இ.தே.ஏ 11
6.வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே
மனித வாழ்க்கை பல விசித்திரங்கள் நிறைந்தது. குறைகள் ஏதுமற்ற நிலையில் எண்ணற்ற மனிதர்கள் பிறந்தாலும், அவர்களது வாழ்க்கை ஒரே மாதிரி அமைவதில்லை. எண்ணங்கள் மாறுபடுவதால் செயலாக்கமும் அதன் காரணமாக வாழ்க்கை நிலையும் மாறுபடுகின்றன. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே என்று பெற்றோர்களுக்காக சில கடமைகள் இருந்தாலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனது நண்பர்களின் பங்கும் மகத்தானது. நல்ல நண்பர்கள் ஒருவனை நல்வழிப்படுத்தும். தீய நண்பர்கள் அவனைத் தீங்கில் வீழ்ந்து மானம், மரியாதை இழக்கச் செய்து விடுவர். நண்பர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை யார் முடிவு செய்வது? தனிமனிதர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றாலும் உடனிருந்தே உயிர்கொல்லும் நோய் போல நண்பர்கள் சவகாசம் ஒருவனது வாழ்க்கையை மாற்றி அமைக்க வல்லது என்பதில் ஐயமில்லை.
கணேசனது வாழ்க்கையில் அப்படிப்பட்ட நட்புக்கும் இடமிருந்தது. 1962-ம் வருடம் பொதுப் பணிதுறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசன் ஆவுடையார் கோவில் என்ற இடத்திலிருந்து தஞ்சை மாவட்டம் பேரளம் என்ற ஊருக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். நன்னிலம் தாலுக்காவில் உள்ள பேரளம் ஒரு சிற்றூர். காவிரியின் கிளை நதிகளான நூலார், மஞ்சளார், நண்டலார், வீரசோழன் போன்ற ஆறுகள் அருகாமையில் ஓடுகின்றன. பொதுப் பணிதுறையில் நிரந்தரமானப் பணிகளைக் கவனிக்க காவிரி, வெண்ணாறு போன்ற கோட்டங்கள் இருந்தாலும் பருவ காலங்களில் ஏற்படும் சில வெள்ளப் பெருக்குகள் போன்றவற்றைக் கவனிக்கத் தற்காலிகக் கோட்டங்கள் அவ்வப்பொழுது தோன்றி மறைவதுண்டு. பேரளத்தில் அப்பொழுது, நிரந்தரப் பிரிவு, வெள்ளப் பெருக்குப் பிரிவு மற்றும் சீரமைப்புப் பிரிவு என மூன்று விதமான அலுவலகங்கள் இருந்தன. இதில் கணேசன் வெள்ளப்பெருக்கு பிரிவில் பிரிவு அலுவலராக பணிமாற்றம் பெற்றிருந்தார். அப்பொழுது சீரமைப்புப் பிரிவில் பிரிவு அலுவலராக இருந்தவர் திருநாவுக்கரசு என்பவர். பணியின் காரணமாக இவர்கள் சந்திப்பதுண்டு.
மாறுபட்ட குணங்கள் ஒன்று சேர்த்த நட்பு.
திருநாவுக்கரசு விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள பெண்ணாடம் என்ற ஊரைச்சேர்ந்தவர். சாதாரணக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். உடன்பிறந்த இரண்டு தங்கைகள் பள்ளிப் பருவத்தில் படித்துக் கொண்டிருந்தனர். பேரளத்தில் தனியாக வீடு பார்த்து அங்கு தங்கைகள் மற்றும் எல்லாருக்கும் துணையாகப் பாட்டி என்று குடும்பம் இருந்தது. திருநாவுக்கரசின் தாய் மாமன் சிதம்பரத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெண்ணாடத்தைவிட சிதம்பரம் பெரிய ஊர் என்பதால் திருநாவுக்கரசு தனது மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தவர். பள்ளிப்படிப்பு முடிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பட்டப் படிப்புக்குச் சேர்ந்தார். பலரும் பாராட்டும் விதமாக B.E., (Honours) பாஸ் செய்து பொதுப்பணி துறையில் ஜூனியர் என்ஜினியர் ஆகப் பணித்தேர்வு பெற்று பேரளம் வந்திருந்தார். ஓரினத்துப் பறவைகள் ஒன்றாகச் சேருவது போல் ஒரே மாதிரியானக் குடும்பப் பின்னணியில் இருந்த கணேசனும் திருநாவுக்கரசும் நண்பர்களானது வியப்பில்லை.
