Sunday, 15 February 2015

அது பணக்காரர்களுக்கான தேசம்..

அது பணக்காரர்களுக்கான தேசம்..


                                             மாதவன் இளங்கோ

சீன தேசத்து நண்பன் ஒருவனின் தந்தையிடம் அன்று நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு என் நண்பன் குழந்தையாக இருக்கும் போது ஒரு நாடோடியைப் போன்று ஐரோப்பாவிற்கு வந்திருக்கிறார். நண்பனுக்கு பதினைந்து வயது ஆகும்வரை ஒவ்வொரு வருடமும் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று வருவாராம். இப்போதெல்லாம் செல்வதில்லை. மகன் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்கிறார். தந்தை நீண்ட காலமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

"நீ எப்போது இங்கு வந்தாய்?" என்று கேட்டார்.

"நான்கு வருடங்களுக்கு முன்பு. உங்களைப்போலவே என் மகன் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்தேன்" என்றேன்.

"இந்தியாவிற்கு அடிக்கடி செல்வதுண்டா?" என்றார்.

"வருடத்துக்கு ஒருமுறை சென்று வருகிறோம்." என்றேன்.

"இந்தியாவிற்குத் திரும்பிச் சென்றுவிடும் எண்ணம் இருக்கிறதா?"

"நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் எல்லா புலம் பெயர்ந்தோரைப் போன்று நானும் ஒரு மதில் மேல் பூனை! நிச்சயம் சென்று விடுவேன். இன்னும் சில வருடங்கள் தான். இப்படிச் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை கழித்துவிடுவார்கள். ஏதோ ஒருபுறம் குதித்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது." என்றேன்.



சிரித்துக்கொண்டே, "இதோ எனக்கும் அப்படி முப்பது வருடங்கள் ஓடிவிட்டது." என்றார்.

"உங்கள் தேசத்துக்கே திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று தோன்றியதே இல்லையா?" என்று கேட்டேன்.

"என்னுடைய தேசத்தை நான் நேசிக்கிறேன். மதிக்கிறேன். வாசிக்கிறேன். சுவாசிக்கிறேன். ஆனால் என்ன செய்வது, 'அது பணக்காரர்களுக்கான தேசம்!'." என்று கூறிவிட்டு, சில நொடி மௌனத்திற்குப் பிறகு, "ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!" என்று கூறியவர், மீண்டும் சில நொடிகள் நெற்றியை தேய்த்தபடி சிந்தித்துவிட்டு,  "உன்னுடைய தேசமும் அப்படித்தான்." என்று அவர் கூறியதைக் கேட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

அவரது வார்த்தைகளை இப்போது அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன். எத்தனை ஆழமான வார்த்தைகள்?

"அது பணக்காரர்களுக்கான தேசம்!"

Flash
"ஏழைகள் அதிகமாக இருப்பதாலேயே அவை ஏழைகளுக்கான நாடுகளாக ஆகிவிடப்போவதில்லை. அவை உள்ளவர்களுக்கும், ஆள்பவர்களுக்குமான தேசங்கள்!"

2 comments:

  1. ஆழமான வரிகள்... பலர் இப்படித்தான் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete