Wednesday, 29 April 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி -2


ஜெயகாந்தனும் நானும் 
தேவபாரதி 
ஜெயகாந்தனை நான் முதன்முதலில் சந்தித்தது 1961 ஆகஸ்டில் ஒரு நாள். தேதி நினைவில்லை. இடம் நினைவிருக்கிறது. கன்னிமாரா நூலகத்திற்குப் போக ஜெயகாந்தன் குடியிருந்த 26, எழும்பூர் ஹைரோடு வீட்டிற்கு அருகே ஒரு பின்வழி உண்டு.. அங்கு நானும் என் நண்பரும் அற்புதமான கவிஞருமான   தமிழ் ஒளியும் வந்து கொண்டிருந்தோம். ஜெயகாந்தன் தம் வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தார். தமிழொளியைப்  பார்த்து அவர் தம் ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டிக்காட்டினார். தமிழொளியும் அவ்வாறே ஆட்டிக்காட்டினார். நான் புதிர் விளங்காமல் இருவரையும் மாறிமாறிப் பார்த்தேன். 
                                                        
[‘வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம் நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’ என கேட்டு 1947லேயே கேள்வி தொடுத்தார்.தமிழ் ஒளி
‘கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியேகண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’ என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.‘காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது. இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ]