இந்த நட்பில் திருநாவுக்கரசை விட கணேசனே மிகவும் பெருமிதம் கொண்டார். ஏனெனில், கணேசன் பட்டயப் படிப்பு மட்டுமே (Diploma) படித்திருந்தார். “மேலாளர்” (Supervisor) என்ற நிலையில் அவர் பணி இருந்தது. வயதிலும் படிப்பிலும் உயர்ந்தவரான திருநாவுக்கரசு எந்தவிதமானப் பாரபட்சமும் காட்டாமல் மிகவும் அன்பாகவும் அன்னியோன்யமாகவும் கணேசனுடன் பழகுவதும், அவருக்கு அலுவலக உதவிகள், அறிவுரைகள் கூறி ஊக்கப்படுத்துவதும் கணேசனை மிகவும் கவர்ந்தது. ஆனால், திருநாவுக்கரசைவிட கணேசன் இளமையும் சுறுசுறுப்பும் நிறைந்தவர். மேலும், விளையாட்டில் அதிக ஆர்வமில்லாதவர் திருநவுக்கரசு கணேசனோ, மிக மிக ஆர்வமுடன் விளையாடுபவர். இதுபோன்ற சில மாறுபட்ட குணங்கள் அவர்களை ஒன்று சேர்த்திருந்தன.
சீன ஆக்கிரமிப்பு வழங்கிய இராணுவப் பணி
1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இந்திய எல்லைப் புறங்களில் போர் மேகம் சூழ்ந்தது. சீனாவின் இந்திய எல்லைப்புற ஆக்கிரமிப்பினால் இந்திய இராணுவம் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. சுதந்திரத்திற்கு பின் கூட்டு சேராக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்ததாலும் சமாதான அணுகுமுறையினாலும் நாட்டின் பாதுகாப்பிற்குக் கொள்கைகளேப் போதும், இராணுவச் சீரமைப்புத் தேவை இல்லை என்றும் நினைத்த பிரதமர் நேருவுக்கு சீன ஆக்கிரமிப்பு ஒரு பேரிடியாகத் தலையில் இறங்கியது. போதுமான குளிர் பாதுகாப்பு உடைகள் கூட இல்லாமல் இராணுவத்தினர் எதிரிகளுக்கு இயற்கைக் கொடுமைகளுக்கும் இரையாகி ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவம் விரிவுபடுத்தப்பட்டது.
ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்தனர். நாடு முழுவதுமுள்ள மாநில அரசு ஊழியர்களில் கல்வியறிவும் வயது வரம்புக்குள்ளும் உள்ளவர்கள் இராணுவப் பணிக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கணேசனும் திருநாவுக்கரசும் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். இதற்கிடையில் கணேசன் தஞ்சாவூருக்கருகில் மெலட்டூர் என்ற ஊரில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள நீர்தேக்கும் அணைக்கு பொறுப்பேற்க மெலட்டூர் வந்துவிட்டார். இராணுவப் பணியினால் மாநில அரசில் தங்களது வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று திருநாவுக்கரசு நினைத்தார். கட்டுமானப் பணியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மாநில அரசில் கணேசன் பணியாற்ற விரும்பவில்லை. ஆகையினால் இருவருமே இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
பட்டம் பெற்றிருந்த பொறியாளர்கள் நேரடியாக பங்களூரில் உள்ள இராணுவத் தேர்வு மையத்திற்கு வரவழைக்கப்பட்டு, தேர்வில் பங்கு கொண்டனர். இதனால் திருநாவுக்கரசு உடனடியாக பங்களூர் சென்று தேர்வில் பங்கு கொண்டு வெற்றியும் பெற்றார். கணேசன் சென்னையில் உள்ள முதல் கட்ட தேர்வு மையத்திற்குச் சென்றார். அதிர்ஷ்டவசமாக கணேசனும் தேர்வில் வெற்றி பெற்றார். அது 1963-ம் ஆண்டின் ஆரம்பம். வடமாநிலத்தில் “டேராடூன்” என்ற இடத்தில் மட்டுமே இராணுவ அதிகாரிகளுக்கானப் பயிற்சிக் கல்லூரி இருந்தது. ஆனால், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஏராளமானோர் இராணுவத்தில் சேர ஆரம்பித்த பிறகு சென்னையிலும், மகாராஷ்டிரத்தில் உள்ள “பூனே” என்ற இடத்திலும் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி ஆரம்பித்தார்கள். அவசரநிலை என்றாலும் அதிகாரிகளுக்கானப் பயிற்சி முறையில் இரண்டாண்டு பயிற்சியை சுமார் 10 மாதமாகக் குறைத்திருந்தாலும் இராணுவப் பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது. பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்களின் வயது வித்தியாசம் சுமார் 21 வயதிலிருந்து 30 வயது வரை இருந்தது. படிப்பு வித்தியாசமும் சாதாரண B.A., - B.Sc முதல் M.Tech, போன்ற உயர்படிப்பு வரை இருந்தது. ஆனால், பயிற்சி எல்லாருக்கும் ஒரே மாதிரியே இருந்தது.
