Thursday, 19 June 2014

இணையவெளியின் பெருமித அறிவிப்பு

  இணையவெளியின் பெருமித அறிவிப்பு   

       20 ஜூன் 2014 வெள்ளிக்கிழமை முதல் 

                              விறுவிறுப்பாகத் தொடங்குகிறது 

தமிழினி மெல்ல-2:முற்சேர்க்கை


அரிசோனா மகாதேவனின் 
    தமிழினி மெல்ல-2


                                 முற்சேர்க்கை

                                     விசுவாவசு, தை 14 - ஜனவரி 27, 1965

ராணி சீதை ஆச்சி விடுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)


“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார்  அந்த டி.எஸ்.பி.

ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.

அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.

ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.

அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா - அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.

கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.
எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?

ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.

ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.

திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.

ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.

நான் அதிர்ந்து போகிறேன்.
ஏன் இந்த வன்முறை?
எதற்காக இந்த உயிர்ச் சேதம்?

நாங்கள் மாணவர்கள்தானே! ஊர்வலம்தானே சென்றோம்? இந்தியா ஒரு சுதந்திர நாடுதானே? தங்கள் குறைகளைச் சொல்லி ஊர்வலம் செல்ல மக்களுக்கு உரிமை இல்லையா?

“நானும் உங்களைப் போல மாணவனாக இருந்தவன்தான்!” என்று சொல்லி எங்களுடன் நண்பர் மாதிரி பேசிய டி.எஸ்.பியே இப்படி ஒரு கொலைச் செயலுக்கு அனுமதி எப்படிக் கொடுக்க முடியும்?

அப்பொழுது என் மனதில் ஒரு விரிசல் தோன்ற ஆரம்பிக்கிறது. முன்பு ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள். இப்பொழுது.. ? இந்தியாவின் தேசிய மொழி என்று நான் நம்பியது அடக்கி ஆளவந்த ஒரு மொழியா? இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களே விடுதலைப் போராளிகள் மீது அடக்குமுறை நடத்தினார்கள். இப்போது இந்தி திணப்பு எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழர்களே குற்றமற்ற ஒரு தமிழ் மாணவன்மீது துப்பாக்கி சூடு செய்வதை என்ன சொல்லி அழைப்பது?

என் மனத்தின் அன்று பட்ட காயம் இன்றுவரை ஆறாத ஒரு குழிப் புண்ணாகவே இருந்து வருகிறது.
                *        *        *







Wednesday, 18 June 2014

தமிழ் இனி மெல்ல...1


                              தமிழ் இனி மெல்ல-1

                                               அரிசோனா மகாதேவன் 
                                                             பாகம் 1
                                
                                                 பொது ஆண்டு 2411

                                                 அர்ப்பணம்
என் உடலில் ஓடும் குருதியிலும், என் உயிர் மூச்சிலும் இரண்டறக் கலந்திருக்கும் என் அன்னை தமிழுக்கு இந்த நாவலை அர்ப்பணிக்கிறேன்.

                                                     நன்றி

இந்த நாவல் உருவாகி வெளிவர எனக்கு உதவி செய்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
1.இந்த நாவலின் கரு உருவாக எனக்கு உதவிய இந்தியப் பயணம்.

2.நாவலின் ஓரொரு அத்தியாயத்தையும் படித்து, என்னை ஊக்குவித்து எதைச் சேர்த்தால் நாவல் மெருகு பெரும் என்று உணர்த்தி, நான் சோர்ந்த பொழுது எனக்கு மேலும் எழுதத் துணிவு கொடுத்த எனது உடன் பிறப்புகள் இந்திரா பாலசுப்பிரமணியன். ஸ்ரீதரன், ராம், மற்றும் ராஜ் சுப்புரெத்தினம் அவர்கள் திருமதி அமுதா முகுந்தன் அவர்கள்.

3.வரலாற்றுப் புத்தகம் தந்து உதவிய பேராசிரியர் திரு. எஸ்.டி. ராஜன் அவர்கள்.
4.இந்த நாவல் எழுதும் பொது பொறுமை காத்த என் மனைவியார் திருமதி வசந்தி மகாதேவன் அவர்கள்.

5.பார்வைக் குறிப்பு எடுக்க உதவிய விக்கிபீடியா. கூகுள் மற்றும் பல இணைய தளங்கள்

6.இந்த நாவலை வெளியிட முன்வந்த தாரிணி பதிப்பக உரிமையாளர் உயர்திரு வையவன் அவர்கள்.

குறிப்பு  இந்த நாவல் கற்பனைப் படைப்பே. வரலாற்று நாயகர்கள் இக் கதையில் இடம் பெற்றிருந்தாலும், நிகழ்ச்சிகள் கற்பனைதான். எவரின் மனத்தையும் புண்படுத்துவதில்லை.

[Warning:As  this  novel is simultaneously published as printed book in Tamil and English it is under copyright act .Any violation has to be considered seriously under legal proceedings ]
                                                         பாகம் 1
தமிழ் இனி மெல்ல...

தமிழன்னையுடன் பயணிப்போம்!

மொழி என்பது ஒருவர் தன்னை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ மற்றவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கோ உதவும் ஊடகம் என்று வைத்துக் கொள்ளலாம். தாய்மொழி ஒருவரின் இரத்தத்திலும் விடும் மூச்சிலும் கலந்திருக்கிறது. எனவே, அது ஒருவர் தன்னை உணர்த்துவதற்கு முன் மதிக்கப்பட்டதாகும். ஒருவர் தனது அடையாளமாக உணர அதுவே வழி வகுக்கிறது. அது மிகவும் இயற்கையானதே. எனவே, அனைவரும் இந்த உலகே தன் தாய் மொழியில் பேசாதா என்றே ஏங்குகிறார்கள்.

ஆனால், அப்படி நடப்பதில்லை. இவ்வுலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் சில நன்றாக அறியப்படுபவை. குறிப்பாக, ஆங்கிலம் தன்னை விஞ்ஞானம், வணிகம் மற்றும் பல துறைகளுக்கும் ஊடகமாக ஆக்கிக்கொண்டு உலகமொழியாகவும் ஆகிவிட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்  தீவுகளில், இங்கிலாந்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த அம்மொழி. உலகமொழிக்கான அரியணையில் அமர்ந்தது வியப்புக்கு உரிய ஒன்றே ஆகும். அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் 33.5 கோடிப்பேரே இருந்தாலும் உலகெங்கிலும் 150 கோடி மக்கள் அதனைப் பேசி வருகிறார்கள். அதற்கு அடுத்த உலகமொழியான ஸ்பானிஷ் 41 கோடி மக்களுக்குத் தாய் மொழியாக இருந்தாலும் உலகத்தில் 53 கோடிப்பேரே அதனை அறிந்திருக்கிறார்கள்.

சீன மொழி பேசுவோர் 85 கோடியாகவும் அதை அறிந்தவர்கள் 100 கோடியாக இருந்தாலும் அது ஆசியாவின் பல நாடுகளில் பேசப்படுவதால், ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழியாகத்தான் கருதப் படுகிறது. இந்த வகையில் ரஷியன், ஜெர்மன், போர்சுகீஸ், அரபிக், மலாய், இந்தி ஆகிய மொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இலத்தீனும், சமஸ்கிருதமும் எவருக்கும் தாய் மொழியாக இல்லாவிட்டாலும், சமயத் தொடர்பு உள்ளமையாலும், சிறந்த தொன்மை வாய்ந்த இலக்கியங்களை உள்ளடக்கியதாலும், அவை உலகறிந்த மொழிகளாகத் திகழுகின்றன. இவற்றின் தொன்மையாலும், இலக்கியச் சிறப்பினாலும், சமய நூல்கள் இவற்றின் துணை கொண்டு எழுதப்பட்டு இருப்பதாலும்,  உலகத்தில் பலர் இவ்விரண்டு மொழிகளுக்கும் உயிர்கொடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

உலக மொழிகளின் வரலாற்றில் பல மொழிக்ள அழிந்து வருவதை நாம் பார்க்கிறோம். பல புது மொழிகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொள்வதால், அவை தங்களைப் பேசி வருபவர்களை இழந்து விடுகின்றன. இந்தக் கணக்கில் எழுத்து வடிவம் இல்லாத கூற்று மொழிக்ள எடுத்துக் கொள்ளப் படவில்லை.

