவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ வெளி உலகத் தொடர்பு ஏதும் இருக்கமுடியாதபடி பாதுகாப்புச் சிறையில் அடைக்கப் படுவாராக! இது சோழநாட்டின் எதிரிகளுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.”
இராஜேந்திரன் எழுகிறான். அரசவை எழுந்து நிற்கிறது. உடனே சிவாச்சாரி தனது பக்கத்தில் இருந்த ஒரு அதிகாரியை அழைத்து காதில் ஏதோ சொல்கிறான். உடனே அவன் இலங்கை மன்னனின் அருகில் இருக்கும் காவலாளிகளிடம் ஏதோ தெரிவிக்கிறான். காவலாளிகள் இலங்கை மன்னன் மகிந்தனை மரியாதையாக அழைத்துச் செல்கிறார்கள். தான் வெளி உலகைப் பார்ப்பது இதுவே கடைசித் தடவை என்று உணர்ந்த மகிந்தன் சோழ அரசவையை நன்கு சுற்றிப் பார்த்துக் கொண்டு செல்கிறான். அங்கு நின்ற இராஜாதிராஜனைப் பார்த்து நன்றியுடன் கைகூப்புகிறான். “என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி!”

“சக்ரவர்த்திகள் உம்மைக் கழுவில் ஏற்றும்படி தீர்ப்பளிக்க வேண்டும் என்றுதான் நான் முதலில் விரும்பினேன். இப்பொழுது சக்ரவர்த்திகள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்!” என்று முரட்டுத்தொனியில் கூறிவிட்டு, அங்கிருந்து அகலுகிறான் இராஜாதிராஜன்.

இராஜேந்திரனிடம் ஒரு தூதுவன் ஏதோ சொல்வதையும், உடனே தன் தந்தையின் முகம் திடுமென்று இருளடைந்து கலங்குவதைக் கண்டவுடன், பரபரப்புடன் அவனருகில் சென்று, “என்ன தந்தையே, என்ன கலக்கம்?” என்று வினவுகிறான்.

“இராஜாதிராஜா! வேங்கை மன்னர் விமலாதித்தர் இறந்துவிட்டாராம்! உன் அத்தை குந்தவி உடன்கட்டை ஏறிவிட்டாளாம்! இப்பொழுதுதான் செய்தி வந்தது.” என்று தழுதழுத்த குரலில் கூறுகிறான். திகைத்து நிற்கிறான் இராஜாதிராஜன்.
                                                              * * *

                             அத்தியாயம் 7
                        தென்பாண்டி நாடு
             காளயுக்தி, வைகாசி 16 - ஜூன் 2, 1018

கொற்கையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில் விரைந்து கொண்டிருக்கின்றன அக்குதிரைகள். ஒரு வணிகனைப் போல உடையணிந்திருக்கிறான், மாறுவேடத்தில் இருக்கும் விக்கிரம பாண்டியன். வேலையாள் போல உடையணிந்து அவனுக்கு அடுத்த குதிரையில் காளையப்பன் சவாரி செய்து கொண்டிருக்கிறான். அவர்களைச் சுற்றி பன்னிரண்டு குதிரைகளில் வணிகர்கள் போல வேடமணிந்து பாண்டிய வீரர்கள் சவாரி செய்து கொண்டிருக்கின்றனர்.

 “நமக்கு உதவி செய்த மகிந்தரை ஆயுள்தண்டனை அளித்து வெளியுலகத் தொடர்பே இல்லாது சிறையில் பூட்டிவிட்டான், இராஜேந்திரன்!” என்று பல்லைக் கடித்தவாறே முணுமுணுக்கிறான் விக்கிரமன்.

“தன் மகன் இராஜாதிராஜனையே மகிந்தன் சார்பில் வாதாடச் செய்து, ஒரு நாடகமும் ஆடியிருக்கிறார்கள், அரசே!” என்று அவனது எண்ணத்தைப் பிரதிபலிக்கிறான் காளையப்பன்.

“இதைவிடக் கொடுமை எனது மூதாதையரின் அரியணையிலேயே இராஜாதிராஜனை சோழ இளவலாக முடி சூட்டியிருக்கிறான், அந்த இராஜேந்திரன். இதை எண்ணினால் என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கிறது, காளையப்பா!” என்று உறுமுகிறான் விக்கிரமன்.

“அதோடு மட்டுமல்ல, அரசே! ரோகணத்தில் மட்டுமல்லாது இலங்கையில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மகிந்தரின் மகன் கசாபனைத் தேடி சோழவீரர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்களாம்! இலங்கை மன்னர்களையே வேரறுக்க வேண்டும் என்று இராஜேந்திரன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறானாம். சிங்களத் தீவைத் தமிழ் பேசும் தென் சோழ மண்டலமாக்க வேண்டும் என்றும் தீர்மானித்து விட்டார்களாம்!” என்று தெரிவிக்கிறான் இன்னொருவன்.

“அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை!” என்று உறுதியான குரலில் பதிலளித்தவாறே குதிரையைச் செலுத்துகிறான் விக்கிரமன்.
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள், அரசே?” என்று வினவுகிறான் காளையப்பன்.

“மொழி, சமயம் இரண்டும் ஒன்றான நாமும், சோழருமே ஒருவரை ஒருவர் அழிக்க அலைந்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க மொழியும், சமயமும் வெவ்வேறான சிங்களவர் எப்படிச் சோழர்களை ஏற்றுக் கொண்டு தங்கள் நாட்டைச் சோழமண்டலமாக ஒப்புக் கொள்வார்கள்? தமிழை எப்படித் தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வார்கள்? நமது குருதியில் சோழர்களுக்கு எதிராக எப்படி ஒரு வெறி ஓடிக் கொண்டிருக்கிறதோ, அப்படி ஒரு வெறி சோழர்களுக்கு எதிராக அவர்களின் குருதியிலும் ஓடிக் கொண்டிருக்கிறது! நாமாவது சோழ ஆதிக்கத்தை மட்டும்தான் வெறுக்கிறோம். தமிழை நமது உயிராகப் போற்றுகிறோம். ஆனால் சிங்களவர்கள் சோழர்கள் அவர்களுக்கு செய்யும் நன்மைகளைக்கூட வெறுக்கிறார்கள். எனவே, சோழர்கள் தமிழை இலங்கைக்குக் கொண்டு சென்றால் - தமிழையும், சோழர்களையும் ஒன்றாக்கி - தமிழ் தங்களை அடக்கி ஆளவந்த சோழர்களின் குரல் என்றும் - தங்களின் அடையாளத்தையே அழித்துத் துடைத்துவிடவே தமிழைத் தங்கள்மீது திணிக்கிறார்கள் என்று தமிழையே வெறுக்க ஆரம்பிப்பார்கள். அதனால்தான் தமிழை இலங்கையில் பரப்ப இயலாது என்று நான் கருதுகிறேன், காளையப்பா!” என்று அவனுக்குப் பதிலளிக்கிறான் விக்கிரமன்.

“அப்படியா அரசே? தாங்கள் இவ்வளவு சிந்திப்பது மாதிரி ஆழ்ந்து சிந்திக்காமலா இருப்பார்கள் சோழர்கள்?” என்று வினவுகிறான் காளையப்பன்.

“அதனால்தான் இலங்கை அரசரான மகிந்தரையும் அவர் குடும்பத்தினரையும் சோழ நாட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, இலங்கை அரச வாரிசான கசாபனையும் பிடித்து அழிக்கவும் அலைகிறார்கள். கசாபன் இல்லாவிட்டால் சிங்களவர் யார் பின்னாலும் ஒன்று சேர இயலாதல்லவா! தலையில்லாத உடல் என்ன செய்யும்! அதனால் சிந்தித்துச் செயல்பட இயலுமா? இப்பொழுது இலங்கையின் தலை கசாபன்தான்!”

சிறிது நேரம் அமைதியாக குதிரையைச் செலுத்துகிறான் விக்கிரமன். அவனது முகத்தில் கவலைக் கோடுகள் பரவுவதைக் கவனிக்கிறான் காளையப்பன். தனது அரசனின் சிந்தனை எதைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறான். அவனைப் பற்றி நன்கு அறிந்ததால் சோழர்கள் இலங்கையில் தமிழைப் பரப்ப எண்ணுவதைப் பற்றித்தான் இப்பொழுது தீவிரமாகச் சிந்திக்கிறான் என்றும் அறிந்து கொள்கிறான். எனவே உரையாடலைத் தானாகவே மீண்டும் தொடங்கட்டும் என்று அமைதியாக இருந்து விடுகிறான்.

“காளையப்பா!” என்றபடி மீண்டும் துவங்குகிறான் விக்கிரமன். “சோழர்கள் தமிழைப் பரப்ப ஆரம்பித்தால் சிங்களவர்கள் சோழர்களை மட்டுமல்ல, தமிழையே வெறுக்கத் துவங்கி விடுவார்கள். அவர்கள் தமிழின் மீது கொள்ளும் வெறுப்பு தமிழர்கள் அனைவரின் மீதும் தாவும், பாண்டியர்களாகிய நாமும் தமிழர்கள்தானே! இப்பொழுது சோழர்களை மட்டும் வெறுக்கும் சிங்களவர்கள் நாளை நம்மையும் வெறுப்பார்கள்! சோழர்களை எதிர்க்கச் சிங்களவர்களின் துணையை நாடும் நாம் அவர்களின் வெறுப்புக்கு உள்ளானால் என்ன ஆகும்?

“இப்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் சோழர்களின் தமிழ் பரப்புத் திட்டத்தை எதிர்க்க வேண்டி இருக்கிறது. ஒன்று, நமது தாய் மொழியான தமிழ் சிங்களவர்களின் வெறுப்பை ஈட்டிக்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. இரண்டாவது, தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட பாண்டியரான நம்மை - சிங்களவர்களுக்கு நண்பர்களாக இருந்து வரும் நம்மை - நமது ஆதரவாளர்களை, நமது நண்பர்களை, நமக்குத் தோள் கொடுத்தவர்களை, நமக்குத் தோள் கொடுக்கப் போகிறவர்களை - நம்மை வெறுக்கும் எதிரிகளாகிவிட வாய்ப்புக் கொடுக்கக் கூடாது.

“எனவே, சோழர்களின் தமிழ் பரப்பும் திட்டத்தை எப்படியாவது நாம் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக எப்படியாவது சோழர்களுக்குத் தலைவலி கொடுத்து அவர்களின் திட்டத்தைத் திசை திருப்ப வேண்டும்!” என்று முடிக்கிறான் விக்கிரமன்.

“அதை எப்படிச் செய்ய இயலும், அரசே! இலங்கையில் இருந்த நமது படை வீரர்களில் எனது சிற்றப்பன் முருகேசன் உள்பட ஒருவர் கூட மிஞ்சவில்லை. அவர்களுக்குத் துணையாக இருந்த சிங்களவர்களும், அவர்களது படைவீரர்களும் அழிக்கப்பட்டார்கள். சிங்களத்தில் மன்னர் என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லை. பாண்டி நாட்டிலும் சோழப் படைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மதுரைப் பக்கம் நாம் செல்வதைத் தற்பொழுது நினைத்துப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கிறது.

“அரச விசுவாசம் மிகுந்த பாண்டிய மக்கள் நிறைய இருப்பதால்தான் தென் பாண்டி நாட்டிலாவது நாம் நடமாட முடிகிறது. பாண்டியப் படைகள் அனைத்தும் சரணடைய வேண்டும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பறை அறைந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நம்மால் என்ன செய்ய இயலும், அரசே?”  என்று ஆற்றாமையுடன் கேட்கிறான் காளையப்பன்.

“சேரநாட்டிற்குச் செல்ல வேண்டும், காளையப்பா!” என்று தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்குகிறான் விக்ரமன். அதைக் கேட்கக் கேட்க காளையப்பனின் பெரிய விழிகள் இன்னும் பெரிதாக விரிகின்றன. விக்கிரமன் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் தன் திட்டத்தை அவனுக்கு விவரிக்கிறான்.

“நான் சொல்வது புரிகிறதா காளையப்பா?” என்று கேட்டதும் பெரிதாகச் சிரித்துக் கொண்டு தலையாட்டுகிறான் காளையப்பன். “அரசே! உங்கள் திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மர் தங்கள் திட்டத்திற்கு ஒத்து வருவார் என்றே நானும் நம்புகிறேன்.” என்று புன்னகையுடன் பதிலளிக்கிறான்.

“குந்தித் தின்றால் குதிரும் கரையும் என்ற பழமொழியை நீ கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? சிறிது சிறிதாக சோழருக்கு எதிராக நாம் செயல்பட்டுக் கொண்டே வந்தால் அவர்களது வலிமை குறைந்து கொண்டே வரும். இலங்கைப் போரை எடுத்துக் கொள். நமக்கு ஐயாயிரம் வீரர்கள்தான் இழப்பு. ஆனால் பேரிழப்பு சோழர்களுக்குத்தானே! ரோகணத்தில் இராஜாதிராஜன் பதிமூவாயிரம் வீரர்களையும், இராஜேந்திரன் இருபத்தையாயிரம் வீரர்களையும் இழந்தான் அல்லவா? சிங்கள வீரர்கள் கிட்டத்தட்ட நாற்பத்தையாயிரம் பேருக்கு மேல் இறந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு ஐயாயிரமும், சோழர்களுக்கு முப்பத்தெட்டாயிரமும் இழப்பல்லவா? எனது தந்தை இராஜராஜனிடம் இழந்ததற்கு மேலாகவே நாம் சோழவீரர்களை அழித்து விட்டோமே! இது தவிர எத்தனை பொருட்சேதம் அவர்களுக்கு ஏற்பட்டது?

