Monday, 15 December 2014

இ.தே.ஏ.10 :ஓர் ஆறு குறுக்கிடுகிறது

                                                                                                


                   ஓர் ஆறு குறுக்கிடுகிறது


இ.தே.ஏ.10 மனம் ஒரு நிலைப்பட வேண்டும் என்று பார்த்தோம். மனதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் மனிதன் உடலைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறக் கூடாது. ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கும் போது வழியில் ஓர் ஆறு குறுக்கிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆற்றின் கரையில் ஒரு ஓடமும் துடுப்பும் இருக்கிறது. நாம் என்ன செய்யலாம். கவலைப்படாமல் ஓடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு துடுப்பின் உதவிகளுடன் அக்கரை சேரலாம்.
அதன் பின்?

பலவிதமான விருப்பத் தேர்வுகள் நம்முன் உள்ளன. 

(1) ஓடத்தை அக்கரையில் விட்டு விட்டு நம் பயணத்தைத் தொடரலாம்
.
(2) ஓடத்தை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டுமே என்று அக்கரையிலேயே உட்கார்ந்திருக்கலாம்.

(3) வழிப்பயணத்தில் இன்னொரு ஆறு குறுக்கிட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஓடத்தையும் துடுப்பையும் தூக்கிக் கொண்டே நடந்து போகலாம்.

(4) ஆற்றைக் கடக்காமலேயே நமது பயண வழியை மாற்றிக் கொள்ளலாம்.

(5) நமது இலக்கையே மாற்றிக் கொண்டு தெற்கு நோக்கி புறப்பட்ட நாம் கிழக்கு நோக்கி நமது திசையை - இலக்கை மாற்றிக் கொள்ளலாம்.

இன்னும் யோசித்தால் பல வழிகள் தோன்றும். புத்திசாலியான மனிதன் என்ன செய்ய வேண்டும்? முதல் விருப்பத் தேர்வுதான் சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் இலக்கை நிர்ணயிக்கிறார்கள். உதாரணமாக ஒரு நல்ல வேலை. ஒரு சொந்த வீடு, நல்ல மனைவி, கணவன், நல்ல குழந்தைகள் இப்படி எல்லாருக்கும் இலக்கு இருக்கிறது. ஆனால், அந்தப் பாதையில் இடர்படும் குறுக்கீடுகளினால் நமது இலக்கு திசைமாறிப் போய் வாழ்க்கை சீரழிகிறது. இதுதான் உண்மை.

இந்த துன்பத்திலிருந்த எப்படிக் காப்பாற்றிக் கொள்வது? வைராக்கியம் வேண்டும். இலக்கு மாறாத வைராக்கியம். படிப்பதற்காகப் பள்ளிக்கோ - கல்லூரிக்கோ போகிறோம். நமது இலக்கு என்ன? புதிய நண்பர்களை சந்திப்பதா அல்லது நன்றாகப் படிப்பதா? புதிய நண்பர்கள் வழிப்பயணத்தில் குறுக்கிடும் ஆறு போல - அல்லது ஓடம் போல என்றும் கொள்ளலாம். ஏனெனில் சில நண்பர்கள் ஆறுபோல் ஒரு இடையூறாக  அமையலாம். சில நண்பர்கள் ஓடம் போல ஆற்றைக் கடந்து செல்ல உதவலாம். ஆனால், அதன் பிறகு நாம் எடுக்கும் முடிவுதான் முக்கியம். 

ஓடத்தை முதுகில் சுமந்து கொண்டு பயணம் போவது போல் நண்பர்களையும் நமது வாழ்க்கைக்குள் நுழைத்துக் கொள்ள முடியுமா? 

நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

அதுபோல் மனம் இருக்கும் இந்த உடல் நலமாக, நோய் நொடி இன்றி இருக்க வேண்டும். உடல் நன்றாக இருக்கும் போது மனம் நன்றாக இருக்க முயற்சிப்பது. ஆற்றில் நீரோட்ட திசையில் படகு ஓட்டுவது போன்றது. ஆற்றின் வேகம் படகின் வேகத்திற்குத் துணையாக இருக்கிறது. ஆனால் நோயினால் பாதிக்கப்பட்ட உடலுடன் மனதைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது நீரோட்டத்தை எதிர்த்துப் படகு ஓட்டுவது போல் போராட வேண்டும். வெற்றி பெற முடியாது என்றில்லை. ஆனால் மிகவும் கஷ்டப்பட வேண்டும்.