இருந்தபோதிலும், பேச்சொழிந்த ஹீப்ரு மொழி தங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று விரும்பிய யூதர்களால், உயிர்ப்பிக்கப்பட்டு இஸ்ரேலின் மொழியாகத் திகழ்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

வேறுபல கோணங்களில் இருந்து பார்க்கும்போது, கீழ்க்கண்ட காரணங்களால் ஒரு மொழி உலக மொழியாகவோ, ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழியாகவோ, இலக்கிய மொழியாகவோ, உயிர்பெற்ற மொழியாகவோ இருப்பதற்கான காரணங்கள் என்ன?

1. ஒரு மொழி வணிகத்தாலோ, இராணுவ ஆதிக்கத்தாலோ பரப்பப் பட்டு உலகமொழி ஆகிறது. (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு)

2. ஒரு நாட்டில் மட்டுமில்லாது பல பகுதிகளில் பேசப்படுவதால் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழி என்ற தகுதியைப் பொறுகிறது. (இந்தி, ஜெர்மன் முதலானவை)

3. பேசுபவர் அற்றிருந்தாலும் இலக்கியச் செழிப்பினாலும், சமயம் சார்ந்த நூல்கள் இருப்பதாலும் அம்மொழி கற்கப்படுகிறது. (இலத்தீன், சமஸ்கிரும்.
4. அடையாளச் சின்னமாகவும், கவுரவத்திற்காகவும் ஒரு மொழி உயிர்ப்பிக்கப்படுகிறது (ஹீப்ரு)

இந்தியா பல மொழிகளுக்கும், நூற்றுக்கணக்கான கூற்றுமொழிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. அந்த மொழிகளில் பல ஐரோப்பிய மொழிகளைக்காட்டிலும் அதிகமானவர்களால் பேசப்பட்டாலும், அவை இந்தியாவில் மட்டுமே வழங்கி வருதலால் ஒரு பகுதிக்கு மேற்பட்ட மொழிக்கான தகுதியை அடையவில்லை.

இந்திய மொழிகளில் இந்தியும், தமிழும் மட்டுமே அத் தகுதியைப் பெறுகின்றன.

தமிழ் இந்தியா,  இலங்கை,  சிங்கப்பூர், மலேசியா, மொழிஷியஸ் நாடுகளில் பலரால் தாய் மொழியாகப் பேசப்படுகிறது. ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர்களுக்குத் தாய்மொழியாகவும், மொத்தம் எட்டு  கோடி மக்களால் அறியப்பட்ட மொழியாகவும், உலக அங்கீகாரம் பெற்றுத் திகழும் மொழியாகவும் இருக்கிறது. தமிழை அறிந்தவர்கள் ஜெர்மன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையாகவும் இத்தாலிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் அதிகமாகவும் இருக்கிறார்கள்.

சமஸ்கிருதம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளும், மற்றும் ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழி மரத்தின் வேறு கிளையான திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாகக் கருதப்படுகிறது.

உலகத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றான மொழி தமிழ். அதன் தனித் தன்மைக்காகவும், இலக்கிய மேன்மைக்காகவும், இந்திய அரசு இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழை, “செம்மொழி”யாக அறிவித்துச் சிறப்பித்திருக்கிறது. அதை எந்த மொழியின் உதவி இன்றிப் பேச இயலும். அதற்கென்று தனியான இலக்கணம் உள்ளது. அதன் இலக்கியச் செறிவுக்கு அளவே இல்லை.

  பண்டைத் தமிழ் மன்னர்கள் தென்னிந்தியர் மட்டுமன்றி, இலங்கை அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத் தீவுகள் இவற்றை ஆட்சி செய்து வந்தார்கள். இன்றைய இந்தியக் கடற்படை உருவாகும் வரை பேரரசன் இராஜேந்திரனது கடற்படையையே இந்தியாவிலேயே பெரிய கடற்படையாக விளங்கி வந்தது. அவனது செல்வாக்கு இந்தியாவின் ஒரிசா, வங்காள மாநிலங்கள் மட்டுமன்றி மலேய தீபகற்பம் சுமத்ராவிலும் பரவி இருந்தது. பண்டைத் தமிழ் மன்னர்கள் காலத்தில் சீனாவுடன் தமிழர்கள் வர்த்தகம் செய்து வந்தனர். சமீபத்தில் சீனாவிலும், இந்தோனேசியாவிலும் தமிழர்கள் கட்டிய கோவில்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டன சீனாவில் இருக்கும் கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.

உரோமானிய கிரேக்க அராபிய வணிகர்கள் தங்களது நாவாய்களை கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வணிகத்தைப் பெருக்கி வந்தனர். புகழ் பெற்ற பயணிகள் மெகஸ்தனிஸ், ஹுவான் சுவாங், பா ஹியென், மார்க்கோ போலோ முதலானோர் தமிழ் நாட்டைப் பற்றியும், அதன் செழிப்பைப் பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் எழுதினர்.

ஆயினும் தமிழ் மன்னர்களின் ஆட்சி பதினான்காம் நூற்றாண்டில் முடிவை எய்தியது. அதற்குப் பிறகு தமிழ் மன்னர்கள் தன்னாட்சி செய்யவில்லை.
தற்காலத்தில் வேலைவாய்ப்பு கருதியும், எளிதாக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை கண்டு பல தமிழறிஞர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் புதினம் தமிழ்க் கல்வி நலிவினால் ஏற்படப்போகும் விளைவு பற்றியும் பண்டைக்கால மன்னர்களின் பொற்காலம் பற்றியும், எப்படிப்பட்ட சூழ்நிலைகள் அவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்தன என்பது பற்றியும் சுற்றிச் சுழல்கிறது.

இந்த நாவலுக்கு உருக்கொடுப்பதற்கு வரலாற்று நாயகர்களையும், வரலாறு நிகழ்ச்சிகளையும் துணை கொண்டிருக்கிறேன். இந்த நாவலின் கதாநாயகி தமிழ் அன்னைதான். மற்ற மனிதர்கள் அல்ல. இந்த நாவலை வடிக்கும்போது நாயகன்நாயகியை மட்டும் மையமாகக் கொண்டு அவர்களின் பார்வையில் புதினத்தின் நோக்கை நடத்தாமல், பாத்திரங்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் அவர்கள் மன ஓட்டங்களின் கோணங்களிலிருந்தும் எழுதி இருக்கிறேன்.

தமிழ்க் கல்வி நலிவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழின் தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் நாவலின் தொடக்கமாக வரையப்பட்டிருக்கிறது. அப்படியே பண்டைய தமிழ் மன்னர்கள் தமிழின் முன்னேற்றத்திற்கு எப்படி பாடு பட்டார்கள்? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று அவர்களின் புகழைப் பறைசாற்றும் அளவுக்கு கட்டப்பட்ட தமிழரின் கலை நுணுக்கம் நிறைந்த நினைவுச் சின்னங்களை எழுப்பி விரிந்து பரந்த பேரரசைக் கட்டி ஆண்ட அவர்கள், எதனால் மறைந்து போனார்கள். அவர்கள் நிறுவிய பேரரசுகள் ஏன் வெடித்துச் சிதறின என்றும் இப்புதினம் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்த நாவல் தமிழன்னை நடந்து வந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி பண்டைத் தமிழர்களின் பொற்காலத்திற்கும் இப்படிப்பட்ட தமிழ்கல்வி நலிவு நீடித்தால் அவள் நம்மை எப்படிப்பட்ட எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடும் என்ற கற்பனைப் பயணத்திற்கும் அவளுடன் சேரந்த பயணிக்கிறது. தமிழன்னையின் எதிர்காலப் பயணத்திற்கும் அவளுடைய பழைய பொற்காலத்திற்கும் என்னுடன் சேர்ந்து பயணிக்குமாறு வாசகர்களைப் பணிவன்புடன் அழைக்கிறேன்.