“இனி நேருக்கு நேராக இராஜேந்திரனிடம் தேவையில்லாமல் போரிட்டு, நான் பாண்டிய வீரர்களை இழக்க மாட்டேன். மெல்ல மெல்ல நமது எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அவனுக்கு எல்லாவிதத்திலும் தொல்லை கொடுத்து, நமது வலிமையை அதிகரித்துக் கொண்டே வருவோம்.” என்று கூறியபடி குதிரையை ஒரு மண்டபத்திற்கருகில் நிறுத்துகிறான் விக்கிரமன். மற்றவர்களும் தங்கள் குதிரைகளை நிறுத்துகிறார்கள்.
மண்டபத்தின் அருகிலிருக்கும் குடிசையிலிருந்து ஒரு கிழவன் வெளியே வருகிறான்.

“நாங்கள் வணிகர்கள். இரவு நாங்கள் இந்த மண்டபத்தில் தங்கி, காலையில் நெல்லைக்குச் செல்லப் போகிறோம். எங்களுக்கு உணவு ஏதாவது கிடைக்குமா? நாங்கள் பணம் கொடுத்து விடுகிறோம்.” என்றபடி கைநிறையக் காசுகளை கிழவனிடம் நீட்டுகிறான் காளையப்பன்.
அவனையும், மற்ற வீரர்களையும் மேலும் கீழும் பார்த்த கிழவனின் முகம் மலர்கிறது. தனது மிச்சமிருக்கும் பற்கள் தெரியச் சிரிக்கிறான்.

“எங்க பாண்டிய மகராசாவை எனக்குத் தெரியாதா என்ன! வராத விருந்தாளியாக மன்னர் பிரானே என் குடிசைக்கு எழுந்தருளி இருக்கிறார். அவர் பசியாற நாங்கள் பணமா வாங்கிக் கொள்வோம்!” என்றபடி விக்கிரமனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “கும்பிடறேன் மகராசா!”[வளரும்]

Tuesday, 7 October 2014

தமிழில் கீதாஞ்சலி

தமிழில் கீதாஞ்சலி


பதிப்புத்துறையில் தனிச்சிறப்பான இடம் வகிக்கும் கிழக்கு பதிப்பகம் நடத்தும் மதிப்புரை.காம் மூலம் வா. மணிகண்டன் என்பவர் உலகறிந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளரும் அறிவியல் மேதையுமான திரு. சி.ஜெயபாரதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த கீதாஞ்சலி நூலைக்குறித்து , முழுமையாகப் படிக்காமலும் வேண்டுமென்றே சி.ஜெயபாரதன் அவர்கள் புகழை மங்கச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும்  அவர் மனத்தை இந்த 80வயதில் புண்படச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும்  கடுமையாகச் சாடி விமர்சனம் செய்திருக்கிறார்.

நமது நோக்கம் விமர்சனத்தை விமர்சனம் செய்வதல்ல.அதே நூல் மற்றும் அதன் மொழிபெயர்ப்பு குறித்து தினமலர், தினத்தந்தி, குமுதம் ஆகிய பத்திரிகைகள் என்ன கூறின? வாசித்தவர்கள் அந்த நூலின் தரம் மற்றும் மொழிபெயர்ப்புத் திறன் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதற்காகப் பின்வரும் பதிவை வெளியிடுகிறோம்.பதிப்புத்துறையில் இருந்துகொண்டே மற்ற பதிப்பாளர்கள் வெளியிடும் நூல்கள் குறித்து எழுதியவர் யார், அவர்கள் புலமைப்பின்னணி என்ன என்று அறியாத நபர்களிடம் விமர்சனம் செய்வித்து அப்படியே வெளியிடுவது கிழக்கு பதிப்பகத்திற்கு இழுக்கு தேடுமே தவிர அவர்கள் உழைப்புக்கு மரியாதை தராது என்பதைச்  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்-வையவன் 




From: Kalyanaraman ravi
Date: 2014-10-06 12:43 GMT-04:00
Subject: Re: தமிழில் கீதாஞ்சலி – விமர்சனம்
To: “சி. ஜெயபாரதன்”
i read your ​Tamil translation on 103 verses of Geethanjali. An excellent work, sir. I salute you. You have rendered each verse in chaste ​Tamil and at the same time bringing out the spirit of the original. There are numerous poetic sparks like the following:

ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!

கண்ணீர் அருவிகள் ஆறுகளாய்ப்
பொங்கி
“எங்கே? எங்கே?” என்று
கேள்வியும் கூக்குரலும்
கேட்ட போது,
உலகை வெள்ளம் மூழ்கி யடித்து,
“இங்கே நான்” என்னும்
சங்க நாதம்,
எங்கும் உனை
உறுதிப் படுத்தும்!

வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!
++++++++++++
I thank you for sending me this file. i shall preserve it like a treasure.
K Ravi
Advocate,
Raja Annamalai puram
Chennai : 600096
+++++++++++++++++++++++++++++
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
கவிஞர் வைகைச் செல்வியின்
அணிந்துரை
விண்வெளியின் விளிம்பில் நான். . . .
பல ஆண்டுகள் கழித்து புல்லாங்குழலை எடுக்கிறேன். ஆம். வெகு காலம் கழித்து கீதாஞ்சலியைப் படிக்கிறேன். என் இனிய தமிழில் படிப்பதால் . . .இசையின் இனிமை கூடியிருக்கிறது.
மூலக் கவிதைகளில் இல்லாத ஒரு சிறப்பம்சமாய், தன் கற்பனைக்கேற்ற விதமாய் மட்டும் அமையாமல், கவிதைக்குப் பொருத்தமாக அருமையான தலைப்புகள் தந்திருக்கிறார் கவிஞர் ஜெயபாரதன். இத்தலைப்புகள் கவிதைகளை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. மொழிபெயர்ப்பும் அப்படியே. சில இடங்களில் மூலத்தினையும் தாண்டி, தமிழ் மொழிக்கேயுரிய சூட்சுமம் பொதிந்துள்ளது.
”உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!”
ஆங்கிலத்தில் இவ்வரிகள் உறுப்புகளைத் தொடுவதாகவே இருக்கிறது. ஆனால் மொழி பெயர்ப்பை வாசிக்கையில் தொடுதல் உணர்ச்சி ஆன்மாவிற்குள்ளும் ஊடுருவுவதை உணர முடிகிறது.
அதைப் போல மற்றொரு இடம்.
”கைவசம் உள்ள
எந்தன் படைப்பு வேலைகளைப்
பின்னர்
முடித்துக் கொள்ளலாம்”
ஆங்கிலத்தில் கைவசம் உள்ள வேலைகளை என்று தான் இருக்கிறது. இங்கு இவர் ஒரு மொழி பெயாப்பாளராக இல்லாமல் படைப்பாளியாக இருப்பதை உணர்த்தி விட்டார்.
பிறிதோர் கவிதையில்
”சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!”
ரவிந்திரநாத் தாகூரின் இக்கவிதையை சர்வ மதத்தினரும் படிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? சர்வ மதத்தினருக்கும் சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ? ஜெபமாலை, உத்திராட்சக் கொட்டை என்று பாடுகிறார்.
”தன் சொந்த வீடு வந்தடைய
ஒவ்வோர்
அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி
தட்ட வேண்டி யுள்ளது!”
தாகூரின் அருமையான வரிகள் அத்தனையையும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார். படித்ததில் எனக்குப் பிடித்த வரிகள் அத்தனையும் சுவை குன்றாமல் ஏன் மெருகேற்றியும் கூட தமிழுக்குள் பொதியப்பட்டுள்ளன.
30 ஆம் கவிதையில் தாகூர் மனிதனின் அற்ப மனட்சாட்சியையே கூறுகிறார் என்று எண்ணுகிறேன். ஜெயபாரதனும் அப்படித்தான் எண்ணுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகளில் சிறிது மாற்றம் இருப்பதாகத் தோன்றுகிறது.
41 ஆவது கவிதையில்
உனக்கு நான் காத்துக் கிடப்பதை
உறுதியாய் எப்படி
உரைப்பேன் அவரிடம்?
வெட்கக் கேடிது வெளியே சொல்ல!
வறுமையை வைத்துளேன்,
உனக்கு
வரதட்சணை வழங்க!
மூலத்தில் இல்லாத தொனி மொழிபெயர்ப்பில். ஏதோ சண்டை போடுவது போன்ற ஒரு தொனி. வரதட்சணைக் கொடுமை தமிழ்நாட்டிற்கே அதிகம் உரியது என்று நினைத்ததைப் போல. உறுத்தலாய் அதட்டலாய் ஆயினும் காதலியின் கையறு நிலையும் தமிழில்தான் நன்கு தொனிக்கிறது.
மொழிபெயர்ப்பின் அருமையை, தாகூரின் வார்த்தைகளில் சொல்லப் போனால்,
”இன்னும் நிறைய காலியிடம் இருக்கிறது நிரப்ப… ”
நேரம்தான் இல்லை என் இனிய நண்பர், ஜெயபாரதனின் மொழி நயத்தையும் சிறிதும் அர்த்தம் குறையாத நடையையும் சொல்லிச் சொல்லிப் பக்கத்தை நிரப்ப. ஜெயபாரதனே ஒரு கீதாஞ்சலி எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். ஏனென்றால் தாகூரின் மனத்தைப் போல அவர் மனமும் மென்மையான உணர்வுகளினால்தான் நெய்யப்பட்டிருக்கிறது. அணுவைப் பிளக்கும் விஞ்ஞானியால் மனத்தைப் பிளக்கும் கவிதைகளும் படைக்க இயலுமல்லவா?
வலையைத் திறந்தால் அதில் ஜெயபாரதன் இல்லாமல் இருக்க மாட்டார். கவிதை, சிறுகதை, நாடகம். மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று நிறைய நிறைய . ஆனால் அனைத்துமே அவர் மனத்தின் சந்தோசத்திற்காக மட்டுமே. இவருக்கென வாசகர் வட்டம் இருந்தாலும், எவ்வித பாசாங்கும் இன்றி, எவ்வித சமரசமும் செய்யாமல் எழுதுபவர் என்பதாலேயே எங்களுக்குள் நட்பு சாத்தியமாயிற்று. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் டபிள்யு பி. யேட்ஸ் தாகூருக்கு எழுதியுள்ள தனது அணிந்துரையில் இப்படிச் சொல்லி யிருக்கிறார். நாம் அனைவரும் அதிக பக்கங்கள் உள்ள நீண்ட புத்தகங்களை எழுதுகிறோம். எழுதுவதை இனிமையாக்கும்படி அதில் ஒரு வேளை ஒரு பக்கம் கூட தரமானதாக வந்திருக்காது. ஏதாவது ஒரு பொது வடிவத்திற்குள் அந்த எழுத்துக்கள் அடங்கிப் போகின்றன. இதெல்லாம் பணம் பண்ணுவதற்காகத்தான். நமது மண்டைகளை அரசியலால் நிரப்பி விடுகிறோம். ஆனால் தாகூர் அப்படியல்ல. இந்தியக் கலாச்சாரத்தைப் போன்றே ஆன்மிகத் தேடலில் தன்னை அர்ப்பணித்துள்ளார் என்று கூறுகிறார். கீதாஞ்சலிக் கவிஞருக்கு மட்டுமல்ல இவ்வார்த்தைகள் அதன் ஆன்மாவை மொழிபெயர்த்தவருக்கும் பொருந்தும். ஆம். வேறு சில மொழிபெயர்ப்புகள் வந்திருந்த போதும் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு ஆன்மாவின் கீதமாக இருக்கும்.
சமுதாயத் தீமைகளின் மீதும், சமுதாய நோக்கமில்லாத எழுத்துக்கள் மீதும் கூட அவருக்கு கோபம் உண்டு. முகம் தெரியாத தமிழர்களை, இந்தியர்களை மனதார நேசிப்பவர். அன்பான ஒரு மனிதனாக இருப்பதாலேயே அவருக்கு கீதாஞ்சலியை மொழி பெயர்க்கத் தோன்றியிருக்கிறது.
இந்த விமர்சனத்தை தாகூரின் இந்த வரிகளில் முடிக்க விரும்புகிறேன்.
களைத்துப் போய் நான் வெகுநேரம்
காலோய்ந்து கிடக்கும்
காலமும் உண்டு!
விழித்துக் கொண்டென்
குறிக்கோளைத் தேடி நான்,
விரைந் தோடுவதும் உண்டு!
ஆனால் நீ
இரக்கமற்ற முறையில்
என்கண் முன்பு தோன்றாமல்
ஒளிந்து கொள்கிறாய்!
ஆம். விமர்சனத்திற்காக எத்தனை எத்தனை முறைகள் விதவிதமான பான்ட்களில் இமெயில்கள். ஒவ்வொரு முறையும் நான் வேலைப் பளுவின் நிமித்தம், உடனடியாக அஞ்சல் பெட்டியைத் திறக்க இயலாமல் போய். சில நாட்கள் கழித்து திறக்கையில் •பான்ட் பிரச்சனை. . .மீண்டும் . . மீண்டும் சலிப்பின்றி அனுப்புவார். அலுவலகம் விட்டு ஒன்றுமே செய்ய இயலாமல் கிடக்கும் நாட்களில் திடீரென விமர்சனம் எழுத வேண்டுமே என்று, கீதாஞ்சலியையும் ஜெயபாரதனையும் படிப்பதற்காக நான் விழித்தெழுந்த நாட்கள் உண்டு. ஆனால் ஜெயபாரதன் என் கண் முன் இன்னும் தோன்றத்தான் இல்லை. எனினும் நட்பும் அன்பும் கண்ணுக்குத் தெரியாத இரத்தம் ஓட்டம் போல தமிழ்நாட்டையும் கனடாவையும் இணைத்து ஓடிக்கொண்டே இருக்கிறது.
அன்புடன்
வைகைச் செல்வி
சென்னை
+++++++++++++++++++++
ஜோதிர்லதா கிரிஜாவின் அணிந்துரை
திரு ஜெயபாரதன் அவர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானவர் எனும் ஒரே காரணத்தாலேயே அணிந்துரை எழுத ஒப்புக் கொண்டே.ன். நான் விமரிசகர் அல்லேன். தவிர, ஓர் எழுத்தாளர் மற்றோர் எழுத்தாளரை விமர்சிப்பது (என்னைப் பொறுத்தவரையில்) சம்மதமில்லாத ஒன்று. எனக்கு நானே விதித்துக்​ ​கொண்டுள்ள இவ்விதியை ஜெயபாரதன் விஷயத்தில் நான் மீறுவதற்கு நட்பு மட்டுமே காரணம்.
மேலும் விமர்சிப்பது என்பது ஒரு கலை. அது எனக்குக் கைவராத கலையாகும். ஒரு படைப்பு நன்றாக இருந்தது, சுவையாக இருந்தது என்று சொல்லுவதற்கு மட்டுமே அறிந்தவள் நான். அதனை அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்து முழுமையாக விமர்சிப்பது நா‎ன் துளியும் அறியாத கலை.
ஜெயபாரதன் அவர்களே தமது முன்னுரையில் கூறியுள்ளது போல், ‏ரவீந்திரநாத் தாகூர் தம்மோடும் நம்மோடும் ஆண்டவனோடும் உரையாடுகிறார் எ‎‎ன்றே தோ‎‎ன்றுகிறது. ‘சில சமயங்களில் அவர் பேசுவது கடவுளிடமா, அல்லது காதலியிடமா எ‎‎ன்று தெரிந்து கொள்ளுவது சிரமமாக உள்ளது’ எ‎ன்பதாய் ஜெயபாரத‎ன் அவர்களுக்கு ஏற்பட்ட எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. எவருக்குமே அது ஏற்படும்தான். .
கீதாஞ்சலியில் கடைசியாக வரும் கவிதைகள் மரணத்தைப் பற்றியதாகவே உள்ளன. படிக்கும் போது ஒரு சோர்வு பற்றிக் கொள்ளுகிறது.
எது எப்படி ‏இருந்தாலும், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பும், கவிதை நயமும் அருமை. விமர்சனத்துக்கு நாம் எடுத்துக்கொண்டுள்ளது தாகூர் அல்லர், ஜெயபாரதனே எ‎ன்பதால் அவரது மொழிபயர்ப்பை மட்டுமே பார்ப்போம்.
மூலத்துக்குக் குந்தகம் வராத முறையில் அவரது மொழியாக்கம் அமைந்துள்ளது.
‘அந்திமக் காலமி‎‎ன்றி எ‎ன்னை ஆக்கியுள்ளாய் நீ’ எனத் தொடங்கும் முதல் பாடலிலேயே களை கட்டிவிடுகிறது எனலாம். ‏‏ அவ்வரிகளில் தாகூரி‎ன் சுயமதிப்பீடு வெளிப்படுகிறது. ஜெயபாரதனின் மொழியாக்கம் அருமையாய்த் தொடங்குகிறது.
“எ‎‎ன் வாழ்வில் கட்டுப்பாடு”
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்,
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க
“மாலையில் சேராத மலர்” /
உனக்குப் பூமாலை சமர்ப்பித்து
வணங்கும் நேரம் தவறிப்போய்,
இன்றைய பொழுதும்
எனக்குத் தெரியாமல்
முடிந்து போய்விடும் என்று
நடுங்கும் என் நெஞ்சம்
“இறைவன்‎ எங்கிருக்கிறா‎ன்?”
மெய் வருந்தி இறுகிப்போன
வயலை உழவன் எங்கே
உழுதுகொண்டிருக்கிறானோ,
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ,
அங்கே உள்ளான் இறைவன்
“எங்கிருந்து வந்ததோ?”
மதலையின் இதழ்களில்
மலர்ந்திடும் முறுவல்
எங்கிருந்து வருவதென்று
எவரேனும் அறிவரோ ?
“ஆடும் குழந்தை”
தழுவிச் செல்லும்
வேனிற்தென்றல்
வீசும்போதென்
மேனியின் சிலிர்ப்பு
எப்படி எனச் சொல்வேன்,
உன் முகப் புன்னகை மலரக்
கன்னத்தில்
நான் முத்தமிடும் போது
“உன்னோடு என் கலப்பு”
பாடுபட்டுப் பணி புரிதற்கு
ஈடுபடுத்த வேண்டும்
முழுமையாய் என்னை நான்
“மனவலியைத் தாங்குவேன்”
வணிக உலகிலே
மணிக்கணக்காய்
ஊழியத்தில் உழன்று
தினமும் செல்வம் சேர்த்து,
எனது பை நிரம்பி வழிந்தாலும்
எதுவும் முடிவில்
சம்பாதிக்க​ ​வில்லை
எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னிடம்
“என் கண்ணீர் முத்தாரம்”
அன்னையே ! சோகத்தில்
சிந்துமென் கண்ணீர்த்
துளிகளை எல்லாம்
ஒரு முத்தாரமாய்க் கோத்துச்
சூடுவேன் உன் எழில் முகத்தில்,
“மரணதேவனுக்கு வரவேற்பு”
வெறுமையான என் வீட்டில்
புறக்கணித்த தனி ஆன்மா மட்டும்
எஞ்சி நிற்கும்
என் இறுதிக்கொடையாக
உனக்கு,
“அவளைத் தேடிச் செல்கிறேன்”
இதில் வரும் ‘அவள்’ யார்?
சக்தியா – அதாவது கடவுளா – காதலியா ?
ஆகியவற்றைப் பெரிதும் ரசிக்க முடிந்தது.
அடையாளமிட்ட வரிகள் அந்தந்தப் பாடலுக்கு உரியன.
102 ஆம் பாடலான “உன் மர்மங்களை அறிவேன்” என்பதில்,
“அவை கூறும் அர்த்தமென்ன
என்றெனைக் கேட்கிறார்,
பதில் தர முடியாது அவர் முன்
பரிதவிப் படைவேன்”
என்று தாகூரே சொல்லுகையில், நாம் அதைப் புரிந்து கொள்ளுவதாவது!
கடைசியாக வரும் 103 ஆம் பாடல் கடவுளுக்கு நன்றி நவிலலுடன் முடிகிறது.
மிகச்​ ​சிலவற்றையே எடுத்துக்காட்டியுள்ளேன். ஒவ்வொரு பாடலும் சத்தானதுதான். மொத்தத்தில், ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பு அருமையாக உள்ளது. நம் பாராட்டுகள்!
ஜோதிர்லதா கிரிஜா
சென்னை 600 101
ஜூலை 12, 2008.
​++++++++++++++++++++++++++++++++++++++++++++++++​
தமிழில் கீதாஞ்சலி
=================
அணிந்துரை: கவிதாயினி மதுமிதா
“எவ்வளவுதான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானாலும், நம்பிக்கைக்குரிய பணியாளிடம், தன்னுடைய
காதலியின் முத்தத்தை வாங்கி வரச் சொல்ல இயலாது”
இப்படி கூறியவர் யார் தெரியுமா?
தாகூர்தான்.
எதற்காகத் தெரியுமா?
தன்னுடைய கீதாஞ்சலியினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னொருவரிடம் கொடுக்க நினைப்பது இதனை ஒத்தது என்று தாகூர் கூறியதாய் சிறுவயதில் செவிவழியாய் கேட்ட நினைவு. அப்படியே யாரிடமும் மொழிபெயர்க்க அளிக்காமல் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நோபல் பரிசும் பெற்றார்.
பள்ளிகளில் கீதாஞ்சலியின் ஓரிரு பாடல்கள் வாசிக்கக் கிடைத்தன. நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞனின் பாடல்களை அறியும் விருப்பம் வளர்ந்தது. சில தமிழாக்கங்கள் வாசிக்கக் கிடைத்தன. அந்த வரிசையில் மகுடத்தில் ஒளிரும் ரத்தினமாக இன்று நமது கைகளில் திரு. ஜெயபாரதனின் தமிழ் கீதாஞ்சலி.
கீதாஞ்சலி முழுக்க முழுக்க பாடல்களாக, இசை ஓவியமாக, எழுத எழுத திருப்தி இல்லாததால் தொடர்ந்து படைக்கப்பட்ட இசைக்கான அஞ்சலியாக மலர்வண்ணமாகக் கொட்டிக் கிடக்கிறது. வாசம் நுகரலாம். வண்ணம் காணலாம். அழகை ரசிக்கலாம். அவரவருக்கான பொருள் பெற்றுக் கொள்ளலாம்.
வாழ்க்கை ஆரம்பத்திலிருந்து, பயணத்தின் முடிவுக்கு காத்திருக்கும் வரையிலான விழிப்புணர்வு மிக்க கீதங்கள் இவை. தாகூரின் வாழ்வின் தேசம், மொழி, தேடல், வேதனை, தாக்கம், இன்பம், துன்பம், அன்பு, நட்பு, கருணை, சோதனைக் காலம், ஆற்றாமை, காத்திருப்பு, மாயை, ஆன்மா, மரணம் என அனைத்தும் அவரின் வாழ்வின் அனுபவம் சார்ந்த உணர்வுகளுடன் அளிக்கப்பட்ட பாடல்களாகவே காணப்படுகின்றன.
நான்காம் பாடலில்
‘இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு’ என அவரே சொல்கிறார்.
‘தமஸோமா ஜ்யோதிர் கமய’
இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்.
இது அவர் மனதில் ஆழப் பதிந்து பல பாடல்களில் வெவ்வேறு ரூபமாக வெளிப்படுகிறது.
அப்படியே மரணம் குறித்த பல பாடல்களும் திரும்பத் திரும்ப வருகின்றன.
‘ஏழைகளின் தோழன் நீ’ பாடலில்
‘பாதை காண முடியாத
ஒதுக்குப்புறங்களில்
ஒடுங்கி வரும்
துணையற்ற எளியோரிடம்
கீழே அமுக்கப்பட்ட மக்களிடம்
ஏழை மாந்தரிடம் என்றென்றும்
தோழமை
கொண்டுள்ளாய் நீ’ வரிகளும்,
‘சிறைக்கைதி’ பாடலில்
மெய்வருத்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டிருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெளியிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்
உழைப்பாளி
கூடவே குடியுள்ளான் இறைவன்!
மெய் வருத்திப் பணிசெய்யும்
உழைப்பாளியை
சந்தித்து
நில் அவனருகே நீ,
நெற்றி வியர்வை நிலத்தில்
சிந்தி!
பாடல் வரிகளும் சிறந்தவை. மற்ற பாடல்களை விட இவை சொல்லும் மனிதம் மீதான அன்பின் நுட்பம் நெஞ்சை கொள்ளை கொள்கிறது.
‘எங்கிருந்து வந்ததோ’ என்னும் குழந்தையின் பாடல்கள் நம்மை குழந்தை உலகத்தில் குதூகலிக்கச் செய்திடும் ஆற்றல் மிக்கவை.
இதோ தமிழில் கீதாஞ்சலியை அளித்துள்ளார் திரு.ஜெயபாரதன். அவரின் உழைப்பு போற்றுதலுக்குரியது. தாகூரை இடைவிடாது மனதில் சுமந்து சீரிய முயற்சியுடன் தமிழ் கீதாஞ்சலியினை அர்ப்பணிப்புணர்வுடன் தாகூரின் உள்ளம் தன்னுள் ஏந்தி தமிழில் படைத்தளித்துள்ளார். கீதங்களின் உலகுக்கு தமிழ் வாசகர்களை அழைத்துச் செல்லும் பணியினை சிரத்தையாய் செய்துள்ளார். மென்மேலும் சிறந்த நூல்கள் அவர் படைக்கட்டும். அவர் தம் வாழ்வு பொன்னேட்டில் பொறிக்கப்படட்டும்.
அன்புடன்
மதுமிதா,
தமிழ்நாடு, இந்தியா
10.02.2007
++++++++++++++++++++++++++
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
கவிஞர் புகாரியின் அணிந்துரை
உன்னை அறிந்தவர் எவரும் எனக்கு அன்னியர் ஆகார்…
தமிழ் என்பதொரு கடல். அதில் உலக நதிகள் அத்தனையும் வந்து கலந்திட
வேண்டும். தமிழ்க்கடல் வந்து சேராத ஒரு துளி எழுத்தும் உலகின் எந்த
மூலையிலும் இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் அத்தனை
எழுத்துக்களும் அச்சுமாறாமல் தமிழுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.
தமிழ் என்பதொரு மழை. இந்த மழை பொழியாத எந்த நிலமும் உலகில் எங்கும்
இருத்தல் கூடாது. ஒவ்வொரு மொழியின் காய்ந்த மண்ணிலும் ஈரமாய் தமிழ்
நின்று பொழிந்திட வேண்டும். தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உலகின் அத்தனை
மொழிக்கும் பெயர்க்கப்படவேண்டும்.
இவை செய்பவன் போற்றுதலுக்குரிய தமிழன். அந்தத் தமிழனை தமிழ் தன்
முத்தங்களுக்குள் பொத்தி வைத்துத் தாலாட்டும். அப்படித் தாலாட்டப்படும் சில
நூறு தமிழர்களுள் அறிவியல் சிரிப்போடு ஜெயபாரதனும் இருப்பார்.
கவியோகி இரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர். அவர்
எழுதிய பாடலைத்தான் நமது தேசிய கீதமாய் ஏற்று நூறு+ கோடி மக்களும்
தினமும் மரியாதை செலுத்திப் பாடி வருகிறோம்.
பழம்பெரும் இந்தியப் பண்பாட்டை மேற்குலகக் கருத்துக்களோடு இணைத்து
சிறப்புறச் செய்து பெருமை பெற்றவர் தாகூர். அவரின் கீதாஞ்சலிக்கு ஒரு சிறப்பு
உண்டு. அது தாகூரின் தாய் மொழியான வங்காளத்தில் எழுதப்பட்டு அவராலேயே ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அப்படியான ஒரு
மொழிமாற்றத்திலிருந்து இன்னொரு மொழிமாற்றமாக நம் ஜெயபாரதன்
கீதாஞ்சலியைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
மொழிபெயர்ப்பென்பது எளிதான காரியமல்ல. காலமாற்றம், இடமாற்றம்,
பண்பாட்டுமாற்றம் என்ற பல மாற்றங்களையும் சிதையாமல் அப்படியே
மாற்றப்படும் மொழிக்கு ஏற்றவாறு மீண்டும் செதுக்கித் தரவேண்டும். அப்படி
செதுக்கப்படும் சிலைகள் மீண்டும் உயிருள்ளவையாய் நம்மோடு பேசவும்
வேண்டும். செதுக்கும்போது, ஜீவனின் தலையைச் சீவிவிட்டால் மூலப்படைப்பு
செத்துப் போய்விடும். அது மொழிமாற்ற வந்த எழுத்தாளனுக்கும் இழுக்கு
மூலம்படைத்த கவிஞனுக்கும் அழுக்கு.
ஜெயபாரதனின் மொழியாக்கம் சிறப்பாய் அமைந்திருக்கிறது. அதற்கு முக்கிய
காரணம் அவர் மூலப்படைப்பின் சொல் பொருள் கவிதை நயங்களின்
அலைகளில் அப்படியே சிலிர்த்துப்போயிருக்கிறார். அவை அப்படியே அவர்
இதயத்தில் கூடுகட்டிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளிவந்த
குஞ்சுகள் மூலத்தின் ராகத்தை அப்படியே இயல்பாய் இசைத்திருக்கின்றன.
உதாரணத்திற்காக ஜெயபாரதனின் மொழியாக்க வானத்திலிருந்து ஓரிரு
நட்சத்திரங்களின் ஓரங்களை மட்டும் இங்கே நாம் உரசிப் பார்ப்போம்.
ஆதியில்லாக் காலத்திற்கு அந்தமில்லை
உந்தன் கைகளுக்குள் நகர்வதால்
எந்தன் அதிபதியே
காலச் சக்கரத்தின் சுழற்சி நிமிடங்களை
எண்ணிக் கணிப்பவர் எவருமில்லை
சூட்சும தரிசனங்களின் ஆணிவேர்களைத் துலாவிப் பார்க்கும் இம்மாதிரியான
வெளிச்ச விரல்கள்.
மெய்வருந்தி இறுகிப்போன வயலை
உழவன் எங்கே உழுதுகொண்டு இருக்கிறானோ
வேர்வை சிந்தி நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்
ஆன்மிகத் தேடலின் நிதரிசனங்களாய் உருளும் இம்மாதிரியான மனப்பயணச்
சக்கரங்கள்.
தன் சொந்த வீட்டை வந்தடைய
ஒவ்வோர் அன்னியன் வீட்டுக் கதவையும்
பயணி தட்ட வேண்டியுள்ளது
பிறரிடம் பிச்சை எடுப்பவனே
முதலில் உன் வீட்டு வாசல்
முன்னின்று யாசித்திடு
இயல்பான அசைவுகளால் காற்றில் துடிப்போடு மிதக்கும் இம்மாதிரியான
சிந்தனைச் சிறகுகள்.
குளிரும் மழை வேளைகளில்
அங்குமிங்கும் அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குது என் நெஞ்சு
எப்போது முகம் காட்டுவாய் நீ என் அன்பே
கண்ணிமை கொட்டாது கவலையில் சோர்ந்துபோய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கியவண்ணம்
நிற்கிறேன் விழித்துக்கொண்டு
அழைத்துப் பாடுவது காதலியையா கடவுளையா என்று மயங்கவைக்கும்
இம்மாதிரியான அழகு நயங்கள்.
நான் இசைத்த முந்தைய பாசுரங்கள்
நாக்கில் வரண்டு போனதும்
புதிய கீதங்கள் ஊறிப்
பொங்கி எழுந்தன நெஞ்சில்
பழைய தடங்கள் மறைந்து போன இடத்தில்
புதிய பூமி உதித்தது அதிசயமாய்
அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் நம்பிக்கையின் திசையில்
மனதை நகர்த்தி அந்த அதிசயம் நிகழ்வதே வாழ்க்கையென்று அறிவிப்பதுபோல்
இருக்கும் இம்மாதிரியான முத்திரைச் சித்திரங்கள்.
நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாடநினைத்த கீதம்
இன்றுவரை வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது
வேட்கை மீறி கீதம் வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை
பூரணமாகக் கீதம் பூத்து
விரியவில்லை சீராக இன்னும்
அருகில் பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்
கவியோகி தாகூருக்கும் அதே திருப்தியற்ற நிலைதானா என்று வியக்கவைக்கும்
இம்மாதிரியான முத்துச் சரங்கள்.
இப்படியாய், இந்தத் தொகுப்பு முழுவதும் தாகூரின் கவிதைகள் ஜெயபாரதனின்
மொட்டிலிருந்து பூத்தவைபோல் பூத்திருக்கின்றன. மொழிபெயர்ப்புதானா என்று
வியக்க வைக்கும் வண்ணம் குற்றால அருவிகளாய்க் கொட்டுகின்றன.
தாகூரின் எண்ண நுணுக்கங்களை அப்படியே நுணுங்காமல் தருவதிலும், பரந்து
விரிந்த தாகூரின் ஆன்மிக இதயத்தை அப்படியே தமிழ்த் தாம்பூலத்தில் ஏந்தித்
தருவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயபாரதன்.
இணையம்தான் ஜெயபாரதனை எனக்கு அறிமுகம் செய்தது.
இணையவலை பிரித்துக் கொரித்துக்கொண்டிருந்த ஓர் மதியப் பொழுது
ஜெயபாரதனின் கட்டுரை ஒன்றை என் கண்களுக்குள் இழுத்து வந்தது. அது ஓர்
அறிவியல் கட்டுரை. நீளம் அகலம் ஆழம் என்று எல்லா திசைகளிலும்
அடர்த்தியாய் இருந்த அந்தக் கட்டுரை என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அறிவியல் கட்டுரை எழுதுவோர் ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க இயலாமல்
திண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அக்கட்டுரையோ மிக இயல்பான
அழகு தமிழில், ஒவ்வொரு கலைச் சொல்லுக்கும் எளிதான தரமான தமிழ்ச்சொல்
இட்டு, எண்ணத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சியைப்போல சட்டென
ஏறிக்கொள்ளும் வண்ணமாய், பல புகைப்படங்களால் சூழப்பெற்று ஒரு காட்சி
வர்ணனையைப் போல ஆக்கப்பட்டிருந்தது.
இன்று கனடாவில் வாழும் ஜெயபாரதன், 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித்
துறையகத்திலும் 17 ஆண்டுகள் கனடிய அணுசக்தித் துறையகத்திலும்
பணியாற்றிவிட்டு இப்போது முழு ஓய்வில் இருக்கிறார். “ஆக்க வினைகளுக்கு
அணுசக்தி” என்னும் இவரது முதல் புத்தகத்துக்கு சென்னை பல்கலைக் கழகம்
மாநில முதற் பரிசை அளித்துள்ளது.
கடந்த கோடை விடுமுறையில் என் குடும்பத்தோடு இவர் இல்லம் சென்றேன்.
நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருந்தவை புத்தகங்கள் புத்தகங்கள்
புத்தகங்கள். நடந்தால் புத்தகம் நிமிர்ந்தால் புத்தகம் அமர்ந்தால் புத்தகம் என்று
புத்தகங்களுக்குள் புதைந்து கிடந்தார் ஜெயபாரதன்.
தன் இரு மகள்களையும் கனேடியர்களுக்கு மணமுடித்துக் கொடுத்து பேரப்
பிள்ளைகளோடு குதூகலமாய் வாழும் இவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்கும்
ஒருவரால் இவரை ஓய்வு பெற்று வாழும் ஒருவராகக் காண்பது கடினம். நேற்றே
மீசை முளைத்த துடிப்பான இளைஞரைப் போல சுறுசுறுப்பாய்ச் செயலாற்றி
வருகிறார்.
தமிழறிவும் அதற்கு இணையான ஆங்கில அறிவும் மட்டுமல்லாமல் கவிதை
ரசிப்பும் ஆன்மிகத் தேடலும் ஜெயபாரதனின் விரல்களை கீதாஞ்சலி மொழியாக்கத்
தளத்தில் உறுதியானவையாக ஆக்கி உலவ விட்டிருக்கின்றன.
தாகூரின் கீதாஞ்சலியை நான் இப்போதுதான் முழுவதுமாக வாசிக்கிறேன்.
ஜெயபாரதனின் தமிழ் உள்ளத்தால் அது என் கூரையைப் பொத்துக்கொண்டு
கொட்டி இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தவன் நன்றி கூறுகிறேன். என்னைப்போல்
பலரும் நிச்சயம் நன்றி கூறுவர்.
தாகூர் கவிதை எழுதவில்லை. கவிதைகள் தாகூரை எழுதி இருக்கின்றன.
தன்னுள்ளம் எதுவென்று பாடுகிறாரா, தன் காதலியிடம் ஏங்குகிறாரா அல்லது
கடவுளிடம் தவிக்கிறாரா என்ற பொதுநிலைப்பாடு கீதாஞ்சலியின் வெற்றி.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கு ஆன்மிகப்பற்றும் அற்புத வழிதரும்
என்பதற்குச் சான்றுகளாய் இத்தொகுப்பெங்கும் பல பாடல்கள்.
ஒவ்வொரு மொழி மாற்றத்தின்போதும் ஏதோ ஒரு வகையில் மூலம்
சிதைவடைவது இயல்புதான். இருந்தும், ஆங்லத்துக்கு மொழிமாற்றப்பட்ட
தாகூரின் வங்காளக் கவிதைகளை நம் தமிழ்க் கடற்கரைகளில் சூரியனைத்
தொட்டுப் பறக்கும் பட்டங்களாய் பறக்கவிட்டிருக்கிறார் ஜெயபாரதன்.
தாகூரின் சொற்களில் சிறு சிதறலுமின்றி லயித்திருந்தால்தான், தாகூரின்
கருத்தோட்டங்களோடு செம்புலப்பெயல் நீரென ஒன்றிப்போயிருந்தால்தான், இப்படி ஓர் அழகான அச்சுமாறாத இரட்டைக் குழந்தைகளில் இரண்டாம் குழந்தையைப் பெற்றெடுத்த இன்னொரு தாயைப்போல் நிறைவோடு நிற்கமுடியும் ஜெயபாரதனால்.
பிறமொழிச் செழுமைகளை தன் இதய இழைகளால் தாவிப்பிடித்து தமிழ்
வாழையில் விருந்துவைக்கும் ஜெயபாரதனின் பணி போற்றுதலுக்குரியது.
இனியெல்லாம் ஜெயபாரதனைக் காணும்போது அவரிடம் தாகூரின் நிழல் முகம்
தெரிந்தால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.
அன்புடன்
புகாரி
டொராண்டோ, கனடா