அது தான் அவர்கள் பரஸ்பரம் வணக்கம் செய்து கொள்ளும் வழக்கமான சமிக்ஞை என்று பின்னால் விளங்கியது 
சற்று நேரம் பேசியதும் "வாங்க காபி சாப்பிடுவோம்" என்று அருகில் இருந்த பங்கஜ விலாஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் சிரிக்கச் சிரிக்க அன்னியோன்னியமாக பேசிக்கொண்டிருந்ததை நான் மௌனமாகக் கவனித்தேன்.குள்ளமான பேண்டும் சட்டையும் போட்டு இன் பண்ணியிருந்த  தோற்றமும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிமிர்வும் என்னைக் கவர்ந்தன.
தமிழொளி "இவரும் எழுத்தாளர்.காலடிப்பேட்டையில் இருக்கிறார் " என்று அறிமுகம் செய்தார்.
அப்போது கூட என் சுபாவமான கூச்ச உணர்வால் அவர் யார் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை.
"வீட்டுக்கு வாங்க ஒரு நாளைக்கு" என்று கூறிவிட்டுப் பில் கொடுத்தார். நாங்கள் கூட இறங்கி நடந்தோம். 26, எழும்பூர் ஹைரோடு வீட்டைக் காட்டிவிட்டு விடை பெற்றார். 
"இவர் யாருங்க?" என்று அவர் விடைபெற்றபின் நான் கேட்டேன்.
"அட.. உனக்குத் தெரியும்னு நெனச்சேம்பா!" என்று வியந்து விட்டு "இவர் தாம்பா ஜெயகாந்தன்" என்றார்.
அப்போது நான் சந்தித்த மனிதர் மீது ஏற்கெனவே இருந்த மதிப்பு கூடியது. 
அது சரஸ்வதி பத்திரிகையில் அவர் எழுதிய கதைகளைப் படித்ததாலும் அவர் அந்தப் பத்திரிகையில் சென்னைக்கு வந்தேன் தொடர்ப் பகுதியில் அவர் தம் அனுபவத்தை எழுதியதாலும் உண்டான மதிப்பு. 
அடுத்த வாரமோ அதற்குப்பின்போ நான் அவரைச் சந்தித்தேன். அந்த வீட்டின் முன்பகுதியில் எதிர் எதிராக இரு குறுகிய திண்ணைகள். உட்கார்ந்து பேசினோம் ..பேசிக்கொண்டே இருந்தோம்.சாப்பாட்டு நேரம் வரவே அவரது தாயார் வந்து "காந்தா, சாப்பிட வாப்பா" என்று அழைத்தார்.
"இதோ இவரும் என்னோட சாப்பிட வருவார்" என்று அறித்தார். 
"அதுக்கென்ன.. வரட்டுமே!" என்று அன்போடு கூறிவிட்டு அவர் உள்ளே சென்றார். 
இப்படித் தொடங்கியது எங்கள் நட்பு. 
பின்னாளில் அது படிப் படியாக வளர்ந்து அவரது நெருங்கிய வட்டத்தில் நானும் ஒருவனாகுமளவு  வளர்ந்தது. பல கருத்துவேற்றுமைகள்.  முகத்தில் அடித்தாற்போல் பேசும் அவரது வெளிப்படையான பேச்சு இவற்றினால்  எங்கள் நட்பு பாதிக்கப்படவில்லை. 
1961 டிசம்பரில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முத்திரைக் கதையாக வெளிவந்து பிறரால் கவனிக்கப்படும் அந்தஸ்து எனக்குக் கிட்டியது.
"நான் தான் உங்க பேரிலே எழுதறேன்னு விகடன் துணை ஆசிரியர் மணியன் நினைக்கிறார். நீங்க  போய் அவரைப் பார்த்துட்டு வாங்க" என்று அருகாமையில் இருந்த  மணியனின் சேட் காலனி வீட்டுக்குப் போய்ப் பார்க்கச்சொன்னார். மணியனுக்கும் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அடிக்கடி எழுதுங்கள் என்று உற்சாகப் படுத்தினார்.
அவர் உன்னைப் போல் ஒருவன் படத்தை எடுக்கும்போது "பாரதியார், நீங்க தான் இதற்கு ப்ரொடக்ஷன் மேனேஜர்" என்றார்.எனக்கு மறுக்கத் தோன்றவில்லை. எனக்கும் வேலை இல்லாத காலம் அது. கம்பெனிக்கு ஆசிய ஜோதி பில்ம்ஸ் என்று பெயர் வைத்தார்கள் . படம் வளர்ந்து வெளியிடப்பட்டு வரலாறாகியது .அடுத்து யாருக்காக அழுதான். அந்தப்படத்திலும் என் பங்கேற்பு தொடர்ந்தது.அது வெற்றி பெறவில்லை. எனினும் ஜெயகாந்தனின் செல்வாக்கு உயர்ந்தது. அதன் காரணமாக  ஒரு டாகுமெண்டரி தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது . எங்கள் நட்பில் ஒரு சிறு விரிசல் விழுந்தது .இரண்டு ஆண்டுகள் நான் அவரைச் சென்று காணவில்லை. 
நண்பர் ஜெயகாந்தனின் ஆசிய ஜோதி பிலிம்ஸில் நான் பணியாற்றிய போது யாருக்காக அழுதான் என்ற படத்தில் என்னோடு வேலை செய்த டைரக்டர் K.சுப்பிரமணியத்தின் இளைய குமாரர் ரமணனும்எடிட்டர் K.செல்வராஜூம் எனக்கு நண்பர்களாயினர்அவர்கள் ஒரு படமெடுக்கிற முயற்சியில் இருந்தனர்.
அபிராமபுரத்தில் சுடர்க்கொடி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியிருந்தார்கள்தங்குவதற்கு இடமும்வேலையுமில்லாமல் இருந்த நான் செல்வராஜை போய் சந்தித்தேன்.
பாரதியார் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்ஓரிரு மாதத்தில் நான் படத்தை ஆரம்பித்து விடுவேன்அதுவரை நீ இங்கேயே தங்கிக்கொள்ளலாம்சாப்பாட்டை நான் கவனித்துக்கொள்ளுகிறேன்.
அவர் சொன்னவாறே இரண்டு மாதங்கள் கழித்து, T.R.மகாலிங்கத்தையும்சௌகார் ஜானகியையும் வைத்து ‘திருநீலகண்டர்’ என்ற படத்தைத் தயாரித்தார்நான் நிர்வாகம்.
அந்தச் சமயங்களில் திருப்பூரிலிருந்து எங்கள் அலுவலத்துக்கு வந்து போயிருந்த சின்னராமலிங்கம் என்பவர் எனக்கு நண்பரானார்.