                                        வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
(மீண்டும் சந்திப்போம் )

தமிழ் இனி மெல்ல... அடுத்த பதிவில்


அடுத்த பதிவில்

              அரிசோனா மகாதேவன் 

                                                                   எழுதும்

                             தமிழில் இதுவரை   எவராலும் தொடப்படாத
                                               
                     Futurology மற்றும் Gravitology                                                
                             இணைந்த 

                  அற்புதத் தொடர் நாவல்

                     தமிழ் இனி மெல்ல... 

                       தொடங்குகிறது 

அரிசோனாவில் ஓர் ஆலயம்

           அரிசோனாவில்  ஆனைமுகன் ஆலயம்

                                                                           


                                         அரிசோனா மகாதேவன் 

கதிரவன் மேற்கே சாய ஆரம்பிக்கிறான்.  உலர்ந்த பாலைவனக் காற்று மெதுவாக வீசிக்கொண்டிருக்கிறது.  வடக்கே ஸ்ட்ராபெரி தோட்டம். கிழக்கே நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காச் சோளக் கதிர்கள் காற்றில் தலைகளை ஆட்டிக்கொண்டு இருக்கின்றன.  வடமேற்கே நான்கைந்து குன்றுகள் காணப்படுகின்றன. அவற்றில் இடது கோடியில் உள்ள குன்றுக்கு மட்டும் மூன்று சிகரங்கள் இருக்கின்றன. மாலை நிழல் மெல்ல அக்குன்றினில் படிய ஆரம்பிக்கறது. சிறிது நேரத்தில் நிழல் படிந்த அக்குன்று நம்மை வியைப்பிலும், பக்திப் பரவசத்திலும் ஆழ்த்திவிடுகிறது. காரணம்...

... நடுச் சிகரத்திலிருந்து மேலிருந்து கீழாக வளைந்து காணப்படும் நிழல் வலம்புரியான துதிக்கை போன்று தோன்றுகிறது. வலது, மற்றும் இடது சிகரங்கள் காதுகளாகப் பரிணமிக்கின்றன. குன்றின் நடுவில், இடதுபுலத்தில் குத்தவைத்த கால் போன்று ஒரு நிழல் தோன்றுகிறது.  உற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. 


இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான். ஒவ்வொரு நாளும் மாலை 3:45 மணியிலிருந்து, 5 மணிவரை இந்த அற்புதத் தோற்றம் அந்த முச்சிகரங்கள் உள்ள குன்றில் தென்படுகிறது. ஆனைமுகனே தனது கோவிலை தினமும் பார்த்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறான் என்னும் அளவுக்குச் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளது மகாகணபதி டெம்பிள் ஆப் அரிசோனா (Maha Ganapati Temple of Arizona). 
பீனிக்ஸ் பெருநகரில் கோவிலே இல்லையே என்ற ஆதங்கத்தால், கவ்வையில் (Kauii) இருக்கும் சைவ ஆதீன ஸ்தாபகர், சமாதி அடைந்த குருதேவர் சுப்பிரமணிய  சுவாமி அவர்கள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட, நான்கு அடிகள் உயரமுள்ள, ஆனைமுகனின் அற்புதத் திரு உருவத்தை பொது ஆண்டு 2௦௦௦ல், பீனிக்ஸ் பெருநகரின் இந்து சமய மக்களுக்கு அன்பளிப்பாக அளித்து, அவர்கள் முழுமுதற் கடவுளான ஆனைமுகனை வணங்கிட, இந்து மக்களின் சமய உணர்ச்சி பொங்கிப் பெருகிட,  வழிசெய்தார்,.
                   
                                                                 
அரிசோனா மகாகணபதி 
அவரது ஆசியுடன், ஒரு வீட்டில் வைத்து வழிபடப்பட்ட விநாயகருக்குக் கோவில் எழுப்புவதற்காக, பக்தர் குடும்பம் ஒன்று பதினைத்து ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியது.  ஆலயம் அமைக்கும் பணியில் அநுபவமே இல்லாத அன்பர்கள்  பலர் ஆனைமுகத்தோனுக்கு ஆலயம் எழுப்ப உறுதிபூண்டு, முயற்சி எடுக்கத் துவங்கினார்கள்..
முதலில் 2100 சதுர அடி அளவுள்ள தாற்காலிகக் கட்டிடத்தில் ஆனைமுகனை பிரதிஷ்டை செய்தனர்.  ஒவ்வொரு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் பணி புரியவும், மக்களின் வீட்டு பூஜைகள், திருமணம், ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும் ஒரு அர்ச்சகர் நியமிக்கப்பட்டார்.
ஆகம முறையில் ஆனைமுகனுக்குப் பெரிய ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற அவா மக்கள் இதயத்தில் எழுந்தது. கோவில் நடத்திய 500x500 நன்கொடை, மாதா மாதம் காணிக்கை செலுத்தும் திருப்பணி, “மகிமா” என்னும் கலை நிகழ்ச்சி இவை மூலம் பணம் குவியத் துவங்கியது. 

தமிழ்நாட்டின் சிறந்த கோவில் ஸ்தபதிகளில் ஒருவரான திரு முத்தையா ஸ்தபதியின் வடிவமைப்பு உதவியுடன்
முத்தையா ஸ்தபதி

 உதவியுடன் ஆனைமுகனின் ஆலயம் உருப்பெறத் துவங்கியது. 
7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. 

7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் 
தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். கோதாவரி ஆற்றுக் கல்லில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமும், பாலாஜியும், 2008ல் ஆனைமுகன் நடுநாயகமாக எழுந்தருள, ,அவருக்கு இரு புறமும் மற்றும் நவக்கிரகங்களும் பிரதிஷ்டை (உயிரூட்டம்) செய்யப்பட்டார்கள். 
                                                


                                   
விமானங்களும், இராஜ கோபுரமும் கட்ட, உள்ளமைப்பாகக் கூடுகளும் கட்டி முடிக்கப்பட்டன.  கவ்வை ஆதீன  குருவான சத்குரு போதிநாத வேலன்சுவாமி பிராணப் பிரதிஷ்டைத் திருவிழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணி ஆற்றி, அமெரிக்காவில் எண்ணற்ற கோவில்களில் குடமுழுக்கு செய்வித்த திரு தங்கரத்தின பட்டர் சிவாச்சாரியார் தலைமையில், நான்கு புரோகிதர்கள் பிராணப் பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். 



கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேலான பக்தர்கள் ஆனைமுகனின் புது ஆலயத் திறப்பு விழாவைக் கண்டு களித்தார்கள்.  
                                                                    

ஆனைமுகன், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி இவர்களின் பஞ்சலோக உற்சவத் திரு உருவங்களும் வந்து சேர்ந்தன.  திருவிழாக் காலங்களில் அவை நன்கு அலங்கரிக்கப்பட்டு, கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 


விநாயக சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு விழா, யுகாதி, மகர சங்கராந்தி/பொங்கல் போன்ற விழாக்களுடன், மகாருத்ரம் போன்ற சிறப்பு நிகழ்சிகளும் பக்தர்களைப் பரவசப் படுத்தின.  இரண்டு அர்ச்சகர்கள் கோவிலில் பணி புரியத் துவங்கினர். சனி, ஞாயிறு மட்டுமன்றி, மற்ற நாள்களிலும், மாலை கோவில் திறக்கப்பட்டது.  கடவுளர்களுக்கு நிவேதனம் செய்ய, பிரசாதமும் பக்தர்களே தயாரித்துக் கொணர்ந்தார்கள்.  திருவிழாவின் போது குழுமும் பக்தகோடிகளுக்கு உணவு இலவசமாகவே வழங்கப்பட்டது. 
முருகனுக்கும், ஐயப்பனுக்கும் சன்னதிகள் எழுப்படவேண்டும் என்று தமிழ், மற்றும் மலையாள பக்தர்கள் விரும்பினார்கள்.  அதற்காகக் காணிக்கை குவிந்தது.  முருகன் ஐயப்பன் சன்னதிகளோடு, விசாலாட்சி, பத்மாவதி இவர்களுக்கும் சன்னதிகள் எழுப்ப முடிவு எடுக்கப்பட்டது. கோவிலில் தரையில் பளிங்குக்கல் பதிக்கப்பட்டது. 