தமிழ் இனி மெல்ல..[3.7] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல..[3.6] சென்ற பதிவின் இறுதியில் 
இராஜேந்திரனுக்குப் பயந்து எங்கு ஓட முடியும்! தெற்கே பெருங்கடலைத் தவிர வேறு என்ன இருக்கிறது! நாற்பத்தேழு வயதிலும் கட்டிளங்காளையாகத்தான் தென்பட்டான் இராஜேந்திரன். அவனது மகன் இராஜாதிராஜன் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி விட்டான் என்று சோழக் காவலர்கள் பேசியதிலிருந்து அறிந்து கொண்டான்...

...இலங்கையையும் இழந்து, இப்பொழுது குடும்பத்துடன் சோழர்களின் கைதிகள் ஆனதுதான் மிச்சம் என்று நினைக்கிறான் மகிந்தன். ஆளரவம் கேட்கிறது. மூன்று வீரர்களுடன் ஒரு சோழ அதிகாரி வருகிறான். அவர்களைப் பூட்டி வைத்திருந்த கதவு திறக்கப்படுகிறது. அறைக்குள்ளிருந்து வரும் கெட்ட வாடையின் தாக்குதலால் மூக்கைச் சுளித்த அவன், தன்னுடன் வந்தவனிடம் ஏதோ கோபமாகக் கத்துகிறான். அவனருகில் இருந்த வீரன் பணிவுடன் தலையாட்டியவாறே ஓடுகிறான்.

