Saturday, 16 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி 7

ஜெயகாந்தனின் பெண்கள்
எம்.ஏ.சுசீலா

ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் வெளிவந்து சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை, எதிர்வினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த ’60களின் பிற்பகுதி. மதுரை என் சி பி எச் மாடியில் ஒரு காரசாரமான கூட்டம்; ஜே கே முன்னிலையிலேயே அந்தப்படைப்பைக் கடுமையாகத் தாக்கி வசைமாரி பொழிந்தபடி, கெட்டுப்போன பெண்ணை அவர் நியாயப்படுத்துவதாக பலத்த விவாதங்கள்…
ஜெயகாந்தன் எழுந்தார்.
“நீங்கள் எல்லோரும் அந்தப் பெண்ணின் இடத்தில் உங்கள் மனைவியை வைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதனால்தான் ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு பெண்ணை நம் தலையிலும் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறது, சினமும் வருகிறது. அதே இடத்தில் உங்கள் மகளை வைத்துப்பாருங்கள்,நியாயம் புரியும் என்றார்”
அதுதான் ஜே கே.
சமூகத்தின் எந்தப் படிநிலையில் இருந்தாலும் எந்தத் தொழில் புரிந்தாலும் எந்தப்பெண்ணையும் கிஞ்சித்தும் சிறுமை செய்யத் தலைப்படாதவை ஜே கேயின் எழுத்துக்கள். அதே போலப் பரிவுக்கும் இரக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் உரிய ஒரு ஜீவனாக மட்டுமே எண்ணியபடி ஆணை விட ஒரு படி அவளைத் தரம் தாழ்த்தி விடாமலிருப்பதிலும் கவனமாக இருப்பவை; அவளுக்கென்ற தனித்த கம்பீரமான ஆளுமையை வழங்கத் தவறாதவை. சில நேரங்களில் சில மனிதர்களின் ‘கங்கா’, நடிகையான ‘கல்யாணி’ , சுந்தர காண்டத்தின் ‘சீதா’ , ’தவறுகள் குற்றங்கள் அல்ல’ சிறுகதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்ட மேலதிகாரிக்குப் பெருந்தன்மையோடு மன்னிப்பு வழங்கும் ஸ்டெனோ தெரஸா, கணவனின் அந்தரங்கத்தை மதித்து ஏற்கும் ‘அந்தரங்கம் புனிதமானது’ கதையின் ரமணியம்மா என்று படித்த பெண்கள் மட்டுமல்லாமல் விதவைப் பேத்தியின் மறுமணத்துக்கு முழு மனதோடு ஒப்புதல் வழங்கும் ‘யுகசந்தி’யின் பழைய தலைமுறைப் பாட்டியும், பிரளயத்தின் சேரிப்பெண்ணான பாப்பாத்தியும் கூடத் தனி மிடுக்கோடு தங்களுக்கென்று சொந்தமான ஓர் அபிப்பிராயத்தோடு இருப்பவர்களே..

முழுமையான தனித்த ஆளுமை கொண்ட பெண்களின் பிரதிநிதியாகவே உருவாக்கப்பட்டிருப்பவள் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலின் கல்யாணி; ரங்கா மீது தான் வைத்திருக்கும் உண்மையான அன்பைப் போலி வார்த்தையும் பாசாங்கான பசப்புமொழிகளும் பேசினால்தான் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற உண்மை புரிய வந்தாலும் அதை ஏற்காமல்… நிஜ வாழ்வில் நடிக்க மறுப்பவள்;அந்த உறவே முறிந்தாலும் கூடப்பொருட்படுத்தாமல் அன்பிலும் உறவிலும் முழுச்சுதந்திரத்தை நாடுபவள்.

அடிமட்ட வாழ்க்கையில் கூலி வேலை செய்து உழலும் பெண்ணானாலும் உடலை விற்றுப்பிழைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட பெண்ணானாலும் தங்களுக்கென்று வகுத்துக்கொண்டிருக்கும் நியாயமும் தர்மமும் உள்ளவர்களாகவே அவர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ’சினிமாவுக்குப்போன சித்தாள்’ பெண் திரை நடிகரைப்பார்த்து மயங்கிப்போவது ஒரு புறம் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக விபசார விடுதிக்குத் தள்ளப்பட்ட பின், கணவனிடம் வரவே கூசுகிறாள்;அவனோடு வாழும் தகுதி தனக்கில்லையென்று நினைக்கிறாள், அவள் அளவில் அதுவே அவள் வரித்துக்கொண்ட தர்மம். கணவன் சிறைக்குப்போன நிலையில் இன்னொருவனுடன் கூடி வாழ்ந்தாலும் தன் குருட்டு மனைவியை அவன் படுத்தும் பாட்டைக்கண்டு பொங்கியெழுந்து அவளுக்குக் கருணையுடன் சோறூட்டுகிறாள் ‘பிரளயம்’ பச்சிம்மா.

