Thursday, 13 November 2014

எதற்கும் நேரம் வரவேண்டும் (சிறுகதை)

                                                                . மீனாட்சிசுந்தரம்
       எதற்கும் நேரம் வரவேண்டும் 
                     (சிறுகதை)
                                                                                                                
பெரியம்மாவிற்கு குழந்தையில்லை என்ற காரணத்தினால், அம்மாவை இரண்டாம் தாரமாக அப்பா திருமணம் செய்துகொண்டார். பெரியம்மாதான் இதற்கு வித்திட்டவர்கள். அம்மாவின் முழு சம்மதத்தைப் பெற்ற பின்புதான் பெரியம்மா தன் கணவனுக்கு, தங்கையை மணம் முடித்துக் கொண்டார்கள்.

      தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவள் என்ற காரணத்தினால், பெரியம்மா மேல் அப்பாவுக்கு கூடுதல் பிரியம். அவர் வீட்டில் இருந்தால், மூச்சுக்கு மூன்று முறையாவது ஆனந்தி, ஆனந்தி என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார். அப்பாவிற்கு தினமும் பணிவிடை செய்வதிலிருந்து, ஆலோசனை சொல்வது வரையில் எல்லாமே பெரியம்மாதான். அம்மாவிடமும் அவரது அன்பு குறையவில்லை. இருவருமே இரண்டு கண்கள்தான் அப்பாவிற்கு.

       அப்பா பெரியம்மா மேல் வைத்திருந்த பாசமிகுதியால், எனக்கு ஆனந்தன் என்று பெயர் வைத்தார்கள்எனவே    என்மேல் பெரியம்மாவுக்கு கொள்ளைப் பிரியம். ஆனந்த், ஆனந்த் என்று என்மீது அன்பைப் பொழிவார்கள். இந்த பாசத்திற்கு அவரது பெயரைச் சூட்டியதும் காரணமாக இருக்குமோ என்று நான் நினைத்ததுண்டு. நான் சிறு குழந்தையாய் இருந்தபோது எப்போதும் அவர் இடுப்பில்தான் இருப்பேனாம். பெரியம்மாவின் சம்மதம் இல்லையென்றால் நான் பிறந்திருக்கமாட்டேன்தானே! ஆகவே இயற்கையாகவே அவர்களிடம் பாசமும் மரியாதையும் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லைதான். அது இந்த இருபத்தைந்து வயதிலும் தொடர்கிறது.

      உடன் பிறந்த சகோதரி என்பதையும் மறந்து பெரியம்மா மேல் பாசத்திற்குப் பதிலாக வெறுப்பைத்தான் காட்டிவருகிறாள் அம்மா. எனக்கு விபரம் தெரிந்தது முதல் இதை கண்கூடாகப் பார்த்து வருகிறேன். இதுவரையில் இதற்கான காரணத்தை என்னால் யூகிக்கமுடியவில்லை. அதுவும் அப்பாவின் மறைவிற்குப் பிறகு பெரியம்மா மேல் உள்ள வெறுப்பு கூடுதலானது. பெரியம்மாதான் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொண்டார்கள்.
  

பெண்களுக்குண்டான அடிப்படைக் குணமே கணவனைப் பங்குபோடுவதை விரும்பமாட்டார்கள். இந்தக் குணத்திற்கு அம்மாவும் அடிமையாகிவிட்டாளோ! இதனால்தான்  பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டினாளோ! இப்படி  மனதுக்குள் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்
.
அப்படியானால் அப்பா இறந்த பிறகும் ஏன் பெரியம்மா மேல் வெறுப்பைக் காட்டவேண்டும் என்பதும் இதுவரையில் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. பெரியம்மாவிடமும் இதற்கான காரணம் கேட்டும் அவர்களுக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘ஆறும் அது ஆழமில்ல. அது சேரும் கடலும் ஆழமில்ல. ஆழம் எது ஐயா இந்த பொம்பள மனசு தாய்யாஎன்று ஒரு கவிஞன் பாடியதுதான் நினைவுக்கு வந்தது.