ஆகவே, மனம் இலக்கைத் தேடும் ஏவுகணை போல் செயல்பட்டாலும் அதை அவ்வப்பொழுது திருத்தி அமைத்துக் கொள்வது கட்டாயமாகிறது. உடலில் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் அந்தக்கரணங்களும் இன்னும் சொல்லப் போனால் உடம்பு என்ற கோவிலின் 96 தத்துவ தாத்துவீகங்களும் நமக்கு உதவி செய்யத்தான் இயங்குகின்றன. ஆனால் இந்த இயக்கத்தை நடத்துபவர்கள் தான் அவ்வப்பொழுது மாறுபடுகிறார்கள். அந்தக் கரணமாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நால்வரும் ஒருவராகச் செயல்படும் போது நாம் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுகிறோம். இந்த நால்வரும் நான்கு திசைகளிலும் நம்மை இழுத்தடிக்கும் போது நாம் தடுமாறுகிறோம். இந்த ஈர்ப்பு சக்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்குதான் வைராக்கியம் தேவைப்படுகிறது.

                                            இலக்கு என்பது எது?

“இலக்கு” என்பதற்கு “வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லலாம். நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். அதற்கு ஏற்ற அறிவும் அனுபவமும் எப்பொழுது நமக்கு ஏற்படுகிறது. பெரியோர்கள் வாழ்க்கை நியதியை பிரம்மசாரியம் - கிரகஸ்தம் - வானப்பிரஸ்தம் - சந்நியாசம் என்ற நான்கு நிலைகளாகச் சொல்லுகிறார்கள். இதில் பிரம்மசாரியம் என்ற பருவம் கல்வி கேள்விகளுக்காக ஏற்பட்டது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களும் கற்றுணர்ந்த பெரியோர்களும் காட்டும் வழியில் நடக்க முற்பட்டாலும் தானே சிந்திக்கும் திறமை பெறும் பொழுது தானே தனது வழியைத் தீர்மானிக்கிறான் ஒருவன். அந்த சமயத்தில் தான் அவன் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும்.

இலக்கு என்பது மாற்ற முடியாதது என்பதில்லை. ஒவ்வொரு நிலையிலும் ஒரு இலக்கு வேண்டும். நமது வாழ்க்கை நிறைவு பெற்றதாக எப்பொழுது சொல்லுகிறோம். பதினாறு செல்வங்களும் பெறும் பொழுது வாழ்வு நிறைவுற்றதாகச் சொல்லலாம். அபிராமி பட்டர் என்ன சொல்லுகிறார். கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், குன்றாத வளமையும், கன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும், சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும் (கணவனும்) தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும், கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் கொண்டு துய்ய நின் பாதத்தின் அன்பும் வேண்டும் என்று வேண்டுகிறார்.

இந்த செல்வங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒருவருக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும். வாழ்க்கை இனிக்காது -அந்தந்த பருவத்தில் அது அது கிடைக்க வேண்டும். இளமையில் கல்வியும், வாலிப வயதில் நல்ல வாழ்க்கைத் துணையும், நன் மக்களும், வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வும், நிறைவான வாழ்நாட்களும், தேவையான அளவு செல்வமும் வேண்டும். இதற்கு ஏற்றாற் போல் தாம் நாம் “இலக்கைத்” தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய உங்கள் நிலையை மனதில் கொண்டு அதாவது உங்களது கல்வி, உடல்நிலை, பொருளாதாரம் போன்றவற்றை மனதில் கொண்டு ஒரு இலக்கை நிர்ணயுங்கள். அது எத்தனை ஆண்டுகுள் அடையக்கூடியது- அதை அடையக்கூடிய வழிமுறைகள் - உங்களால் மட்டுமே முடியக்கூடியதா - இல்லை - பிறர் துணை தேவையா போன்றவற்றை மனதில் கொண்டு இலக்கைத் தேடும் ஏவுகணை போல் செயல்படுங்கள். ஆனால் இது நெறிப்படுத்தப்படும் ஏவுகணை போல் இருக்க வேண்டும்.

“வெற்றி பெற்ற வாழ்க்கைக்கு” நீங்கள் உதாரண புருஷராக இருப்பீர்கள் என்பதற்குச் சந்தேகமே இல்லை.                                             [வளரும்[



1 comment:

  1. Sir,
    Though I am the master of this writing,It is greatness of you to bring this to wider audience.I am wordsless to express my gratitude.I am sure the readers would be benifited.Thanks a lot.

    ReplyDelete