பேச்சுவாக்கில், "பாரதியார் நானும் கூட ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன்ஆனால் பணம் என்னிடம் கிடையாதுவீட்டுப் பத்திரத்தை வேணுமானால் அடகு வைத்து படம் எடுக்கலாம்பிறகு மூட்டுக் கொள்ளலாம்!" என்றார்.
அப்போது நான் ‘சத்திரமும் சபிக்கப்பட்டவர்களும்’ என்று கைவசம் ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன்
இதைப் படம் எடுக்க முயற்சிக்கலாமே என்ற யோசனையில் எனக்கும் செல்வராஜுக்கும் பொதுவான நண்பராக இருந்த தனசேகரிடம் இது குறித்துப் பேசினேன்தனசேகர் சொன்னார்என் மாமா ஒருவர் இருக்கிறார்அவர் சினிமா சம்பந்தப்பட்டவர்அவர் மூலம் பைனான்ஸ் ஏற்பாடு செய்து கொள்ளலாம்முதலில் நாம் ஒரு அலுவலகத்தைத் திறப்போம்அப்புறம் சின்னராமலிங்கத்தின் பத்திரத்தை வைத்து மாமா மூலம் பணம் ஏற்பாடு செய்துகொள்வோம்ஆபீஸ் ஆரம்பிப்பதற்கு நான் பத்தாயிரம் தருகிறேன் என்றார்.
நானும் நண்பர் தனசேகரும் கையில் பத்தாயிரத்துடன் அலுவலகம் தேட ஆரம்பித்தோம்.
ஆழ்வார்பேட்டைராமசாமி நாயக்கன் (இப்போது ராமசாமி தெருதெருவில் 46ம் எண்ணுள்ள ஒரு வீட்டின் மாடி காலியாக இருக்கிறது என்று சொன்னார்கள்போய் பார்த்தோம்எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதுஅந்தத் தெரு மௌபரீஸ் ரோட்டை ஒட்டி இருந்த சின்னத் தெருஇந்தத் தெரு தொடங்கும் இடத்தில் ஓர் அழகிய பிள்ளையார் கோயில்கவிழ்ந்த நிழல் பரப்பி நிற்கும் பெரிய அரசமரம் கோயிலுக்கு குடை பிடித்து நிற்கும்மாதவாடவை 130 ரூபா இரண்டுமாக வாடகை முன் பணம்கையில்தான் பணம் இருக்கிறதே!
.நானும் தனசேகரும்படத்தை இயக்கப் போகிற நண்பர் K.விஜயனும்தன சேகரின் மாமாவும் போய் எங்கள் கம்பெனிக்கு நாங்கள் சூட்டியிருந்தஅம்மா புரடக்ஷன் என்ற பெயர் பலகை வைத்துப் பூசை போட்டோம்.
மறு நாள் காலை 10 மணிக்கு நாங்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்தோம்அலுவலகத்துக்கு சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது.
ஆகவே தனசேகரின் காரில் பாண்டி பஜாருக்குப் போனோம்அகஸ்மாத்தாக எனது நண்பர் ஜெயகாந்தனை அங்கே சந்தித்தேன்.
ஆசிய ஜோதி பிலிம்ஸ் சார்பில்உன்னைப் போல ஒருவன்யாருக்காக அழுதான்என்ற படங்களுக்குப் பிறகுஅரசாங்கத்துக்காகநேற்று – இன்று – நாளை என்கிற டாக்குமென்ட்ரியை நாங்கள் தயாரித்த போது ஒரு சிறு மன வருத்தத்தில் அங்கிருந்து நான் ஜெயகாந்தனைப் பிரிந்து நான் வந்துவிட்டேன்.
அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது தான் பாண்டி பஜாரில் நான் ஜெயகாந்தனை சந்திக்கிறேன்.
"எங்கே பாரதியார்இங்கே?" என்றார் ஜே.கேஒரு படம் எடுப்பதற்காக ஆபீஸ் எடுத்திருக்கிறோம்சில சாமான்கள் வாங்குவதற்காக இங்கே வந்தேன்.
ஆபீஸ் எந்த இடம்?
ஆழ்வார் பேட்டை ராமசாமி நாயக்கன் தெருவில்
ஒரு நாளைக்கு வாருங்கள் ஜே.கே
வர்றேன் பிறகு எங்கள் வேலையாக நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன்
பாண்டி பஜாரில் எங்கள் வேலையை முடித்துக் கொண்டு எங்கெங்கோ எங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இரவு நாங்கள் அலுவலகம் போய் சேர்ந்தோம்.
அங்கிருந்த சில தோழர்கள் வந்து சொன்னார்கள். "உங்களைப் பார்க்க ஜெயகாந்தன் வந்து போனார்".
அன்றைக்கேஅவர் வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் காலையில் தான் அவருக்குப் போன் செய்தேன்.
"ஜே.கேநான் நேற்று வருவதற்கு இரவாகிவிட்டதுநீங்கள் வருவது தெரிந்திருந்தால் நான் இருந்திருப்பேன்."
"நாளைக்குப் பதினொரு மணிக்கு இருப்பாயா?"
"வாங்க ஜே.கே நான் இருக்கிறேன்".
மறுநாள் காலை அவர் சொன்ன மாதிரியே பதினொரு மணிக்கு வந்துவிட்டார்.
எங்கள் அலுவலகத்துக்குக் கீழே மோகன் என்பவரின் டீக்கடைமேலே இருந்து குரல் கொடுத்தால் போதும்.
நான் டீ சொன்னேன்.
நாங்கள் டீ சாப்பிட்டவுடன்நான் ஏற்கனவே தீர்மானித்தபடி ஜே.கே.யின் கையில் ஒரு சாவிக் கொத்தைக் கொடுத்தேன்மூன்று சாவிகள் அடங்கியது.
ஜே.கேநீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்படவேலையாக நாங்கள் அங்கே இங்கே போயிருந்தாலும் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை
ஏறக்குறைய இந்த சாவிக்கொத்தை கால் நூற்றாண்டு காலம் அவர் வைத்திருந்தார்.
எப்போதும் அந்த அலுவலகம் பெரும்பாலும் திறந்தே இருந்ததுநண்பர்களும் அன்பர்களும் எங்களை சூழ்ந்தே இருந்தார்கள்.
இன்னார் இனியர் என்று இல்லாமல் அடையா நெடுங்கதவாக அந்த அலுவலகம் புழங்கியதால் – அது மடம் என்று பெயர் பெற்றது. அங்கே தான் ஜேகே என்று தமிழகமே அழைக்கும் அளவு அந்தஸ்தின் உயரத்தை அவர் பெற்றார். [தொடரும்] 