விதவை என்றால் மறுமணம்தான் தீர்வு என்பதல்ல, மறுமணத்தை ஏற்பதும் மறுப்பதும் அவள் உரிமை என்பதை அழுத்தமாய்ச் சொல்ல ஒரே வாதத்தின் இருவேறு தரப்புக்களை முன்னெடுக்கும் இரு சிறுகதைகள்…,பேரன் பேத்தி எடுத்தபின் கருவுற்ற முதிய பெண் அதற்காகக் கூசி ஒடுங்கிப்போகும்போது, உறவினரெல்லாம் அதற்காகவே அவளைச்சிறுமை செய்யும்போது எங்கிருதோ வந்த அயல்நாட்டவள் வழி அந்தப்பெண் மீது வெள்ளமாய்ப் பொழிய விடும் கருணைப்பிரவாகம், ‘இருளைத் தேடி’ ஒதுங்கும் பெண்கள் நிர்வாண ஓவியத்துக்கு ‘மாடல்’ ஆன போதும், விலைமகள் வாழ்வில் சபிக்கப்பட்டபோதும் மனிதம் ஒன்றையே மையப்படுத்தும் மானுடநேயம், ஜன்னலில் காத்திருந்தே முதிர்கன்னியின் வாழ்க்கைப்பார்வை என்று பல வகைமாதிரியான ஜெயகாந்தனின் பெண்பாத்திரங்கள்!!

தான் ஆண் என்ற மேட்டிமைத்தனம் சிறிதும் இன்றி “கணவன் என்றும் காதலன் என்றும் சகோதரன் என்றும் தந்தை என்றும் உன்னைச்சுற்றியுள்ள எல்லா ஆண்களுமே இராவணர்கள் மட்டுமே” என்று ‘சுந்தர காண்டம்’ நாவலின் முன்னுரையில் பிரகடனம் செய்த ஒரே ஆண்படைப்பாளி தமிழ் இலக்கியப்பரப்பில் ஜே கே ஒருவர் மட்டுமே..

ஜெயகாந்தன் எழுத்திலிருந்து சிறிது சிறிதாக விட்டு விலகிக்கொண்டிருந்த காலம், அப்போது தன்னிடம் எழுத்து குறித்த ஆலோசனை பெற வந்த ஒரு இளம் எழுத்தாளரிடம்,“எப்போது எந்தப்பெண்ணை உங்கள் படைப்பில் உருவாக்கினாலும் அவளை உங்கள் உங்கள் மகள் நிலையில் வைத்து மட்டுமே உருவாக்குங்கள்”என்று ஜே கே குறிப்பிட்டதாகச் சொல்வார்கள்.

சமகாலச்சூழலில் இன்றைய இலக்கியத்தில் பெண்கள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும் என்பதற்குத் தன் புனைவுகள் மூலம் பாடம் சொல்லியிருக்கும் ஜே கே தன் சொற்கள் மூலமும் பாடம் சொல்லியிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.. பெண்ணை விரசமாக ஆபாசமாக அருவருப்பான வருணனைகளுக்காக மட்டுமே பயன்கொள்ளும் படைப்பாளிகள் ஜே கேயிடம் பயில வேண்டிய பண்பு இது….

“நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும், உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்……ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்” என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.

அழுக்கும், அசிங்கமுமான களங்களை அவர் தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து, உட்பொதிந்து கிடக்கும் உன்னதச் செய்தியை அவை உலகுக்குப் பறைசாற்றின. நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளை மீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப் போன்றவையே அவரது எழுத்துக்கள்.

தான் உணர்ந்து தெளிந்தவற்றை, தான் கொட்ட நினைத்ததைக் கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர். சுய தூண்டுதலும், உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ, பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப் போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.

நன்றி:சொல்வனம் 


No comments:

Post a Comment