இதனால் உயர் வயது வரம்பில் இருந்தவர்கள் பயிற்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாநில அரசு வேலைக்குத் திரும்பி விட்டார்கள். டேராடூனில் ஆரம்பித்த ஒரு பயிற்சிப் பிரிவில் அதுபோல் அதிகம் பேர் பயிற்சி செய்யாமல் திரும்பி விட்டதால் காலி இடங்களை நிரப்ப உடனடியாக சிலர் டேராடூன் அழைக்கப்பட்டனர். திருநாவுக்கரசு அப்படி அழைக்கப்பட்டு அவர் உடனே டேராடூன் புறப்பட்டுப் போய் விட்டார். அதன்பிறகு அடுத்த பயிற்சி பூனாவில் ஆரம்பிக்கப்பட்டது. கணேசன் பூனாவில் பயிற்சியில் சேர்ந்தார்.
இளமை முதலே மிகவும் சுறுசுறுப்பாக இருந்த கணேசனுக்குப் பயிற்சிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வகுப்பறையில் படிப்பது ஒரு பங்கு என்றால் வெளியில் செய்முறைப் பயிற்சிகள் மூன்று பங்குபோல் இருந்தது. எல்லாவற்றிலும் கணேசன் சிறப்பாகச் செய்தார். 14 கி.மீ. ஓட்டப்பந்தயம், மற்றும் அதுபோன்ற ஒரு தடைகளப் போட்டி(அடுத்தடுத்து தடைகளை ஏற்படுத்தி நடத்தப்படும் @பாட்டி) போன்றவற்றில் கணேசன் பரிசுகள் வென்றார். இதனால் சுமார் 600 பேர்களடங்கிய அவரது பயிற்சி அணியில் அவர் 47-வதாக வந்து பயிற்சி முடித்தார். டேராடூனில் பயிற்சியை முடித்த திருநாவுக்கரசு இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு மற்ற பயிற்சிக்காக வந்து சேர்ந்தார். கணேசனும் தனது பயிற்சி முடிந்து அதே இராணுவக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். வகுப்புகள் தனித்தனி என்றாலும் விளையாட்டு நேரங்களிலும், மாலை வேளைகளிலும் நண்பர்கள் சந்தித்து உரையாடுவார்கள்.
பொறியாளர் பட்டதாரியான திருநாவுக்கரசின் இராணுவப் பணி ஷார்ட் சர்வீஸ் கமிஷன் என்று மாற்றப்பட்டு அவர் பயிற்சி முடிந்து ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு சென்று விட்டார். கணேசன் நெருக்கடிநிலைக் கால கமிஷன் என்ற நிலையில் அதிகாரியானார். பொறியியல் பட்டதாரியான திருநாவுக்கரசுக்கு இரண்டு வருட பணிமூப்பு கிடைத்து அவர் 1962-ம் ஆண்டு அதிகாரியானது போல் உயர்த்தப்பட்டார். பொறியியற் கல்லூரியில் பயிற்சி முடித்த கணேசன் வடகிழக்கு எல்லைப்புறம் பணிமாற்றம் பெற்று சென்று விட்டார் வெவ்வேறு இடங்களுக்குப் போய் விட்டாலும் நண்பர்களிடையேக் கடிதப் போக்குவரத்துத் தொடர்ந்தது. அதிகாரிகளான ஒரு வருடத்திற்குள் இந்திய-பாகிஸ்தானிய போர் செப்டம்பர் முதல் நாள் 1965-ம் ஆண்டு ஆரம்பித்தது. கடுமையானப் போர் நடந்த காஷ்மீர் பகுதியில் திருநாவுக்கரசு பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியாளர் பட்டப்படிப்பில் மிகவும் சிறப்பாகப் படித்திருந்த அவர் சில நாட்களுக்குள்ளாகவே எல்லைப்புற சாலையமைப்புப் பணிக்கு மாற்றப்பட்டு விட்டதால் படைப்பிரிவுடன் இருந்து போர்க்களம் காணும் அனுபவம் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், கடுமையானப் போர்க்களப் பகுதியில் சாலைப் பணியிலிருந்தார். கணேசன் வடகிழக்கு எல்லைப்புறத்தில் இந்திய-சீன போருக்குப்பின் அமெரிக்க அரசின் உதவியுடன் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த படைப் பிரிவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார்.[வளரும்]
Sir,Thank you for the invitation.It will be a great pleasure to attend your 75th year birth day function.Myself and my wife will be certainly there to seek your blessings.It seems that you are straining more to finish I.T.E (Illakaithedum) before your birthday.I would suggest that please relax and maintain your normal working schedule.
ReplyDeleteRegards and advance birthday greetings.