 “நான் சோழநாட்டின் இலங்கைப் பகுதி ஓலைநாயகம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் சோழநாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, அந்தக் குற்றத்தை விசாரிக்க தஞ்சைக்கு அழைத்து வரும்படி கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவரின் ஆணை. உமது மனைவியார் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த இடத்தை சுத்தம் செய்ய ஆள் வந்து சேரும். உமது மனைவியாரின் உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறோம். விரைவில் வந்து விடுவார் நாளை பயணம் துவங்கும். ஏதாவது கேட்க வேண்டுமா?” சுருக்கமான குரலில் அறிவிக்கிறான் அந்தச் சோழ அதிகாரி.

“எமது தளபதிகள், அதிகாரிகள்?”

“சோழ நாட்டின் அமைதியைக் குலைத்ததற்காகவும், அளவில்லாப் பொருட்சேதம் ஏற்படுத்தியதற்காகவும், அவர்களுக்கு கொடுத்த மரணதண்டனை இன்று காலைதான் நிறைவேற்றப்பட்டது.”
தமிழ் இனி மெல்ல..[3.7] தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 


                                                 அத்தியாயம் 6
                           ஜெயங்கொண்ட சோழபுரம்
                        காளயுக்தி, சித்திரை 8 - ஏப்ரல் 21, 1018
கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப் படுகின்றன. தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப் படுகின்றன. இறைவனடிமைகள் தங்கள் ஆடலால் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரே மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் களித்துக் கொண்டிருக்கிறது.

பெரிதாகப் போடப்பட்ட தென்னங்கீற்றுப் பந்தலில் மெல்லிய வெள்ளைத் துணிகளால் கூரையின் உள்பக்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. மலர்ந்த தாமரைகளைப் போன்ற விதானங்கள், மயில்கள், சுற்றிப் பிணைந்திருக்கும் திராட்சைக் கொடிகள், அன்னங்கள், இவ்வாறு பலவிதமான ஓவியங்களால் ஆங்காங்கு அந்த வெள்ளைத் துணியில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. விதானங்களின் மையத்திலிருந்து அலங்காரமாகப் பட்டுக் குஞ்சங்கள் தொங்குகின்றன. துணியின் ஓரங்களில் பலவித வண்ணங்களில் கரைகள் கட்டப் பட்டிருக்கின்றன. கம்பங்கள் தோறும் தொம்பைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. கம்பங்களிலும் பலவண்ணத் துணிகள் சுற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் மலர்ச் சரங்கள் சுற்றப்பட்டு எங்கும் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது.

கொள்ளிடத்திலிருந்து கொண்டுவரப்பட்டுத் தூவப்பட்ட மணல் மீது மெல்லிய கோரைப் பாய்கள் அமருவதற்காக விரிக்கப் பட்டிருக்கின்றன. கிழக்கே ஒண்ணரை கல் தொலைவில் இருக்கும் ஒரு ஏரியிலிருந்து குளிர்ந்த நீர் கொணரப்பட்டு ஆங்காங்கு பளபளக்கும் மண்பானைச் சால்களில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சால்களுக்கு அருகிலேயே மரமணைகளில் குடிநீர்க்குவளைகள் உள்ளன. நடுவே பெரிய மேடை அமைக்கப்பட்டு அதில் அரியாசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. நடுவில் இருவர் அமரக்கூடிய பெரிய சிம்மாசனம் இருக்கிறது. இலங்கையிலிருந்து கொண்டுவந்த பாண்டியர்களின் பரம்பரைச் சிம்மாசனம் அது. அது மட்டும் காலியாக இருக்கிறது.

அதற்கருகில் இன்னொரு பெரிய சிம்மாசனத்தில் இராஜேந்திரனும், திரிபுவனமாதேவியும் அமர்ந்திருக்கிறார்கள். மற்ற அரியாசனங்களில் இராஜேந்திரனின் மற்ற மனைவியர்களும், இராஜேந்திரதேவன், வீர(ராஜேந்திரன்), அம்மங்கை, மற்றும் பின் வரிசைகளில் சேதுராயர், முத்தரையர், அமைச்சர்கள், சிவாச்சாரி, அருள்மொழிநங்கை, இன்னும் பலர் அமர்ந்திருக்கிறார்கள்.

மேடைக்குக் கீழே வேள்விக் குண்டங்களில் பெரிய வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அவற்றுக்கு நடுநாயகமாக விளங்கிய வேள்விக் குண்டத்தின் அருகில் இராஜாதிராஜனும், அவனது மனைவி மூவுலக மகாதேவியும் (திரிலோக்கிய மகாதேவி) வேதியர் சொற்படி நெய்யை வேள்வித் தீயில் இட்டுக் கொண்டிருக்கின்றனர். வேள்வி முடிந்ததும், வேதியர் புடைசூழ, காவலர் வெற்றிக்குடை பிடிக்க, அரசகுரு வேள்வியால் சிறப்பிக்கப்பட்ட மகுடத்தை ஏந்தி வர, இராஜாதிராஜனும் அவனது மனைவியும், மேடைப் படியில் ஏறுகிறார்கள். இராஜேந்திரன் எழுந்து, தன் மகனுக்கு கைலாகு கொடுத்து பாண்டியரின் பரம்பரை அரியாசனத்தில் அமர்த்தி வைக்கிறான். இராஜாதிராஜன் நீட்டிய கையைப் பற்றி, அவனருகில் அமர்ந்து கொள்கிறாள் அவளது பட்டத்து அரசியான மூவுலக மகாதேவி.

 வேதியர் மந்திரங்களை முழக்கி முடித்ததும், அரசகுரு மகுடத்தை எடுத்து இராஜேந்திரனின் கையில் கொடுக்கிறார். அதைத் தொட்டு ஆசி நல்கிய இராஜேந்திரன், அவரிடமே அம்மகுடத்தைத் திருப்பி அளிக்கிறான். அரசகுரு மகுடத்தை இராஜாதிராஜனுக்கு அணிவிக்கிறார். அடுத்தபடியாக ஒரு செங்கோல் அவனுக்கு வழங்கப்படுகிறது. அனைவரும் மலர்மாரி பெய்கின்றனர். இராஜாதிராஜனின் தலைக்கு மேலிருக்கும் ஒரு மலர் மூட்டை அவிழ்ந்து அவன்மீதும், அவனது மனைவி மீதும் பூமாரி பெய்கிறது.

எங்கும் கெட்டி மேளம் இடைவிடாது முழங்குகிறது.

“சோழப் பட்டத்து இளவரசர் இராஜாதிராஜர் வாழி! ஈழத்திலிருந்து பாண்டியர் சிங்காதனத்தைக் கொணர்ந்து அதில் அரசேறிய மன்னர் வாழி! விஜய இராஜாதிராஜ சோழர் பல்லாண்டு வாழிய வாழியவே!” என்று மக்கள் அனைவரும் உரக்க வாழ்த்துகின்றனர்.

சோழப் பட்டத்து இளவரசாகத் தனது இருபத்திமூன்றாம் வயதிலேயே பொறுப்பேற்கிறான் இராஜாதிராஜன்.

சோழப் பேரரசனாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே தன் மூத்த மகன்தான் சோழப் பேரரசின் வாரிசு என்று தந்தை இராஜேந்திரன் முடிவு செய்து விட்டதுதான் அவனுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

ஏற்கனவே இதுபற்றித் தந்தையிடம் கேட்ட பொழுது இராஜேந்திரன் சிரித்துக் கொண்டே அவனுக்குச் சொன்ன பதில் இதுதான்:
“எனது தந்தையார், அதாவது உனது பாட்டனார் இராஜராஜர் எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய போது எனக்கு வயது நாற்பத்திமூன்று. தந்தையார் என்னை அத்தனை காலம் அரசு உரிமை இல்லாமல்தான் வைத்திருந்தார். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, அவருக்குத் தெரியாமல் நான் காதல் கடிமணம் புரிந்து கொண்டது. பொறுப்பற்ற முறையில் நான் செயல்பட்டேன் என்ற சினம் அவருக்கு. ஒரு பேரரசை நிர்வகிக்கும் திறமை உள்ளவன் இவ்வாறு செய்யக்கூடாது, அதுவும் முதல் திருமணம் யாருக்கும் தெரியாமல் நடக்கக்கூடாது என்று நினைத்தார், எனவே அவர் மனது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது.

“சேதுராயர் மகளை நான் விரும்பியதையோ, அவளை மணம் செய்து கொள்வதையோ அவர் ஒரு குற்றமாகக் கருதவில்லை. அவருக்கு அந்தச் செய்தி தெரிந்திருந்தால், தக்க தருணத்தில் அவளை எனக்கு மணமுடித்து வைத்திருப்பேன் என்றுதான் சொன்னார். எனினும் சேதுராயரின் மகள் சோழநாட்டின் பட்டத்து ராணியாக வருவதையும் அவர் விரும்பவில்லை. எந்த ஒரு அரசனின் முதல் திருமணமும் நாட்டின் நலத்தைப் பெருக்குவதாகவோ, விரிவாக்கிப் பலமாக்கும் விதமாகவோதான் நடக்கவேண்டும் என்று விரும்பினார். எனவே, நான் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்கிறேன் என்று கண்காணித்து வந்தார். அவர் மனநிறைவு அடையும் வரை எனக்கு இளவரசுப் பட்டத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

“இரண்டாவது காரணம், பல அரசு விஷயங்களில் நானும், அவரும் ஒரே நோக்குடன் செயல்படவில்லை. எந்த ஒரு திட்டத்தைப் பற்றி விவாதித்தாலும், அவரின் அணுகுமுறையும், எனது அணுகுமுறையும் வெவ்வேறாகவே இருந்தன. தந்தை எதையும் நன்கு சிந்தித்து - சில சமயம் ஆறப் போட்டுதான் முடிவெடுப்பார். நானோ உடனுக்குடன் செயல்பட விரும்புவேன். எனக்கு இளவரசுப் பட்டம் வழங்கினால் அவரின் அணுகுமுறைக்கு எதிர்மாறாக நான் தன்னிச்சையாக செயல்படுவதைத் தடுக்க இயலாமல் போய்விடுமோ என்ற ஐயமும் அவருக்குச் சிறிது இருந்து வந்தது.

“எத்தனையோ போர்களில் தந்தையாருக்கும், சோழநாட்டிற்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தேன். தமிழ்நாடு மட்டுமன்றி, கருநாட்டிலும், ஆந்திரத்திலும், கீழைச் சாளுக்கிய நாட்டிலும், இலங்கையிலும் புலிக் கொடியைப் பறக்கவிட்டேன். நான் படையுடன் வருகிறேன் என்றாலே புலியைக் கண்ட மான்கூட்டமாக எதிரிகள் சிதறி ஓடும் அளவுக்கு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டினேன். அது தந்தைக்கு என் திறமையில் நம்பிக்கையையும், மரியாதையையும் கூட்டியது. படைத் தலைவர்களும், அமைச்சர்களும், ஏனைய அதிகாரிகளும் பட்டம் சூட்டப்படாமல் இருந்தாலும் கூட என்னைச் சோழப் பேரரசின் இளவரசனாகவே மரியாதை கொடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.

“கடைசியில் தந்தையாருக்குத் தமிழ் திருப்பணி மீது நாட்டம் வந்ததும் கருவூர்த் தேவர் அரசுரிமையை என்னிடம் ஒப்படைக்கும்படி தந்தையாருக்கு ஆணையிட்டார். அப்படி அவர் ஆணையிடாது போயிருந்தால்...” அப்பொழுது இராஜேந்திரன் சிரித்த சிரிப்பில் சிறிது கசப்பும் கலந்து இருந்ததை இராஜாதிராஜனால் உணர முடிந்தது.

அப்பொழுதே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன், எவ்வளவு விரைவில் உனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிவிட இயலுமோ, அவ்வளவு விரைவிலேயே உனக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று. காரணம், எனக்குச் சோழப் பேரரசைப் பற்றிப் பெரிய கனவொன்று இருக்கிறது. வரலாறு என்னைத் திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜரின் மகன் என்று மட்டுமல்லாமல், என்னுடைய சாதனைகளுக்காக மட்டுமே என்னைச் சிறந்த சோழநாட்டுத் தமிழனாக போற்றி வரவேண்டும் - அதை நிறைவேற்ற வேண்டுமென்றால் என்னைப் போல நினைத்துச் செயல்படும் மகன் ஒருவன் என்னுடன் இணைந்து துணை நிற்கவேண்டும் என்றுதான்.

“அதற்குத் தகுந்தாற்போல் நீயும் உன் கன்னிப் போரிலேயே தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினாய்! தமிழ்நாட்டிலும், என் தந்தையாரிடத்தும் உன் மதிப்பை உயர்த்திக் கொண்டாய்! எனவே, எனக்கு அரசுப் பட்டம் கிட்டும் முன்னரே இந்த முடிவை நான் எடுத்து விட்டேன். என் கனவு நிறைவேற நீதான் எனக்கு வலது கையாக விளங்க வேண்டும்!” என்று இராஜேந்திரன் கேட்டதும் இராஜாதிராஜனின் மனம் உருகிவிட்டது...

…“அப்படியே செய்வேன் தந்தையே! உங்கள் கனவு நிறைவேற என் உயிரையும் கொடுப்பேன்.” என்று தான் உறுதிமொழி அளித்ததும், இராஜேந்திரன் தன்னை ஆரத் தழுவிக் கொண்டு ஆசி அளித்ததும் நினைவுக்கு வருகிறது.