  இந்தியாலிருந்து புதுச் சிற்பிகள் வந்தார்கள்.  அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே தங்குவதற்காக ஒரு மோபில் வீடு ஒன்று வாங்கி, கோவில் நிலத்திலேயே நிறுவப்பட்டது. சிற்பிகள் சிவன், மற்றும் பாலாஜியின் கர்ப்பக்கிரகங்களை ஆகம முறைப்படி வடிவமைத்து, சுதைச் சிற்பங்களையும் நிறுவினார்கள்.   
ஐயப்பன் சன்னதி கேரளக் கோவில் மாதிரி வடிவமைத்துக் கட்டப்பட்டது.   ஒவ்வொரு சன்னதியின் மீதும் கலசங்களும், சுதைச் சிற்பங்களும் எழுப்பப்பட்டன. சிற்பி சண்முகநாதனின் கைத்திறமையைப் பாராட்டாதோரே இல்லை எனலாம்.  அவர் சிற்ப சாஸ்திரத்தை விளக்கும் விதத்தை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பக்தர்களுக்கு உணவு சமைப்பதற்காக மடப்பள்ளி  வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.  
2011ல், முருகன், ஐயப்பன், விசாலாட்சி, பத்மாவதி இவர்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு செய்விக்கப்பட்டது.  விநாயகர், சிவன், பாலாஜி இவர்களின் கர்ப்பக்கிரகங்களுக்கு தேக்கு மரத்தில் புடைப்புச் சிற்பங்கள் உள்ள கதவுகளும் பொருத்தப்பட்டன. 

இந்தத் தடவையும், தங்கரத்தின பட்டர் சிவாச்சாரியார் தலைமையில் எட்டு புரோஹிதர்கள் குடமுழுக்கு விழாச் சடங்குகளையும், வேள்விகளையும் நன்கு நிறைவேற்றினார்கள்.  சத்குரு வேலன்சுவாமியும் விழாவில் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.  இரண்டாயிரம் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் விழா நிகழ்சிகளைக் கண்ணுற்றார்கள். 
விஸ்வநாதரும், விசாலாட்சியும் கோவிலை அலங்கரிக்கும்போது, ஆடலரசர் நடராஜரும், அன்னை சிவகாமியும் அருளாசி பாலிக்கவேண்டும் என்ற விருப்பமும், காக்கும் கடவுளான சத்தியநாராயணரும், மக்களுக்கு அருட்செல்வத்தை வாரி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தன.  அத்துடன் பக்த அனுமானும், இராமர், இலக்குவர் சீதையும் கோவிலில் குடிபுகவேண்டும் என்ற பேரவாவும் உண்டாகியது.  முதலாவது கட்டமாக, ஆனைமுகன், சிவன், பாலாஜி இவர்களின் விமானப் திருப்பணியை முடித்துக் குடமுழுக்கும், அத்துடன், நடராஜர்-சிவகாமி, மற்றும் சத்யநாராயணர் சந்நிதிகளையும் திறக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கடைசி கட்டமாக, இராமர்-சீதை-இலக்குவன், பக்த அனுமான் சந்நதிகளையும், இராஜகொபுரக் குடமுழுக்கையும் நிறைவேற்றுவதாகத் திட்டமும் இடப்பட்டது.
திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள்.  விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, கணிக்கைகளிச் செலுத்தினார்கள்.  ஆயிரக்கணக்கில் செங்கல்கள் பக்தர்கள் ஆதரவில் குவிந்தன.  சன்னதிகளும், விமானங்களும் எழுந்தன.
பீனிக்சின் கடும் வெய்யிலையும், கடும் குளிரையும், உஷ்ணக் காற்றையும் பொருட்படுத்தாது சிற்பிகள் உழைத்தனர்.  அவர்களுக்குப் பொழுது போக்கிற்காக, பக்தர்கள் அவர்களை விடுப்பு நாள்களில் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.  தங்கள் நற்குணத்தால் சிற்பிகள் அரிசோனா ஆலயக் குடும்பத்தில் ஒருவராகவே ஆனார்கள்.
காஞ்சி சங்கர மடம், தில்லைக் கோவில், சாயி மையத்திலிருந்து ஆசிச் செய்திகள் குவிந்தன.  இலட்ச கணபதி காயத்திரி, தன்வந்தரி ஹோமம் போன்ற சிறப்பு நிகழ்சிகள் மக்கள் நலத்திற்காக நடத்தப்பட்டன.  சிவானந்தலஹரி என்ற இடைவெளியே இல்லாத, சிவத் தலங்களைச் சிறப்பிக்கும் நாட்டியக் கலை நிகழ்ச்சி ஒன்று, பீனிக்ஸ் பெருநகரில் உள்ள பரதநாட்டியப் பள்ளி மாணவர்களைக் கொண்டு, பரத நாட்டிய ஆசிரியைகளால் சிறப்பாக நடத்தப்பட்டு, திருப்பணிக்கு நிதி திரட்டியது.
2014 மே மாதம் பக்தர்களின் கனவு நிறைவேறியது.  மூன்று விமானங்களுக்குக் குடமுழுக்கும், நடராஜர்-சிவகாமி சன்னதி, மற்றும் சத்தியநாராயணர் சன்னதி பிராணப் பிரதிஷ்டை, மற்றும் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறின.  
 இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள், குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு, கடவுளர்களின் அருள்வெள்ளத்தில், மூழ்கிப் பரவசம் கொண்டனர்.  தங்கரத்தின பட்டர் சிவாசாரியார் கலந்து கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டதால், வெங்கடேச குருக்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று, ஆகம முறைப்படி குடமுழுக்கு விழாவையும், பிராணப்பிரதிஷ்டைகளையும் நன்கு நிறைவேற்றினார்.  ஐந்து புரோஹிதர்கள் அவருக்கு உதவி செய்தனர். 
மூன்று நாள்கள் நிகழ்ந்த இத் திருநாள்களில் அனைவருக்கும், மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டது.  கோவில் தொண்டர்களே உணவு சமைத்து, பரிமாறும் திருப்பணியை மனமுவந்து செய்தனர்.
இயற்கை அன்னையும், தன் சீற்றத்தைக் குறைத்து, அந்த மூன்று நாள்களிலும் மிதமான வெப்பத்தையே தந்து அருளினாள். நூறு டிகிரிக்குப் பதிலாக, அதிகபட்ச வெப்பத்தை எழுபத்தி ஆறாகக் குறைத்தது கோவில் திருவிழாவுக்குத் தன் பங்கு திருப்பணியை இயற்கை அன்னை ஆற்றியதன்றி வேறொன்றும் இல்லை அல்லவே! 
நானூற்றி ஐம்பது குடும்பங்கள் (ஆயிரம் பேருக்கும் அதிகமானோர்), சத்தியநாராயண பூஜை செய்தனர்.  அதற்காக மிகப் பெரிய கூடாரம் ஒரு தாற்காலிகமாக அமைக்கப்பட்டது.

 இச் சமயம் ஒரு இறை அருள் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  டென்வர் என்னும் பெருநகரில் உள்ள ஒரு பெண்மணியின் கனவில் இறைவி சிவகாமி தோன்றி, “நான் இங்கு வரப் போகிறேன்.  எனக்குத் திருவிழா நடக்கப்போகிறது.  நீ அதற்கு வரவேண்டும்!” என்று அழைத்தார்களாம்.  அதுவரை அரிசோனா ஆலயத்தைப் பற்றிக்கூட அறியாத அந்த அம்மையார், எங்கு சிவகாமி அன்னை இருக்கிறாள் என்று விசாரித்து, அமெரிக்காவிலேயே அன்னை சிவகாமி பிரதிஷ்டை செய்யப்படப் போகும் கோவில் அரிசோனாவில் மட்டுமே உள்ளது என்று அறிந்து, குடமுழுக்குத் திருநாளுக்குத் தன் கணவருடன் வந்து, இக்கலி காலத்தில் நிகழ்ந்த அற்புதத்தை அனைவருக்கும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். கேட்ட அனைவரும் மெய் சிலிர்த்துப் போனார்கள்.  
இன்னொரு அடியவர் தன் தோட்டத்தில் விளைந்த, ஆனைமுகன் திருவுருவம் கொண்ட ஒரு பச்சைத் தக்காளியை எடுத்து வந்தார்.  அது ஆனைமுகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நாட்டியப் பள்ளி  மாணவிகள் ஆடியும், பாடியும், வந்த அனைவரையும் மகிழ்வித்தனர். மாலை நடராஜர்-சிவகாமி ஊர்வலத்திற்குப் பிறகு குடமுழக்கு விழா நிறைவு பெற்றது.  
 