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி -1

.
ஜெயகாந்தனுக்கு அஞ்சலி 
[தொடர்ந்து வரும்]

Sunday, 15 February 2015

அது பணக்காரர்களுக்கான தேசம்..

அது பணக்காரர்களுக்கான தேசம்..


                                             மாதவன் இளங்கோ

சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை ஒவ்வொரு வருடமும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

"நீ எப்போது இங்கு வந்தாய்?" என்று கேட்டார்.

"நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்" என்றேன்.

"இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?" என்றார்.

"வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்." என்றேன்.

"இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?"

"நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம் பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது." என்றேன்.



சிரித்துக்கொண்டே, "இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது." என்றார்.

"உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?" என்று கேட்டேன்.

"என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, 'அது பணக்காரர்களுக்கான தேசம்!'." என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, "ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!" என்று கூறியவர், மீண்டும் சில நொடிகள் நெற்றியை தேய்த்தபடி சிந்தித்துவிட்டு,  "உன்னுடைய தேசமும் அப்படித்தான்." என்று அவர் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன். எத்தனை ஆழமான வார்த்தைகள்?

"அது பணக்காரர்களுக்கான தேசம்!"

Flash
"ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!"

Saturday, 14 February 2015

சிந்தித்துப் பார்க்கிறேன் :பெருமாள்முருகன் விவகாரம்

சிந்தித்துப் பார்க்கிறேன் ...
[இப்படி ஒரு புதிய பகுதி இந்தப் பதிவு முதல் தொடங்குகிறோம். எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எவ்வித வரம்பும் இன்றி பகிர்ந்து கொள்ளலாம்.இங்கே எதற்கும் தடை இல்லை ]
ஜவாஹர் பிரேமலதா 

பெருமாள்முருகன் விவகாரம் 

பெண்கள் முன்னேறிவிட்டார்கள். இன்னும் ஆண்கள்தான் பெண்கள் பற்றிய சிந்தனையில் முன்னேறவில்லை என நினைக்கிறேன். பெருமாள்முருகன் விவகாரத்தில் பெண்களின் கற்பு சாா்ந்த எதிர்ப்புக் குரலைக் காட்டிய அதே ஆண்கள், படைப்பாளர்களில் பலா் ஆண்கள் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பதாக எழுதப்படும் படைப்புகளை எதிர்த்து ஏன் குரல் கொடுக்கவில்லை? இது அவர்களின் ஆண்மைக்கான அடையாளமாக, பெருமிதமாகக் கருதுவதாலா? கற்பு பெண்ணுக்குரியதாக மட்டும் கருதும் போக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும்? நேர்மையானவர்கள் என்றால் ஆணின் கற்பு இழிவுபடுத்தப்படும் போதும் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அதுபோல் பெண் படைப்பாளர்களில் பலர் படிக்கவே முடியாத தலைப்புகளை தம் கவிதைநூலுக்கு வைத்து எங்களுடைய உரிமை எனக் கூறிக்கொண்டு, பாலியல் மற்றும் உறுப்பு சார்ந்த சொற்களை அப்பட்டமாகப் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களையெல்லாம் இவர்கள் போற்றிக் கொண்டாடி வருவது (பெண்களின் அந்தரங்க வக்கிரஉணர்வுகளை  உள்ளுக்குள் இரசிக்கும் கயமைத்தனத்தை மறைத்து)இரட்டைவேடமல்லவா? இந்தப் போராட்டங்கள் எதிர்ப்புகள் அனைத்தும் ஒரு நாடகம்  பார்ப்பது போல்தான் இருக்கிறது. ஒரு படைப்பை எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்களுக்கு  x y z எனப் பெயரிட்டு அதன் வாழ்க்கையை ஒரு பொதுத்தன்மைக்குள் கொண்டு வந்து, ஆண் பெண் வேறுபாடகற்றி ஆராயும் பொழுதுதான் உண்மை புலப்படும். 