“நீதான் அதைச் செய்ய ஆரம்பித்து விட்டாயே, இராஜாதிராஜா! பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தை என்று எனக்குக் காணிக்கையாக அளித்தாயோ, அன்றே அந்த அரியாசனத்திலேயே உன்னை இளவரசனாகப் பட்டம் சூட்டவேண்டும் என்ற முடிவையும் எடுத்து விட்டேன்!” என்று தன் தந்தை பெருமையுடன் கூறியதும் அவன் கண்முன் ஓடுகிறது. அதை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. கண் இலேசாகக் கலங்குகிறது.

“நெய்ப் புகை உங்கள் கண்ணில் எரிச்சலை மூட்டுகிறதா?” என்று மெல்லக் கேட்கிறாள் மூவுலகமகாதேவி.

“இல்லை தேவி இல்லை. இது ஆனந்தக் கண்ணீர்!” என்று பதிலளிக்கிறான் இராஜாதிராஜன். அவன் கையை அன்புடன் மெல்ல அழுத்துகிறாள் அவள்.
* * *
                                              ஜெயங்கொண்ட சோழபுரம்
                              காளயுக்தி, சித்திரை 28 - மே 13, 1018
கைதியாக இழுத்து வரப்படுகிறான் இலங்கை மன்னன் மகிந்தன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகச் சிறையில் அடைக்கப் பட்டிருந்ததால் பொலிவிழந்து காணப்படுகிறான். மணிமகுடமும், அரசனுக்குரிய அணிகலன்கள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரணக் கைதியாகவே சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிற்கிறான்.

அரசவையில் இராஜேந்திரன் தனது அமைச்சர்கள், மற்ற முக்கிய அதிகாரிகளுடன் கொலு வீற்றிருக்கிறான். மகிந்தன் வந்து நின்றதும் அரசவையில் ஒருவிதமான அமைதி நிலவுகிறது.

அரசு அதிகாரி ஒருவன் உரத்த குரலில் அறிவிக்கிறான், “சோழநாட்டின் அமைதிக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், வணிக நாவாய்கள் எழுபத்தைந்தை வழிமறித்துக் கொள்ளையடித்து, அவற்றை முழுகடித்ததற்காகவும், சோழ நாட்டின் நிழலில் கப்பம் கட்டி வாழும் பாண்டியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களது பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வந்து அவர்களைச் சோழர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியதற்காகவும், இலங்கைவாழ் தமிழர்களைத் தேவையின்றித் துன்புறுத்தியதற்காகவும், அவர்கள் சொத்துகளைச் சூரையாடியதற்காகவும், சோழநாட்டுத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு கோப்பரகேசரி இராஜேந்திர சோழதேவர் முன் இலங்கை மன்னர் மகிந்தர் நிறுத்தப்பட்டிருக்கிறார்!”

கையை உயர்த்தி அவையில் எழும் ஆரவாரத்தைக் கட்டுக்குள் கொணர்கிறான் இராஜேந்திரன்.

“சோழநாட்டுத் தரப்பில் வாதாட திருமந்திர ஓலைநாயகத்தை அழைக்கிறோம்!” என்று அறிவித்த இராஜேந்திரன், “மகிந்தரே, உமது தரப்பில் வாதாட யாராவது இருக்கிறீர்களா?” என்று வினவவும் செய்கிறான். அதை அவனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார் ஒரு சோழ மொழிபெயர்ப்பாளர்.

இல்லை என்று தலையாட்டுகிறான் மகிந்தன்.

“யாராவது இலங்கை மன்னருக்காக வாதாட முன் வருகிறார்களா?” என்று அவையை வினவுகிறான் இராஜேந்திரன்.

அரசவையில் மரணஅமைதி நிலவுகிறது.

“இந்தச் சோழ அவையில் என்பக்கம் பேச யாராவது இருப்பார்களா? இது ஒரு நாடகம்தானே! என் நாட்டை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டீர்கள். இப்பொழுது கண்ணீர் துடைப்பாக இந்த விசாரணையையும் நடத்துகிறீர்கள். செய்யுங்கள். ஆயிரம் ஆண்டுகள் கழித்தாவது இதற்கு நாங்கள் பழி தீர்த்துக் கொள்வோம்!” என்று சீறுகிறான் மகிந்தன். இதுவும் அரசவைக்கு தமிழில் மொழி பெயர்க்கப் படுகிறது.

இராஜேந்திரனின் முகத்தில் சீற்றம் தோன்றி மறைகிறது. பின்னர் கடகடவென்று நகைக்கிறான் அவன்.

“மன்னர் மகிந்தரே! கன்றுக் குட்டியைக் கொன்றதற்காகத் தன் மகனையே தேர் ஓட்டிக் கொன்ற மனுநீதிச் சோழன் வழிவந்தவர்கள் நாங்கள். நாங்கள் குற்றம் சாட்டியிருக்கிறோம். உம் சார்பாக வாதாட எவரும் முன்வராததால் நாமே ஒருவரை நியமிக்கிறோம். எமது வழித்தோன்றலும், சோழநாட்டு பட்டத்து இளவரசுமான இராஜாதிராஜனையே உம் தரப்பில் வாதாடுமாறு பணிக்கிறோம். இதன் மூலம் சோழநாட்டில் கண்துடைப்பாக எதையும் செய்ய மாட்டோம் என்று அறிந்து கொள்வீராக!” என்று இராஜேந்திரன் அறிவித்தும் அரசவையில் “ஆ!” என்ற உரத்த ஒலி எழுகிறது.

மகிந்தனே இராஜேந்திரனிடமிருந்து இப்படி ஒரு முடிவு வரும் என்று கனவிலகூட நினைக்கவில்லை. அவனுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதேசமயம் ஒரு அவநம்பிக்கையும் தொடர்கிறது. பதினாயிரக்கணக்கான வீரர்களைக் களபலி கொடுத்த இராஜாதிராஜன் முழுமனதுடன் தன் பக்கம் எப்படி வாதாடுவான் என்றும் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குத் தன்னைப் பற்றி என்ன தெரியும், யானைப் படைகொண்டு சிங்களப் படைவீரரைச் சிதறடித்த அவன் தன்னைப் பற்றி என்ன நல்வார்த்தைகள் கூறப் போகிறான் என்று சிந்திக்கிறான். இளவரசனே தன்பக்கம் வாதாடும் பொழுது திருமந்திர ஓலைநாயகத்தின் சொல் எப்படி எடுபடும் என்றும் எண்ணுகிறான்.

“அரசே, சோழ இளவரசனாக இருந்துகொண்டு சோழநாட்டிற்கு எதிராக என்னால் எப்படி வாதாட இயலும்? அப்படி நான் வாதாடுவது சோழநாட்டிற்கு நான் இழைக்கும் துரோகம் ஆகாதா? இப்படி ஒரு இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமைக்கு என்னைத் தாங்கள் ஆளாக்குவது முறையா? என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கலாகாதா?” என்று இராஜேந்திரனைப் பணிவாகக் கேட்டுக் கொள்கிறான்.

“ஒரு மன்னனாகப் போகிறவனுக்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தில் அணுகத் தெரிந்திருக்கவேண்டும்! அப்பொழுதுதான் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்க இயலும். நீ மற்றவர்களின் கண்ணோட்டம் அறிந்தவன் என்பதை இந்த அரசவைக்குக் காட்ட இது உனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. எனவே, சோழநாட்டைப் பிற்காலத்தில் நீ எப்படி நடத்திச் செல்லப் போகிறாய் என்பதை இது காட்டுமே தவிர, யாரும் உன்னை ஒரு நாட்டுத் துரோகியாகக் காண வைக்காது. எனவே நீ வாதாடு! வாதாடுவதும் ஒரு சொற்போர்தானே! நீ சோழ நாட்டுக்கு எதிராக வாதாட வேண்டியதில்லை! இலங்கை மன்னருக்காக வாதாட வேண்டும், அதுவும் முழு மனதுடன் வாதாட வேண்டும் என்று யாம் பணிக்கிறோம்!” இராஜேந்திரனின் குரலில் தனது முடிவு மாற்றிக் கொள்ளப்பட மாட்டாது என்ற உறுதி தொனிக்கிறது.

தனது அரியணையில் இருந்து வேண்டாவெறுப்புடன் எழுந்து, அருகிலிருக்கும் முக்காலியில் தனது மணிமுடியையும், உடைவாளையும் கழட்டி வைக்கிறான் இராஜாதிராஜன்.

“சோழநாட்டின் மணிமுடியை அணிந்து கொண்டு என்னால் இலங்கை மன்னர் தரப்பில் வாதாட இயலாது! எனவே இவ்வழக்கு முடிந்து கோப்பரகேசரியார் தீர்ப்பளிக்கும்வரை நான் மணிமுடி இல்லாமல் இருக்க அனுமதி வழங்கக் கோருகிறேன்!” என்று கேட்டதும், இராஜேந்திரன் தலையசைத்துத் தன் அனுமதியை வழங்குகிறான்.

இராஜாதிராஜன் மெல்ல மகிந்தன் அருகில் சென்று இராஜேந்திரனை நோக்கி அறிவிக்கிறான்.

“அரசே! முதலாக இலங்கை மன்னர் சார்பில் நான் தங்களுக்கு விடுவிக்கும் கோரிக்கை இதுதான்! மகிந்தர் ஒரு அரசர். என்னதான் குற்றம் சாட்டப் பட்டிருந்தாலும் தீர்ப்பளிக்கும் வரை அவரை நாம் ஒரு அரசராகத்தான் நடத்த வேண்டும். அவர் அமர்ந்துகொள்ள ஒரு இருக்கையை அளிக்குமாறும், அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்க்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது குற்றம்தான் சாட்டப் பட்டிருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கவில்லை!”

அதிர்ந்து போகிறான் மகிந்தன். எடுத்த எடுப்பிலேயே தான் செய்யப் போகும் வேலையைச் சரியாகச் செய்யப் போவதை அவனுக்கு உணர்த்தி விட்டானே அவன்! நம்பிக்கை துளிர்விடுகிறது அவனுக்கு.
“ஓலைநாயகத்திற்கு இதில் மறுப்பு ஏதாவது இருக்கிறதா?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

இல்லையெனத் தலையசைக்கிறான் சிவாச்சாரி. இராஜேந்திரன் கையசைக்கவே, ஒரு இருக்கை கொண்டு வரப்படுகிறது. மகிந்தன் அருகே இருந்த காவலன் ஒருவன் அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து எடுக்கிறான்.

இருக்கையில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து கொண்ட அவனை நோக்கி, “நீர் இலங்கை மன்னர்தான்! இருந்தாலும் கோப்பரகேசரியார் முன்னர் இப்படி அமர யாருக்கும் அனுமதி இல்லை! இருகால்களையும் தொங்கவிட்டு அமர்ந்து கொல்லும்!” என்று உத்தரவிடும் தொனியில் எச்சரிக்கிறான் இராஜாதிராஜன்.

அவன் சொல்வதைப் புரிந்து கொண்ட மகிந்தன் சரியாக அமர்ந்து கொள்கிறான். அவன் தனக்காக வாதாடுவானே தவிர, வேறு எந்த சலுகையையும் தரமாட்டான் என்றும் அறிந்து கொள்கிறான்.

சிவாச்சாரி தன் இருக்கையை விட்டுக் கீழிறங்கி வருகிறான்.

“கோப்பரகேசரி அவர்களே! தாங்கள் அறியாததை நான் அரசவையில் கூறவரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மன்னர் அவர் விருப்பப்படி ரோகணத்தை ஆண்டு வந்திருக்கிறார். நாம் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்திருக்கிறோம். சோழநாட்டின் அமைதியைக் குலைப்பதற்கென்றே இலங்கை மன்னர் நமக்குத் திரை செலுத்தி வந்த பாண்டிய மன்னரை நமக்கு எதிராகச் செயல்படுத்தி வந்திருக்கிறார். மேலும்...” என்று மகிந்தன் மீது ஒன்றொன்றாகக் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறான்.

“இலங்கை மன்னர் தரப்பில் பேசப் போகும் சோழ இளவரசரே இதை நன்றாக அறிவார். இலங்கை மன்னர் பாண்டிய மன்னரின் பரம்பரைச் சொத்தை அங்கு வைத்திருக்க உதவி செய்திருக்கிறார். அங்கு இருந்து வந்த ஐயாயிரம் பாண்டிய வீரர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்து சோழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். இதனால் சோழவீரர்கள் பத்தாயிரம் பேர்களுக்கு மேல் உயிரிழக்க நேரிட்டது.” கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக மகிந்தன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறான் சிவாச்சாரி.[வளரும் ]

Monday, 6 October 2014

தமிழ் இனி மெல்ல.. [ 3:6 ]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல.. [ 3:5  ]    சென்ற பதிவின் தொடர்ச்சி 
நூறடி விட்டமும், இருபத்தைந்தடி ஆழமும் உள்ள ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதற்குச் செல்ல சிக்கலான ஒரு வழி அமைத்தான். அந்தப் பள்ளத்திற்கு கருங்கற்களால் சுவர்களும், தரையும், மேல் தளமும் கட்டி, நடுவில் பதினைந்தடி அகலத்தில் ஆறு பட்டை உள்ள ஒரு அறை கட்டி, அந்த அறையில் பாண்டியப் பொக்கிஷங்களை வைத்து மறைத்தான். ஓரொரு பட்டையிலும் வெளியே செல்ல சுரங்க வழிகள் அமைத்தான். அந்த அறையில் மேல் தளத்தில் ஒரு சிறிய சிவன் கோவில் அமைக்கப்பட்டது. பொக்கிஷ அறை கீழே இருப்பது தெரியா வண்ணம்.