Monday, 25 November 2013

எனக்கும் கடவுள் உண்டு.

என் கடவுளுக்கு மதம் கிடையாது

                            VKT6 

சொல்லத்துடிக்குது மனசு 

christ
Jesus
  
20.11.2007, பிற்பகல் 1.30.
அன்று இரவு எட்டு மணிக்கு 26 வது முறையாகச் சபரி மலைக்குச் செல்ல பூஜை செய்துவிட்டு, இருமுடி கட்ட  இரயிலைப் பிடிக்கும் தறுவாயில் தாகம் ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு. டிசம்பர் இதழுக்கான கட்டுரை வேண்டும் என்று. நினைத்துப் பார்க்கிறேன். 1981ஆம் ஆண்டு ஒரே ஆடையுடன் சென்னையில் அலைந்து திரிந்துகொண்டிருந்த நான், முதலில் கிடைத்த வருமானத்தில் மாற்றுடை வாங்கும் நிலையில் துணிக் கடைகளில் ஏறி இறங்கினேன். நான் கடைகளிலிருந்து இறங்கக் காரணம், துணிகளின் விலை ஏற்றம் தான். தேடிப்பிடித்து, எட்டு ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டேன்.
இரவு பத்து மணியிருக்கும், தூங்கிப் போயிருந்த என்னை எழுப்பினர் சிலர்.”என்ன?’ என்ற கேள்வியுடன் விழித்து, விழிப்போடு கேட்டேன். “” பக்கத்துத் தெருவில் அய்யப்பசாமி பூஜை நடக்கிறது, வந்து கலந்து கொள்ளுங்க சாமி” என்றொரு அழைப்பு. அழைத்தவர்கள் கூட்டத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கருப்பு, காவி, நீல நிற உடையணிந்து கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தாடியும், நெற்றியைச் சந்தனமும் குங்குமமும் நிரப்பியிருந்தன.
அவர்கள் கூப்பிட்ட தோரணையில் “” சரி, போய்த்தான் பார்ப்போமே” என்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று, அங்கு நடந்து கொண்டிருந்த அய்யப்பபூஜையில் கலந்து கொண்டேன்.
பூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன்தான் புரிந்தது… அவர்கள் ஏன் என்னை பூஜைக்கு அழைத்தார்கள்..? என்ற கேள்விக்குப்  பதில் அளித்தது என் வேட்டி.  மாற்றுடையாக நான் வாங்கிய வேட்டியின் நிறம் காவியாக அமைந்து போயிருந்தது மாத்திரமே அழைப்பிற்கான  காரணம். அவர்கள் நடத்திய பூஜையோ, அதற்குரிய ஐதீகங்களோ, திட்டமிடலோ இல்லாமல் நான் அங்கு அமர்ந்திருந்ததுதான் உண்மை. ஆனாலும் அங்கு களைகட்டிய இசையும் சங்கீதமும், அனைத்திற்கும் மேலாக அங்கு பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், சாப்பாடு எல்லாம் எனக்கு விருந்தாக அமைந்திருந்தன. பன்னும்  வடையுமே கிடைப்பதற் கரிய உணவுகளாக இருந்த எனக்கு, இந்தப் பூஜை சாப்பாடு எப்படியிருந்திருக்கும் என்றுசொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
அக்கூட்டத்தில் பேச்சுக் கொடுத்ததில் அய்யப்பன்கோவில் செல்வதற்கான பூஜை புனஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தன. மறுநாள் விடியற்காலை  50 – க்கும் மேற்பட்ட “சாமிகள்‘ சபரி மலை செல்லக்  கிளம்பினர். சபரி மலை செல்வதற்கான மற்றச்  சடங்குகளையும் புரிந்து கொண்டேன். அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது ஒரு குரல் ,”"சாமிமாரே, இன்னைக்குச் சாயங்காலம் வெள்ளாளத் தெருவுல மணி வீட்டுல அய்யப்பபூஜை … வந்து கலந்துக்குங்க” கூவிய சத்தத்தில் மனதில் குளிர் மழை பெய்தது. “” ஆகா! இன்றிரவும் ஒரு பிடிபிடிக்கலாம்.”
அந்த கார்த்திகைமார்கழி இரு மாதங்களிலும் இருபதிற்கும் மேற்பட்ட அய்யப்பபூஜைகளில் கலந்து கொண்டு, பூஜை விருந்தினை உண்ணக் கூடிய வாய்ப்பினை அந்த எட்டு ரூபாய்க் காவி  வேட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.
1982 ஆம் ஆண்டு, மீண்டும் அந்தக் கார்த்திகைமார்கழி மாதங்கள் வந்தன. அப்போது நான் மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வருமானம் கொண்டிருந்தேன். கருப்புடை, காவியுடைச் சாமிகள் தெரியத் தொடங்கினாலும் இப்போது அய்யப்பபூஜைகளில் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனது.
ஆனாலும், ஒரு வருடத்திற்கு முன்பு சப்புக் கொட்டிக் கொண்டு உண்ட உணவுகள் என் மனதில் நிழலாடத் தொடங்கின. என்னையறியாமலே என் தலை குனிந்தது. மாற்றுடைக்காக நான் பயன்படுத்திய காவியுடை, அய்யப்பசாமிகளை, என்னையும் சாமியாக நினைத்து எனக்கு விருந்திட்ட சமயங்கள் என் மனதை வெட்கப்பட வைத்தது.
“இதற்குப்  பிராயச்சித்தமாக ஏதாவது செய்யலாமே… என்ன செய்யலாம்?” உடன் முடிவு செய்தேன் . நேராகப்போய் , ஒரு வேட்டி, மாலை வாங்கிக் கொண்டு  குளித்துவிட்டு, எனக்கு நானே மாலை போட்டுக் கொண்டு, அய்யப்பசாமியாகி, விரதமிருந்து கன்னி சாமியாக முந்நூறு ரூபாய்ச்செலவில் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வணங்கி விட்டு வந்தேன். 
ஆத்திகம் அறியாத மனசு. நாத்திகம் புரியாத வயசு. சூழ்நிலை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நான் ஆத்திகனா? நாத்திகனா? புரியாமலே புனிதப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
3 ஆவது வருடம் சபரி மலைக்கு மாலைபோட வேண்டியிருந்த போது, நான் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். தங்கியிருப்பவர்களுக்கு ஆதியோடு அந்தமாக அத்தனை வேலைகளையும் செய்யக் கூடியவராக இருபது வயது நிரம்பிய பழனி என்பவர் இருந்தார். எவ்வித உறவுகளுமற்ற அவரை அன்புத் தம்பியாகவே நான் பார்த்தேன், அவரையும் நம் செலவிலேயே சபரி மலைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து, அவ்வருடத்தில்  வேட்டி , மாலை அணிவித்து, அவரையும் சாமி ஆக்கி விட்டேன்.
45 நாள்கள் விரதமிருந்து கிளம்புவது என்று திட்டம். மாலை போட்டு இருபது நாட்களிருக்கும். என் அறைக்கு அடிக்கடி வந்து செல்லும் என் இஸ்லாமிய நண்பன் உபயதுல்லா அவர்களின் ஆறு மாதக் கைக்குழந்தை இறந்துபோன செய்தி எனக்கெட்டியது. அவரின் மனைவி, தம்பி மற்றும் குடும்ப உறவினர்களைக்கூட நான் நன்கு அறிவேன்.