பெண் எழுத்து, ஆண் எழுத்து  என்பது குறித்தான பார்வைகள் இருவேறு உலகத்தியற்கை வேறு என்ற முரண்பாடுகளிலிருந்துதான் எழுகின்றன. அகவயம் புறவயம் என்பதெல்லாம் ஒரு காலம். இன்று பெண்ணும் புறவயப்பட்டுவிட்டாள். அவளுக்கும் புறஉலகம் நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. என்ன ஒரு சிக்கல் என்றால் ஆண் இன்னும் புறவயத்திலேயே நிற்கிறான். அவனும் அகவயப்பட்டு பெண்ணின் உலகத்திற்குள் வரும் பொழுதுதான் ( குழந்தைவளர்ப்பு. இல்லறப்பணி,முதியோர் பராமரிப்பு, கற்பு பெண்ணுக்குள்ளதுபோல் கட்டாயமாக்கப்படும்பொழுதுதான்-(இப்போது பரவாயில்லை) இது சாத்தியமாகும்) ஆண் எழுத்து,பெண் எழுத்து என்பதான வேறுபாடகலும் என்று நினைக்கிறேன்.

Saturday, 31 January 2015

விடியாத சுதந்திர சூரியன்

விடியாத சுதந்திர சூரியன்

சி. ஜெயபாரதன் 

நடு ராத்திரி பெற்ற சுதந்திரம்
கண் திறக்க
விடிய வில்லை !
முடிய வில்லை  இருளாட்சி !
மடிக்குள் வெடி மறைத்து
நடக்குது மதப்போர் !
ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
வாள் முனைகள் ஆயின !
கார்மேகம் இப்போ தெல்லாம்
கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடுகள்
நாராய்க் கிழிந்து,
வேர்கள்
கீழ்நோக்கிப் போகாது
மேல் நோக்கித் துளைக்கும் !
ழுத்தாணிகள் அமணமாய்
ஒழுக்கம் தவறிக்
குத்தூசி களாய்க் குத்தி எடுக்கும் !
பத்திர காளியின் கைச் சூலாயுதம்
பக்தரின் கைவசம் மாறும் !
பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்
பண வேட்டை ஆடும்.
வேலை கிடைக்குது
கப்பம் ஒரு லட்சம் கட்டினால் !

கீழ் ஜாதியார் மேல் மட்டம் போய்
ஒதுக்கப் பட்டார் !
மேல் ஜாதியார் கீழ் மட்டம் போய்
விரட்டப் பட்டார் !
கணினி வர்த்தகம் 
நூற்றுக் கணக்கில் பெருகி
ஏழை செல்வந்தர்
வேற்றுமை ஏறிப் போச்சு !
நடிப்புக்கு மதிப்பளிக்கும்
நாட்டில்
படிப்புக்கு மதிப்பில்லை !

மருத்துவம் பணப் பட்டம் ஆனது !
உயிர்களுக் கில்லை மதிப்பு !
உன்னைப் பெற்ற அன்னையோ  
உடன் பிறந்த தங்கையோ
தனியாக
நடக்க முடியாது தெருவில் !
கருவிலே உருவாகும் பெண் சிசு
பிறக்கும் முன் பெறும் மரண தண்டனை !
பாரத மணிக்கொடி கிழிந்து போகுது !
விடியாத சுதந்திர சூரியன்
அத்தமிக்குது !
குடியாட்சியைத் தைப்பதா ?
முடிப்பதா ?