அந்தச் சுரங்கப் பாதைகள் ஒன்றை ஒன்று மூன்று முறை சுற்றி வந்து பிறகு தனித் தனியாக வெவ்வெறு திசையில் பிரிந்து சென்றன. சில வழிகள் ஒன்றோடு ஒன்று பதினைந்து அடிக்குப் பதினைந்து அடி அகலமான அறைகளில் சந்தித்தன. கடைசியில் இரண்டே வழிகள் வெளியில் வந்தன. ஒன்று முருகேசனின் குடிசைக்கும், இன்னொன்று, ஒரு சிறிய மண்டபத்தின் இரகசிய அறைக்கும் சென்றன. வழி தெரியாதவர் சுரங்கப் பாதையில் நுழைந்தால் வழி தவறித் திண்டாட வேண்டும் என்றே குழப்பான வகையில் அவை கட்டிப்பட்டிருந்தன.

சுரங்கப் பாதையும், ஒருவர் செல்லும் அளவுக்கே இருந்தபடியால் உள்ளே வருபவர் எவராக இருந்தாலும், சுரங்கப் பாதைகள் சந்திக்கும் அறையில் தாக்கிக் கொல்லப்படுவது எளிது. அது மட்டுமன்றி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு காவலாக நின்று விட்டால், அவர்களைத் தாக்கிக் கொன்று கீழே வீழ்த்தினால்தான் மேலே செல்ல இயலும். கடைசியில் அவர்கள் மேலே செல்ல இயலாதவாறு வழியும் அடைக்கப்பட்டு விட ஏதுவாகும். எனவே, நூற்றுக்கும் குறைவான வீரர்களே கடைசி நிலையில் பொக்கிஷத்தை நன்கு காவல் காக்க முடியும்.

இந்த அமைப்பைக் கட்டி முடிக்க பதிமூன்று மாதங்கள் ஆயிற்று. விக்கிரம பாண்டியன் ஆறு மாதங்கள் முன்பு வந்து பார்த்து விட்டு, முருகேசனைப் பாராட்டி விட்டுச் சென்றிருந்தான். அப்பொழுது அவன் முகத்தில் கவலைக் கோடுகள் நிறைய இருந்ததைப் பார்த்துக் கவலையுற்ற முருகேசன் அவனிடம் விசாரித்த போது சுரத்தில்லாமல்தான் பதிலளித்தான் விக்கிரமன்.

“முருகேசா, இராஜேந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து வரத் தீர்மானித்து விட்டான். கிட்டத்தட்ட முந்நூறு நாவாய்கள் ரோகணத்தைச் சுற்று வளைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொண்டித் துறைமுகம் நமது கைவிட்டுப் போய் விட்டது. தொண்டிக்கு நான்கு கல் தூரத்திற்கு முன்னரே அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இப்பொழுது கொற்கைதான் நமது கைவசம் இருக்கிறது. அதை முதலில் கைப்பற்ற இராஜேந்திரன் திட்டம் தீட்டியே நாவாய்களை அமைத்து வருகிறான் என்று ஒற்று கூறுகிறது.

“கொற்கை பிடிபட்டால் பாண்டி நாட்டிலிருந்து இலங்கை வருவது குதிரைக் கொம்பாகி விடும். சேரத் துறைமுகமான விழிஞத்திலிருந்துதான் வர இயலும். எனவே இராஜேந்திரன் கொற்கையைத் தாக்க முற்பட்டால் அங்கு குவிந்திருக்கும் பாண்டியப் படை முழுவதும் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். உனது கடமை நமது பரம்பரைச் சொத்து இருக்குமிடத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதுதான். நீ நிறைவேற்றி இருக்கும் பாதாள அரணமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று பொக்கிஷ அறையில் மேல் தளத்தில் இருந்த சிவன் கோவிலில் வழிபட்டுவிட்டு, மேலும் இரண்டாயிரம் பாண்டியவீரர்களையும் விட்டுவிட்டுச் சென்றான்.

தன் அரசனைச் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக அது அமைந்து விடுமோ என்று முருகேசன் அஞ்சியபடியே நடந்து விட்டது.

இராஜேந்திரனின் ஒற்றர்கள் தவறான தகவலை அனுப்பி பாண்டிய ஒற்றர்களைக் குழப்பி இருந்ததால் பாண்டியப் படை கொற்கையில் கட்டிப் போடப்பட்டது. நாகைப்பட்டினத்திலிருந்து திரிகோணமலைக்கு இருநூறு நாவாய்கள் மூலம் நிறைய சோழவீரர்களை அனுப்பி ரோகணத்தைத் தாக்கினான் இராஜேந்திரன்.

அவனுடன் தோள் கொடுத்து சோழப் படைவீரர்களுடன் முன்னிருந்து வீரப் போர் புரிந்தான் இராஜாதிராஜன். தனக்குப் பிடித்த யானைப் படைகளை அணிவகுத்துப் போர் புரிந்து சிங்களப் 

படைகளைச் சின்னா பின்னாமாக்கினான். பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி சோழ நாட்டிற்குக் கொண்டு வருவதும், வணிக நாவாய்களைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து தாக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பூண்டறுப்பதும் சோழர்கள் திட்டமாக இருந்தது.
தமிழ் இனி மெல்ல.. [ 3:6 ]தொடர்கிறது 
அரிசோனா மகாதேவன் 

பொலனருவையைத் தாண்டியதும், சோழப் படைகள் இரண்டாகப் பிரிந்து தாக்கின. ஒரு பகுதியை இராஜேந்திரன் நடத்திச் சென்று ஐந்தாம் மகிந்தனைச் சிறைப் பிடித்தான். இன்னொரு பகுதியை நடத்திச் சென்று பாண்டியப் பொக்கிஷத்தைக் கைப்பற்ற விழைந்தான் இராஜாதிராஜன்.

கடைசியில் ஒரு சிற்றூரில் ஐயாயிரம் பாண்டிய வீரர்கள் முகாமிட்டிருப்பது ஒற்றர்கள் மூலம் அறியவே, அங்குதான் பாண்டியர் பரம்பரைச் சொத்து இருக்கக்கூடும் எனத் தீர்மானித்து அவர்களைத் தாக்க விரைந்தான் இராஜாதிராஜன். அவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர் பாண்டியர்கள். இதுவரை அவன் காணாத வகையில் அவர்கள் சிறப்பாகப் போரிட்டனர். அவர்களின் திறமை இராஜாதிராஜனை மிகவும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக அவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட வீரனின் மன உரம் அவனுக்கு மிகவும் பிடித்தது. இவன் எதிரியாக இல்லாமல் நண்பனாக இருந்தால் எப்படி இருக்கும் என்றும் எண்ண வைத்தது.

ஏழு மணி நேரம் நடந்த போரில் பாண்டியப் படையில் பெரும் பகுதி அழிக்கப்பட்டது. அதற்காகச் சோழவீரர்கள் கொடுத்த விலை மிகமிக அதிகம். இரவு வந்ததும் சண்டை நிறுத்தப்பட்டது...

...கடைசி நிலைக்குத் தள்ளாடியவாறே வந்து சேர்கிறான் முருகேசன். இரத்தக் காயங்கள் அவனது உடலைச் சிவப்பாக ஆக்கி இருக்கின்றன. பொக்கிஷ அறைக்குச் செல்லும் சுற்றுப் பாதைச் சுரங்கத்தின் கடைநிலை அறையை அடைகிறான். அங்கே அவன் தேர்வு செய்த வீரர்கள் இருபத்தைந்து பேர் இருக்கின்றனர். அவனைக் கண்டதும் அவர்கள் மரியாதையுடன் ஓடி வந்து தாங்கிப் பிடிக்கின்றனர்.

“முருகேசரே,  என்ன ஆயிற்று?” என்று அவனுக்குக் குடிநீரை அளிக்கின்றான் தலைமை வீரன். மடக், மடக்கென்று தண்ணீரைக் குடிக்கிறான் முருகேசன்.

“நம் பாண்டி நாட்டிற்காக நமது உயிரைக் கொடுக்கும் தருணம் வந்து விட்டது. சோழர்கள் சுரங்கப் பாதையில் நுழைந்து விட்டனர். நமது முதல், மற்றும் இடைநிலை வீரர்கள் அவர்களுடன் போரிட்டு சுரங்கம் முழுவதும் அவர்களின் பிணக்குவியல்களை நிரப்பி வீர சுவர்க்கம் அடைந்தனர். இனி நாம் மட்டும்தான் இருக்கிறோம். இன்னும் எத்தனை நேரம் நமக்கு வாழ்வு இருக்கிறதோ தெரியாது. ஆயினும் நமது கடைசி மூச்சு இருக்கும்வரை போராடுவோம்.” என்று உறுதியான குரில் தெரிவிக்கிறான்.

அனைவருக்கும் இளைஞனாக இருக்கும் ஒரு வீரனைப் பார்த்துக் கண்ணசைக்கிறான். அந்த வீரன் தன் இடுப்பில் கட்டியிருக்கும் ஒரு சிறிய மூட்டையைப் பிரிக்கிறான்.

“செல்லக்கண்ணா, நீதான் அனைவருக்கும் இளையவன். ஆகவே, நீ எங்கள் அனைவருக்கும் வாக்கரிசியைக் போட்டு விட்டு இரகசிய வழியாகத் தப்பிச் செல். எப்படியாவது உன் உயிரை நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது அரசருக்கு நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றினோம் என்று தெரிவிப்பது உனது பொறுப்பு!” என்று கரகரத்த குரலில் கூறுகிறான்.

செல்லக்கண்ணனின் முகத்தில் சோகம் ஒருகணம் நிழலாடுகிறது. ஒன்றுமே சொல்லாமல் முருகேசனில் துவங்கி, அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரின் வாயிலும் சிறிது அரிசியைப் போடுகிறான். அனைவரும் அப்படியே அந்த அரிசியை விழுங்குகின்றனர். முருகேசன் தன் இடுப்பில் இருக்கும் ஒரு சாவியை எடுத்து செல்லக்கண்ணனிடம் நீட்டுகிறான்.

அறையில் இரண்டடி உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய கதவில் தொங்கும் பூட்டைத் திறக்கிறான் செல்லக்கண்ணன். கதவைத் திறந்து ஒரு ஆளே தவழ்ந்து செல்லும் அளவுக்கு இருந்த சுரங்கத்தில் நுழைகிறான் அவன். உடனே கதவைச் சாத்தித தாளிட்டு விடுகிறான் முருகேசன்.

ஆளரவம் கேட்கிறது.

“நீங்கள் ஐவரும் உயிருடன் இருக்கும் வரை உங்களைத் தாண்டி யாரும் மேலே செல்லக் கூடாது!” என்று ஆணையிட்டு விட்டு, மீதி இருப்பவரை ஆறாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொரு வழியாகச் செல்லச் சொல்லிவிட்டு, தானும் ஒரு பிரிவுடன் செல்கிறான் முருகேசன். பொக்கிஷ அறைக்குச் செல்லும் ஒவ்வொரு கதவுக்கும் காவலாகத் தாங்கள் இருக்கப் போகிறோம் என்பது பேசாமலே அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

அவர்கள் செல்லவும், முதல் சோழவீரன் தலையை நீட்டவும் சரியாக இருக்கிறது. நீட்டிய தலை உடனே ஒரு பாண்டிய வீரனால் துண்டிக்கப் படுகிறது.

பதினைந்து நிமிடங்கள் கழிகின்றன. இருபத்தி எட்டு சோழ வீரர்களின் உயிரை எடுத்த பின்னர் அந்த ஐந்து பாண்டிய வீரர்களும் பலியாகிறார்கள். அந்த அறையிலிருந்து ஆறு சுரங்கங்கள் பிரிவதைக் கண்டு திகைக்கின்றனர் உள்ளே வந்த சோழவீரர்கள். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக ஆறு சுரங்கங்களிலும் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கு ஆறு மணி நேரம் கழித்து நூற்று இருபது வீரர்களை இழந்த பின்னர் பாண்டியர்களின் பரம்பரைச் சொத்து சோழர் வசம் வந்து சேருகிறது. முருகேசன் மட்டுமே இருபது பேரை எமனுலகுக்கு அனுப்பிய பின்னர் கடைசிப் பாண்டிய வீரனாக இறக்கிறான்.

நான்கு நாள்களுக்குள் அவன் கட்டிய அரண் தகர்க்கப் பட்டு பொக்கிஷங்கள் நிலமட்டத்திற்கு வந்து சேருகின்றன. இதை மேற்பார்வை பார்த்த இராஜாதிராஜனின் கவனத்தைக் கவருகிறது பாண்டியரின் அரியாசனத்திற்கு அருகில் கிடந்த - இடது கை, கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, ஒரு கண் குத்தப்பட்டு, மார்பில் எண்ணற்ற விழுப்புண்களுடனும், வலது கையில் வாளுடனும் கிடந்த - முருகேசனின் உயிரல்லா உடல். பாண்டியர் படைத் தலைவன் அவன்தான் என்று கண்டுகொள்கிறான் இராஜாதிராஜன்.