“சபரிமலைக்கு மாலை போட்டு விட்டால் மரணச் சம்பவங்களிலோ அவர்களின் வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாது‘ என்பதை அப்போது நான் அறிந்திருந்தேன்.”என்ன செய்வது?’ ஒரு பரிதவிப்பு. கழுத்திலிருந்த மாலையைப் போலவே, இதயத்திலும் ஏதோவோர் மாலை தொங்குவது போன்றதோர் உணர்வு.கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அறையில் வைத்து விட்டு, மரண வீட்டிற்குச் சென்றேன். இறந்த குழந்தையின் உடலைத் தூக்கிச் சென்ற தோள்களில் என் தோளும் ஒன்று.
அவர்களின்  துக்கத்தில் பங்கேற்றது, எனக்கோர் ஆத்ம திருப்தியைத் தந்தது. மீண்டும் அறைக்கு வந்து, குளித்துவிட்டு, மாலையைப் போட்டுக் கொண்டேன். அப்போது அறைக்குள் நுழைந்தான் நான் “தம்பி‘ என்று பழகிய பழனி.
“ ஐயோ ! இதென்ன அநியாயம் ? சாமிகுத்தம் பொல்லாதது” என்று சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறிவிட்டான். பிறகு இரண்டு,மூன்று தினங்களாக என் அறைப் பக்கமே அவன் தென்படவில்லை. நானே ஒரு நாள் சத்தமெழுப்பிய பிறகு என் முன் வந்தான்.
“ என்னடா…. ஆளையே காணலை” என்று நான் கேட்க, “ கோயில்ல போய் ஒரு பூசாரிகிட்ட இப்படி மாலையக்கழற்றி வெச்சுட்டு மரண வீட்டுக்குப் போய்வந்துட்டு மறுபடியும் மாலையப்  போட்டுக்கலாமான்னு” கேட்டேன். அவரு,”" அப்படி பண்ற ஆளு பெரிய பாவி. அவனுக்கு என்னாகும்னு பாரு…நீ அவனோட மலைக்குப் போனா, உனக்கும் அந்தப்  பாவம் வந்துடும்” னு சொன்னாரு.அதனால நான் உங்களோட சபரிமலைக்கு வரலை” என்று சொல்லிவிட்டு, அனல் உலையில் அகப்பட்டு வெளியேறுபவனைப் போல விறு விறு வென்று என்னறையிலிருந்து வெளியேறி விட்டான்.
சும்மா கெடந்தவனை மாலையும் போட்டு, என் சொந்தச்  செலவிலேயே மலைக்குக் கூட்டிச் செல்லலாமென்றிருந்தவனின் மனத்தில் ஐதீகத்தின் ஆளுமை எந்த அளவு இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நினைத்துத் திடுக்கிட்டேன்.
எனக்கே தெரியாது,நான் செய்தது சரியா… பிழையா என்று. இதில் அவனெடுத்த முடிவைப் பற்றி நானென்ன பிழை சொல்வது?
என் குழுவினர் பத்து பேரும் சேர்ந்துகொள்ள ஒரு வேனில் சபரிமலை செல்ல ஆயத்தமானோம். புறப்படும் நாளும் வந்தது. வரிசையாகக் குருசாமி முன்னால் சாமிகள் இருமுடிகள் கட்டிக் கொண்டிருந்தனர். என் முறையும் வந்தது. என் இருமுடியில் தேங்காயில் நெய் ஊற்றி, உள்ளே வைத்து இறுகக்கட்டி,”" சாமியே சரணம் அய்யப்பா” என்ற சரண கோஷத்துடன் இருமுடியை என் தலையில் வைத்தபோது, இடி விழுந்தது போலொரு முழக்கம். நான் தங்கியிருந்த லாட்ஜின் நுழைவாயிலில் போட்டிருந்த தகரக்கூரை உடைந்து விழுந்திருந்தது.
அனைவரும் இருமுடிகளைக் கீழே வைத்து விட்டு என்ன நடந்ததென்று பார்க்க ஓடினோம். “நம்ம பழனி‘ தகர கொட்டாயின் கீழே விழுந்து கிடக்கிறான். அவனுடைய கை உடைந்திருக்க, உடம்பெங்கும் இரத்தச் சிராய்ப்புகள்.அவன் உடம்பில் ஆங்காங்கேயிருந்து இரத்தம் பீறிட்டு வர, ஓடிப்போய் அவனை நான் தூக்கினேன். 
நாங்கள் மலைக்குச் செல்ல இருந்த வேனிலேயே அவனை ஏற்றிக் கொண்டுபோய்ச்  சைதாப்பேட்டையிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.முதலுதவி அளிக்கப்பட்டது. லேசான மயக்கத்தில் இருந்த அவனிடம் கேட்டேன்…”"என்னாச்சு பழனி? ”
“ நீங்க சபரிமலைக்குப் போக மாட்டீங்கன்னு அந்த பூசாரி சொன்னதை நினைச்சுகிட்டு.. இன்னமும் உங்களுக்கு ஒண்ணுமே ஆகலை யேன்னு ரெண்டாவது மாடியிலிருந்து, எட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன்.கொஞ்சம் அதிகமாகக் குனிஞ்சிட்டேன் போலிருக்கு.. அப்படியே விழுந்திட்டேன்..” என்று அவன் சொல்ல, எனக்கு அழுவதா… சிரிப்பதா…? பெருமைப்பட்டுக் கொள்வதா? அல்லது அவனின் செய்கை சிறுமையானதா? என் அறிவுக்கு எட்டவில்லை.
“சரி, நடந்து விட்டது. உனக்கு நான் சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறேன், உன் சிகிச்சைக்கும் சேர்த்து. நீ நினைக்கறபடி நல்ல சாமியாரோட மலைக்கு வா” என்று, அவன் மருந்து, மாத்திரைக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு, நாங்கள் மலைக்குக் கிளம்பினோம்.சென்று விட்டு சுகமாகத் திரும்பினோம். ஆனால் காயங்களின் கடும்தன்மை காரணமாக, பழனியால் அப்போது சபரி மலைக்குச் செல்ல முடியாமல் போனது.
இப்போதும் குழந்தை குட்டிகளோடு என் வீட்டிற்கு அவனும், அவன் வீட்டிற்கு நானும் வந்து செல்லக் கூடிய குடும்ப நண்பர்கள் நாங்கள். தற்போது, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. இராஜீவ் மேனன் அவர்களிடம் பழனி ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார்.
அப்புறம், எனக்குத்  திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்துவிட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம்.மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள்போலப் பழகிக் கொண்டிருந்தோம்.
1991ஆம் ஆண்டு நான் 10 வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று… கிறிஸ்துமஸ் நாள்.  வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்குள் வந்திறங்கும்.
அவ்வருடம் நான் விரதமிருந்து கொண்டிருந்த வேளையிலும் அச் சிறுவனை நோக்கி விளையாட்டாக, “இன்னைக்கு எங்க வீட்டுக்குச் சிக்கன் பிரியாணியா… மட்டனா?” என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், “ நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்துடுவீங்க… நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ணவேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க.”
“ சாமியே சரணம் அய்யப்பா!” என்று கோஷமிட வேண்டிய இதயம்,
“சாமியே சரணம் ஏசப்பா!”என்று கோஷ மிட்டது.
எப்போதும் என் நெற்றியில் இடம்பெற்றிருக்கும் சந்தனமும் குங்குமமும் சிறு வயது முதல் உள்ள பழக்கத்தினால் வைத்துக் கொள்கிறேனேதவிர, வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது !
 
