தமிழைச் சங்கச் சிறையில்
தள்ளாதே !
தங்கச் சிறை வேண்டாம் !
கை கால்களில்
பொன் விலங்கு பூட்டாதே !
மூச்சு விடட்டும்;
முன்னுக்கு வரட்டும் !
வேரூன்றிக் கிளைகள் விட்டு
விழுதுகள்
வைய மெங்கும் பரவட்டும்;
கழுத்தை நெரிக்காதே !
காற்றில் நீந்தட்டும் !
கால் பந்தாய் எற்றாதே !
தமிழைத் தவழ விடு !
நடைத் தமிழில்
நடக்க விடு !
நடக்க நடக்கக் குருதி ஓடும் !
முடக்காதே தமிழை !
தவறி விழுந்தால்
எழுந்து நடக்கக் கைகொடு !
தோள் கொடு, தூக்கி விடு !
தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
வடிகட்டி ஏந்தி
வலை உலகில் மேயாதே !
பழமை பேசிப் பேசி
ஆறிய கஞ்சியை மீண்டும்
சூடாக்கிக் குடிக்காதே !
அழுக்குச் சட்டையைத்
தூய நீரில்
துவைத்து துவைத்துக் கிழிந்தது !
புத்தாடை அணிய விடு !
புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
இத்தரணி ஆளவிடு !
No comments:
Post a Comment