“வீரனே! நீ யாரோ, எவனோ, உன் பெயர் என்னவோ, எனக்குத் தெரியாது. உன் வீரத்தால் என் மனதை வென்று விட்டாய்! இப்படிப்பட்ட வீரனான நீ சோழநாட்டுக்கு நண்பனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! உன் கடமையைச் செய்து விட்ட நிம்மதியுடன் நீ போய்ச் சேர்ந்து விட்டாய்! நானும் உன்னை மாதிரியே போரில் மார்பில் விழுப்புண் ஏந்தித்தான் உயிர் நீக்க விரும்புகிறேன். வயதாகி, நலங்குன்றி, பார்வை மழுங்கி, நடை நழுவி, மற்றவர் பரிதாபப்படும் அளவுக்கு முதியவனாகி, நடைப் பிணமாகி இறக்க நான் விரும்பவில்லை.” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான் இராஜாதிராஜன்.

கணக்குப் பார்த்தால் ஐயாயிரம் பாண்டிய வீரர்களுடன் பதிமூவாயிரம் சோழ வீரர்கள் இப்போரில் உயிர் துறந்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்கிறான் இராஜாதிராஜன். இதுவரை நடந்த எந்தப் போரிலும் சோழவீரர்களுக்கு இந்த அளவு விகிதத்தில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதில்லை. தான் முதலில் கலந்து கொண்ட போரில் ஒரு சோழ வீரன் கூட இறக்காமல் அமரபுஜங்கனை தனது பாட்டனார் வென்றதை நினைவு கூர்கிறான்.

இங்கே வீரமாகப் போரிட்டு அந்தத் தோல்வியை நிறைவு செய்து விட்டனர் பாண்டியர் என்றும் மனதில் சொல்லிக் கொள்கிறான். இங்கு அவர்கள் போரிடவில்லை, தங்கள் நாட்டிற்காக ஒரு வேள்வி இயற்றி, தங்களையே பலியாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றே அவன் நம்புகிறான். எனவே இங்கு உயிரழந்த அனைவருடைய உடல்களையும் எடுத்து வந்து முறையாக ஈமச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று அந்தணர்களை வரவழைக்கிறான்.

அப்பொழுது சோழ வீரர்கள் ஒரு இளைஞனை அங்கு இழுத்து வருகிறார்கள். அவனைப் பார்த்தால் ஒரு பாண்டிய நாட்டான் போல இருக்கிறது.

“அரசே! இவன் ஒரு மரத்தின் பின் மறைந்து நின்று இங்கு நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை ஒற்றனோ என்று ஐயப்பட்டு இழுத்து வந்தோம்!” என்று பணிவுடன் தெரிவிக்கின்றனர் சோழ வீரர்கள்.
அவனை உற்று நோக்குகிறான் இராஜாதிராஜன். ஒரு புலி தனது இரையைப் பார்ப்பது போல இருக்கிறது அவனது பார்வை.

“யாரடா நீ?” உறுமுகிறான் அவன்.

சிறிதும் அச்சப்படாமல் அவனை நோக்குகிறான் அந்த இளைஞன். அவன் பார்வையில் இருக்கும் வெறுப்பை இராஜாதிராஜனால் புரிந்து கொள்ள முடிகிறது. இவன் ஒற்றனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறான். ஒற்றன் என்றால் அவனை நேருக்கு நேராகப் பார்க்க மாட்டான். தவிரவும் இவ்வளவு வெறுப்பைத் தன் கண்களில் காட்டி இருக்கவும் மாட்டான். எப்படியாவது தப்பித்துச் செல்வதில்தான் கவனத்தைச் செலுத்தி இருப்பான். இப்படி அசட்டையாக இருந்து எதிரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கவும் மாட்டான்.

“நான் பாண்டிய வீரன். உங்களில் ஒருவரைக்கூட எமனுக்கு அனுப்பிய மகிழ்வுடன் என் நண்பர்களுக்குத் தோள்கொடுத்து வீரமரணம் அடைய இயலாத ஒரு நற்பேறற்றவன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் உங்களில் யாருடனாவது போரிட்டு வீரமரணம் அடைய விரும்புகிறேன்.” அவனது குரலில் ஒரு கலக்கமோ, அச்சமோ இல்லை.

“உன் பெயரென்ன?”

“செல்லக்கண்ணன்.”

“உன் ஊர்?”

“நெல்லை”.

“தென்பாண்டி நாட்டானா?”

“ஆமாம்!”

“உன் நண்பர்களுடன் சேர்ந்து வீரமரணம் எய்தவில்லையே என்று வருந்தினாயே, பின் ஏன் ஒரு மரத்தின் பின்னர் மறைந்து ஒற்றனைப் போல வேவு பார்த்துக் கொண்டிருந்தாய்?” என்று நகைக்கும் இராஜாதிராஜன், தன் இரையைச் சீண்டி விளையாடும் புலியைப் போலத்தான் பாண்டிய வீரனுக்குத் தென்படுகிறான்.

“இங்கு பாண்டிய நாட்டின் பரம்பரைச் சொத்துக்கு என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை அறிந்து என் மன்னரிடம் தெரிவிப்பதற்காக என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் எங்கள் தலைவர் முருகேசன்,பாண்டிய மன்னர்களின் பரம்பரை மெய்காப்பாளர் - பாண்டிய மன்னர் அமரபுஜங்கர் இறந்தவுடன் உங்கள் பாட்டனாரின் சிறையில் தன் தலையைத் தானே கொய்துகொண்டு வீர மரணம் எய்திய  திருமாறனின் தம்பி.

“அவரது உடலை நீங்கள் தீக்கிரையாவதைப் பார்த்து, எனது இறுதி மரியாதை அவருக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று இருந்தேன். எனது கவனக் குறைவால் பிடிபட்டுவிட்டேன். இனி நான் உயிருடன் பாண்டி நாடு திரும்ப முடியாது என்று முடிவாகி விட்டது. எனவேதான் ஒரு வீரனாக என் உயிரைவிடத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் என்னுடன் போரிட அனுப்புங்கள். என் கதையும் ஒரு வீரனுடையதாகவே முடியட்டும். சொக்கநாதரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறேன்.”

கடகடவென்று சிரிக்கிறான் இராஜாதிராஜன். இளவரசன் முன் சற்றும் பயமில்லாமல் எதிர்த்துப் பேசுகிறானே என்று அவனைச் சாடச் சென்ற சோழவீரனையும் தடுத்து நிறுத்துகிறான் அவன்.

“உன் வேண்டுகோளை என்னால் நிறைவேற்ற இயலாது. செல்லக்கண்ணா! உன் தலைவர் சொன்ன கட்டளையை நீ நிறைவேற்றுவாயாக. உன்னை விடுவிக்கிறேன். சோழ வீரர்கள் உன்னைப் பாண்டிய நாட்டுக் கடற்கரை அருகில் ஒரு படகில் இறக்கி விடுவார்கள்.

“உன் மன்னரிடம் பாண்டியரின் பரம்பரைச் சொத்து சோழ இளவரசன் இராஜாதிராஜன் கைக்கு வந்து விட்டதாகவும், அவை கோப்பரகேசரி இராஜேந்திரருக்கு காணிக்கையாகக் கொடுக்கப்படும் என்றும் கூறு. முடிந்தால் சோழநாட்டுக்கு வந்து மீட்டுக் கொள்ளச் சொன்னதாக நான் உனது மன்னருக்குச் சேதி அனுப்பியதாகவும் சொல்லு.

“இந்தப் போரில் வீரமரணம் எய்திய பாண்டிய வீரர்களை பாராட்டி முறைப்படி ஈமச் சடங்குகளுக்கு ஏற்பாடு நான் செய்ததாகவும் கூறு. உன்னை யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்.” என்று புன்னகைத்த இராஜாதிராஜன், “ஏனாதி அவர்களே! எனது கட்டளையை நிறைவேற்றும். ஈமச் சடங்கை இவன் கண்ணுறட்டும். அதன் பின்னர் எந்த ஊறும் வராமல் இவனைப் பாண்டிய நாட்டுக்குத் திருப்பி அனுப்பி விடுங்கள்.” என்று முடிக்கிறான்.

செல்லக்கண்ணனை சோழவீரர்கள் இழுத்துச் செல்கிறார்கள்.

சிறிது நேரம் கழித்து தன் பாசறைக்குச் செல்கிறான் இராஜாதிராஜன். ஐயாயிரம் பாண்டிய வீரர்களை அழிக்க பதிமூவாயிரம் சோழவீரர்களை காவு கொடுத்ததைப் பற்றித் தன் தந்தைக்கு எப்படிச் சொல்லப் போகிறோம் என்று யோசிக்கிறான் அவன். சுரங்கப் பாதையை எப்படி அரணாக அமைத்து தன் பலத்தை முருகேசன் பெருக்கிக் கொண்டான் என்று நினைக்க நினைக்க அவனுக்கு வியப்பாக இருக்கிறது. சிவாச்சாரி இலங்கைக்கு வந்திருந்தால் உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க ஏதாவது வழி சொல்லியிருப்பானா என்றும் எண்ணிப் பார்க்கிறான். அவனை தஞ்சைக்குக் காவலாகவும், தான் திரும்புவதற்குள் ஜெயங்கொண்ட சோழபுரத்தைக் கட்டி முடிக்குமாறும் ஏன் தனது தந்தை ஆணையிட்டார் என்பதையும் நினைத்துப் பார்க்கிறான்.
* * *
         பொலனருவைக்கு அருகே, இலங்கை
        பிங்கள, கார்த்திகை 12 - நவம்பர் 27, 1017

கெட்டுப் போன சோற்றின் வாடையைத் தாங்காமல் முகம் சுளிக்கிறான் மகிந்தன். அருகிலே அவன் மனைவி எடுத்திருந்த வாந்தி அந்த வாடையைப் பரப்பிக் கொண்டிருந்தது. அவனது மகன் கசபனை நம்பிக்கையானவர்கள் மூலம் அரண்மனையை விட்டு அனுப்பிய மூன்று நாழிகைக்குள் ரோகணத்தில் அவனும், அவனது குடும்பமும் இராஜேந்திரனால் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்...

...முதன் முதலாக இராஜேந்திரனைப் பார்த்த மகிந்தனுக்கு ஒரு புலியிடம் மாட்டிக் கொண்ட மானைப் போலத்தான் இருந்தது. எவனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்தானோ, கடைசியில் அவனிடமே மாட்டிக் கொண்டதை நினைத்தால் எரிச்சலாகவும் இருந்தது. பதினோரு வருட ஆட்சிக்குப் பிறகு இராஜராஜருக்குப் பயந்து அனுராதபுரத்திலிருந்து பொலனருவை - பின்பு பொலனருவையிலிருந்து ரோகணத்திற்கு ஓடி ஒளிந்த அவனும் இருபத்திநான்கு ஆண்டுகள் அங்கேயே இருந்துகொண்டு சோழர்களுக்குப் பலவிதமான தொல்லைகளையும் கொடுத்துப் பார்த்தான். பாண்டியர்களுக்கு உதவி செய்தும், சோழ வணிக நாவாய்களைக் கடலில் மடக்கி மூழ்கடித்தும், கொள்ளை அடித்தும் இடைவிடாது சோழர் காலில் குத்தி உட்சென்ற முள்ளாக இருந்து வந்தான்.

இராஜேந்திரனுக்குப் பயந்து எங்கு ஓட முடியும்! தெற்கே பெருங்கடலைத் தவிர வேறு என்ன இருக்கிறது! நாற்பத்தேழு வயதிலும் கட்டிளங்காளையாகத்தான் தென்பட்டான் இராஜேந்திரன். அவனது மகன் இராஜாதிராஜன் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி விட்டான் என்று சோழக் காவலர்கள் பேசியதிலிருந்து அறிந்து கொண்டான்...

...இலங்கையையும் இழந்து, இப்பொழுது குடும்பத்துடன் சோழர்களின் கைதிகள் ஆனதுதான் மிச்சம் என்று நினைக்கிறான் மகிந்தன். ஆளரவம் கேட்கிறது. மூன்று வீரர்களுடன் ஒரு சோழ அதிகாரி வருகிறான். அவர்களைப் பூட்டி வைத்திருந்த கதவு திறக்கப்படுகிறது. அறைக்குள்ளிருந்து வரும் கெட்ட வாடையின் தாக்குதலால் மூக்கைச் சுளித்த அவன், தன்னுடன் வந்தவனிடம் ஏதோ கோபமாகக் கத்துகிறான். அவனருகில் இருந்த வீரன் பணிவுடன் தலையாட்டியவாறே ஓடுகிறான்.

 “நான் சோழநாட்டின் இலங்கைப் பகுதி ஓலைநாயகம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் சோழநாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, அந்தக் குற்றத்தை விசாரிக்க தஞ்சைக்கு அழைத்து வரும்படி கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவரின் ஆணை. உமது மனைவியார் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த இடத்தை சுத்தம் செய்ய ஆள் வந்து சேரும். உமது மனைவியாரின் உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறோம். விரைவில் வந்து விடுவார் நாளை பயணம் துவங்கும். ஏதாவது கேட்க வேண்டுமா?” சுருக்கமான குரலில் அறிவிக்கிறான் அந்தச் சோழ அதிகாரி.

“எமது தளபதிகள், அதிகாரிகள்?”

“சோழ நாட்டின் அமைதியைக் குலைத்ததற்காகவும், அளவில்லாப் பொருட்சேதம் ஏற்படுத்தியதற்காகவும், அவர்களுக்கு கொடுத்த மரணதண்டனை இன்று காலைதான் நிறைவேற்றப்பட்டது.”[வளரும்]