 சொல்லத்துடிக்குது மனசு

குடியைக் கெடுக்கும் கடன்


Credit Cards on a White Background
கடன் அட்டை
கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு பத்து ரூபாய் கடன் வாங்கவேண்டுமென்றாலும் மொத்தக் குடும்பமே வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து – கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான் கடன் கிடைக்கும்எனும் நிலை இருந்தது. அதனடிப்படையில் கடன் கொடுத்தவர்கள் காலப்போக்கில் அந்தவெற்றுப்பத்திரத்தில் தாம் விரும்பிய வகையில் எழுதி, கடன் பெற்றவர்களின் வீடு – நிலபுலன்களையும் அநியாயமாக அபகரிப்பாகர்கள். இப்படி இழந்த குடும்பங்கள் எத்தனைஎத்தனையோ! இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில்கூட காலனிகள், சேரிகள், பிளாட்பாரங்களில் வாழ்ந்து – தொழிலும்செய்து பிழைப்பவர்கள்கூட ‘தண்டல்கடன் மூலம் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். வாங்கும்கடனுக்கு மாதவட்டியாக 10 வீதமும், இன்னொருவகையில் தினந்தோறும் செலுத்தப்படும் முறையின்மூலம் மாதத்திற்கு 30 வீதவட்டியும் கட்டிவருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத கணக்காகும். தண்டல் கடன் வாங்காத சேரி, காலனி மக்களோ, பிளாட்பார, நடைபாதை, நடைவண்டி வியாபாரிகளோ இல்லை எனும் அளவு அவர்களின் சமூகப் பொருளாதாரத்தைக் கடன்கள் நீக்கமறச் சூறையாடி வருகின்றன.
இத்தண்டல் முறைக் கடன் அரசினால் தடைசெய்யப்பட்டதும் மீறினால் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். ஆனால், அதிகமாக உள்ள சட்டப்பிரிவுகளில் அதிகம் மீறப்படுவது இந்தச்சட்டம்தான் என்பது புள்ளி விவரம். இச்சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மிகமிகக் குறைந்த அளவினர் கூட இல்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். இதற்கு மிகமிக முக்கியமான காரணம், இந்தத் ‘தண்டல்’ தொழிலில் ஈடுபட்டுவரும் அநேகம்பேர் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருந்துகொண்டு அவர்கள் செல்லும் கார்களில் கட்சிக்கொடியை மாட்டி, பாதுகாப்பைத் தேடிக் கொள்வதுதான்.
தண்டல்காரர்களிடம் கடன் பெற்றுத் திருப்பிக்கட்ட முடியாமல் மனைவியையும் மகள்களையும் இழந்த குடும்பங்களும் உள்ளன என்பது வெட்கக்கேடானது. அது மாத்திரமில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதும் பரபரப்பான செய்திகளாக அரங்கேற்றப்படாமல் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் முன்னேற்றம், சமூகத்தின் வளர்ச்சி என்பதெல்லாம் 20% வீதமக்களுள் நடைபெறும் பரமபத விளையாட்டு மட்டுமே. 80% வீத மக்களின் நிலைமை எல்லாவகையிலும் கேள்விக்குறியே. இப்படியான பழைய பேய்களைச் சமாளிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், தற்போது புதியப் பேயாகக் கடன் அட்டைகள் நுழைந்துள்ளன. 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட இளைய தலைமுறையினர் அதை எப்படிக் கையாள்வதென்றே தெரியாமல் பல கடன் அட்டைகளைப் பெற்றுத்தம் குடும்பத்தை விழிபிதுங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சம்பளப்பணம் வட்டியாகவே பறிபோகிறது.
credit1
கடன் அட்டை


ரொக்கமாக நூறுரூபாய் கொடுத்தால் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை, கடன் அட்டை உபயோகித்து வாங்க முன்னூறு ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இப்படிப் பலவகைகளிலும் தங்களது உழைப்பையும் ஊதியத்தையும் இழக்கிறார்கள்.
கடன் அட்டையைக் கன்னாபின்னா என்று பயன்படுத்திவிட்டு, அந்தப்பணத்தைக் கட்டாமல் இருப்பவர்களின் வீடுதேடி வங்கிக்காரர்கள், வசூல் என்ற பெயரில் குண்டர்களை அனுப்ப, கடன்அட்டை வாங்கியவர்கள் ஓடிஒளிந்து, வேலையும் பறிபோய், குடும்ப நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். என்னிடம் பணியாற்றுபவர் எவரும் சீதனம் வாங்கமாட்டார்கள்; கடன் வாங்க மாட்டார்கள். தமது ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, செலவினங்களையும் சேமிப்பையும் வரையறுத்து வாழ்ந்து உயர்ந்து வருகிறார்கள்.
பலர் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது கடன் வாங்காமல் முடியாதே என்ற ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதன் காரணமாகவே அடமானம் வைத்துக் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு, கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் ஏற்படும் அவமானங்களையும், அவலங்களையும் சுமக்கிறார்கள். அத்துடன், திருமணம்மூலம் இவ்வளவு கடன் சுமையாகிவிட்டதே எனமணமக்கள் பரிதவித்து, இல்லற அமைதியைச் சீர்குலைவு செய்து கொண்டவர்கள் ஏராளம். திருமணச் செலவென்பது மொய் எவ்வளவு வரும் என்பதை அளவுகோலாகக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வேதவிர வேறொன்றுமில்லை.
எங்களுக்கான சம்பிரதாயமுறையும் காலம்காலமாக அதனையே சொல்லிவருகிறது.
பொதிகையில் ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியினை நான் நடத்தி வந்தபோது ஒரு பெண்மணியைப் பேட்டிக் காண நேர்ந்தது. அவர் ரூ. 600 சம்பளத்திற்கு ஒரு சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வருபவர். அவரது கணவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. கையில் கிடைக்கும் பணத்தையெல்லாம் மதுவுக்கே செலவழித்துவிட்டு மயங்கிக்கிடப்பவன். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.
முதல்பெண்ணுக்கு 20 வயது, இன்னொன்றுக்கு 18 வயது, கடைசிப்பெண்ணுக்கு 16 வயது. எப்படித்தம் பெண்களைக் கரையேற்றப் போகிறோம் என்றதவிப்பு அந்தப்  பெண்மணிக்கு. வரன் கிடைத்தாலும் அவர்கள் கேட்டதும், கல்யாணச்செலவுக்கும் சேர்த்து 12 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக ஆரம்பத்தில் தெரிவது தண்டல் வட்டிக்காரர்கள்தான்
.
கை நீட்டுகிறாள்.
கடன் கேட்கிறாள்.
கிடைத்து விடுகிறது.
பெருத்த வட்டி.
இதைப்பற்றிக் கவலைகொள்ளும் நிலையில்அவளில்லை.
அவள் முதல்மகளின் திருமணம் சுற்று வட்டாரம் மெச்ச, நடந்தேறுகிறது. வாங்கிய கடனுக்கு  வட்டிகூடக் கட்டமுடியாமல் மாதங்கள் உருள்கின்றன. ஆறு மாதங்களைத் தாண்டிவிட்டதால் தண்டல்காரன் பொறுமை இழந்து போகிறான். அவனது நடவடிக்கைகள் பயத்தை வரவழைப்பதாக மாறிவருகிறது. இன்னும் இரண்டு பெண்களைக் கரையேற்ற கையில் வைத்துக்  கொண்டிருக்கும் பதைப்பு ஒருபுறம். கட்டவேண்டிய கடன், வட்டியுடன் சேர்ந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த விட்ட திகில் மறுபுறம். விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்… எடுத்துவிட்டாள், தற்கொலை செய்துகொள்வது என்று. ஆனால் விதி, பக்கத்து வீட்டுப்பாட்டி உருவத்தில் வந்து கடனை அடைக்க வழிகாட்டியது. புரோக்கர்மூலம் ஒரு மருத்துவ மனையில் தனது கிட்னியை விற்றுக் கடனை அடைக்கநேரிட்டது.
பாவம்! இன்னும் மூச்சிரைக்க, நடக்க முடியாமல் சத்துணவுக் கூடத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு, பாதி உயிரோடு வாழ்ந்து வருகிறாள்.
ஜப்பான் நாட்டில் ஒருவர் கடன் அடைக்காமல் இறந்து போனால் கடன் கொடுத்த அனைவரும் ஒரு வேனில் வந்து அவர் வீட்டுக்கு முன்னால் காரில் பொருத்தியிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அவர் கடன் தொகையை அறிவிப்பார்கள். அந்தக் கடனை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் பிணம் அடக்கம் செய்யப்படும்.
போர்க்களத்தில் சகோதரர்கள், சொத்து, சுகம், நாடு என அனைத்தையும் இழந்து நிற்கிறான் இராவணன். கோபலகிருஷ்ண பாரதியார் தாம் எழுதிய இராமநாடகக் கீர்த்தனைகள் என்ற நூலில்
“கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்று குறித்துள்ளார்.
அப்படியானால் கடன் எவ்வளவு கொடுமையானது என்பதை இதைவிட எவர் சொல்லிவிட முடியும்?
உலகிலேயே மிகப் பெரியதுன்பமாக  இராமாயணம் கடனைத்தான் குறிப்பிடுகிறது. கடன் பட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனநிலையிலுள்ள மனிதர்கள் காலப்போக்கில் கடனுக்காக ஏந்திய கைகளைப் பிச்சைக்காக ஏந்தி நிற்பார்கள்.
இதில் இன்னொருவகை, நன்றிக்கடன். இதனால் புழுங்கி வாழ்ந்து வரும் எத்தனையோ மேதைகளை, வெற்றியாளர்களை நான் அறிவேன். இன்றைய மிகப்பெரிய இசையமைப்பாளர் 30 வருடங்களுக்கு முன்னால் வெடித்துக் கிளம்பிய இசை ஞாயிறு. அவர் வெற்றி அடைந்தவுடன் ஒரு பாடகி, பத்திரிகையொன்றில் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்..
.
“இவர்கள் சோற்றை மாத்திரம் அவித்து வைத்து விட்டுச்  சாம்பாருக்கும் ரசத்திற்கும் எங்கள் வீட்டிற்கு வந்து தட்டேந்தியவர்கள்”
இவ்வாறான அவமானங்கள் பல பேரது வாழ்க்கையில் கூனிக்குறுக வைத்துக் கொண்டிருக்கிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்கள். ‘பிச்சையிடுபவனை அறிந்து பாத்திரம் ஏந்து’ என்பதை வாழ்வில் புரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகள் கடன் தருகின்றனவே… பெற்றுக் கொள்ளக்கூடாதா என்ற நினைப்பு தேவையில்லை. அவைதகுதி அடிப்படையில் தரப்படும் மூலதனமாகும். வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் என்று வங்கிகளிடமிருந்து கடன்பெற்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் உரிமை பெற்றவர்கள்தான்.வங்கிகளில் பெறும் கடன் அட்டைக்கடன், தனிப்பட்ட கடன்களைக் கட்டாவிட்டால் அப்புறம் அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேறுகடன்அட்டை, தனிப்பட்டகடன் மாத்திரமல்லாது வீட்டுக்கடன், வாகனக்கடன், வர்த்தகக்கடன்கூடக்   கிடைக்காது என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்றே ஒன்றுதான்.
நாணயம் தவறாமல் இந்தக்கடன்களைத் திருப்பிச்செலுத்தினால் வங்கிகளைவிட வேறு எந்தப்பெரிய மனிதனும் உங்களுக்கு உதவிவிட முடியாது.
வங்கிக்கடன், தோழமை கொண்டமூலதனம்.  நன்றிக்கடன், தேள்கள்கொட்டும் ஆறாரணம்.