பெரியம்மா தனியாகப் போய் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வாடகை வீட்டில்தான் அவர்களின் வாசம். அப்பாவின் ஓய்வூதியத்தில்தான் அவர்களின் ஜீவனம் கழிகிறது. அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லைதான்- நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துவருவது அவர்களுக்கு கூடுதல் சந்தோசம். அம்மா வெறுப்பைக் காட்டினாலும், பெரியம்மாவிற்கு தங்கைமேல் பாசம் குறையவில்லைதான். அம்மாவிற்குப் பிடித்த மைசூர்பாகை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது செய்து கொடுத்துவிடுவார்கள். அக்கா கொடுத்து அனுப்பிய மைசூர்பாகை மட்டும் ஆசையாக சாப்பிடும் அம்மா அக்கா மேல் பாசத்தை மட்டும்  காட்டாதது ஏன் என்று புரியவில்லை. எப்படி அம்மாவால் இப்படி இருக்கமுடிகிறதுஇதற்காக அம்மாவை மனதிற்குள் திட்டிய நாட்கள்தான் என் நினைவிற்கு வருகிறது. நானும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா இதில்  மட்டும் பிடிவாதமாய் இருக்கிறாள்.
     
   ஒவ்வொரு புத்தாண்டுக்கும் இரண்டுபேருக்குமே இந்த ஐந்தாண்டுகளாக நான்தான் புடவை எடுத்துத் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தப் புடவைகள் இரண்டும் ஒரே நிறமும், டிசைன் உள்ளதாக இருக்கும்படி பார்த்து எடுத்துவருவேன். இரண்டுபேருமே என்னைப் பொருத்தவரை அம்மாக்கள்தான். இதுவரையில் முதலில் பெரியம்மாவிற்குப் புடவையை கொடுத்துவிட்டுத்தான் அம்மாவிற்கு கொடுத்துவந்தேன். இந்த முறை ஞாபக மறதியில் இரண்டு புடவைகளையும் எங்களது வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டேன்.

     
ரெண்டு புடவையும் எனக்குத்தானாப்பாஎன்று ஆசையாகவும், “கலரும் டிசைனும் நல்லாயிருக்கு. பரவாயில்ல ரெண்டுமே இருக்கட்டும்அம்மா கேட்ட பின்புதான் தவறு செய்துவிட்டேனே? நானே என்னை கடிந்துகொண்டேன். இதேமாதிரி கலரும் டிசைனும் உள்ள இன்னொன்று கிடைப்பது சிரமம். அம்மாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

 “அம்மா ரெண்டு புடவையில ஒண்ணு பெரியம்மாவுக்கும்மா. நாந்தான் மறந்து எடுத்துட்டுவந்துட்டேன். நாளைக்கி குடுத்துட்டு வந்துடுறேன்.“ அம்மாவிடம் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்தேன்.

     “ஒவ்வொரு வருசமும் இப்படித்தான் எடுத்துத்தருவியா?“ அம்மாவின் பேச்சில் மாற்றம் தெரிந்தது.

   “இந்த புதுவருசத்துக்கு பெரியம்மாவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுவாப்பா“  நம்ம எல்லாருமா சேர்ந்து கொண்டாடலாம். இந்தப் புடவையில எங்க அக்காவ நானு பாக்கணும் போல ஆசையாயிருக்குப்பா.“ குழந்தையாகிவிட்டாள் அம்மா.

      அம்மா மாறிவிட்டாளா? எனக்குள் ஆச்சரியமும், சந்தோசமும்.....

    “இந்தப் புடவையில எங்க ரெண்டு பேரையும் போட்டோ எடுக்கணும். அந்தப் போட்டோவ இந்த ஹாலில மாட்டிவைக்கணும்பா. இது என்னோட ஆசைப்பா.“ கண்களிலிருந்து கண்ணீர் பொங்கச் சொன்னாள் அம்மா.

இதைத்தான் எதற்கும் நேரம் வரவேண்டும் என்பார்களோ! தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆனந்த்

No comments:

Post a Comment