Wednesday, 6 November 2013

ஒரு பெண்ணின் பார்வையில் காதலை....

இது நிகழாது இருந்திருக்கலாம் - எனது (முதல்) பார்வையில்
காதல் காலந்தோறும் கவிஞர்களையும் கவிதைகளையும் வாரி வழங்கி வந்தாலும் பெண் கவிஞர்களை குறைவாகவே உருவாக்கி வந்திருக்கிறது. இது, காதலில் உருகுபவனும் சரி, காதல் தோல்வியில் வாடுபவனும் சரி அது ஆணாகத் தான் இருக்க முடியும் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது. பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது, அவர்கள் காதல் உணர்வும் ஆண்களுக்கு சளைத்தது அல்ல என்பதை பொதுவெளியில் பெண்கள் கவிதையாக பகிர்வதில் ஏனோ ஒரு சுதந்திரமான சூழல் இன்னும் இங்கு உருவாகவில்லை. 
இருப்பினும், அங்கொருவர் இங்கொருவராக பெண்களும் காதல் குறித்த தங்கள் உணர்வுகளை கவிதைகளாக வடித்து வருவதை படிக்கும் வாய்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நமது அனைவருக்கும் பரிட்சயமான தமிழ்ச்செல்வி அக்கா எழுதிய "இது நிகழாது இருந்திருக்கலாம்" கவிதைத் தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்ச்செல்வி
இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பார்வையில் காதலைச் சொல்லும் ஒரு கவிதைத் தொகுப்பு. கலையாத கனவுகள் என்று கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது எனச் சொல்வதில் இருந்து, முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம், ஊடல், காத்திருப்பு, பரிசு, குறுஞ்செய்தி, புறக்கணிப்பு, அணைப்பு, காமம் என காதலர்களுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பெண்ணின் பார்வையில் பெண்ணே சொல்வதால் வார்த்தைகள் யாவும் இயல்பாக பெண்ணின் உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளது.

கவிதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலின் ஏதாவது ஒரு படிநிலையை, மகிழ்வை, வருத்தத்தை என ஏதாவது ஒரு உணர்ச்சியை பிரதிபலிப்பதாக இருந்தாலும் நான் அதிகம் இரசித்த ஒரு கவிதையின் வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

குறுஞ்செய்தி என்னும் கவிதையில் வரும் வரிகளான
என்னால் அனுப்பப்படுகிற
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் கவனம் உன்மேல்
என உறுதிபடுத்தத் தான்
பதில் வராத போதும் கூட
நான் நினைப்பதுண்டு
என் நினைவுக் கரைதலில்
நீ குறுஞ்செய்தியை
பார்க்க மறந்தாய் என்று.
என்பது காதலர்களின் இயல்பான மனநிலையான புறக்கணிப்பையும் காதல் என உருவகப்படுத்தும் தன்மையைக் காட்டுமிடத்தில் கவிஞராக/காதலராக நம் மனம் கவர்கிறார் ஆசிரியர்.

அதே கவிதையின் இறுதியில் முத்தாய்ப்பாய்
நம்பிக்கை ஒன்றில் தான்
காதலின் விதை
ஆழப் பதியப்படுகிறது
விருட்சமாய் உருமாற...
என்ற வரிகளில் காதலைப் பற்றிய தனது பார்வையை தெளிவாக எடுத்துரைக்கும் இடத்திலும் கவிஞர் மனம் கவர்கிறார்.

இந்த கவிதை மட்டுமல்ல கவிதைத் தொகுப்பில் இருக்கும் நாற்பத்தைந்து கவிதைகளிலும் இப்படி பெண்ணின் பார்வையில் காதலைக் காணுமிடத்து மனம் அந்த உணர்வுகளை எளிதில் உள்வாங்கி இரசிக்க முடிகிறது.
பல கவிதைகள் நன்றாக அமைந்திருந்தாலும் சில கவிதைகளை வாசிக்கும் போது இன்னும் சற்று இக்கவிதையை மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தாலும் கவிஞருக்கு இது முதல் கவிதைப் புத்தகம் என்பதால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்; என்றாலும் வரும் படைப்புகளில் இன்னும் மேம்பட்ட அதே சமயம் கவிதை என்னும் போர்வாளை காதலுக்குள் மட்டும் அடைக்காது சமுதாயத்தின் அவலங்களையும் சீர்கேடுகளையும் சாடியும் சமகால சமூக நிகழ்வுகளை பிரதிபலித்தும் வீச வேண்டும் என்ற கோரிக்கையை கவிஞருக்கு முன்வைத்து இன்னும் பல கவிதை புத்தகங்களை எழுத வாழ்த்தி அமரும் அதே வேளையில் கவிஞராய் தமிழ்ச்செல்வி அக்கா மென்மேலும் பல உயரங்களைத் தொட இறையருள் என்றும் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
PRASATH